”மார்க்சியம், தகர்ந்து விட்டது; இனி அதற்கு எதிர்காலமே இல்லை”, ”மார்க்சியம், இன்றைய நவீன கால கட்டத்திற்குப் பொருந்தாது” எனும் பிரகடனங்கள் நம்மைச் செவிடாக்கி வருகின்றன. சரி, மார்க்சியம் வேண்டாம்; மாற்று என்ன என்றால் இறுக்கமான மௌனம்தான் பதிலாக வருகிறது.

”மார்க்சியம் வேண்டவே வேண்டாம்” என உள்ளூர ஆசைப்படுபவர்கள்தான் இந்தத் தற்காலப் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு அதன் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.

தேக்கம், தற்காலிகமானது; வளர்ச்சி, நிரந்தரமானது எனும் அடிப்படையில் தன் தளைகளை அறுத்தெரிந்து விட்டு, மார்க்சியம் இப்பொழுது வீரியத்துடன் எழுந்து நிற்கிறது. உலகெங்கும் மார்க்சியத்தின்பால் புதிய ஈர்ப்பும் கரிசனமும் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது. அந்தப் பின்னணியில் தோழர் தியாகுவின் ”மார்க்சியம் அனா ஆவண்ணா” இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

மார்க்சிய மூலவர்கள் கார்ல் மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் வரலாறும், மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தாக்கங்களும், மார்க்சியத்தின் எதிர்காலங்குறித்த விவாதக்குறிப்புகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.

மார்க்சியத்தின் மூன்று கூறுகளான பொருள்முதல்வாதம், மார்க்சியப் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் ஆகியன வாசகர்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மிகவும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

… ” உலகில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளவரை – வர்க்க ஒடுக்குமுறையானாலும், தேசிய ஒடுக்குமுறையானாலும், சாதிய ஒடுக்குமுறையானாலும் – மார்க்சியம் என்ற விடுதலைப் பேராயுதத்துக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய மார்க்சியம் கற்றுக்கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்ல; கடைபிடிக்க வேண்டியதுமாகும். மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ளாமல் கடைப்பிடிக்க முடியாது; கடைப் பிடிக்காமல் கற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால், மார்க்சியத் தத்துவம் வறட்டுச் சூத்திரமல்ல. அது செயலுக்கு வழிகாட்டி” என்பது தோழர் தியாகுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உடன்பாடான கருத்துத்தான். (நூலின் அறிமுக உரையிலிருந்து)

நம் தமிழ்நாட்டில் கார்ல் மார்க்ஸ் ஓரளவு அறிமுகமாகி உள்ளார். ஆனால் மார்க்சின் பெயர் அறிமுகமாகியுள்ள அளவுக்கு மார்க்சியம் அறிமுகமாகவில்லை.

மார்க்சியத்தை, அதன் அடிக்கூறுகளை அறிந்து கொள்ள – அதன் ”அனா ஆவன்னா”வைக் கற்றுக் கொள்ள – ஆர்வமுள்ள தமிழர்களுக்காகவே இந்த குறுநூல்.

கார்ல் மார்க்சும், அவர் உயிர்த் தோழர் பிரெடெரிக் எங்கெல்சும்தான் மார்க்சியத்தின் மூலவர்கள். மார்க்சியத்தை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்னால் அந்த மூலவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

… தொடக்க காலத்தில் மார்க்ஸ் சமயப் பற்று உள்ளவராய் இருந்த போதிலும், மனித நேயச் சிந்தனைகள் அப்போதே அவரிடம் துளிர்விடத் தொடங்கிவிட்டன. 17 வயதுப் பள்ளி மாணவனாக இருந்த போது மார்க்ஸ் எழுதிய கட்டுரை ”வாழ்க்கைக்கு ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஓர் இளைஞனின் சிந்தனைகள்” என்பதாகும். இந்தக் கட்டுரையில் இளம் மார்க்ஸ் கூறியதாவது:

”ஒரு மனிதன் தனக்காவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின், அவன் ஒரு வேளை ஓங்கு புகழ் அறிஞனாகலாம். மாபெரும் ஞானியாகலாம், உன்னதக் கவிஞனாகலாம்; ஆனால் அவனால் ஒருநாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது – வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாய் உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும் நம்மைத் தலைவணங்கச் செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும். அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களைச் சாரும். நமது செயல்கள் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிரந்தரமாய் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்; நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்”

வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப் போகும் சத்தற்க வாழ்வை வெறுத்து, மனித குல முன்னேற்றம் என்னும் மகத்தான இலட்சியத்திற்காக வாழும் முழுநிறைவான வாழ்வையே இளம் மார்க்ஸ் விரும்பிப் போற்றினார். (நூலிலிருந்து பக்.9-10)

