privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்

பின்னி தொழிலாளிக்கு நட்ட ஈடு முப்பதாயிரம் ரூபாய்

-

1996-ல் மூடப்பட்ட சென்னையின் பாரம்பரியம் மிக்க பின்னி ஆலைத் தொழிலாளர்களுக்கு கடந்த அக்டோபர் 19 அன்று ஜவுளித் தொழிலாளிகள் மறுவாழ்வு நிதித் திட்டத்தின் கீழ் நபர் வாரியாக தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை மறுவாழ்வுத் தொகையாக மத்திய அரசு அளித்துள்ளது. பழைய தொழிலாளிகளில் பலர் தற்போது இறந்து விட்டனர் என்றும், மீதமுள்ள பலருக்கும் வங்கியில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க இயலாததால் அவர்களது வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் முடங்கி விட்டதாகவும் தெரிகிறது.

பின்னி மில் தொழிலாளர்கள்
ஜவுளித் தொழிலாளர்கள் மறுவாழ்வு நிதி திட்டம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்ற பின்னி தொழிலாளர்களில் ஒரு பகுதி (படம் : நன்றி The Hindu).

பின்னி அண்டு கம்பெனி பாதி மூடப்பட்ட போது வேலையிழந்த 1012 தொழிலாளிகளில் 854 பேரை மாத்திரம் தற்போது தொழிற்சங்கங்கள் மூலமாக மத்திய அரசு கண்டறிந்துள்ளதாகவும், முதல் தவணையாக ரூ.3.28 கோடி தற்போது தரப்படுவதாகவும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே. சாம்பசிவ ராவ் கூறியுள்ளார். மொத்த தொகைக்கான காசோலையை எழும்பூரில் உள்ள ஐடிபிஐ வங்கிக் கிளையிடம் அவர் ஒப்படைத்தார். (எழுபதுகளில் ஆலை மழைநீரில் மூழ்கி நட்டமடைந்த போது ஐரோப்பியரான லார்டு இஞ்ச்கேப் நிறுவனத்தார் இந்த வங்கியிடம்தான் ஆலையை ஒப்படைத்து விட்டு சென்றார்கள்.) ஒரு மாத காலத்திற்குள் மீதமுள்ள தொகையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

”இந்த இழப்பீட்டுத் தொகை தொழிலாளர் குடும்பத்தினருக்கு ஓரளவு உதவும் என்றாலும், இதனை நீண்ட நெடும் போராட்டத்தின் மூலம்தான் சாதிக்க முடிந்தது” என்கிறார் பின்னி மில் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்.ஸ்ரீராமுலு. கோயம்புத்தூரில் உள்ள ஜவுளித்துறை ஆணையரின் மண்டல அலுவலகம் மூலமாக மதிப்பிடப்பட்டு வழங்கப்படும் இத்தொகையானது 20 ஆண்டுகளுக்கு முன் வேலையிழந்த போது அத்தொழிலாளர்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் 18 மாத தொகையே ஆகும். இன்று இந்த தொகையை வைத்து ஒரு குடும்பம் மறுவாழ்வு பெற முடியுமா? என்ற எதார்த்த நிலைமையை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏற்கெனவே பெங்களூருவில் மூடப்பட்ட பின்னி ஆலைக்கும் இதே போல 2008-ல் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியா முழுதும் வேலையிழந்துள்ள 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு நிதியாக மத்திய அரசு ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நூல் ஏற்றுமதி மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு இருந்த அரசின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய 33 சதவீத நூல் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே தனியாரிடமிருந்து அரசு ஏற்று நடத்திக் கொண்டிருந்த பின்னி ஆலையும் தொழில்ரீதியாக படுக்க ஆரம்பித்தது. 1985 ஜூனில் ராஜீவ் காந்தியால் உருவாக்கப்பட்ட புதிய ஜவுளிக் கொள்கையானது நெசவுத் துறையில் தாராளமயமாக்கலுக்கு அடிகோலியது. குறிப்பாக கைத்தறித் துறை கடுமையாகவும், நேரடியாகவும் பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பான்மை மக்கள் நேரடியாக பங்கு கொண்டிருக்கும் தொழில்துறை நெசவு தான். ஏறக்குறைய 18 சதவீதம் மக்கள் (20 முதல் 25 லட்சம் தொழிலாளர்கள் உள்ளிட்டு) 1987-88 வாக்கில் இந்தியா முழுக்க இத்துறையில் இருந்து வந்தனர். பத்து லட்சம் தொழிலாளர்கள் இத்துறை சார்ந்த துணைத்தொழில்களில் ஈடுபட்டு இருந்தனர். நெசவாளர்கள் கணக்குப்படி மொத்தத்தில் இத்துறையில் அப்போது இரண்டு கோடி பேர் ஈடுபட்டிருந்தனர். இந்த மதிப்பீட்டை சற்று மிகைப்படுத்தலாக  வைத்துக் கொண்டாலும் தொழில்துறையினர் தரும் புள்ளிவிபரங்கள் பலரையும் கணக்கில் கொள்ளவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அரசின் 1985 ஜவுளிக் கொள்கையானது தொழில்நுட்பத்தில் நவீன முறைகளை கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டு தனியார் முதலாளிகளுக்கு 6 சதவீத வட்டிக்கு ரூ.100 கோடி கடன் தந்தது. அரசு அப்போது ஏற்று நடத்தி வந்த என்.டி.சி ஆலைகளில் தொழில்நுட்பரீதியாக நவீனமயமாக்கல் நடைபெறாத காரணத்தால் தொழில் நசிவு துவங்கி வேலை இழப்பும் துவங்கின. அதே நேரத்தில் சில ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கலும் அங்கேயே வேலை இழப்பை கணிசமாக உயர்த்தியது. நாடு முழுதும் 567 தொழிற்சாலைகள் 1989க்குள் மூடப்பட்டு விட்டன. 7.27 லட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். “உற்பத்தி பெருக்கம்” என்பதை மைய முழக்கமாக வைத்து ராஜீவ் காந்தி அமல்படுத்திய ஜவுளி கொள்கை இந்திய தொழில்துறையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இக்கொள்கை முதன்மையாக கைத்தறித் துறையை காவு கொடுத்தாலும் துணை விளைவாக பின்னி ஆலை போன்ற பழைய பாணி விசைத்தறி ஆலைகளையும் பாதித்தது.

