உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 13

பாகம் – 12

பிற்சேர்க்கை..

கட்சிக்குள் மென்ஷ்விக் சித்தாந்தத்தை ஒழிக்கவும்*

சீன தேச சரித்திரத்திலேயே மகத்தானதும் மிக முற்போக்கானதுமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி இருபத்திரண்டு வருடங்கள் ஆகின்றன. இவை மகத்தான வருடங்கள்; இந்த இருபத்திரண்டு வருடங்களில் உலகத்திலும், சீனாவிலும் பல மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய காலத்திலிருந்து மூன்று பெரிய புரட்சிகளை – மூன்று புரட்சிகரமான யுத்தங்களை நடத்தியுள்ளது. முதல் பெரும் புரட்சி, வடதிசை படையெடுப்பு யுத்தம், நிகழ்கால ஜப்பானிய எதிர்ப்பு தேசிய புரட்சி யுத்தம் முதலியவை சீன கோமிங்டாங்குடன் சேர்ந்து கூட்டாக நடத்தப்பட்டது. ஆனால் பத்து வருட விவசாயப்புரட்சி, சீன சோவியத் பகுதிகளில் நிகழ்த்திய யுத்தம் ஆகியவை நமது கட்சியின் ஏகதலைமையில் நடத்தப்பட்டது. நமது கட்சியை பொறுத்தவரையில் மூன்று புரட்சிகரமான யுத்தங்களும் இன்றுவரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பத்து வருடங்களுக்கு மேலாக, பல கம்யூனிஸ்டுகள் ஆயுதங்களை கீழே வைக்கவேயில்லை. இந்த விஷயம் மட்டுமே, ஆயுதந் தாங்கிய போராட்டம்தான் பிரதான போராட்ட வடிவம்; சீனப் புரட்சியின் பிரதான அமைப்பு வடிவம் என்பதை இந்த ஒரு விஷயமே எடுத்துக்காட்டுகிறது. சீனப்புரட்சியின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் ஆயுதப் போரட்டத்திலிருந்து பிரிக்க முடியாதவை.

இந்த இருபத்திரண்டு வருடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வரும், தேசம்பூராவும் பரந்துள்ள புரட்சிகரமான மூன்று யுத்தங்களில் ஒவ்வொரு அம்சத்திலும் நமது கட்சி கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளது. அது பல வெற்றிகளை அடைந்துள்ளது; பல தோல்விகளும் பெற்றுள்ளது. இதுவரை அது ரொம்பவும் நீண்ட தொல்லையான பாதையில் போயுள்ளது. ஆனாலும் சீன மக்கள் குடியரசு பிரதேசத்தில் வெல்லமுடியாத சக்தியாக அதனால் நிற்க முடிந்திருக்கிறது. சீன அரசியல் வாழ்விலும், சரித்திரப் பூர்வமான சம்பவங்களிலும் அது ஒரு முக்கியமானதும், தீர்மானகரமானதுமான அம்சமாக ஆகியுள்ளது.

நமது கட்சி பல்வேறு தொல்லை மிக்க நீண்ட நெடும்பாதைகளில் பிரயாணம் செய்துள்ள காரணத்தினாலும், பல்வேறு துறைகளில் கடும் சோதனைகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளதாலும், குறிப்பாக பலம் பெறும் அளவிற்கு அது புடம் போடப்பட்டிருக்கிறது. புரட்சிகரமான போராட்டங்களில் எல்லா அம்சங்களிலும் குறிப்பாக செழுமைமிக்க அனுபவம் பெற்றுள்ளது. இந்த இருபத்திரண்டு வருடங்களில் உலகத்திலுள்ள மற்ற எந்த கம்யூனிஸ்டு கட்சியைக் காட்டிலும் நமது கட்சி பல பிரமாதமான மாறுதல்களைக் கண்டும், பல்வேறு சிக்கலான வடிவங்களில் (அது ஆயுதப் போராட்டமானாலும் சரி, பொது மக்கள் போராட்டமானாலும் சரி, உள்நாட்டு யுத்தம் அல்லது சர்வதேச யுத்தம், சட்டபூர்வமான போராட்டம், அல்லது சட்டவிரோதமான போராட்டம், பொருளாதார போராட்டம் அல்லது அரசியல் போராட்டம், உட்கட்சிப் போராட்டம் அல்லது வெளிக்கட்சிப் போராட்டம்) புரட்சிகரமான போராட்டத்தில் செழுமைமிக்க அனுபவமும் பெற்றுள்ளது.