மார்க்சியம் என்பது கார்ல் மார்க்சினுடைய கருத்துகளின் அமைப்பு ஆகும். கருத்துகளின் தொகுப்பு என்பது வேறு. அமைப்பு என்பது வேறு. மார்க்ஸ் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து புதிதாய்ப் பலவும் கண்டுபிடித்து தாம் கண்ட முடிவுகளைக் கோட்பாடுகளாக வகுத்துரைத்தார். இந்தக் கோட்பாடுகளுக்கிடையே ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தின் முரணற்ற மைய இழையைக் காண முடிகிறது. அவருடைய கருத்துக்களிடையே உயிரோட்டமான தொடர்பு உள்ளது. அவை ஓர் ஆரோக்கியமான உடலமைப்பின் வெவ்வேறு உறுப்புகளைப் போல் இசைந்து செயல்படுகின்றன. அதனால்தான் மார்க்சியத்தின் கருத்துக்கள் ஒரு கதம்பத் தொகுப்பு போலல்லாமல் உயிர்ப்பு மிக்க ஒழுங்கமைப்பாய் உருப்பெற்று மார்க்சியம் என்னும் விஞ்ஞானக் கருத்தமைப்பாக ஏற்றம் பெறுகின்றன.

மார்க்சியத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் :
பொருள்முதல்வாதம் : இது மார்க்சிய மெய்யியலைக் குறிப்பதாகும்.
மார்க்சியப் பொருளாதாரம் : இதற்கு அடிப்படையாகத் திகழ்வது உபரி – மதிப்புத் தத்துவம்
விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் (பொதுவுடமைத் தத்துவம்) : இது மார்க்சியத்தின் அரசியலைக் குறிப்பதாகும்.

திடீரென ஒருநாள் வானத்திலிருந்து வந்து குதித்ததல்ல மார்க்சியம். போதி மரத்தடியில் புத்தருக்கு ஒரு நாள் ஞானம் வந்ததாகச் சொல்வார்களே, அது போல் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு அவர்களின் மூளைகளிலிருந்து பீறிட்டு வந்ததல்ல மார்க்சியம்.

இயற்கை விஞ்ஞானத்திலும் சமூக விஞ்ஞானத்திலும் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தையெல்லாம் அடித்தளமாயக் கொண்டுதான் மார்க்சியம் எழுந்தது. மார்க்சியத்தின் மூன்று கூறுகளுக்கும் மூன்று தோற்றுவாய்கள் உண்டு.

மார்க்சிய மெய்யியலுக்கு ஜெர்மானிய மெய்யியலும், மார்க்சியப் பொருளாதார இயலுக்கு பிரித்தானிய அரசியல் பொருளாதாரமும், விஞ்ஞான சோசலிசத்துக்கு பிரெஞ்சு சோசலிசமும் தோற்றுவாய்களாகும். (நூலிலிருந்து பக்.18)

படிக்க:
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

மெய்யியல் அல்லது தத்துவ ஞானம் என்பது இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மிகப் பொதுவான வளர்ச்சி விதிகளைப் பற்றிய அறிவியல் ஆகும். இதனை விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் அல்லது அறிவியல்களின் அறிவியல் என்று சொல்லலாம்.

இந்த உலகை – பிரபஞ்சத்தை – படைத்தவர் யார்? இது உண்மையிலேயே படைக்கப்பட்டதுதானா? இதில் காணப்படும் கோடானுகோடிப் பொருள்களுக்கென்று ஏதாவது பொதுத் தன்மை உண்டா? உண்டென்றால் அது என்ன? உலகம் இயங்குகிறதா? இயங்குகிறது என்றால் அந்த இயக்கத்திற்கு யார் அல்லது எது காரணம்? இப்படி நிறைய கேள்விகளை அன்றாடம் நாம் சந்திக்கிறோம். இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பதுதான் மெய்யியல்.

எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மூலாதரமான ஒரு கேள்வி உள்ளது. இந்த கேள்விக்கு விடை தெரிந்துவிட்டால் மற்ற கேள்விகளுக்கெல்லாம் எளிதில் விடையளித்துவிடலாம். பொருள் முதலா? கருத்து முதலா? என்பதுதான் அந்த அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையைப் பொறுத்து, மெய்யியல் அன்று தொட்டு இன்றுவரை மொத்தத்தில் இரு முகாம்களாகப் பிரிந்து நிற்கிறது. சும்மா நிற்கவில்லை. சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது.

பொருள்தான் முதல் என்பது பொருள்முதல்வாதம். கருத்துதான் முதல் என்பது கருத்து முதல்வாதம். (நூலிலிருந்து பக்.20)

மனிதனின் தோற்றம் பற்றி இதுபோல் எத்தனையோ கட்டுக்கதைகள் உலவி வந்த காலத்தில் உண்மைச் சுடரேந்தி இருள் போக்க வந்தவர்தான் டார்வின் என்னும் இயற்கை விஞ்ஞானி. உயிரியல் வளர்ச்சியின் விதிகளை டார்வின் கண்டுரைத்தார், மனிதனின் தோற்றமென்னும் மர்மத்தை விண்டுரைத்தார். குரங்கு, மனிதக் குரங்காகி மனிதனான உண்மையைப் பரிணாம வளர்ச்சி விதிகளின் துணை கொண்டு நிரூபித்துக் காட்டினார்.