1980-81-ல் 41 சதவீதமாக இருந்த மில்களின் துணி தயாரிப்பு விகிதம் 1985-86-ல் 28.18 சதவீதமாகவும், 1992-93-ல் 10.5 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தது. தொண்ணூறுகளில் ஏற்றுமதியாகும் நூல் கண்டுகளின் அதிகரிப்புக்கு நிகராக உற்பத்தியும் கணிசமாக குறைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எஸ்.என். ஹாடா என்ற அதிகாரி தலைமையில் நடந்து வந்த பின்னி ஆலையை எம்.ஜி.ஆர் 1986-ல் சாராய உடையாருக்கு தாரை வார்த்தார். உண்மையில் அப்போது அவருடன் சில ஐரோப்பிய முதலாளிகளும் ஆலையின் பங்குதாரர்களாக இருந்தனர். அப்போது சென்னையில் வளரத் துவங்கிய ரியல் எஸ்டேட் நில மதிப்பிற்காக ஆலையில் இன்னும் நட்ட கணக்கை உயர்த்தி காட்டினார் உடையார். 1990-ல் ஓராண்டு காலம் மூடப்பட்ட ஆலை 1991-ல் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு பிறகு 1994-ல் வெள்ளம் வந்ததை காரணம் காட்டி மீண்டும் மூடப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு இத்துறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மதிப்பு கூட்டு வரியும், இரட்டிப்பு வரி விதிப்பும் கடுமையாக உள்நாட்டு சந்தையை பாதித்தது. பின்னி ஆலையில் படிப்படியாக விருப்ப ஓய்வில் தொழிலாளர்களைப் போகுமாறு கட்டாயப்படுத்திய நிர்வாகம் கடைசியில் 2001-ல் முழுதாக ஆலையை விற்று விட்டது.

ஏறக்குறைய 20 ஆயிரம் பேருக்கு வேலை தந்து கொண்டிருந்த பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் மில் (பின்னி ஆலையின் இரு பிரிவு ஆலைகள்) பகுதி இன்று சினிமா படமெடுக்கும் இடமாகவும், ஏற்றுமதிக்கான காலி கண்டெய்னர்களைப் போட்டு வைக்கும் இடமாகவும் மாறி உள்ளது. அங்குள்ள ஓய்வூதியம் பெறுபவர்கள் குடியிருப்பில் மாதம் ரூ. 400 முதல் ரூ.500 வரை வாங்கிக் கொண்டு கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறார்கள் அந்த முன்னாள் தொழிலாளர்கள் குடும்பங்கள்.

