லகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு எனப் பெயரெடுத்துள்ளது இந்தியா. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் முடிவு இவ்வாறு தெரிவிக்கிறது. இதே போன்றதொரு கருத்துக்கணிப்பில் ஏழாண்டுகளுக்கு முன் நான்காம் இடத்தில் இருந்தது இந்தியா.

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) பாலின ஏற்றத்தாழ்வு மிகுந்த நாடுகளின் தரப் பட்டியலில் இந்தியாவுக்கு 108-வது இடத்தை வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்தது மொத்தம் 144 நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி ஆய்வானது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் போன்றவற்றில் பெண்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதாகும்.

அதே போல் 2017-18 ஆண்டுகளுக்கான “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆய்வானது, பெண்களின் சமூக இணைப்பு, நீதி, பாதுகாப்பு உள்ளிட்ட 11 அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்டதாகும்.

இந்திய மக்கள் தொகையில் 49 சதவீதம் உள்ள பெண்களின் பாராளுமன்ற பங்கேற்பு வெறும் 12 சதவீதம்தான். அதே போல் பெண் தொழிலாளிகளின் சதவீதம் 2006-ம் ஆண்டு 37 சதவீதமாக இருந்து, 2017-ல் 27 சதவீதமாக சரிந்துள்ளது என்கிறது உலக வங்கியின் அறிக்கை ஒன்று. இதனடிப்படையில் 181 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா வகிப்பது 163-வது இடமாகும்.

முந்தைய காலத்தை விட இப்போது பெண்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். இதில் பல தொழில்துறைகள் இதுகாறும் ஆண்களுக்கேயானது எனக் கருதப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வாடகை வாகனங்கள் ஓட்டுவது, தொடர்வண்டி ஓட்டுநர், அறுவை சிகிச்சை நிபுணர், ஒலிம்பிக் வீரர் என்பதில் துவங்கி விமானங்கள் ஓட்டுவது வரை பெண்கள் ஈடுபடுகின்றனர். ஊரகப் பகுதிகளில் கூட பஞ்சாயத்து அளவிலான பொறுப்புகளை பெண்கள் வகித்து வருகின்றனர்.

2018-ம் ஆண்டுக்கான பொருளாதார கருத்துக்கணிப்பின் படி, கிராமப் பஞ்சாயத்துகளில் 43 சதவீதம் பெண்கள் தலைமை ஏற்றுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாலேயே இந்த பங்கேற்பு சாத்தியமாகி உள்ளது என்பதோடு, அவ்வாறு கிராமப்புற பெண்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் தங்களது கணவன்மார்களின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டாக வேண்டும் என்பதும் கவனத்திற்குரியது.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
♦ மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கேற்பு சதவீதம் பெருமளவிற்குக் குறைவாகவே உள்ளது என்கிறார் வழக்காடுதல் மற்றும் சட்ட ஆலோசனை சங்கத்தைச் (Association for Advocacy and Legal Initiatives (AALI)) சேர்ந்த ரேணு மிஷ்ரா. மேலும், அவ்வாறு குறைந்த சதவீதமாக இருக்கும் பெண் தொழிலாளிகளுக்கு அதேபோன்ற வேலையில் ஈடுபடும் ஆண் தொழிலாளிகளோடு ஒப்பிடும்போது குறைந்த ஊதியமே வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பெண்கள் தங்களது சொந்த முடிவுகளைக் கூட எடுக்க முடியாத நிலையையும், திருமண பந்தம் குறித்து ஒரு முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லாதிருப்பதையும் ரேணு சுட்டிக் காட்டுகிறார்.

