திய வெட்டு, வேலைச்சுமை அதிகரிப்பு உள்ளிட்டு ஸ்விக்கி நிறுவனத்தின் சுரண்டல் அட்டூழியங்களை எதிர்த்து, ஏற்கெனவே அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டு பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகள் இதுவரை மேற்கொண்டு வந்த சுரண்டலுக்கு எல்லாம் உச்சமாக அமைந்துள்ளது.

முழுநேரமாக ஸ்விக்கியில் பணிபுரிபவர்களின் வேலைநேரம், புதிய விதிமுறைகளின்படி 12 மணிநேரத்திலிருந்து 18 மணிநேரமாக மாற்றப்பட்டிருக்கிறது. பழைய முறையின்படி, காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இருந்த வேலைநேரம் (ஓய்வு நேரம் 3 மணி நேரத்தோடு சேர்த்து), காலை 5:30 மணியிலிருந்து இரவு 11 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய வேலை நேரத்தில், முன்பு போல் செயலியை அணைத்து வைத்துவிட்டு ஓய்வெடுக்க முடியாது. எப்போதும் செயலியைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு போடுகிறார்கள்.

“காலையிலிருந்து இரவு வரை இங்கேயே வேலை பார்த்தால், எங்கள் குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாங்கள் எப்போது வாழ்வது” என கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

சர்வதேச தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை கழிப்பறைக் காகிதமாக ஆக்கப்பட்டு, கொத்தடிமைக்கு ஒப்பாக மாற்றப்படுகிறார்கள் ஸ்விக்கி தொழிலாளர்கள்.

படிக்க : ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! | துண்டறிக்கை

இதுவரை கொடுத்து வந்த வார ஊக்கத்தொகை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதுவரை சராசரி வார ஊதியமாகப் பெற்றுவந்த 11,500 ரூபாயை பெறுவதற்கு, 180 முறை உணவு டெலிவரி செய்திருக்க வேண்டும் என்று புதிய விதி சொல்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 26 டெலிவரி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

110, 125, 140, 160 என டெலிவரி இலக்குகள் வகுக்கப்பட்டு, அதற்கேற்ப ஊதியமும் ரூ.7,000, ரூ.7,500, ரூ.8,500, ரூ.9,750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“ஒரு தொழிலாளி 180 டெலிவரி என்ற இலக்கை, ஒரு வாரத்தில் நிறைவேற்றுவது மிகச் சவாலான ஒன்று; சராசரி ஊதியமான ரூ.11,500-ஐ வெட்டி ரூ.7,000 ஆக குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டே இந்த இலக்கை திணித்துள்ளார்கள்” என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.

நாளொன்றுக்கு காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை 20 டெலிவரி செய்தால், அந்நாளின் ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்கப்பட்டது. ஆனால் புதிய விதிமுறையில், ஆர்டர்கள் அதிகமுள்ள இடங்களில், டெலிவரி எல்லைகள் சுருக்கப்பட்டு, தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு 20 டெலிவரி எடுப்பதே குதிரைக் கொம்பு ஆகியுள்ளது. எனவே இதுவரை பெற்றுவந்த நாள் ஊக்கத்தொகையையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

***

கடந்த 20 ஆம் தேதி, தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகளுக்கு எதிராக சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஸ்விக்கியின் அடாவடியைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்யும்படி தன் சக தொழிலாளர்களுக்கு அறைகூவினர்.

22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 23 ஆம் தேதி சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலிருந்து பெங்களூரில் அமைந்துள்ள ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நடைபேரணியாக சென்றுள்ளார்கள்.

தொழிலாளர்களின் இந்த கிளர்ச்சியால், ஸ்விக்கி நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தனது விதிகளை ரத்துசெய்யவோ, தளர்த்திக் கொள்ளவோ அந்நிறுவனம் முன்வராது என்ற நிலையே உள்ளது. ஏனெனில், லாபவெறி பிடித்த ஸ்விக்கி, தான் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக தொழிலாளர் ஊதியத்தில் கை வைப்பது புதிதல்ல.

ஊதிய வெட்டு, வேலைச்சுமை அதிகரிப்பைக் கண்டித்து ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்திய ஸ்விக்கி ஊழியர்கள்.

2014 இல் ஸ்விக்கி நிறுவனம் தொடங்கப்பட்டபோது மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் எனக் கூவிக் கூவி அழைத்தார்கள். தொடக்கத்தில் ஒரு முறை உணவு விநியோகித்தால் (டெலிவரி) ரூ.60 வரை கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் ரூ.40, ரூ.35, ரூ.30, ரூ.25 எனக் குறைந்துகொண்டே வந்து தற்போது ரூ.20 ஆக நிற்கிறது.