இயற்கை அறிவியலில் டார்வின் செய்ததை சமூக அறிவியலில் மார்க்ஸ் செய்தார். மனித வரலாற்றின் வளர்ச்சி விதிகளை அவர் கண்டுபிடித்தார். (நூலிலிருந்து பக்.29)

மார்க்சியத்தின் எதிர்காலம்:

மார்க்சியத்திற்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பிக் கொண்டிருக்கிற நேரத்தில் நாம் இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்தத் தத்துவமும் குறிப்பிட்ட காலத்திற்குரியதுதான். எல்லா காலத்துக்குமான முழு முதல் உண்மைகளும் முழுமுதல் தத்துவங்களும் கிடையாது என்ற மார்க்சியக் கோட்பாடு மார்க்சியத்துக்கும் பொருந்தும். மார்க்சியம் இந்த உலகத்திற்கு, மனித சமூகத்திற்குத் தேவையற்றுப் போகுமானால், அதற்குரிய காலம் முடிந்து அது காலாவதி ஆகிற நிலை வருமானால், அதுவேகூட மார்க்சியத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். எப்படி என்றால் மார்க்சியம் அப்போது அதன் வரலாற்றுக் கடமையைச் செய்து முடித்திருக்கும்.

நூலாசிரியர் தோழர் தியாகு.

குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குரிய தேவையை நிறைவு செய்ய வந்த ஒரு தத்துவம் அந்தத் தேவையை நிறைவு செய்து முடித்த பிறகு, ஒரு தத்துவம் என்ற அளவில் மடிந்து போகும். அதன் ஆய்வு முறைகள், அழகியல் வடிவங்கள் போன்ற வேறு சில கூறுகள் தொடர்ந்து உயிர் வாழலாம்.

மார்க்சியம் அதன் வரலாற்றுப் பணியை நிறைவேற்றி விட்டதா? இல்லை. அந்தப் பணி இன்னும் மிச்சமிருக்கிறது. பெருமளவுக்கு மிச்சமிருக்கிறது.

மார்க்சியம் அதற்குரிய பணியை நிறைவேற்றும் ஆற்றலை இழந்துவிட்டதாகக் கருதுவோர் உண்டு. இந்தக் கோணத்திலிருந்து கூட மார்க்சியம் தோற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு என்ன சான்று? சோவியத்து நாட்டைப் பார். கிழக்கு அய்ரோப்பிய நாடுகளைப் பார் என்று விரல் நீட்டிப் பேசுகிறார்கள்.

சோவியத்து நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் ஒரு பெரும் பின்னடைவு நேரிட்டிருப்பது கண்கூடான உண்மை. தோல்வி, வீழ்ச்சி என்றே சொல்லலாம். எதன் தோல்வி? எதன் வீழ்ச்சி? இந்த நாடுகளின் பொதுவுடமைக் கட்சிகள் எதை மார்க்சியம் என்று கருதியும் சொல்லியும் வந்தனவோ, எதைச் சொல்லிதம் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி வந்தனவோ அதற்குத்தான் தோல்வி. அதாவது அங்கெல்லாம் மார்க்சியம் என்று அறியப்பட்ட ஒன்று தோற்றதே தவிர மார்க்சியம் தோற்கவில்லை. மார்க்சியத்தின் அடிப்படை வரையறைகள் என்ன என்று பார்த்தோமானால், இந்த உண்மை புலப்படும்.

சோவியத்து நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் சோசலிச அமைப்புகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்லது தோல்வி அந்தந்த நாட்டிலும் ஏற்படுத்தப்பட்ட சோசலிச மாதிரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியாகும். மார்க்சியம் எந்த ஒரு சோசலிச மாதிரியையும் முன்வைக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அது சோசலிசத்திற்கான சமையல் குறிப்பு அன்று. பார்க்கப்போனால் மார்க்சியம் முதலாளித்துவம் பற்றிப் பேசிய அளவுக்கு சோசலிசம் பற்றி பேசியது இல்லை.

மார்க்சியப் பொருளாதார இயல் என்பது சோசலிசப் பொருளாதாரக் கட்டுமானம் பற்றியது அல்ல. அது முதலாளித்துவச் சமுதாயத்தின் தோற்றம், வாழ்வு, சரிவு, அழிவு ஆகியவற்றின் விதிகளைச் சொல்வதாகும். (நூலிலிருந்து பக்.48-49)

நூல் : மார்க்சியம் அனா ஆவன்னா ?
ஆசிரியர் : தியாகு

வெளியீடு : புதுமலர் பதிப்பகம்,
10/176, வைகை வீதி, வீரப்பன் சத்திரம் (அஞ்சல்)
ஈரோடு – 638 004.
தொலைபேசி எண் : 94433 07681
மின்னஞ்சல் : newflower_kurinji@yahoo.co.in

பக்கங்கள்: 64
விலை: ரூ 30.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க