கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூர் செல்லும் வழியில் சில கிலோமீட்டர்கள் தொலைவில் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது குருபரபள்ளி எனும் பகுதி. இங்கு விநாயகபுரம் கிராமத்திற்கு அருகில்  குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது KATERRA எனும் தொழிற்சாலை. ரெடிமேட் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனி இது. 600 க்கும் மேற்பட்டோர் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் அருகில் உள்ள இன்னொரு கிராமம் கக்கன்புரம்.

அக்.19, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்களும் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதமாக நிரந்தரத் தொழிலாளிகளுக்கு ஊதியம் தரப்படவில்லை. இதைத் தர வலியுறுத்தித்தான் தொழிலாளிகள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிரந்தரத் தொழிலாளிக்கே இந்தக் கதியென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஏன் இந்த அளவுக்கு நிலைமை மோசமானது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ள இத்தொழிற்சாலை மற்றும் கக்கன்புரம் கிராமப் பகுதியின் கடந்தகாலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணை கட்டப்பட்டபோது அணை இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உழைக்கும் மக்கள் தலா 3 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்து தற்போது வசிக்கும் கக்கன்புரத்தில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது காமராசர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் இதனைத் தொடங்கி வைத்தார். அதனால் இப்பெயர் பெற்றது. அறுபது வருடங்களாக அந்நிலங்களில் விவசாயம் செய்தும், ஆடு மாடுகளை வளர்த்தும் அந்நிலத்தை நம்பி அப்பகுதி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

தனியார்மயக் கொள்கைகள் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை அன்றாடம் பிய்த்து எறிந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களின் வறுமையை, நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு ரியல் எஸ்டேட் மாபியாக்கள் உழைக்கும் மக்களின் நிலங்களை ஏமாற்றியும், அதிகார வர்க்கத்தின் துணையோடும் அபகரித்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்று.

அப்படித்தான் கக்கன்புரம் உழைக்கும்மக்களின் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நிலங்களும் குறைவான விலைக்கு பறிக்கப்பட்டுள்ளது. அக்பர்பாய் எனும் ரியல்எஸ்டேட் புரோக்கர் ஏக்கர் ரூ.1.75 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விலைகொடுத்து அப்பகுதி மக்களிடம் நிலம் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஃபைசல் என்னும் கேரள முதலாளியின் KEF INFRA எனும் கட்டுமானத் தொழில் நிறுவனத்திற்கு ஏக்கர் ரூ.36 லட்சம் என்று விற்றுள்ளார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் முன்புறம் உள்ளவர்களின் நிலங்களை முதலில் வாங்கி, பின்புறம் உள்ளவர்களின் நிலங்களின் பாதையை மறித்துள்ளனர். வேறுவழியின்றி பின்புறம் உள்ளவர்களும் தரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நிலத்தை சார்ந்து சுயமரியாதையோடு வாழ்ந்த கக்கன்புரம் மக்களின் வாழ்க்கை முதலாளிகளின் கொடூர சுரண்டலுக்காக சூறையாடப்பட்டது.   2015 ல் இருந்து KEF INFRA நிறுவனம் இப்பகுதியில் செயல்பட்டு வந்துள்ளது.

நிலங்களை விற்ற மக்களுக்கு KEF INFRA நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவில் நிரந்தரப்பணி கொடுத்துள்ளனர். ஆனால் வாக்குறுதி அடிப்படையில் எல்லோருக்கும் நிரந்தரப் பணி கொடுக்கப்படவில்லை. காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஆரம்ப ஊதியம் ரூ.13,000, நிரந்தர தொழிலாளிக்கு ரூ.15,000, 6 மாதத்தில் இன்க்ரீமெண்ட் ரூ.750, போனஸ் ரூ.7000 என கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது 1500 பேர் வரை நிரந்தரமாக பணியாற்றியுள்ளனர். அதுபோக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளிகள் பணியாற்றி வந்துள்ளனர்.

