தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மே 23 அன்று காலை மதுரையில் நடைபெற்றது. முதலில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் அனுபவ உரையாக தோழர் கே.எஸ் அவர்கள் தோழர் திசை கர்ணனுடன் அமைப்பு வேலைகளில் பயனித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக புதிய ஜனநாயகம் புத்தகம் விற்பனை, கம்பம் – கூடலூர் பகுதியில் செய்யும்போது, CPI-க்கும் தங்களுக்கும் நடந்த மோதலை கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் போட வேண்டும் என அவர் கூறியது, இன்னும் என் நெஞ்சிலே நிற்கிறது. தோழர் அந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் களத்தில் நின்று போராட கூடியவர் என்று கூறி முடித்தார்.
ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம், “தோழர் திசை கர்ணனை பற்றி வெளியில் நாங்கள் பேசும்போது, ஒரு சில நபர்கள் எங்களை பார்த்து கேட்டார்கள் அந்த தோழர் அப்பகுதியில் முதலில் என்ன மாதிரியான அமைப்பு வேலை செய்தார் என்றனர். உரம் மற்றும் இறால் பண்ணை ஒழிப்பு மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகள் போன்றவற்றில் அவர் முதன்மையானவராக கலந்துகொண்டு களத்தில் தொடர்ச்சியாக போராடியவர் என்பதை கூறும்போது, அவர்கள் புரிந்து கொண்டனர்.
மருத்துவமனையில் அவருடன் இருக்கும்போது தன்னுடைய உள்ள உடல்நிலையை பற்றிகூட அவர் பேசியது இல்லை; மற்ற தோழர்களின் உடல்நிலை குறித்து அவர் விவாதிக்கும் தன்மை எங்களுக்கு ஆச்சரியத்தை காட்டியது. அவர் இறந்தபின்பும் நம்மில் வாழ்கிறார் என்றால் அவரின் சிறப்பு பன்புதான். தன்னலம் கருதாமல் உழைக்கின்ற மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த நம் தோழர் திசை கர்ணனனிடம் இடம் இருந்து இது போன்ற நற்பண்புகளை நினைவு கூறுவதுதான் இந்த நினைவு அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்கும்” என்பதோடு உரையை முடித்துக்கொண்டார்.
படிக்க :
♦ உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்
♦ தோழர் திசை கர்ணன் படத்திறப்பு || மக்கள் அதிகாரம் மதுரை
பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி, “நாம் இந்த மண்ணில் ஒருமுறைதான் பிறக்கிறோம். நம் வாழ்க்கை என்பதும் ஒருமுறைதான். அப்படி இருக்கும்போது நாம் எவ்வாறு வாழவேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர் தான் தோழர் திசை கர்ணன். உழைக்கும் மக்களின் பிரச்சினைகளுக்காக அமைப்பு வேலைகளை அர்ப்பணிப்பாக செய்தவர். இன்று தமிழகத்தில் இந்து ராஷ்டிரா நிறுவுவதற்கு இந்த காவி கும்பல் எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நச்சுக் கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருக்கிறது; இதற்கு எதிராக நின்றவர்தான் தோழர் திசை கர்ணன். இந்த அடிப்படையில் தோழரின் செயல்பாடுகளை நாம் நெஞ்சிலேந்த வேண்டும் என கூறினார்.
மக்கள் அதிகாரம், மாநில இணைச்செயலாளர், தோழர் குருசாமி, “தோழர் திசை கர்ணன் என்னுடைய சிறுவயது நண்பர். அவர் கூட்டுறவு சொசைட்டியில் எழுத்தாளராக வேலை செய்தார். பிறகு அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு அமைப்பு வேலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அப்போது ஆதிக்கச் சாதியினரின் கொடுங்கோன்மை மேலோங்கி இருந்தது அப்போது ஒரு ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தோழரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய தேவையே இல்லை; ஆனாலும் அவரை கைது செய்ததின் நோக்கம் அமைப்பின் முன்னணியாளர்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அவர் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் மேட்டிமைத்தனமான பண்புகள் இல்லை; ஒரு பாட்டாளி வர்க்க சிந்தனை உடையவராகவே திகழ்ந்தார்.
எந்த வர்க்கப் பின்னணியில் இருந்து வந்தாலும் உழைக்கும் மக்கள் விடுதலைக்காக பாட்டாளி வர்க்க பண்புகளை ஏற்றுக்கொண்டு எவரொருவர் செயல்படுபவரோ அவரே உண்மையான கம்யூனிஸ்ட். அந்த வகையில் தோழர் திசை கர்ணன் அவர்கள் ஒரு உண்மையான நக்சல்பாரி புரட்சியாளர். இந்த நினைவு அஞ்சலி கூட்டத்தில் தோழரின் நற்பண்புகளை அவரிடமிருந்து வரித்துக் கொள்வது அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்” என கூறி முடித்தார்.
தொகுப்புரை மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்கள் பேசுகையில், “மக்களிடம் புரட்சிகர கருத்துகளை எடுத்துச் செல்வதற்கு எளிதாக – உதவியாக – இருந்தது இசை நாடகம், பாடல் போன்றவைதான். இதை தோழர் திசை கர்ணன் மிக நேர்த்தியாக கையாண்டார். குறவன் குறத்தி நாடகம் போட்டு மக்களிடம் புரட்சிகர கருத்துகளை எடுத்து சென்றார். ஒரு நாள் அவர் மாமியார் ஊரில் அவருடைய வீட்டில் குறவன் வேடம் போடும்போது எந்த ஒரு மன சங்கடமும் இல்லாமல் அவர் வேடமணிந்து நாடகம் நடத்தினார். யார் எதை சொன்னாலும் எதையும் பொருட்படுத்தாமல் தான் ஏற்றுக்கொண்ட வேலைகளை முழுமையாக செய்து முடிப்பதில் முனைப்பாக இருந்தவர்தான் தோழர் திசை கர்ணன். அவர் ஒரு நக்சல்பாரி புரட்சியாளராகவே வாழ்ந்து வந்தவர். அவருடைய அளப்பரிய களப்பணிகளை நம் இளம் தோழர்களுக்கு ஒவ்வொருவருக்கும் எடுத்து சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கூறிக் கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்துக் கொண்டார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க