தன்னுடைய வயதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் வேலை மற்றும் சொந்த வாழ்க்கைக்கு இடையிலான சமன்பாட்டை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்கிறார் மார்பகப் புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பூஜா ரமாகாந்த். “ஒரு பெண் அறுவை சிகிச்சை நிபுணர் எனும் வகையில் எனது ஆண் சக மருத்துவர்களைக் காட்டிலும் அதிக போராட்டங்களை நான் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு ஆண் வழிச் சமூகம் விதித்துள்ள சட்டகத்திற்குள் மற்றவர்கள் ஏற்படுத்தியுள்ள சமூக நடைமுறைக்குள் ஒரு பெண் பொருந்திப் போக வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறார்கள்? அது அந்தப் பெண்ணுக்கு நல்லது என்பதாகவே கூட இருக்கட்டுமே?” எனக் கூறும் பூஜா, பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் உள்ள பெண்களும் கூட சமூகத்தில் பிறர் என்ன சொல்வார்களோ என்கிற அச்சத்தால் தங்களுக்குப் பொருந்தாத திருமண பந்தத்தில் உழல்வதாகக் குறிப்பிடுகிறார்.

பெண்கள் கல்வி பெறுவதில் உள்ள சவால்களைப் பட்டியலிடுகிறார் கல்வியாளர் மரு. சித்ரா சிங். ஊரகப் பகுதிகளில் பெண்களுக்கான கல்வி நிலையங்கள் குறைவு என்பதோடு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தை நீண்ட தொலைவு சென்று படிப்பது பாதுகாப்பானதில்லை எனக் கருதுகின்றனர். மேலும், இருக்கும் பள்ளிகளிலும் ஒழுங்கான கழிவறை வசதிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சித்ரா.

அடுத்து, ஒரு பெண் குழந்தையின் கல்விக்கு செலவு செய்து அவளை இன்னொருவருக்கு கட்டிக் கொடுத்து விடுவதைக் காட்டிலும், ஆண் குழந்தையைப் படிக்க வைத்தால் அவன் தங்களைப் பிற்காலத்தில் பார்த்துக் கொள்வான் என பொருளாதார ரீதியில் பின் தங்கிய பெற்றோர் கருதுவதையும் சித்ரா குறிப்பிடுகிறார்.

படிக்க:
மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

சரி, இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

வாழ்க்கை என்பது ரோஜா மலர்கள் தூவப்பட்ட படுக்கையாகவும் இருக்க வேண்டாம்; அதே போல் முட்கள் நிறைந்த சிம்மாசனமாகவும் இருக்க வேண்டாம். பெண்கள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தாராலும், சமூகத்தாலும் நிர்பந்திக்கப்படும் ஆண் வழிச் சமூகத்தின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்படத் தேவையில்லை என்கிறார் ரேணு. பெண்கள் தங்களுடைய கல்விக் கூடங்களில், பணி இடங்களில், இன்னபிற இடங்களில் இதற்கு எதிராக அச்சமின்றிப் போராட வேண்டும் என்கிறார். பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் சித்ரா.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனிமேலும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டிராமல் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார் பூஜா. சமூகத்தை நினைத்து அஞ்சாமல் அவர்களது தெரிவுகளை – அது வேலையோ, குடும்பமோ – சொந்த முறையில் செய்ய வேண்டும் என்கிறார். மேலும், வீட்டு வேலைகளை எல்லா உறுப்பினர்களும் சமமாக பங்கிட்டுச் செய்ய வேண்டும் என்பதைப் பெண்கள் வலியுறுத்த வேண்டும் என்கிறார் பூஜா. “வேலைக்குச் செல்கிறார்களோ இல்லையோ.. எல்லா பெண்களும் வேலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது” என்கிறார்.

பெண்கள் அச்சமின்றிப் போராடுவதே தீர்வு என்பதை இவர்கள் தங்களுக்கே உரிய முறையில் வெவ்வேறு வார்த்தைகளில் முன்வைக்கின்றனர். அந்தப் போராட்டத்தோடு தோள் கொடுப்பது அனைவரின் கடமையும் கூட. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதல்ல; அதில் பாலின வேறுபாடின்றி அனைவரும் கைகோர்ப்பதே சரியானதும், அவசியமானதும் ஆகும்.

சாக்கியன்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க