B&C – பின்னி  – பங்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் என்ற நூற்பாலை 1876-ல் சென்னை பெரம்பூரில் ஆங்கிலேய முதலாளியால் துவங்கப்பட்டது. 1968 வரை தனியார் முதலாளியால் நடத்தப்பட்டு வந்த இவாலை 1969-ல் ஒன்றிய அரசுக்கும் பின்பு தனியாருக்கும் மாறியது. தொடர்ந்து நடத்த முடியாது என்று 1996-ல் மூடப்பட்டது.
துவங்கப்பட்ட நாள் முதல் குறிப்பாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட 10, 12 மணி நேர உழைப்பால், அவர்கள் சிந்திய ரத்தத்தால் உருவான இவ்வாலையின் பலகோடி சொத்துக்கள் அனைத்தும் தனியார் உடமையாக மாறிவிட்டன. இவ்வாலை தனியாருக்கு தாரைவார்க்கப்படாமல் இருந்திருந்தால் இச்சொத்துகள் அனைத்தும் இன்று அரசு சொத்தாக நீடித்திருக்கும்.
ஆலை இயங்கியதற்கான சுவடே இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்புகளாக இன்று மாறி வருவதோடு இதன்மூலம் ரியல் எஸ்டேட் முதலாளிகளும் கொழுத்து வருகின்றனர். இவ்வாலையின் இவ்வளவு மதிப்புள்ள சொத்துக்களை உருவாக்கிய உழைப்பாளிகளின் வாழ்க்கை உருகுலைந்ததோடு, அவர்கள் பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், இறப்புகளும் சொல்லிமாளாது. இன்னும் இதற்காக உழைப்பை சிந்திய தொழிலாளர்களும் அவர்களுடைய வாரிசுகளும் குடிசைகளில்தான் வாழ்கின்றார்கள். ஆலை மூடப்பட்டபோது வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட கொடுமையை சென்னையின் ஜாலியன் வாலாபாக் என்றே சொல்லலாம்.
படிக்க :
அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !
பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்
இதை ஏன் இன்று பேச வேண்டும்?
இதை இன்று பேசுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இவ்வாலை 19-ம் நூற்றாண்டு இறுதியில் நாடோடியாக சென்னை கடற்கரையில் காலடி வைத்த ஜான் பின்னி என்ற வணிகனால் 1876-ல் B&C என்ற பின்னி கம்பெனி 254 ஏக்கரில் உருவாக்கப்பட்டது.
பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் என்ற பெயரில் இயங்கி வந்த இவ்வாலையானது, இருவகை உற்பத்தியைச் செய்தது. ஒன்று நூற்பு மற்றொன்று நெசவு.
இதில், இராணுவம் – இதர அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தேவையான சீருடைகளை தரமான வகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்கான மின்சாரத் தேவையை இவ்வாலையே உற்பத்தி செய்து கொண்டதோடு, மீதமுள்ளதை தனியாருக்கும், அரசுக்கும் விற்றது.
நீராவி இயந்திரங்களோடு துவங்கப்பட்ட இந்த ஆலை, மின்சார இயந்திரங்களையும் மின்சார ஒளி வசதிகளையும் பயன்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்தியது. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தொழிலாளர்களின் வேலை நேரம் குறையவில்லை. தொழிலாளர்களின் உழைப்பு கடுமையாகச் சுரண்டப்பட்டது. ஆலை நிர்வாகத்தின் இலாபம் பெறுகியது. இதை கார்ல் மார்க்சின் வார்த்தையில் சொல்வதென்றால் இந்த இலாபம் அனைத்தும் தொழிலாளர்களிடமிருந்து திருடப்பட்ட உழைப்பு.
தொழிலாளர்களின் கூலியும் உயரவில்லை. வேலையும் கடுமையானது. தினமும் 11 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைத்ததன் விளைவு, அவர்களது வாழ்வும் கவலைக்கிடமானது. பணிச்சுமை மற்றும் கொடுங்கோன்மை தாங்காமல் இக்கொடுமைதாளாமல் அன்று இருந்த வெள்ளை மேலாளர்களை தொழிலாளர்கள் தாக்கிய வரலாறும் உண்டு.