இதேபோல ஆரம்ப காலகட்டங்களில் மாத ஊக்கத்தொகை, விற்பனை ஊக்கத்தொகை போன்ற சலுகைகளைக் கொடுத்து வந்தது. பிறகு அது வார ஊக்கத்தொகையாக மாற்றப்பட்டு, இன்று அதுவும் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. நாள் ஊக்கத்தொகையோ, பெற முடியாத ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

அமைப்பாக்கப்படாமல் இருந்தாலும்கூட, ஸ்விக்கி நிறுவனத்தின் தொடர்ச்சியான அடாவடிகளைக் கண்டித்து கொல்கத்தா, அசாம், பெங்களூர், டெல்லி என பல நகரங்களில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனவே தொழிலாளர்களின் இந்த கிளர்ச்சி, ஸ்விக்கி நிறுவனம் எதிர்பாராத ஒன்றல்ல.

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதி என்பது சென்னையின் சில மண்டலங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே அடியாக நாடு முழுக்க அமல்படுத்தினால் என்ன நேரிடும் என்பதை உணர்ந்து, படிப்படியாக தனது திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தோடு சதித்தனமாக செயல்படுகிறது ஸ்விக்கி

***

ஸ்விக்கி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, ‘நாம் அனைவரும் நிறுவனத்தின் பங்குதாரர்கள்’ என்று தொழிலாளர்களைப் பார்த்து கூறியது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தீவிரமடைந்த காலத்தில், தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள். வாரத்திற்கு சராசரியாக 15,000 அளவிற்கு சம்பாதிக்க முடியும் என்றாலும் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது.

12 மணிநேரம் முழுநேர வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி, பல நேரங்களில் சாப்பிட தாமதமாகி அல்சரால் (குடல் புண்) அவதிப்பட வேண்டியிருந்தது. மேலும் இருசக்கர வாகனத்திலேயே நீண்டநேரம் அமரும் காரணத்தால் மூல நோயை (பைல்ஸ்) சந்தித்தவர்களும் உண்டு.

இப்படி கொத்தடிமை போல வேலைசெய்த தொழிலாளர்களின் உழைப்பிலேதான் ‘ஸ்விக்கி’ என்ற நிறுவனம் தனக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இன்று தனக்கென்று குறிப்பிட்ட அளவு சந்தையைப் பிடித்த பிறகு, சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த புதிய விதிமுறையோடு இது நிற்காது. ஏனெனில் லாபவெறிக்கு ஒரு வரம்பு கிடையாது.

“பழைய ஊதிய முறை குறித்து பேசக் கூடாது; புதிய ஊதிய முறையில் ஏதேனும் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்” என பேச்சுவார்த்தைக்கு வந்த தொழிலாளர்களிடம் ஸ்விக்கி நிறுவன அதிகாரி பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

“விருப்பம் இருந்தால் வேலைசெய், இல்லாவிட்டால் வெளியேறு” என்று கூறுகிறார்கள். நாட்டில் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளம் குவிந்திருக்கிற சூழலில், சில பேர் போனால் பலர் போட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள் என்ற நிலை ஸ்விக்கி நிறுவனத்திற்கு துணிச்சலைக் கொடுக்கிறது.

படிக்க : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனையை குறைத்த நீதிமன்றம்!

ஸ்விக்கி தொழிலாளர்கள் சந்தித்துவரும் பிரச்சினை தனித்த ஒன்றல்ல, கிக் தொழிலாளர்கள் (Gig Workers) என்றழைக்கப்படும் நவீன பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை. முறையான நிறுவனமோ, பணி நிரந்தமோ, பணிப் பாதுகாப்போ அற்ற ஒரு நிலையில், குறிப்பிட்ட வேலைக்கு, குறிப்பிட்ட மணிநேரம் வேலைசெய்யும் தொழிலாளர்களே ‘கிக் தொழிலாளர்கள்’ என்றழைக்கப்படுகின்றனர். இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில், ஏகபோக முதலாளி வர்க்கம் தன்னுடைய சுரண்டலை அதிநவீன முறையில் தீவிரப்படுத்தும் ஒரு வடிவமாக கிக் பொருளாதாரத்தைப் புகுத்திவருகிறது.

நிதி ஆயோக் அறிக்கைப் படி, இந்தியாவில் தற்போது 77 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர். இது 2029-30க்குள் 2 கோடியே 35 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. (ஆதாரம்: தீக்கதிர்)

முதலாளி யாரென்றே கண்ணுக்குத் தெரியாத, ஆலை அல்லது நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளைப் போல, திரளாக ஒன்றிணைந்து வேலைசெய்ய வாய்ப்பற்ற ‘கிக் தொழிலாளர்கள்’, பிற பிரிவு தொழிலாளிகளைவிட ஆகக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள். ஜூலை 21ஆம் தேதி பெங்களூரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஸ்விக்கி தொழிலாளர்கள் “நாம் முகமில்லா நிர்வாகத்துடன் போராட வேண்டியுள்ளது” என்று கூறினர்.

“அவர்களால் ஒருங்கிணைந்து எதிர்ப்பைக் காட்டமுடியாது” என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தை, அமைப்பாய் திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே பணியவைக்க முடியும். நாடெங்கும் பரவலாக நடைபெற்றுவரும் ஸ்விக்கி தொழிலாளிகளின் தன்னெழுச்சிப் போராட்டங்களானது, அதற்கான முதல் அடியாகும்.

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க