சிறுமியை உயிருடன் விட்டுவிடும் அளவுக்கு கருணை காட்டிய’ பாலியல் குற்றவாளியின் தண்டனையை ஆயுள் தண்டனையிலிருந்து 20 ஆண்டுகளாகக் குறைத்தது மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச், பாலியல் பலாத்காரக் குற்றவாளியின் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையாகக் குறைத்து, “சிறுமியை உயிருடன் விட்டுச் செல்லும் அளவுக்கு அவர் அன்பானவர்” என்று கூறியுள்ளது.

குற்றவாளி ராம் சிங் (40), 2007-இல் இந்தூரில் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டான், மேலும் ஏப்ரல் 2009-இல் கூடுதல் அமர்வு நீதிபதி அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். ராம் சிங் இந்த உத்தரவை எதிர்த்து மே 2009 இல் மேல்முறையீடு செய்தான்.

படிக்க : உ.பி.யும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்கள்!

இச்சம்பவம் மே 31, 2007 அன்று இந்தூரின் ஐடிஐ மைதானத்திற்கு அருகே நடந்தது, 25 வயதான சிங், சிறுமியின் குடிசைக்கு அடுத்ததாக ஒரு தற்காலிக கூடாரத்தில் வசித்து வந்தார்.

சிங் சிறுமியை ஒரு ரூபாய் கொடுப்பதாக கூறி தனது கூடாரத்தில் அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்த சிறுமியின் பாட்டியும், சிறுமியின் தந்தையும் சிங்கின் கூடாரத்திற்கு சென்றனர். கூடாரத்திற்குள் நுழைந்தபோது, சிறுமி இரத்த வெள்ளத்தில் கிடந்தார். சிறுமியை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (பலாத்காரம்) மற்றும் 1989 ஆம் ஆண்டு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு 3(1)12 ஆகியவற்றின் கீழ் பலாத்கார குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

எனினும், எஃப்எஸ்எல் அறிக்கை கூட அரசு தரப்பு வழக்கிற்கு ஆதரவாக பதிவு செய்யப்படாததால், நேரில் கண்ட சாட்சிகளைத் தடுக்கும் வகையில் அவர் வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்று குற்றவாளிக்கு ஆதரவான வழக்கறிஞர் வாதிட்டார்.

கடந்த செப்டம்பர் 28 அன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுபோத் அபயங்கர் மற்றும் சத்யேந்திர குமார் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது: “விசாரணை நீதிமன்றத்தின் சாட்சியங்களை மதிப்பிடுவதிலும், மேல்முறையீட்டாளரின் கொடுஞ் செயலைக் கருத்தில் கொள்வதிலும் எந்த தவறும் இல்லை. 4 வயதுடைய சிறுமியை பாலியன் பலாத்காரம் செய்யும் நாட்டம் உள்ளதால், அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டனையை குறைக்கப்படக் கூடிய பொருத்தமான வழக்காக இந்த நீதிமன்றம் கருதவில்லை. சிறுமியை உயிருடன் விட்டுச் செல்லும் அளவுக்கு அவர் கருணை காட்டினார் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

படிக்க : போபால்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாலியல் வெறியனுக்கு சிறுமியை கொலை செய்யவில்லை என்பதால் கருணை அடிப்படையில் விடுதலை செய்கிறோம் என்று மிகவும் கீழ்தரமான தீர்ப்பை வழங்கியுள்ளது நீதி(அயோக்கிய)மன்றம்.

இதேபோல், சமீபத்தில் பில்கீஸ் பானு கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றாவாளிகள் கூட நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்துள்ளது நீதி(அயோக்கிய)மன்றம்.

கத்துவா ஆசிபா முதல் நிர்பயா வரை பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமிகள் தினம் தினம் பாலியல் வெறியர்களால் வன்கொடுமை மற்றும் வன்கொலை செய்யப்படுகிறார்கள். தற்போதைய நீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்புகள் குற்றத்தை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க