ஆலையைச் சுற்றி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குடியிருப்புகள் வாழ்வதற்கே தகுதியற்றவைகளாக இருந்தன.
இவ்வாலைத் தொழிலாளர்கள் வர்க்கமாக அணிதிரளாமல் சாதிகளாகப் பிரிந்து வாழ்ந்தனர். இதையே இவர்களை பின்பு பிரித்தாளுவதற்கு ஆலை நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.
சில வருடங்களுக்கு பிறகு அதிக நேரம் உழைப்பு சுரண்டுவதற்கு ஏதுவாகவும், எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற நிபந்தனையோடும் குறைந்த வசதிகளுடனான வீடுகளை தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுத்தது பின்னி ஆலை நிர்வாகம்.
தொழிலாளர்கள், எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற சரத்து அன்றைய வெள்ளையன் ஆட்சியிலும் தொடர்ந்தது. இன்றைய கொள்ளையன் ஆட்சியிலும் தொடர்கிறது. இந்தியாவில் நடந்த பல்வேறு அகில இந்திய ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தின்போதும், இரயில்வே தொழிலாளர்கள் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டதே இதற்கான சான்று. தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கான துருப்புச் சீட்டாக குடியிருப்புகளைப் பயன்படுத்தியது ஆலை நிர்வாகம்.
1918-ம் ஆண்டு ஏப்ரலில் இவ்வாலையில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற பெயரில் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. சொந்தம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதற்கான சான்றாக தொழிலாளர்களின் அவல நிலையைப்போக்க கூலி உயர்வுக்கானப் போராட்டத்தை அவ்வப்போது நடத்தி வந்தது.
இதை தொடர்ந்து 1920-ல் மற்ற நூற்பாலைகளில் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.26 கூலியாக தரப்படுகிறது. பின்னி ஆலையில் ரூ.20 மட்டுமே தரப்படுகிறது. மேலும், பயிற்சி இல்லாத தொழிலாளர்களுக்கு தினம் 14 அனா (1அனா – 6 பைசா என்ற வகையில்) தினக் கூலியாகத் தரப்படுகிறது. மற்ற ஆலைகளுக்கு தரப்படும் கூலியின் அளவிற்கு கூலியை உயர்த்தித் தரும்படியும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி தரும்படியும் நிர்வாகத்திடம் தொழிற்சங்க தலைவர்கள் வாதாடினர்.
முதலாளித்துவ வர்க்கத்திற்கே உரிய வக்கிர புத்தியானது, மற்ற ஆலைகளைவிட தங்கள்தான் அதிக கூலி தருவதாக அபாண்டமாகப் பொய் பேசியதோடு, கூலி அதிகம் கொடுத்தால், கையில் இருக்கும் காசு கரையும் வரை அவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள் எனக் கூறி தொழிலாளர்களின் உழைப்பை – அவர்களின் வாழ்வை – இழிவுப்படுத்தியது. இன்று வரை முதலாளித்துவமும் அதன் அடிவருடிகளும் இதைத்தானே சம்பள / கூலி உயர்வு போராட்டங்களில்  தொழிலாளர்கள் ஈடுபடும்போது கூறிவருகின்றனர்.
இவ்வேலை நிறுத்தத்தின்போது நிர்வாகத்தின் அடியாளான போலீசு துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியாகினர். அதையும் தாண்டி பின்வாங்காமல் இறுதிவரை போராட்டத்தை உறுதியுடன் நடத்தியதன் விளைவு, கருணை அடிப்படையில் கல்வி, மருத்துவம் போன்றவைகளுக்கு உதவித் தொகையும், ஒழுங்காக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையும் தருவதாக கூறியது நிர்வாகம். அதே நேரத்தில் இப்போராட்டத்தை ஒடுக்கிய போலீசுக்கு பரிசு வழங்கப்போவதாகவும் அறிவித்தது. இதன்மூலம் நிர்வாகம் அரசு என்பது எங்களின் அடியாள் படை என்பதை நிரூபித்துவிட்டது.