படிக்க :
♦ பகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

குறிப்பாக, இருபத்திரண்டு வருட நெடிய மிகக்கடுமையான சிக்கலான, புரட்சி போராட்டத்தில் நமது கட்சியும், நமது நாட்டின் தொழிலாளி வர்க்கமும், புரட்சிகரமான மக்களும் தோழர் மாசேதுங் அவர்களை தங்கள் சொந்த தலைவராக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.

நமது தோழர் மாசேதுங், இந்த இருபத்திரண்டு வருட காலத்திய பல தொல்லைமிக்க, சிக்கல் நிறைந்த புரட்சிப் போராட்டங்களில் நீண்டகாலமாக புடம் போடப்பட்டவரும், மார்க்சிய – லெனினிய போர்த்தந்திரம், செயல் தந்திரத்தை பூரணமாக கற்றறிந்தவரும், சீனத் தொழிலாளி வர்க்கம், சீன மக்கள் விடுதலை இலட்சியத்திற்கு அளவுகடந்த விசுவாசம் கொண்டவருமான உறுதிமிக்க மாபெரும் புரட்சிக்காரர்.

புரட்சிகரமான போராட்டங்களில் எல்லா அம்சங்களிலும் நமது கட்சிக்கு செழுமைமிக்க அனுபவம் கிடைத்துள்ளது; ஆனால் அந்த அனுபவம் இன்றுவரை முறையாகத் தொகுத்து வைக்கப்படவில்லை. மார்க்சிய – லெனினிய பொதுக் கோட்பாடுகளின் அடிப்படையில் நமது கட்சியின் போராட்ட அனுபவத்தின் சகல அம்சங்களையும் போதிய அளவுக்கு தொகுக்க வேண்டிய பணி நமது கட்சி முழுமையும் சேர்ந்த முக்கியமான பணிகளில் ஒன்றாக இன்னும் இருந்து வருகிறது.

ஏனெனில், கட்சி முழுமையையும் ஒன்றுபடுத்துவது, போதிப்பது, முன்கொண்டு செல்வது முதலியவற்றிற்கும், சீனப் புரட்சியில் வெற்றி பெறுவதற்கும் அத்தகைய அனுபவத்தை மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் தொகுத்துக் கூறுவதும் மிக முக்கியமான காரியமாகும்.

நமது கட்சி தோழர்கள் நமது கட்சியின் சரித்திரப் பூர்வமான அனுபவத்தை உண்மையாகப் புரிந்து கொண்டால் அவர்கள் அளவு கடந்த நம்பிக்கையும், தீரமும் பெறுவார்கள்; அவர்களுடைய சொந்த வேலையையும், கட்சி முழுமையின் வேலையையும் வன்மையாக முன்கொண்டு செல்வார்கள். கடந்த காலத்தில் செய்யப்பட்ட பல தவறுகளை அவர்களால் தவிர்க்க முடியும். அவர்கள் வேலை, புரட்சி முதலியவற்றின் கால வரம்பை பல மடங்கு குறைக்க முடியும்.

லியூ ஷோசி

சீனப் புரட்சியின் அனுபவத்தைக்கொண்டு சீனப் புரட்சிக்காரர்களுக்கு போதனை கொடுக்க வேண்டும்; சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவத்தைக் கொண்டு சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு போதனை அளிக்க வேண்டும். இந்த வழியில்தான் மேலும் நேரடியான நடைமுறைப் பலன் பெற முடியும். சீனப் புரட்சிப் போராட்டங்களின் செழுமைமிக்க அனுபவங்களை ஒதுக்கிவிட்டோமானால், இந்த இருபத்திரண்டு வருடகால மாபெரும் சரித்திரப் பூர்வமான சம்பவங்களில் நமது கட்சி நிகழ்த்திய போராட்டங்களின் அனுபவத்தை நாம் இகழ்ந்தால், இத்தகைய அனுபவங்களை கவனமாக ஆராய்ந்து, அவற்றிலிருந்து கற்றறிய வில்லையென்றால் நமக்கு வெகு தூரத்தில் நிகழ்ந்துள்ள அன்னிய புரட்சிகளை கற்றறிவதிலேயே கவனம் செலுத்துவதோடு நின்றுவிட்டால், அது தலைகீழ் பாடமாகும்; மேலும் கடுமையான பாதையில் பிரயாணம் செய்யவேண்டி வரும்; மேலும் படுதோல்விகள் பெற வேண்டி வரும்.