கக்கன்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கான ஆசிரியர் சம்பளம்,  பராமரிப்பு செலவை KEP INFRA நிறுவனம் ஏற்றுக் கொண்டு பராமரித்து வந்துள்ளது. KEP INFRA நிறுவனம் தங்களுக்கு ஓரளவு சலுகைகள் கொடுத்ததாகவும், பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை எனவும் தொழிலாளிகள் கூறுகின்றனர். தொழிலாளிகளின் உழைப்புதான் முதலாளிகளுக்கு பெருத்த இலாபத்தை உருவாக்குகிறது. ஆனால் கடும் வாழ்வாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு சிறிதளவு சலுகைகள் கொடுப்பதே பெரிய விசயமாக உள்ளது.

2019 ல் KEP INFRA நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டதால் அது KATERRA என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. அதன்பிறகு மொத்த நிலைமையும் தலைகீழாக மாறியதாக தொழிலாளிகள் கூறுகின்றனர்.

இன்க்ரீமெண்ட் நிறுத்தம், போனஸ் நிறுத்தம், தரமில்லாத உணவு, ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தருவதில்லை என எல்லா சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்பு வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு தங்குவதற்கு அறை வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை சம்பளத்தில் சேர்த்து கொடுத்துள்ளனர். தற்போது அறைவசதி ரத்து செய்யப்பட்டு, அதற்கான பணம் சம்பளத்தில் வெட்டப்பட்டு விட்டது. அதேபோல் ஓவர்டைம் வேலைக்கு ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஓவர்டைம் செய்ய கட்டாயப்படுத்துவது நடக்கிறது. பி.எஃப் பிடிப்பதில்லை, சம்பள பில் கொடுப்பதில்லை எனக் KATERRA நிறுவனத்தின் சட்டவிரோதமான செயற்பாடு கேட்பாரின்றி தொடர்ந்துள்ளது. நிரந்தரப்பணிக்கு வெறும் ரூ.17,000 மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

வேலையை விட்டு நின்றவர்களுக்கு ஒன்றரை வருடமாக செட்டில்மெண்ட் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். சம்பளம் கொடுக்காததால் பாதிப்பேர் வேலையை விட்டு நின்றுள்ளனர்.

அதுமட்டுமல்ல, புதிதாக ஒப்பந்த  வேலைக்கு எடுப்பவர்களுக்கு  எந்த சலுகையும் இல்லை. 90 நாட்களுக்கு சம்பளம் இல்லை, ESI, PF இல்லை, சாப்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, அலவன்ஸ் கிடையாது, சங்கம் சேரக்கூடாது என எவ்வளவு சுரண்டமுடியுமோ, ஒடுக்க முடியுமோ எல்லாவற்றையும் KATERRA நிறுவனம் செய்து வருவதாக கூறுகின்றனர்.

கேட்பதற்கே ஆத்திரம் வருகிற அளவுக்கு கொடுமைகள் நடந்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற அளவுக்கு உள்ள மக்களின் வாழ்க்கை நெருக்கடியை முதலாளித்துவ ஓநாய்கள் எந்தளவுக்கு கேடாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு இவையெல்லாம் கண்கூடான சான்று.

இதன் உச்சகட்டமாகத்தான் கடந்த 3 மாதங்களாக நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. ஏன் என்று தொழிலாளிகள் கேட்டதற்கு விற்பனையான உற்பத்திப் பொருளுக்கு பணம் வரவில்லை என்று பொறுப்பற்ற முறையிலும், சட்ட விதிகளை மீறியும் பதில் கூறியுள்ளனர். முதலாளிகள் செய்த வேலைக்கு கூலியைத்தான் கொடுக்கிறார்கள். தங்களது இலாபத்தில் பங்கைக் கொடுப்பதில்லை. ஆனாலும் இப்படியொரு பதிலை முதலாளிகள் கூற முடிகிறதென்றால் தொழிலாளி வர்க்கத்தின் அவலநிலையையும், அரசியல் விழிப்புணர்வு இன்மையையும் கேடுகெட்ட முறையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். கேள்வி கேட்ட தொழிலாளிகளை தங்களது அகமதாபாத் பிரிவுக்கு மாற்றி விடுவோம் என்று நிர்வாகம் மிரட்டியுள்ளது.

