அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 2

நூலாசிரியர் அறிமுக உரையின் இரண்டாம் பாகம் இங்கே இடம்பெறுகிறது.  மார்க்சை முதலாளித்துவ கல்வி உலகம் நிராகரிப்பதற்கு பெரு முயற்சி செய்தாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் மார்க்சை படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சில உண்மைகைள மறுக்க முடியாமலும் இருக்கிறார்கள். இந்த முரண்பாடு இப்பகுதியில் விளக்கப்படுகிறது. அறிமுக உரையின் இறுதி அடுத்த பாகமாக வர இருக்கிறது. அதில் 17 – 19 -ம் நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதார வரலாற்றின் சுருக்கத்தை ஆசிரியர் விளக்குகிறார்.

மார்க்சும் அவருக்கு முன்பிருந்தவர்களும் !

அ.அனிக்கின்
த்துவஞானம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவை மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளாகும். மார்க்சியத் தத்துவம் என்பது இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகும். சமூக வளர்ச்சி அதன் பொருளாதார அடுக்கமைவில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முக்கியமான கோட்பாடாகும்.

அரசியல் பொருளாதாரம் இந்த அடுக்கமைவை ஆராய்ந்து, சமூக பொருளாதார உருவமைப்புகளின் இயக்கத்தின் விதிகளையும் ஒரு உருவமைப்பிலிருந்து மற்றொரு உருவமைப்புக்கு மாறுகின்ற விதிகளையும் வெளிக்காட்டுகிறது. விஞ்ஞான கம்யூனிசம் என்பது சோஷலிசப் புரட்சி, புதிய கம்யூனிஸ்ட் சமூகத்தை நிர்மாணிக்கின்ற முறைகள், இந்த சமூகத்தின் ஆதாரக் கட்டங்களையும் கூறுகளையும் எடுத்துரைக்கும் போதனையாகும்.

மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளில் ஒவ்வொன்றும் முந்திய சிந்தனையாளர்களின் முற்போக்கான கருத்துக்களின் வளர்ச்சியாகவும் ஒரு உலக விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த மூன்று உட்கூறுகளும் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களோடு பொருந்துகின்றன. வி.இ.லெனின் எழுதியதுபோல, ”பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மனிதகுலத்தின் மிக முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சு புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பவையாகும். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழு நிறைவை அளித்த மேதை மார்க்ஸ் .”(1)

ஆடம் ஸ்மித் – காரல் மார்க்ஸ் – டேவிட் ரிக்கார்டோ

இந்தப் பிரபலமான கருத்துரை – அதன் சகலவிதமான ஆழத்திலும் ஸ்தூலத்தன்மையிலும் – பிரதானமாக மார்க்ஸ் எழுதிய புத்தகங்களிலேயே வெளிப்படுகிறது. ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹ், ஸ்மித் மற்றும் ரிக்கார்டோ, சான் – சிமோன் மற்றும் ஃபூரியே ஆகியோரிடமிருந்து தான் பெற்றிருக்கும் ஒவ்வொரு கருத்தையும் மார்க்ஸ் சிறந்த ஆராய்ச்சி நுட்பத்தோடு விவரமாக எழுதியிருக்கிறார். மார்க்சிடம் இருந்த பல குணங்களில் ஆராய்ச்சி நேர்மை குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமானதாகும். குறிப்பாக, பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற் பாதியிலும் வெளிவந்திருந்த எல்லாப் பொருளாதார நூல்களையுமே அவர் நன்கு படித்திருந்தார்.

மார்க்ஸ் எழுதிய முக்கியமான விஞ்ஞான நூலாகிய மூலதனம் ”அரசியல் பொருளாதாரத்துக்கு ஒரு விமரிசனம்” என்ற துணைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் நான்காவது பகுதிக்கு ”உபரி மதிப்புத் தத்துவங்கள்” என்று பெயர்; இதில் முந்திய அரசியல் பொருளாதாரம் அனைத்துமே விமரிசன ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. இங்கே ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முக்கியமான கடமையைத் – முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்க விதியை வெளிப்படுத்துவது – தீர்ப்பதற்கு ஏதாவதொரு அளவுக்கு உதவி செய்கின்ற விஞ்ஞானக் கூறுகளைப் பிரித்தெடுப்பது மார்க்சின் முக்கியமான முறையாக இருந்தது. அதே சமயத்தில் சென்ற காலத்தைச் சேர்ந்த இந்த அரசியல் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களில் இருந்த முதலாளித்துவக் குறைபாடுகளையும் மாறுபாடுகளையும் அவர் விளக்கினார்.

