privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை - அவசரச் செய்தி

மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி

-

   புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
NEW  DEMOCRATIC  LABOUR  FRONT
தமிழ்நாடு-புதுச்சேரி
TAMIL NADU & PUDUCHERRY
e-mail : ndlftn@gmail.com                   puthiyathozhilali@gmail.com

         PRESIDENT :   A.MUKUNDAN
GENERAL SECRETARY :   S.THANGARAJ

 பத்திரிக்கைச் செய்தி

மாருதி  தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாழ்நாள் சிறை!
தொழிலாளி
 வர்க்கத்துக்கு  அச்சுறுத்தல்!

13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள்  சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். இந்த தண்டனை எப்படி அநீதியானதோ அதே போல இந்த வழக்கு  நடந்த விதமும் அநீதியானதாக இருந்தது.

மாருதி சுசூகி  ஆலைத்தொழிலாளர்கள் செய்த குற்றம் என்ன?

  • அவர்கள் இந்திய நாட்டு சட்டப்படி தொழிற்சங்கம் துவங்கினார்கள்!
  • அவர்கள் காண்டிராக்ட் என்கிற கொடூரமான சுரண்டல் முறையை எதிர்த்தார்கள்!
  • அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமும், சட்டப்படியான ஓய்வும் கேட்டார்கள்!
  • அவர்கள் தங்களை மனிதனாக நடத்துமாறு கேட்டார்கள்!
  • எல்லாவற்றுக்கும் மேலாக, நிரந்தரத் தொழிலாளர்கள்-காண்டிராக்ட் தொழிலாளர்களது ஒற்றுமையைக் கட்டியமைத்தார்கள்!
  • இதுதான் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முக்கிய காரணம்.

நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய தொழிலாளிகளை ஒடுக்கும் பொருட்டு, ஜூலை 2012-ல் மனேசரில்  உள்ள மாருதி சுசூகி கார் தொழிற்சாலை நிர்வாகம்  திட்டமிட்டு ஒரு வன்முறை நாடகத்தை அரங்கேற்றியது. நூற்றுக்கணக்கான குண்டர்களை ஆலைக்குள் குவித்து, ஆலையின் ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தி, தொழிலாளிகள் மீது அனுதாபம் கொண்டவராக இருந்த அவனேஷ் குமார் தேவ் என்ற மனித வள அதிகாரியை எரித்துக் கொன்றுவிட்டு, பழியை தொழிலாளிகளின் மீது போட்டது.

148 தொழிலாளர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். 2300 தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிறை வைக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு  4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. நான்கு ஆண்டு விசாரணைக்குப் பின்னர் தொழிற்சங்க  நிர்வாகிகள் 13 பேரை கொலையாளிகளாகவும், 18 பேரை கலவரக்காரர்களாகவும் குர்கான் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் போலீசும், கார்ப்பரேட்டுகளும் கூட்டாக நடத்தி இருக்கின்றன. இந்த வழக்கை நடத்துவதற்காக அரியானா மாநில அரசு பல  கோடிகளை  செலவழித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட மார்ச் 10- க்கு முன்னதாகவே மனேசர்- குர்கான் தொழிற்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆயுதப் போலீசார் எஸ்.பி ஒருவரது தலைமையில்  குவிக்கப்பட்டுள்ளனர். ‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான்  அரசு எந்திரம் கூறும் நடுநிலையின்  இலட்சணம்.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையானது சிறை வைக்கப்பட்டிருந்த 148 தொழிலாளர்களுக்கு பிணை வழங்க மறுத்த நாள் முதல், சட்டம் – நீதி என்பதெல்லாம் மக்களை ஒடுக்குவதற்குத்தான் என்பதை பட்டவர்த்தனமாக்கிக் காட்டியது. 4 ஆண்டு சிறைக்குப் பின்னர் 117 பேரை குற்றமற்றவர்கள்  என்று விடுவித்திருக்கும்  நீதித்துறை  நிரபராதிகளைத் தண்டித்திருக்கும் மாருதி நிர்வாகத்துக்கும் அதற்கு அடியாள் வேலை செய்த போலீசுக்கும் என்ன தண்டனை வழங்கியிருக்கிறது?