இந்தச் சூழலில்தான் 3 மாத சம்பளத்தைத் தரக்கோரி உள்ளிருப்புப் போராட்டத்தை நிரந்தரத் தொழிலாளிகள் தொடங்கியுள்ளனர். தொழிலாளிகள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில், அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் STAFF களுக்கு மட்டும் சலுகை கொடுப்பது என்ற போக்கை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. மேலும் தொழிலாளிகள் இங்கே வாழ்க்கை நெருக்கடிக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழலில் ஈவிரக்கமே இல்லாமல் கம்பெனி STAFF களுக்கு மட்டும் பெங்களூரில் தீபாவளி பார்ட்டி வைத்து தனது குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது KATERRA நிர்வாகம்.

பத்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தொழிலாளிகள் கூறுகின்றனர். சம்பளம் வரும், போய் வேலை செய்ங்க என்று திமிராக நிர்வாகம் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

படிக்க : ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!

மேலும் போராடும் தொழிலாளிகளை கலைக்கும் விதத்தில் ஒரு சிலருக்கு சலுகை காட்டி போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வேலையையும் நிர்வாகம் செய்து வருகிறது. போராட்டம் நடக்கும்பொழுது குருபரபள்ளி போலீசு ஸ்டேசனில் இருந்து உதவி ஆய்வாளர் வந்துள்ளார். தீபாவளி முடிந்து புதன்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று பேசியுள்ளார். ஆனால் தொழிலாளிகள் ஒத்துக் கொள்ளவில்லை. உண்மையிலேயே தவறு செய்த முதலாளியின் மேல், KATERRA நிர்வாகத்தின் மேல் எக்காலத்திலும் போலீசு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. எடுக்கவும் முடியாது. சட்டம் ஒழுங்கு என்று காரணம் காட்டி தொழிலாளிகளின் மீதுதான் நடவடிக்கை பாயும்.

இந்நிலையில் தீபாவளி வந்ததால் தொழிலாளிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் தற்காலிகமாக போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டு மீண்டும் புதன்கிழமை (26.10.2022) தொடரலாம் என்று தொழிலாளிகள்  முடிவெடுத்தனர். அந்த வகையில் புதன்கிழமையும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் போராட்டத்தை நிறுத்துவதற்கு KATERRA நிர்வாகம் எல்லாவிதமான தடைகளையும் ஏற்படுத்தும். தொழிலாளர் நலத்துறையும், அதிகார வர்க்கமும் KATERRA நிர்வாகத்திற்கு நன்றி விசுவாசத்தோடு துணைசெய்யும்.

KATERRA நிறுவனத்தின் சகிக்கமுடியாத இவ்வளவு கொடுமைகளையும் மொத்த அதிகார வர்க்கமும் வேடிக்கை பார்த்து வருவதை விட பெரிய குற்றம் வேறு என்னவாக இருக்க முடியும்?

எந்த அளவுக்கு இப்போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்பதை தொழிலாளிகளின் ஒற்றுமையும், அரசியல் விழிப்புணர்வும் மட்டுமே தீர்மானிக்கும்.

இது அந்த ஒரு நிறுவனத்தின் தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சினை. தொழிலாளி வர்க்கத்தின் முதுகில் பாறை போல அழுத்திக்கொண்டு இருக்கும் முதலாளித்துவ தனியார்மய இலாபவெறிக் கொள்கையை உழைக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி உணரவைப்பதும், அந்தப் புரிதலில் இருந்து தொழிலாளி வர்க்கம் தன்னை அமைப்பாக்கிக் கொள்வதன் மூலம்தான் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற முடியும்.

வினவு செய்தியாளர் – கிருஷ்ணகிரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க