இந்த இருபத்திரண்டு வருடங்களில் நமது கட்சியின் போராட்ட அனுபவம் எளிமை மிக்கதாகவும், பல்வேறு வகைப்பட்டதாகவும் இருந்துள்ளது. அதை விபரமாக இப்பொழுது என்னால் விளக்க முடியாது. இந்த அனுபவங்களில் எல்லாம் எது மிக முக்கியமானது? உண்மையான மார்க்சிஸ்டு உண்மையான போல்ஷ்விக் என்றால் என்ன? என்ற விஷயத்தைப் பற்றிய தேயாகும். மார்க்சியம் ஒன்றால்தான் சீனாவைக் காப்பாற்ற முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சீனாவில் மார்க்சிஸ்டுகள் என்று தங்களைச் சொல்லி கொள்பவர்கள் பல பேர்கள் இருக்கின்றனர். ஆனால் உண்மையான மார்க்சியம் என்பது என்ன? போலி மார்க்சியம் என்ன? போலி மார்க்சிஸ்டு என்றால் என்ன? புரட்சிகரமான சீன பொதுமக்கள் மத்தியிலும், சீன கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் பல வருடங்களாக பூர்த்தியாக தீர்க்கப்படாத பிரச்சினையாகும்.

உண்மையான மார்க்சியத்திற்கும் போலி மார்க்சியத்திற்குமிடையில், உண்மையான மார்க்சிஸ்டுக்கும் போலி மார்க்சிஸ்டுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாடு தன் மனப்பார்வையை அடிப்படையாகக் கொண்ட அளவு கோல் கொண்டோ அல்லது பல்வேறு நபர்கள் சொல்லிக் கொள்வதைக் கொண்டோ நிர்ணயிக்கப்படுவதில்லை! யதார்த்தமான அளவுகோல் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது. நமது கட்சி அங்கத்தினர்கள் உண்மையான மார்க்சிஸ்டுகளை, போலி மார்க்சிஸ்டுகளிடமிருந்து பாகுபாடு படுத்துவதற்கு யதார்த்த அளவுகோலை புரிந்து கொள்ளவில்லையென்றால், புரட்சியில் தெரியாமல் குருட்டுத்தனமாக போலி மார்க்சிஸ்டுகளைப் பின்பற்றிச் சென்றால், அதைக் காட்டிலும் அபாயகரமானது வேறு ஒன்றுமிருக்க முடியாது. நமது கட்சி கற்றுக்கொண்ட வேதனை நிறைந்த பல படிப்பினைகளுள் மிகவும் வேதனை நிறைந்த படிப்பினை இதுதான்.

கடந்த காலத்தில் நமது கட்சி தவிர்க்ககூடிய பல பின்வாங்குதலும் தோல்வியும் பெற்றிருக்கிறது; பல அனாவசியமான பக்க வழிகளில் பிரயாணம் செய்திருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், கட்சிக்குள் போலி மார்க்சிஸ்டுகள் இருந்தார்கள். பல கட்சி அங்கத்தினர்கள் தெரியாமல் கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றி வந்தார்கள்; அதன் விளைவாக அத்தகையோர் சில அமைப்புகளிலும் இயக்கங்களிலும் தலைமை அமைப்புகளில் வீற்றிருக்க நேர்ந்தது; ஏன் சில சமயங்களில் கட்சி பூராவிலும் கூட அவ்வாறான நிலைமை ஏற்பட்டது. இவ்வழியில் புரட்சி இயக்கம் வேதனைமிக்க கஷ்டமான பாதையில் வழி நடத்திச் செல்லப்பட்டது. நமது கட்சி அங்கத்தினர்கள் எல்லோரையும் இந்த கடுமையான அனுபவம் பற்றி விசேஷமாக எச்சரிக்க வேண்டும்.

படிக்க :
♦ பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
♦ முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!

