தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – தீர்வு என்ன?

பெண்களை ஒரு போகப் பொருளாக மாற்றி சித்தரிப்பதால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்காமல் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது.

சென்னை பரங்கிமலையில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அம்மாவுக்கு மனநலம் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது; மேலும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முறையான சிகிச்சை அளிக்க முடியாமல்போன காரணத்தினால் அந்த சிறுமியின் அப்பாவும் அவர்களை தனியேவிட்டு சென்றுவிட்டார். எனவே குடும்ப கஷ்டத்தை சமாளிக்கவும், அம்மாவுக்கு மருத்துவம் பார்க்கவும் மடிப்பாக்கத்திலுள்ள ஒரு அரசியல்வாதியின் (தினகரனில் அவனது பெயரை குறிப்பிடவில்லை)  வீட்டுக்கு உதவிகேட்டு சென்றுள்ளார். வீட்டு வேலை தெரியும் என்று கூறியதால் அந்த அரசியல்வாதி சிறுமியை தன் வீட்டிலேயே தங்கவைத்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் அந்த அரசியல்வாதி சிறுமியை பத்து ஆயிரம் ரூபாயிக்கு விசுவநாதன் எனும் கஞ்சா வியாபாரியிடம் விற்றுள்ளார். கஞ்சா வியாபாரி விசுவநாதன் கடந்த இரண்டு மாத காலமாக தினமும் அச்சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் அவனது நண்பர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் அந்த பகுதி மக்கள் அங்கு கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கஞ்சா வியாபாரி விசுவநாதன் உள்ளிட்டு ஏழு பேரை கைது செய்தது போலீஸ். ஆனால் அந்த அரசியல்வாதி கைது செய்யப்படவில்லை.


படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !


குழந்தை தொழிலாளர்கள் உருவாக காரணம்:

வறுமை, போதைக்கு அடிமையான பெற்றோர்களை இழந்த காரணத்தாலும், அவர்களுடைய பொருளாதார சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் குழந்தைகள் வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான் போதைப்பழக்கம் மற்றும் பாலியல் கொடுமைகள் என அந்த குழந்தைகளின் வாழ்வே சீரழிந்துவிடுகின்றது. கொரோனா தொற்றின் பிறகு கடந்த இருபது வருடங்களில் இல்லாதவகையில் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் உருவாகியுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. மத்திய மாநில அரசுகளால் இயற்றப்படும் கார்ப்பரேட்மய திட்டங்களால் மக்களின் வறுமை மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்துகட்ட முடியாது, இப்பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தும் வேலையைதான் செய்யும்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ – போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்குமா?:

“கடந்த 2021 டிசம்பர் முதல் கடந்த ஜனவரி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 27-ஆம் வரை ஒரு மாதம் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என சுற்றறிக்கை ஒன்றை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பி இருந்தார். ஆனால் கஞ்சா விற்பனையாளர்களுடன் கள்ளக்கூட்டு வைத்திருக்கும் இந்த காவல் துறையால் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை மேலும் இந்த அரசு கட்டமைப்புகுள் அதை நிறுத்தவும் முடியாது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் ஆணாதிக்க சமூகம் தான்: 

பெண்களை பற்றித் தாழ்வான கருத்துகளே இந்த சமூகத்தில் நிலவுகிறது. பெண் எப்போதும் ஆணுக்கு சமமானவள் கிடையாது என்றும் ஆண்களுக்கு அடங்கி அவர்களுக்கு எல்லா வேலையும் செய்வதற்காகவே இருக்க வேண்டும் என்றும்  சமூகத்தில் அவர்களை ஒடுக்கி வைத்துள்ளார்கள். இந்த சமூகம் பிற்போக்குத்தனமும் ஆணாதிக்க சிந்தனையும் நிறைந்த உள்ளதால்தான் பெண்கள் மீது எல்லா வகையான வன்முறைத் தாக்குதல்களும் நடக்கிறது. மேலும் பெண்களை ஒரு போகப் பொருளாக மாற்றி சித்தரிப்பதால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது. எனவே இந்த சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்காமல் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எனவே சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்க அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவதே ஒரே தீர்வாகும்!!!


ஜீவா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க