பின்னி ஆலை1876 மற்றும் 1881 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கபட்ட இந்த இரு ஆலைகளையும் நிறுவிய பின்னியின் குடும்பம் ஊதாரி கர்நாடக நவாப்புக்கு வட்டிக்கு பணம் கொடுத்த ஜான் பின்னியின் வகையறாக்கள் ஆவர். முதலில் ஏற்றுமதியில் மட்டுமே ஈடுபட்ட இவர்கள் 1850களில் பம்பாயில் நூற்பாலைகளும், நெசவாலைகளும் வரவே இங்கும் கொண்டு வர திட்டமிட்டு இரு ஆலைகளை அமைத்தனர். அப்போது துவங்கிய அமெரிக்க உள்நாட்டு யுத்தம் அங்கிருந்து பருத்தியை இங்கிலாந்துக்கு அனுப்புவதை சாத்தியமற்றதாக்கியது. எனவே இந்தியாவில் புதிதாக உருவாக்கப்படும் நிலங்களிலும், பீடபூமிகளின் மழை மறைவு பிரதேசங்களிலும் பருத்தி ஒரு பணப்பயிராக பயிரிடப்பட்டது.

1866-ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. எனவே இந்திய பருத்திக்கான தேவை இங்கிலாந்தில் குறையத் துவங்கியது. இங்கு தேங்கிய பருத்தியைக் கொண்டு தமிழகம் முழுக்க பல நூற்பாலைகள் அக்காலகட்டத்தில் துவங்கப்பட்டன. ஹார்வி என்பவர் 1885-ல் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலும், 1889-ல் தூத்துக்குடியிலும், 1892-ல் மதுரையிலும் நூற்பாலைகளை அமைத்தார். ஸ்டேன்ஸ் என்பவர் 1895-ல் கோவையில் ஆரம்பித்தார்.

அந்த காலத்தில் தான் தென்னிந்தியாவின் வறண்ட அல்லது 1863-ல் அரசு தீவிரமாக முயன்று ஜமீன்தாரிகளுக்குட்பட்ட இம்மிராசி கிராமங்களில் தரிசாக கிடந்த நிலங்களை புதிதாக விவசாய நிலமாக மாற்றிய வாரம்தார்களின் நிலங்களில் பருத்தி விவசாயம் அதிகமாக துவங்கியிருந்ததால் ஆலைக்கு தேவையான மூலப் பொருட்கள் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தன. 1870-களுக்கு பின் பரவலாக்கப்பட்ட ரயில் போக்குவரத்து விளைவிக்கப்பட்ட பருத்தியை கொள்முதல் செய்து தேவையான இடங்களுக்கு உடனடியாக கொண்டு செல்ல உதவியது.

1876-78 தாது வருடப் பஞ்சம் உருவாக்கிய பட்டினிச் சாவினாலும், ஆங்கிலேய அரசின் வரிவசூல் கொடுங்கோன்மையினாலும், நிலபிரபுக்களின் லேவாதேவி கொடுமையாலும் பாதிக்கப்பட்ட இடைநிலை சாதியை சேர்ந்த சிறு விவசாயிகள் சிலரும், பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களும் அருகிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் பல இடங்களில் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் இப்படி குடியேறிவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது.

சென்னையில் இப்படி குடியேறியவர்கள்தான் பின்னி ஆலையின் பெரும்பான்மை தொழிலாளிகளாகவும் பின்னர் அமைந்ததில் வியப்பேதுமில்லை. அப்படி குடியேறிய காலனிகளில் அம்மக்களை விலங்கினும் கீழாக ஆங்கிலேயர்கள் நடத்தினாலும், கிராமப்புற சாதிய கொடுங்கோன்மையை விட இது சற்று மேம்பட்டதாக இருந்ததால் அதனை அவர்கள் சகித்துக் கொண்டனர். சூரிய உதயத்தை பார்க்க கூட இயலாத நிலைமையில் அவர்களது வேலை நிலைமை இருந்தது. அவர்களது குழந்தைகளின் இறப்பு விகிதம் பிற பகுதிகளை விட எட்டு மடங்கு அதிகமாக இருந்தது. காற்றோட்ட வசதியோ, மருத்துவ வசதியோ, சத்தான உணவோ அவர்களுக்கு அங்கு கிடைக்கவில்லை.

1920-ல் ஒன்றிணைக்கப்பட்ட இந்த இரு ஆலைகளிலும் தான் முதன் முதலாக தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1921 ஜூனில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற அந்த தொழிற்சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆறு மாத காலம் நடந்த இந்த வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கம் தோல்வி அடைந்தாலும் புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏற்பட வாய்ப்பாயிற்று.

முதல் உலகப் போரிலும், பின்னர் வந்த யுத்தங்களிலும் இந்த ஆலையில் உற்பத்தியான காக்கி உடையுடன்தான் இந்திய ராணுவம் பிரிட்டிஷாருக்காக உலகெங்கிலும் சென்று போரிட்டுக் கொண்டிருந்தது. துணி ஏற்றுமதியிலும் பின்னி ஆலை சளைத்திருக்கவில்லை. ஆலை துவங்கிய காலத்தில் மெட்ராஸ் மாகாண கவர்னராக இருந்த நேப்பியர் இதனை ஒரு எச்சரிக்கையாகவே இங்கிலாந்து முதலாளிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.

