போபாலில் பள்ளி வேனில் மூன்றரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் உள்ள “கிண்டர் கார்டன்” தனியார் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு நர்சரி வகுப்பு இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மூன்றரை வயது சிறுமி படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (09.09.2022) அன்று பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும்போது சிறுமியின் பள்ளி சீருடை மாற்றப்பட்டு வேறு சீருடையில் இறங்கியுள்ளார்.

சிறுமியிடம் தாய் விசாரித்தபோது “பள்ளி பேருந்தில் வந்தபோது ஓட்டுனர் தனது சீருடையை அகற்றி, வேறு ஆடையை அணிவித்து மோசமான செயலில் ஈடுப்பட்டதாகவும், தனது அந்தரங்க உறுப்பில் வலி இருப்பதாகவும்” கூறியுள்ளார்.

மேலும் பேருந்தில் பெண் உதவியாளர் ஒருவர் இருந்ததும், அவரும் ஓட்டுநரின் வக்கிர செயலுக்கு உடந்தையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஓட்டுனரும், பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வேன் டிரைவர் கிஷோர் குமாரை(32) விசாரித்ததில் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

இச்சம்பவத்தை தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேன் டிரைவரின் வீட்டின் முன் திரண்டு சுத்தியல், கடப்பாரையால் இடித்து தள்ளியுள்ளனர்.

பெண் உதவியாளர் முன்பே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது என்பது இச்சமூக நுகர்வு வெறியின் கோரமுகத்தை நமக்கு திரையிட்டு காண்பிக்கிறது.

***

இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் உலா வருவதும், இதை படிப்பதற்கே ஒரு கூட்டம் உருவாகி இருப்பதும் செய்திதாளில் தினசரி அத்தியாவசியமான செய்திகளாக வரும்படியாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு செய்திதாளிலும் ஐந்திற்கும் மேற்பட்ட பாலியல் சீண்டல்கள், பாலியல் பலாத்காரம், முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டல் போன்ற ஏராளமான பரபரப்பு செய்திகளாக சமூக ஊடகங்களில் உலா வருவது என்பது இன்று இயல்பாகிவிட்டன.

அந்த ஓட்டுனருக்கு, மூன்றரை வயது சிறுமியிடம் பள்ளி வேனில் அவ்வளவு பேரின் முன்னால் தனது பாலியல் வக்கிர வெறியை காட்டும் துணிவு எங்கிருந்து வந்தது?, இச்செயலுக்கு பெண் உதவியாளர் துணைப்போக முடிந்ததுதென்றால் அது எப்படி? ஓட்டுனருக்கும் பெண் உதவியாளருக்கும் அந்த சிறுமியை தனது குழந்தையாகக் கூட பார்க்க முடியவில்லையே ஏன்? சிறுமியின் ஆடையை மாற்றுவதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுபடும் வக்கிர புத்தி எங்கிருந்து வருகிறது?.

இதுபோன்று ஏராளாமான கேள்விகள் எழுகின்றன. கேள்விக்கான பதில், அதற்கான தீர்வை எங்கே போய் தேடுவது?

இதுபோன்ற, பாலியல் வக்கிர வெறிப்பிடித்தவர்களை கைது செய்து கொண்டுதான் இருக்கிறது போலீசு, நீதிமன்றமும் பல வருடம் விசாரித்து தண்டனையும் கொடுக்கிறது. ஆனால் எதுவும் மாறவேயில்லையே. இச்சிறுமிக்கு நடந்தது நாளை நமது குழந்தைக்கும் நடக்கும் என்ற அச்சம் நம்மிடம் இருந்தாலும் கூட “நம்மால் என்ன செய்ய முடியும்” என்று கடந்து செல்லவே வைக்கிறது.

மனிதன் விலங்கு மாதிரி மாறிக்கொண்டிருக்கிறான் என்று கூற முடியுமா? நிச்சயம் முடியாது. விலங்குகள் கூட ஒரு குறிப்பிட்ட நேரம், காலத்தில் மட்டும்தான் தனது சக விலங்குடன் உடலுறவு வைத்துக் கொள்கிறது. ஆனால் இன்று பாலியல் வெறிபிடித்தவர்கள் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பாலியல் இச்சைக்கான செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள்.

2020 என்.சி.ஆர்.பி ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர். இன்று சமூக ஊடக பயன்பாட்டு அதிகரிப்பால் பல்வேறு வடிவம் எடுத்து பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருகின்றன. இதை வெறும் சமூக சீரழிவு என்று மட்டும் ச்ச்சு செய்துவிட்டு கடந்துச் செல்ல முடியாது.

ஏனென்றால், மனித சமூகம் இந்த முதலாளித்துவ நுகர்வுவெறி கலாச்சாரத்தில் மிக வேகமாக பயணித்து வருகிறது. இன்னும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது, யாரும் இந்த முதலாளித்துவ சிலந்தி வலையில் இருந்து தப்பிக்கவும் முடியாது.

படிக்க : தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – தீர்வு என்ன?

இணையதள பயன்பாடு அதிகரித்துவரும் இச்சூழலில் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதற்காக பல்வேறு வடிவம் எடுத்துக் கொண்டிக்கிறது. இதில் சீரழிந்து இருப்பது வெறும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான்.

***

இதற்கு உடனடி தீர்வு வேண்டும் என்று வாதம் வைப்பவர்கள் “கடுமையான சட்டம் வேண்டும்” என்று கூறுவார்கள். இதுவரை பெண்களை பாதுகாப்பதாக கூறிவந்த சட்டத்தையே பயன்படுத்தாதபோது கடுமையான சட்டம் வந்தாலும் இதே நிலைதான். 2012-ம் ஆண்டில் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது நிர்பயா என்ற மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கு 2020-ம் ஆண்டில்தான் மரணதண்டனை தீர்ப்பு வந்தது. அதுவரை பல்வேறு குற்றங்களும் நடந்துள்ளது, அதற்கு பின்னரும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

குற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது இச்சமூகத்தில் எது என்று ஆராயாமால் “கடுமையான சட்டம் வேண்டும்” என்று கூறுவது, தீர்வை நோக்கி நம்மை சிந்திக்கவிடாமல் செய்வதற்கே உதவும். வெறிப்பிடித்த மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பை ஒழித்துக்கட்டாமல் வெறும் நபர்களை தண்டிப்பதை மட்டும் வைத்து குற்றங்களை தடுக்க முடியாது.

இந்த சமூக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் பற்றியும் சமூக கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான வழிகள் பற்றியும் விவாதத்தை தொடங்குவதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.


எழிற்குழலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க