மார்க்ஸ் ஒரு வகையான அரசியல் பொருளாதார விமரிசனத்துக்குக் கணிசமான இடம் ஒதுக்கினார்; ஏனென்றால் அதன் நோக்கம் உண்மையான விஞ்ஞானப் பகுப்பாய்வு அல்ல; முதலாளித்துவ அமைப்பை நியாயப்படுத்துவதும் பகிரங்கமாக ஆதரிப்பதுமே. அவர் அதைக் கொச்சையானது என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் இந்தப் போக்கின் முக்கியமான பிரதிநிதிகளுக்கு இந்த நூலில் கணிசமாக இடம் கொடுக்கப்பட்டிருப்பது இயற்கையானதே. முதலாளித்துவப் பொருளாதார  நிபுணர்கள் முதலாளித்துவ சமூகத்தைப் பற்றிப் பறைசாற்றிய கருத்துக்களை விமரிசனம் செய்யும்பொழுது மார்க்ஸ் பாட்டாளி வர்க்க அரசியல் பொருளாதாரத்தை வளர்த்துச் சென்றார்.

படிக்க:
♦ கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
♦ மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

மார்க்ஸ் எழுதிய மூலதனத்தையும் மற்ற பொருளாதார நூல்களையும் படிக்கின்ற வாசகருக்கு சென்ற காலத்திய விஞ்ஞானப் பிரமுகர்களின் காட்சிக்கூடம் முழுவதுமே காட்டப்படுகிறது. மற்ற விஞ்ஞானங்கள் ஒவ்வொன்றையும் போல, அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல், அதிகமாக வெளியே தெரிந்திராத பல அறிஞர்களின் முயற்சிகளும் அரசியல் பொருளாதாரத்தை வளர்த்தன் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரம் என்பது ஒன்றரை நூற்றாண்டுக் காலத்துக்கு மிக விரிவான ஒரு போக்காக இருந்தது; அதனுள் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட பல அறிஞர்கள் ஆராய்ச்சிகளைச் செய்தார்கள்; தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை எழுதினார்கள். உதாரணமாக, ஆடம் ஸ்மித்துக்கு முன்பிருந்த பல தலைமுறைகளைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள்தான் அவருக்குத் தளத்தை நன்றாகத் தயாரித்துக் கொடுத்தார்கள். எனவே இந்த நூலின் ஆசிரியர் மிகச் சிறப்புடைய அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கருத்துக்களில் முக்கியமாக கவனம் செலுத்துவதோடு, அதிகமாக வெளியில் தெரியாத ஆனால் முக்கியத்துவமுடைய பல சிந்தனையாளர்களின் பங்கையும் குறிப்பிட்ட அளவுக்காவது எடுத்துக் கூற முயன்றிருக்கிறார்.

ஒரு விஞ்ஞானம் என்ற வகையில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் உருவரையை இன்னும் முழுமையாகக் கொடுப்பதே அதன் நோக்கம். இந்த அறிஞர்கள் வாழ்ந்து பாடுபட்டு உழைத்த காலத்தையும், சமூக மற்றும் அறிவுத்துறைச் சூழலையும் விளக்குவது அவசியமாகும்.

அரசியல் பொருளாதார வரலாற்றை ஸ்மித், கெனே, ரிக்கார்டோ ஆகியோரின் நூல்களோடு நிறுத்திவிடுவது கணிதத்தின் மொத்த வரலாறுமே டெகார்ட், நியூட்டன், லப்ளாஸ் ஆகியோரது கண்டுபிடிப்புகளில் அடங்கியிருக்கிறது என்று சொல்லுவதைப் போன்று தவறுடையதாகும். பதினேழாம் நூற்றாண்டின் ஓவியக் கலை வரலாற்றை எழுதுபவர்கள் மாபெரும் ஓவியரான ரெம்பிரான்ட்டைப் பற்றி எழுதுவதோடு “சிறிய டச்சுக்காரர்கள்” எனப்படும் ஓவியர்களின் பங்கையும் அங்கீகரிக்கிறார்கள்.

முதலாளித்துவ விஞ்ஞானமும் பிரச்சாரமும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் அதிகமாகவே விஞ்ஞானி என்ற முறையில் மார்க்சின் வரலாற்றுச் சிறப்பான பாத்திரத்தைச் சிதைப்பதற்கு முயன்று வந்திருக்கிறது. இங்கே இரண்டுவிதமான அணுகுமுறைகளை ஒருவர் தெளிவாக வேறுபடுத்திக்காண முடியும். முதல் அணுகுமுறை மார்க்சையும் அவருடைய புரட்சிகரமான போதனையையும் புறக்கணிக்கிறது; அவர் மிகக் குறைவான விஞ்ஞான முக்கியத்துவம் கொண்டவர் அல்லது “மேற்கத்திய கலாச்சார மரபுக்கு” வெளியே உள்ளவர், எனவே “உண்மையான” விஞ்ஞானத்துக்கு வெளியே இருப்பவர் என்று எடுத்துக் காட்டுகிறது. இங்கே மார்க்சுக்கும் அவருக்கு முந்தியவர்களுக்கும், குறிப்பாக மூலச்சிறப்புடைய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களுக்கும் இடையே உள்ள இணைப்பு அலட்சியப் படுத்தப்படுகிறது, குறைவாக மதிப்பிடப்படுகிறது.