2012 வன்முறை  மாருதி  நிர்வாகமும், அரியானா அரசும் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியே என்பது விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அம்பலமானது. அப்போதெல்லாம் நீதிமன்றம் என்ன செய்தது? குறைந்தபட்சம் ஜாமீன் கூடக் கொடுக்கவில்லை. போலீசு  கொண்டு  வந்த  சாட்சியங்கள்  மாருதி ஆலையின் காண்டிராக்ட் முதலாளிகள் ஸ்பான்சர் செய்த சாட்சிகள் என்பது நீதிமன்றத்திலேயே சந்தி சிரித்தது.  அதையெல்லாம் நீதிபதிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட மர்மம் என்ன? சிறையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் தானே என்கிற அலட்சியமா ? ஜப்பான் முதலாளியின் இலாபவேட்டைக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற பதைப்பா?  தொழிலாளி வர்க்கம் நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது?

அரசும்,முதலாளிகளும் மாருதி தொழிலாளர்களது போராட்டத்தை வெறுமனே கூலி அல்லது வேறு சலுகைக்கான போராட்டமாகப் பார்க்கவில்லை.அந்நிய மூலதனத்துக்கு எதிரான போராட்டமாகவே இந்த போராட்டத்தை பார்த்தனர். இதை அனுமதித்தால் மொத்த அந்நிய மூலதனத்துக்கும் ஆபத்து என்று அஞ்சினார்கள்.இதன் விளைவுதான் இத்துணை கொடூரமான தண்டனை.

2012 சம்பவத்தின்போது மாருதி சுசுகியின் கொடுங்கோன்மையும் சுரண்டலும் நாடு முழுவதும் அம்பலமாகியிருந்த சூழ்நிலையில், அன்று குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, ஜப்பானுக்கு ஓடினார். சுசூகி அதிபரை சந்தித்து மானேசரில் தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள் என்று கவலைப்படாதீர்கள், குஜராத்தில் உங்கள் ஆலையைத் தொடங்குங்கள். போராட்டமோ பிரச்சினையோ இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வெட்கங்கெட்ட முறையில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்தவர்தான் இன்று நம் நாட்டின் பிரதமர். அவரது கட்சிதான் அரியானாவையும் ஆள்கிறது.

நான்தான் குண்டு வைத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தாவை சாட்சியமில்லை என்று விடுவிக்கும் நீதித்துறை, செட்டப் செய்யப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் தொழிலாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும், நாடே குர்கானாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் மோடியின் உ.பி வெற்றியை கொண்டாடுகிறது கார்ப்பரேட் முதலாளிவர்க்கம்.

என்ன செய்யப்போகிறது, தொழிலாளி வர்க்கம்? மாருதி தொழிலாளிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை, இந்தியத் தொழிலாளிகள் அனைவரின் உரிமைக்காகவும் போராடியிருக்கிறார்கள். இந்த அநீதியை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

வடக்கே குர்கான் எழுப்பும் போர்க்குரலை தெற்கே இந்தியாவின் டெட்ராய்ட் என்று கார்ப்பரேட் உலகம் கொண்டாடும் தமிழகம் எதிரொலிக்க வேண்டும். மெரினா போராட்டத்தின் வாயிலாக பாரதிய ஜனதா அரசை நடுங்கச் செய்த தமிழகம்,  இன்னொரு முறை தனது போர்க்குணத்தை காட்ட வேண்டும்.

