16.09.2022

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை!
ஒருபோதும் வரவேற்க முடியாது!

பத்திரிகை செய்தி!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்றைய (15.09.2022) தினம், நீதிமன்றத்தை அவமதித்ததாக தானே முன்வந்து விசாரித்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அளித்துள்ளது.

சவுக்கு சங்கர் மீதான தவறுகள் காரணமாக இப்படிப்பட்ட அராஜகமான தீர்ப்பை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஏனென்றால் சவுக்கு சங்கர் மீதான நடவடிக்கை என்பது, அவர்   மக்களுக்கு எதிராக செயல்பட்டார் என்பதற்காக அல்ல; மாறாக நீதித்துறையை அவமதித்தார் என்பதற்காக மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி விவகாரத்திலே கூட இப்பிரச்சினையை பற்றி பேசிய யூடியூப் நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அராஜக நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொண்டதை நாம் கண்டோம்.

அயோத்தி(பைசாபாத்) பாபர் மசூதி தீர்ப்பு, கியான் வாபி மசூதி மீதான சமீபத்திய வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவு, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு, முன்னாள் நீதிபதிகள் பெறும் உயர்ந்த பதவிகள், அமித்ஷாவுக்கு வாதாடிய வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆனது, ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகள் என்று உளறியது என எதையும் கேள்வி கேட்க முடியாது.

படிக்க : அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பொதுமக்களுடைய வழக்குகளும் தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை தொடர்பான வழக்குகளும் பொதுநல வழக்குகளும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

நீட் தேர்வு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இப்பொழுது வரை இறுதி விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் வழக்கையும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து இறுதியில் கட்டாயம் இல்லை என்று கூறியது உச்ச நீதிமன்றம். இறுதியில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நடைமுறையில் நாம் காண்கிறோம்.

ஆனால், தன்னை விமர்சித்துவிட்டார்கள் என்று உடனுக்குடன் தானே முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். பொதுமக்களுக்கு ஒன்றாகவும் தனக்கு ஒன்றாகவும் நடந்து கொள்வதுதான் நீதித்துறையின் அணுகுமுறை.

சவுக்கு சங்கர் மீதான தண்டனையை தொடர்ந்து அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நீதிமன்ற ஃபாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தானாகவே முன்வந்து வழக்குகளை எடுத்து விசாரித்து நீதிமன்றங்கள் தண்டனை வழங்கும் என்பது திண்ணம்.

நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் சங்கரின் பேச்சு இருந்ததாக பதிவாளர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சவுக்கு சங்கர் மட்டுமல்ல நீதித்துறையை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பல்வேறு வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரால் நீதித்துறையின் மாண்பு எப்போதும் குலைக்கப்படவில்லை. அது மாறாக நீதித்துறையின் நடவடிக்கைகளாலேயே நடைபெறுகின்றது.

மேற்கண்ட தீர்ப்பானது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவைகள் மறுப்பதுடன் ஏற்கனவே கருத்து சுதந்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த பல்வேறு வழிகாட்டுதல்களையும் உயர் நீதிமன்றம் மீறி இருக்கிறது.

ஆகவே, சவுக்கு சங்கர் மீதான தண்டனையை ஒருபோதும் வரவேற்க முடியாது!

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க