பெங்களூருவில் பீன்யா தொழிற்பேட்டையை சார்ந்த தொழிலாளர்கள் தொழிலாளர் பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 18 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50 தொழிற்சங்க உறுப்பினர்கள் பீன்யா தொழிற்பேட்டையில் திரண்டனர். அவர்கள் AICCTU உடன் இணைந்த கர்நாடக பொது தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைப்பதோடு நான்கு புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருங்கால வைப்பு நிதி (PF) செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக தொழிற்சாலை உரிமையாளர்கள் 10-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்களை இணைத்துக்கொள்வதாக தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். சில தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

AICCTU இன் உறுப்பினர் அரிந்தம், “குவெம்பு எண்டர்பிரைசஸ் என்ற ஷூ பேக்டரி, தொழிலாளர்களுக்கு பி.எப் வழங்க மறுத்துவிட்டது, சம்பளமும் தாமதமாகிவிட்டது. இந்த நிறுவனத்திடம் ஷூ மெட்டீரியல் தயாரிக்க படா நிறுவனத்திடம் ஆர்டர் இருந்தது. நிர்வாகத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தையில், எந்த தீர்வும் எட்டப்படாததால் தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் காரணமாக சம்பள நிலுவைத் தொகைகள் ஒரே நாளில் விடுவிக்கப்பட்டன” என்று கூறினார்.

பரேஷ், 21, அசாமில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளி. பீன்யாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலைசெய்து வருகிறார். ஆகஸ்டில், அவர் வேலையில் விபத்துக்குள்ளானார். இதன் காரணமாக அவர் மூன்று விரல்களை இழந்தார். அவரது முதலாளிகள் அவருக்கு இழப்பீடு வழங்கவோ அல்லது மருத்துவமனை கட்டணங்களுக்கு உதவவோ மறுத்துவிட்டனர். தொழிற்சங்கம் தொழிலாளர்கள் அவருக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

படிக்க : விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்

ஆலை தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். நகரின் மைய நூலகத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிபவர் காயத்ரி (46). அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு வரை மாதம் ரூ.6500 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தொழிற்சங்கத்தில் இணைந்த பிறகு குரல் எழுப்பி, சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தினோம், தற்போது சம்பளம் ரூ.13000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என நூலக இயக்குனர் கூறி வருகிறார்.” என்று கூறினார்.

மத்திய அரசு 29 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளாக சுருக்கிவிட்டது. ஊதிய சட்ட தொகுப்பு 2019-இல் நிறைவேற்றப்பட்டது. சமூகப் பாதுகாப்பு தொடர்பான மேலும் மூன்று சட்ட தொகுப்புகள் 2020-இல் நிறைவேற்றப்பட்டன; தொழில்துறை உறவுகள்; மற்றும் தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள், தொழிலாளர் தொடர்பான சட்டங்கள் பட்டியலில் இருப்பதால், மாநிலங்கள் அவற்றைச் செயல்படுத்துவதற்கான விதிகளை உருவாக்கிய பின்னரே புதிய விதிகள் பொருந்தும்.

தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கி, அவர்கள் மீதான சுரண்டலை எளிதாக்குகிறது.

தொழிற்சங்க உறுப்பினரும், வழக்கறிஞருமான சரத், “புதிய சட்டத்தின்படி, தொழிற்சங்கம் விதிகளை மீறுவதாக தகவல் கிடைத்தால், எந்த ஒரு தொழிற்சங்கத்தையும் உரிய நடைமுறையின்றி ரத்து செய்யலாம். புதிய சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் ஒப்பந்த முறையை நிரந்தரமாக்குகின்றன. முன்னதாக, முக்கிய பங்கு வகித்த தொழிலாளர்களை காலவரையின்றி ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்திருக்க முடியாது என்ற அம்சமும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. முன்பு, 20 தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும், ஆனால் தற்போது இது 40 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திறம்பட தொழிலாளர்களை சட்டப் பாதுகாப்புகளிலிருந்து தொழிற்சாலைகள் துண்டித்து வருகின்றன” என்றார்.

தொழிலாளர் விரோத சட்டங்கள், இதுநாள் வரை தொழிலாளர்கள் போராடி பெற்ற அனைத்து உரிமைகளையும் பறித்து, தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றவல்லது. இதற்கெதிரான பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் அனைவரின் கடமையாகும்.

புகழ்
செய்தி ஆதாரம்: நியூஸ்கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க