PP Letter head

24.05.2021

பத்திரிகைச் செய்தி

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !

திசை கர்ணன் என்றொரு தோழர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பொறுப்பு மேட்டுப்பட்டி ஊரில் நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் திசை கர்ணன். அவரது தந்தை ஊராட்சித் தலைவராக (பிரஸிடெண்ட்) இருந்தவர். ஆறு அண்ணன் தம்பிகள் என செல்வாக்காக வாழ்ந்தவர் திசை கர்ணன்.

1980 வாக்கில் அமைப்பிற்கு அறிமுகம் ஆகிறார். நக்சல்பாரி புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொண்டு, உழைக்கும் மக்களுக்காக செயல்படத் துவங்கினார். அதற்கு இடையூறாக இருந்த தனது அரசு வேலையை (கூட்டுறவு சொசைட்டி எழுத்தர்) இராஜினாமா செய்தார்.  மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகள் செய்வதற்குத்  தகுந்தவாறு சிறு விவசாயியாக தனது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

திசை கர்ணனைப் போன்ற குடும்பப் பின்னணி கொண்ட மற்றவர்கள் எல்லாம், வட்டிக்கு விட்டு பணம் சேர்ப்பது, அந்தஸ்தை உயர்த்துவது என்பதையே வாழ்வின் லட்சியமாக கொண்டு இருந்தபோது, திசை கர்ணனோ மக்கள் விடுதலைக்காக உழைத்தார்.

உசிலை வட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பை முதன் முதலில் கட்டி எழுப்ப முன்னணியாக நின்றவர் திசை கர்ணன். கிராமம் கிராமமாக மக்களிடம் புரட்சிகர அரசியலை கொண்டு சென்றார். குறவன் குறத்தி ஆட்டம், நாடகம், பாடல்கள், உரைகள் என எல்லா வடிவங்களிலும் மக்களிடம் சென்றார் திசை கர்ணன்.

ஆதிக்க சாதிக் குடும்பத்தில் பிறந்திருந்தபோதும், சாதி உணர்வு கிஞ்சித்தும் இல்லாதவர் திசை கர்ணன். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக செயல்பட்ட ஆதிக்கச் சாதியினருக்கு எதிராக கடுமையாகப் போராடியவர் திசை கர்ணன்.

தன்னுடன் சில இளம் தோழர்களை இணைத்துக் கொண்டு மிதிவண்டியில் அடுப்பு பாத்திரங்களை கட்டிக் கொண்டு, கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தபடி மேற்கே கம்பம், கூடலூர் வரை, வடக்கில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி வரை என பிரச்சாரப் பயணங்கள் மேற்கொண்டார். தெற்கே விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, குமரி வரை ரயிலில் சென்று மக்கள் தரும் அரிசி பருப்பை வாங்கி ஆங்காங்கே பொங்கி உணவு உண்டு மக்களை அரசியல் படுத்தப் பாடுபட்டார் திசை கர்ணன்.

உரக் கடை முதலாளிகள் கள்ளச் சந்தையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தனர். உரம் கிடைக்காமல் தவித்த விவசாயிகளைத் திரட்டிப் போராடி யூரியா பதுக்கல் குடோன்களை திறந்து மக்களுக்கு வினியோகம் செய்தார் திசை கர்ணன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தரும் அரசின் திட்டத்தை உடன் அமல்படுத்தக் கோரியும், நிலம் கையகப்படுத்தி வீடுகளைக் கட்டக் கோரியும் மக்களை திரட்டி சாலை மறியல் செய்து தனக்கு வழக்கும் சிறையும் கிடைத்தாலும் மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழி செய்தார் திசை கர்ணன். ரேஷன் கார்ட் பெற்றுக் கொடுக்க ஓட்டுப் பொறுக்கிகள் வசூல் வேட்டையில் இறங்கியபோது, வெறும் இரண்டு ரூபாய் செலவில் 450-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகளை மக்களுக்கு பெற்றுத் தந்தார்.