சீன கம்யூனிஸ்டுகள், கடும் போராட்டம், வீரமிக்க தியாகம் பிரச்சார அமைப்பு திறமை முதலியவற்றில், மற்ற எந்த நாட்டு கம்யூனிஸ்டுக்கும் இளைத்தவர்கள் அல்ல; கடந்த காலத்தில், பலவிதமான வேலைகளை  நாம் திறமையாக நிறைவேற்றியிருக்கிறோம். இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மக்களை அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவதில், 25000லீ, (8000 மைல்) நீண்ட பிரயாணத்தை மேற்கொண்டதில் எதிரியின் பின்னணியில் ஆறு ஏழு வருடங்களாக எதிர்ப்பு யுத்தத்தை உறுதியாக நீடிப்பதற்கு ரொம்ப கஷ்டமான நிலைமையில், உதவி எதுவுமின்றி தளங்கள் அமைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். சீனக் கம்யூனிஸ்டுகளின், கடுமையாக உழைக்கும், புரட்சிகரமான உணர்வு ரொம்பவும் புகழ்ச்சிக்குரியது.

ஆனால் நீண்டகாலமாக, விஞ்ஞான ரீதியாக மார்க்சியம் லெனினியத்தில் நமது சித்தாந்த பயிற்சி மிகக்குறைவாக இருந்து வந்துள்ளது. நமது கடந்தகால சரித்திரத்தில் ரொம்பவும் நாம் கஷ்டப்பட்டது புரட்சிகரமான இயக்கத்தின் தலைமையில் எழுந்த தவறுகளினால்தான். அது ஓரளவுக்கு, சில சமயங்களில் விசேஷமாக தவிர்க்க கூடிய சேதத்தை இயக்கத்திற்கு விளைவித்தது. இந்த சரித்திரப் பூர்வமான படிப்பினையை நாம் நினைவில் வைக்க வேண்டும்; எதிர்காலத்தில் இந்த பிரச்சினையை அறவே தீர்த்து விடவேண்டும்.

புரட்சிகரமான இயக்கத்தின் பல்வேறு அம்சங்களின் வழிகாட்டுதலில், கோட்பாட்டில் விசேஷமான தவறுகள் செய்யாமலிருப்பதற்கு உத்திரவாதம் செய்ய முடியுமானால், அது சீனப் புரட்சிக்கு வெற்றியை உத்திரவாதம் செய்யும்; ஏனெனில் நமக்கு நல்ல புரட்சி உணர்வு இருக்கிறது; கடுமையாக உழைக்க உறுதியிருக்கிறது; சீனப் புரட்சியின் யதார்த்த நிலையும் வெகு சாதகமாயிருக்கிறது. புரட்சி நிச்சயமாக வெற்றியை நோக்கி படிப்படியாக முன்னேறுவதற்கு இவற்றுடன் சேர்ந்து சரியான மார்க்சிய-லெனினியத் தலைமை தேவை.

புரட்சிகரமான இயக்கத்தின் பல்வேறு அம்சங்களில் வழிகாட்டுவதில் கோட்பாட்டில் நமது கட்சி விசேஷமான பிழைகள் செய்யாமலிருக்க உத்தரவாதம் செய்வது எங்ஙனம்? இதற்கு தேவையானவையாவன:- நமது ஊழியர்கள்

எல்லோருக்கும் மேலாக நமது கட்சி அங்கத்தினர்கள் உண்மையான மார்க்சிய – லெனினியம், மார்க்சிஸ்டு லெனினிஸ்டுக்கும், போலி மார்க்சிஸ்டு லெனினிஸ்டுக்கும் உள்ள வித்தியாசங்களை பாகுபாடு செய்வதற்குத் தெரிய வேண்டும்; புரட்சி அணியிலும், கட்சியிலும் பல்வேறு விதமான போலிக் கம்யூனிஸ்ட் கருத்துக்களும், குழுக்களும் நசுக்கப்பட வேண்டும். இந்த இருபத்திரண்டு வருட காலத்தில் கட்சி பெற்றுள்ள அபிரிமிதமான சரித்திரப்பூர்வமான அனுபவம் தொகுக்கப் படவேண்டும்; நமது உஷார் உணர்வை அதிகப்படுத்துவதற்கு நமது ஆராய்ச்சி நன்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தோழர் மாசேதுங் வழிகாட்டுதல் நமது வேலையின் ஒவ்வொரு இணைப்பிலும், பகுதியிலும் ஊடுருவ வேண்டும்.

(தொடரும்)

* 1943-ம் வருடம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் பொழுது லியூஷோசி எழுதிய கட்டுரை..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க