1920 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிறகும் கூலி உயர்வு என்பது கானல் நீரானது. ஆனால், வேலை நிறுத்ததின்போது பெரும்பங்காற்றிய நடேசன் என்ற தொழிலாளி பழிவாங்கப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர்கள் அனைவரும் இயந்திரங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் தங்களுக்குள் கலந்துபேசி ஆலை மேலாளரை கூட்டமாக சென்று சந்திதனர். இதை கண்டு அரண்டுபோன மேலாளர் சுடுவதற்கு துப்பாக்கியை உயர்த்தினான். இதை உடனே ஒரு தொழிலாளி பறித்துவிட்டார். இந்தப் பிரச்சினை பெரியதாகி கதவடைப்பு வரை சென்றது.
இதை பயன்படுத்தி உள்ளிருப்பு வேலை நிறுத்ததை முறியடிக்கவும், தொழிற்சங்கத்தை ஒழிக்கவும், இதற்கு காரணமாக இருந்த தொழிற்சங்க தலைவரான திரு.வி.க-வும் தொழிலாளியான நடேசன் உட்பட 13 பேர்கள்தான் என்று குற்றச்சாட்டை வைத்து இவ்வேலைநிறுத்தம் தனக்கு நட்டம் ஏற்பட்டுவிட்டது.
எனவே ரூ.80 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடுத்தது. அன்று தொழிசங்க சட்டம் எதுவும் இல்லாததால் வழக்கு நீதிமன்ற விசாரணைக்குச் சென்றது.
வேலை நிறுத்தம் முடியும் வரை இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசக் கூடாது எனத் தடையும் விதித்தது. ஆனால், தொழிலாளர்கள் தங்களாகவே முன்முயற்சியுடன் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினர். போராட்டம் தொய்வு அடையாமல் தொடர்ந்து நடைபெற தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க நிதியால் பராமரிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தொழிற்சங்க தலைவர்களின் ஒருவனான வாடியா என்பவர் அன்னி பெசண்ட் அம்மையாருடன் பின்னி நிர்வாகத்தை கமுக்கமாக சந்தித்து இழப்பீட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையோடு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். தொழிலாளர் மத்தியில் இதை தொழிலாளர் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறி விளக்கி விட்டு வெளிநாடுக்கு தப்பிச் சென்றுவிட்டான். வாடியாவும் பின்னி நிர்வாகமும் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சரத்துகளும்  நிபந்தனைகளும் நியு இந்தியா என்ற நாளேட்டில் வெளியிடப்பட்டன. தொழிலாளர் கூட்டத்தில் வாடியா விளக்கியதற்கும் இதற்கு பாரிய வேறுபாடுகள் இருந்தன. இதை உணர்ந்த தொழிலாளர்கள், வாடியா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதை உணர்ந்தனர்.
வாடியாவின் துரோகத்தால் 1921 ஜனவரியில் முடிவுக்கு வந்தது வேலை நிறுத்தம். துரோகத்தால் வீழ்த்தப்பட்டதை உணர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் 1921 பிப் முதல் மே வரை சிறு சிறு வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல இந்த சிறு சிறு துளிப்போராட்டங்கள் பெரும் போராட்டமாக வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தன.
1921 மே மாதத்தில் கர்னாட்டிக் ஆலையின் நாற்பாலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பங்கிங்காம் ஆலைத் தொழிலாளர்களும் இறங்க, அது பெரும் போராட்டமாக தீவிரமடைந்தது. அன்றைய ஆங்கிலேயே அரசு அப்போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கத் தொடங்கியது.
இதை துணிகரமாக தொழிலாளர்கள் எதிர்கொண்ட சூழலில் நிர்வாகம் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்த தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இருந்து பின்வாங்க வைத்தது. இதற்கு கோடரிக் கொம்பாக குடியரசு கட்சியைச் சார்ந்த M.C. ராஜா என்பவர் செயல்பட்டார்.