1938-ல் சூளை பகுதியில் இயங்கி வந்த பம்பாயை தலைமையிடமாக கொண்ட நூற்பாலை மூட நேர்ந்தது. அத்தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அடுத்த ஆண்டு துவங்கிய இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து பின்னி ஆலையில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அந்த மூவாயிரம் பேரையும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள். அன்று ஆசியாவிலேயே பெரிய துணி உற்பத்தி தொழிற்சாலையாக விளங்கிய பின்னி ஆலை மூடப்படும் காலங்களில் கூட இந்திய அளவில் இரண்டாவது பெரிய ஆலையாகத்தான் விளங்கியது.

தொழிற்சங்க வரலாற்றில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே துப்பாக்கிச்சூடு நடந்து 7 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் என ஒன்று இருக்குமானால் அது பின்னி ஆலையில் தான் நடைபெற்றது. 11.3.1942-ல் அச்சம்பவம் நடைபெற்றது. அதை தொடர்ந்தும் ஒரு மாத காலம் வேலை நிறுத்தம் நடந்தது. வேலை நிறுத்த காலத்தில் தங்களுக்குள் உதவிக் கொண்ட தொழிலாளர்கள் ஒற்றுமை போற்றுதற்குரியது.

தொழிற்சங்கத்திற்கு கட்டுப்படாமல் திடீர் திடீரென வேலை நிறுத்தம் செய்ய முற்படும் 5 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய 1942 செப்டம்பர் 9 அன்று நிர்வாகம் முடிவு செய்து நோட்டீசு கொடுத்திருந்தது. இதற்கெதிராக போராட முற்படும் போது, அந்த ஐந்து தொழிலாளிகளும் ”எங்களுக்காக முப்பதாயிரம் தொழிலாளர் குடும்பங்கள் போராடி அல்லல்பட வேண்டாம்” எனக் கூறி தங்களது வேலைக்காக சங்கம் போராட வேண்டாம் என்றும், வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்கிறோம் என்றும் கூறி விட்டனர். மொத்த கூட்டமும் மெய் சிலிர்த்தாலும் இதனை வாக்குக்கு விட்டுதான் முடிவை தீர்மானித்தார்கள். அன்று இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சட்டமன்ற இடங்களுக்கும் நடக்கும் தேர்தல்களில் காங்கிரசோ அல்லது நீதிக்கட்சியோ தொழிலாளர் சங்கத்தை சாராமல் வெற்றி பெற இயலாது என்பதுதான் அன்றைய நிலைமை.

புதிய பொருளாதார கொள்கையின் துவக்க கொள்ளியாக ராஜீவ் பற்ற வைத்த 1985 புதிய ஜவுளிக் கொள்கையின் மிச்ச சாம்பலாக பின்னி ஆலைத் தொழிலாளர்களது குடியிருப்புகள் இப்போதும் வட சென்னையில் காட்சியளிக்கின்றன. தொழிலாளர்களில் பலரும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதுடன், நான்கு தலைமுறைகளாக இங்கேயே ஆலையுடன் இணைந்ததாகத்தான் அவர்களது வாழ்க்கை இருந்து வந்தது. இங்கு வேலை நிலைமைகள் கடந்த நாற்பதாண்டுகளாக மாற்றம் அடைந்து வந்தன. அதன் தொடர்ச்சியாக வந்த புதிய பொருளாதார கொள்கையின் முதல் இடியை இத்தொழிற்சாலை எதிர் கொள்ள நேர்ந்தது.

தற்போது இந்த வாழ்விழந்து போன தொழிலாளர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாக முன்னிறுத்தப்படும் பகுஜன் சமாஜ் கட்சியும், சிஐடியூ தொழிற்சங்கமும் வலுவான அமைப்புகளாக உள்ளன. சிபிஎம் தொழிற்சங்கத்தின் கோரிக்கை என்பது வழங்கப்படும் முப்பதாயிரம், நாற்பதாயிரம் மறுவாழ்வுத் தொகைக்கு இருபதாண்டு வட்டி கேட்பதாகத்தான் இருக்கிறது.

தலைமுறை தலைமுறையாக உழைத்து ஓடாகிப் போன தொழிலாளிகள் சென்னையில் ஒரு அடிநிலை சேரியாக வாழும் அவலத்தில் இருக்கிறார்கள். பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்திற்காக தேசமே பின்னி ஆலையாக மாற்றப்படும் சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம் தங்கள் நலனுக்காக மட்டுமல்ல, நாட்டு நலனுக்காகவும் இணைந்து போராடும் தேவை இருக்கிறது.

–    வசந்தன்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க