தோழமையுடன்
சுப.தங்கராசு
பொதுச்செயலாளர், புஜதொமு

மாருதி தொழிலாளிகளுக்காக சென்னை – ஆவடியில் புஜதொமு நடத்திய ஆர்ப்பாட்டம்

தில்லி மனேசாரில் உள்ள மாருதி சுசூகி கார் தயாரிப்பு நிறுவனத்தில் 18, சூலை 2012 அன்று உரிமைகளை கேட்கச்சென்ற தொழிலாளர்கள் மீது நிர்வாகம் குண்டர்களை வைத்தும், அரியானா மாநில போலீசை பயன்படுத்தியும் கொடுந்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆலையில் தீமூண்டது. வன்முறைத் தீயில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியான அவானேஷ் குமார் தேவ் என்பவர் இறந்து போனார். அவரது இறப்பை சாக்காக வைத்து நிரந்தர மற்றும் காண்டிடாக்ட் தொழிலாளர்களை அரியானா மாநில போலீசு நரவேட்டையாடியது. 148 தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையிலடைத்தது. அவர்களுக்கு தொடர்ச்சியாக பிணை மறுக்கப்பட்டது. உயர்நீதி மன்ரம், உச்சநீதிமன்றம் வரையிலும் போராடித்தான் பெரும்பான்மையானவர்கள் பிணையைப் பெற்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் 10.3.2017 அன்று குர்கான் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.குற்றம்சாட்டப்பட்ட 148 தொழிலாளர்களில் 117 பேரை விடுவித்த நீதிமன்றம் எஞ்சிய 31 பேரில் 13 பேர் கொலைக்குற்றத்தையும், 18 பேர் மீது வன்முறை,தீயிடல் உள்ளிட்ட குற்றத்தையும் உறுதிப்படுத்தியது. இந்த 31 பேருக்கும் என்ன தண்டனை என்பதை 18.3.2017 அன்று அறிவிப்பதாக குர்கான் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமானதாகவும், மாருதி நிர்வாகத்துக்கு மட்டுமல்லாமல், கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களது தொழிலாளர் விரோதப்போக்குகளுக்கு துணை நிற்பதாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிவித்தது.

மார்ச் 17 அன்று தண்டனை விபரம் அறிவிப்பதற்கு முன்னதாக போலீசு மற்றும் நீதிமன்றத்தின் கார்ப்பரேட் சார்பை அம்பலப்படுத்துவதோடு, “நீதித்துறையும் ,போலீசும் நமக்கானதல்ல; மாருதி தொழிலாளர்களைப் பாதுகாப்போம்” என்கிற தலைப்பில் தமிழகம் மற்றும் புதுவையில் சென்னை, கோவை,ஓசூர், புதுச்சேரி ஆகிய  4 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென பு.ஜ.தொ.மு அறிவித்தது. “குற்றம்சாட்டப்பட்டுள்ள  மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்!” என்கிற முழக்கத்தை தொழிலாளி வர்க்கம் தனது சொந்த முழக்கமாக உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் ஒத்த கண்ணோட்டமுடைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இதே முழக்கத்தை நாடெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முனைப்போடு இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ( Indian Federation of Trade Unions – IFTU ) புதிய தொழிற்சங்க முன்முயற்சி  ( New Trade Union Initiative – NTUI ) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மாருதி தொழிலாளர்களைப் பாதுகாக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

16.3.2017 அன்று அறிவிக்கப்பட்ட கண்டன இயக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் கிழக்குமேற்கு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டக்குழுக்களின் சார்பில் ஆவடி பெருநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பு.ஜ.தொ.மு-வின் மாநிலத்தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையேற்றினார். அவரது சிறப்புரையில்,

“மாருதி நிர்வாகம் குண்டர்களையும், போலீசையும் பயன்படுத்தி தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே அடித்து நொறுக்கியதுடன், தானே ஆலைக்குத் தீவைத்து அந்த பழியை தொழிலாளர்கள் மீது சுமத்தியது. இந்த வன்முறையின்போது மாண்ட மனிதவள அதிகாரி எப்படி செத்தார் என்பதற்கான பிரேதப் பரிசோதனை அறிக்கையே தெளிவில்லாத நிலையில்,  போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள் நிரூபிக்காத நிலையில் தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டு திட்டமிட்ட சதிதான் என்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. இவ்வளவு ஓட்டைகள் கொண்ட குற்றச்சாட்டினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தொழிலாளர்களை குற்றவாளிகளாக அறிவித்திருப்பதானது, நீதித்துறையோ, போலீசோ உழைக்கும் மக்களுக்கானதல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தை சாக்காக வைத்து குர்கான் – மனேசர் தொழிற்பிராந்தியத்தில் தொழிற்சங்க இயக்கங்களே வந்து விடாமல் அடக்கிஒடுக்குவதற்கான வேலையை அரியானா போலீசும், பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தரகு முதலாளிளும் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து தொழிலாளர்களை வீடு வீடாகத் தேடி போலீசு வேட்டையாடியது. மறுபுறத்தில்  மாருதி நிர்வாகமோ சுமார் 800 நிரந்தரத்தொழிலாளர்களையும் 1500 காண்டிராக்ட் தொழிலாளர்களையும் உடனடியாக வேலைநீக்கம் செய்தது. இது பயங்கரவாதமில்லையா? இந்த பயங்கரவாதத்தை ஏவிவிட்ட முதலாளிகள் மீது எந்த நீதிமன்றம் தண்டனை கொடுக்கப்போகிறது?

தொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்க இயக்கத்தின் மீதும்  அடக்குமுறை ஏவப்படுவது புதிதல்ல. காலனியாதிக்க காலத்தில் பின்னி ஆலையில் தொழிற்சங்கம் துவங்கியதற்காக சர்க்கரைச் செட்டியார், வாடியா போன்ற தலைவர்கள் மீது சதிக்குற்றம் சாட்டப்பட்டது. சுதந்திரம் என்று அறிவிக்கப்பட்ட இந்தியாவில் இதே அடக்குமுறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 2016-ல் கூட கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் மீதான வழக்கில் தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான வழக்குகளில் சாட்சியங்கள் பலவீனமாக இருந்தாலும், குற்றச்சாட்டுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குவதே நீதிமன்றங்களின் இயல்பாக இருக்கிறது.

அதே நேரத்தில் முதலாளித்துவ பயங்கரவாதம் தனது இலாபவெறிக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை ஆலைவிபத்தில் கொலை செய்தும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும் வன்முறையை ஏவிவருகிறது. இதற்கு ஒரு தண்டனையும் இல்லை. இவர்கள் தொழிலதிபர்கள் என்கிற பெயரில் பல இலட்சம் கோடிகள் மானியமாகவும், வட்டி இல்லாக் கடனாகவும் வாங்கிக்கொண்டு உலா வருகின்றனர்.

மாருதி தொழிலாளர் பிணைவழக்கில் தொழிலாளர்களை அவமானச் சின்னம் என்று நீதிமன்றம் முத்திரை குத்தியது. ஆனால், மக்களது வரிப்பணத்தில் வங்கிக்கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவருகின்ற மல்லையா போன்ற தொழிலதிபர்களை கவுரவமாக நடத்துகிறது இந்த கட்டமைப்பு.

நீதிமன்றமும், போலீசும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறதென்றால், தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கின்ற தொழிலாளர் நலத்துறையோ, தொழிலாளர்களைக் காட்டிக்கொடுக்கின்ற துறையாகவே இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் 2011-ல் தொழிற்சங்கம் துவங்கியபோது, அவர்களது தொழிற்சங்க விண்ணப்பத்தை மாருதி நிர்வாகத்திடம் கொண்டுவந்து கொடுத்தது,  அரியானா மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள் தான். இந்த அதிகாரிகளை நம்பி தொழிலாளி வர்க்கம் இருக்க முடியாது.

தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள  போராடித்தான் ஆக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற சூழலில். அனைத்துதரப்பு உழைக்கும் மக்களுடனும் இணைந்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது.

நடந்து முடிந்த உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து கார்ப்பரேட்டுகள் துள்ளிக்குதிக்கின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் மோடிக்கு எந்த தடையும் இல்லை என்று குதூகலிக்கின்றனர். இந்துமதவெறி பாசிஸ்டுகள் பெற்றிருக்கின்ற வெற்றி முதலாளிகளுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. மெரினா போராட்டத்தில் தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் காட்டிய உறுதியும், ஒற்றுமையும் நமக்கு நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. மாருதி தொழிலாளர்கள் மட்டுமல்ல; இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்துக்கே விடிவினைத் தருகின்ற போராட்டத்தை; உழைக்கும் மக்கள் அனைவருக்கும் விடிவினைத் தருகின்ற போராட்டத்தைக் கட்டியமைப்போம், வாரீர் !” – என அறைகூவல் விடுத்தார்.

விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ( மேற்கு ) மாவட்டக்குழு தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையுடன் ஆப்பாட்டம் முடிவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தவவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர்-காஞ்சிபுரம்-வேலூர் மாவட்டங்கள்.