பார்ப்பன மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்து மதவெறி ஆட்டம் போட்ட போது, “அனைவரும் இந்து என்றால், கோவில் கருவறையில் அனைவரையும் அனுமதிக்காதது ஏன்?” என்று முழங்கி சிறீரங்கம் கோவில் கருவறைக்குள் நுழைந்து ரங்கநாதனை உலுக்கினார் திசை கர்ணன்.

நாட்டை மீண்டும் காலனியாக்கும் காட் ஒப்பந்ததிற்கு எதிராக ரயில் மறியல் – சிறை !
விளை நிலங்களை பாலையாக்கும் இறால் பண்ணை அழிப்புப் போராட்டம் – சிறை !
திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம் – சிறை !

உள்ளூர் சாதி ஆதிக்க வெறியனுக்கு எதிரான போராட்டத்தின் போக்கில் அந்த சாதிவெறியன் கொலை செய்யப்பட்டான். அந்த கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக திசை கர்ணன் சேர்க்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஆயுள் சிறைத் தண்டனை பெற்றார்.

இப்படி எண்ணற்ற போராட்டங்கள், வழக்குகள், சிறைகள் ! காணும் போதெல்லாம் கபடமற்ற சிரிப்பு. “தோழர்..” என்று வாஞ்சையோடு அழைக்கும் பாங்கு! இளம் தோழர்களுக்கு அரசியலை கற்றுக் கொடுப்பதில் திசை கர்ணனுக்கு இருந்த உறுதி ! என எதை சொல்வது? எதை விடுவது ?

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரி புரட்சிகர அரசியலையும், புரட்சிகர அமைப்பையும், அமைப்பு முறைகளையும் உயர்த்திப் பிடித்தவர் தோழர் திசை கர்ணன் !

ஆயுள் தண்டனையில் பதினைந்து ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை ஆன திசை கர்ணன், தன் மரணத்திற்கு முன்பு வரை மக்கள் அதிகாரம் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் அதிகாரத்தை உருவாக்கப் போராடினார் திசை கர்ணன்.

துரோகிகள், சதிகாரர்களின் சீர்குலைவு நடவடிக்கைகளைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு மக்கள் விடுதலைக்காக உழைத்தார். கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலின் கேடு கெட்ட நிர்வாகத்தால் உருவான இரண்டாம் அலை கொரோனா வைரஸ், திசை கர்ணனின் வாழ்வைப் பறித்துவிட்டது.

மரணத்திற்கு சிறிது நேரம் முன்பு கூட தன்னை சந்திக்க வந்த தோழர்களிடம் அரசியல் பேசி உற்சாகப்படுத்தினார் திசை கர்ணன். திசை கர்ணன் வீட்டின் சுவற்றில் இன்றும் தொங்கிய படி வழி காட்டிக் கொண்டிருக்கிறது அவர் விட்டுச் சென்ற வாசகம்.

உடல் நோகாமல்
சாகாமல்
வாராது மாற்றம் !
இது
போராட்டக் காலம் !
புரட்சி வெற்றி கொள்ளும் !

தோழர் திசை கர்ணன் காட்டிய திசையில் பயணிப்போம் !
தோழர் திசை கர்ணனாய் வாழ முயற்சிப்போம் !

தன் வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்த தோழர் திசை கர்ணனுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக் குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

2 மறுமொழிகள்

  1. ஒவ்வொரு தருணத்திலும் மக்கள் நலனையும், உறுதிதன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை இத்தோழரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்பாக பார்க்கிறேன்.

    தோழருக்கு சிவப்பஞ்சலி !

  2. தோழரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரது மக்கள் பணியும் அர்ப்பணிப்பும் மகத்துவம் வாய்ந்தது.நெருக்கடியான இன்றைய காலகட்டத்தில் அவரது மறைவு மிகவும் துக்கத்துக்குரியது.மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க