இதனூடே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தது பின்னி நிர்வாகம். இதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களும் 1921 ஜூன் 18 அன்று, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூடியது போல கடற்கரையில் கூடி பின்னி தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரித்தனர். மேலும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அரசுக்கு கடிதங்கள் எழுதும் போராட்டத்தையும் நடத்தினர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 26 அன்று நிர்வாகத்தின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு பலியாகி வேலைக்கு சென்ற ஆதிதிராவிட தொழிலாளர்கள் மீது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இதர சாதிய தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களின் குடியிருப்புகளை தாக்கியதோடு, குடிசைகளுக்கும் தீவைத்தனர்.
நிர்வாக சூழ்ச்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கும் எதிராக வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டிய தொழிலாளர்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தி அவர்களுக்குள்ளாகவே மோதலை ஏற்படுத்தியது ஆலை நிர்வாகம். தொழிலாளர்களிடையேயான சாதிய ரீதியிலான இந்த மோதல், போலீசுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டு வழக்குகள் போட்டு போராட்டத்தை முடக்கியது.
இவை அனைத்தும் தொழிலாளர் போராட்டங்களின் அனுபவங்களில் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை படிப்பினையாகத் தருகின்றன. இன்றும் தொழிலாளி வர்க்கத்திற்கான சங்கங்களிலும் சாதியரீதியிலான, கட்சி ரீதியிலான பிரிவினைகள் மூலம் இதே வகையான நரித்தனத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றது முதலாளித்துவ வர்க்கம்.
பின்னி ஆலை வேலை நிறுத்தம் போல, 1908-ல் தொழிற்சங்கம் இல்லாத நிலையில் தூத்துக்குடியில் ஆங்கிலேயர் நடத்திய கோரல் மில்லிலும் போராட்டம் நடந்தது. இதற்குத் தலைமை தாங்கி வழி நடத்திய ஏகாதிப்பத்திய எதிர்ப்பு போராளி வ.உ.சி அவர்கள், சிவாவின் துணையுடன் ஊதிய உயர்வு, வார விடுமுறை இதர கோரிக்கைகளை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர்.
படிக்க :
மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி
இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
இப்போராட்டத்தை ஆலைத் தொழிலாளர்களோடு மட்டும் நிறுத்தாமல் மக்கள் போராட்டமாக மாற்றியமைத்தார்கள். இதன் விளைவாக ஆங்கிலேயே மேலாளர்களையும் நிர்வாகிகளையும் வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் தாக்கினர். சமூக புறக்கணிப்பையும் செய்தனர். இவர்களுக்கு கைக் கூலியாக இருந்த உள்ளூர் பேர்வழிகளுக்கு பொருட்களை எதுவும் வாங்க முடியாத, ஏன் முடிவெட்டி, சவரம் செய்து கொள்ள முடியாத அளவிற்கு சமூகப் புறக்கணிப்பை செய்தனர். இதனால் அரண்டுப்போன நிர்வாகம் 50% ஊதிய உயர்வையும், வேலை நேரத்தில் உணவருந்தும் நேரத்தை சேர்த்தும், விடுமுறைகளையும் அறிவித்தது. தொழிலாளர்களின் போராட்டத்தை வர்க்கரீதியாக ஒருங்கிணைத்ததுடன், மக்களுடன் இணைந்த மக்கள் திரள் போராட்டமாக வளர்த்தெடுத்தன் விளைவாக அங்கு வெற்றியை சாதிக்க முடிந்தது.
அன்று ஆங்கிலேயே கும்பல் – இன்று அதானி அம்பானி கார்ப்பரேட் கும்பல். அன்றும் இன்றும் இவர்களுக்கு அடியாள் படையாக இருந்து சேவை செய்கிறது அரசு. இன்று அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு காவி பாசிசக் கும்பலும் சேவகம் புரிந்து வருகிறது.
இந்தச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணிதிரண்டு அதை தொடர்ச்சியான இடைவிடாத மக்கள் போராட்டங்களாக வழிநடத்திச் செல்வதன் வாயிலாக மட்டுமே தீர்வைக் காண முடியும்.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க