எனினும் சமீபகாலங்களில் இரண்டாவது அணுகுமுறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. இதன்படி மார்க்ஸ் ஒரு சாதாரணமான (அல்லது அசாதரணமானவராகக் கூட) ஹெகல் ஆதரவாளராக அல்லது ரிக்கார்டோவாதியாகக் காட்டப்படுகிறார். ரிக்கார்டோவுடனும் மொத்த மூலச்சிறப்பு மரபோடும் மார்க்ஸ் கொண்டிருந்த நெருக்கம் வன்மையான அழுத்தத்தோடு எடுத்துக் கூறப்படுகிறது; அரசியல் பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஏற்படுத்திய திருப்புமுனையின் புரட்சிகரமான தன்மை மழுப்பப்படுகிறது. ஜே.ஏ.ஷும்பீட்டர் இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்; இவர் பொருளாதாரச் சிந்தனையின் வரலாறு பற்றி இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்திருக் கும் முதலாளித்துவப் புத்தகங்களில் மிகப் பெரியதொரு புத்தகத்தை எழுதியவர். இவர் மார்க்சை ரிக்கார்டோவாதி என்று கூறுகிறார்; மார்க்சின் பொருளாதார போதனை ரிக்கார்டோவின் போதனையிலிருந்து சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை; எனவே அதிலுள்ள அத்தனை குறைபாடுகளும் இதிலும் உள்ளன என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கூட மார்க்ஸ் “இந்த (ரிக்கார்டோவின் – ஆசிரியர்) வடிவங்களை மாற்றியமைத்துக் கொண்டார்; கடைசியில் மிக அதிகமாக வேறுபடக் கூடிய முடிவுகளுக்கு வந்தார்”(2) என்று எழுதுகிறார்.

மார்க்சியத்தை நவீன முதலாளித்துவ சமூகவியலோடும் அரசியல் பொருளாதாரத்தோடும் சமரசப்படுத்த முடியும்; ஏனென்றால் அவை அனைத்தும் ஒரே தோற்றுவாயிலிருந்து புறப்பட்டவை என்று அடித்துச் சொல்லப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். பிரிட்டிஷ் லேபர் கட்சியின் பிரபலமான தத்துவாசிரியரான ஜான் ஸ்ட்ரேச்சி, ”மார்க்சியம் மேற்கத்திய கலாச்சார மரபுகளிலிருந்து தோன்றிய போதிலும், அதிலிருந்து வெகுதூரத்துக்கு விலகிப் போய்விட்டது. எனவே அந்த மேற்கத்திய கலாச்சார மரபுகளோடு மார்க்சியத்தை மறு இணைப்புச் செய்கின்ற அத்தியாவசியமான போக்கில் அது ஒரு ஆரம்ப நடவடிக்கை”(3) என்று தன்னுடைய புத்தகத்தைப் பற்றித் தான் கருதுவதாக எழுதுகிறார்.

சமீப வருடங்களில் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் மார்க்ஸ் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் கணிசமான அளவுக்கு அக்கறை பெருகியிருப்பது நமக்குத் தெரிந்ததே. மார்க்சின் போதனையில் உள்ள தனிக் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது அநேகமாக அவர்கள் எல்லோரிடமும் உள்ள பொதுவான அம்சமாகும். அடிப்படையான வளர்ச்சிப் பிரச்சினைகளில் (பொருளாதார வளர்ச்சி, குவிப்பு, தேசிய வருமானத்தைப் பகிர்ந்தளித்தல்) பின்பற்றப்பட வேண்டிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றித் தம்முடைய சிபாரிசுகளைத் தயாரிக்கும்பொழுது, அன்றுள்ள நிலைமைகளைப் பற்றி யதார்த்தரீதியாக மதிப்பிடுவது அவசியமாவதால், அதிகமான தொலைநோக்குடைய அறிஞர்கள் மார்க்சிய ஆராய்ச்சியின் முறைகளாலும் முடிவுகளாலும் அடிக்கடி கவரப்படுகிறார்கள்.

ஆர்.எல்.ஹெய்ல்ப்ரோனர்

மார்க்சியம் பற்றிய அக்கறை இப்படி வளர்ச்சி அடைந்திருப்பதற்கு உதாரணமாக ஆர்.எல்.ஹெய்ல்ப்ரோனர் எழுதிய, இன்றுவரையிலுமுள்ள பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றிய வரலாற்று நூலைக் கூறலாம். இந்தப் புத்தகத்தில் மார்க்சின் வாழ்க்கை மற்றும் அவருடைய பணிகளைப் பற்றி சுவையான வர்ணனையுடன் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரை முதலாளித்துவ அமைப்பைப் பற்றிச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் மார்க்சியப் பொருளாதார ஆராய்ச்சியே மிகத் தீவிரமானது, மிகவும் ஊடுருவிச் செல்வது என்று அவர் குறிப்பிடுகிறார். ”இது தலையை ஆட்டிக் கொண்டு, நாக்கைச் சப்பிக் கொண்டு தார்மிக அடிப்படையில் செய்யப்படும் ஆராய்ச்சி அல்ல…. அது அதிகமான உணர்ச்சியைக் கொண்டிருந்தபோதிலும் விருப்பு வெறுப்பற்ற மதிப்பீட்டைச் செய்கிறது. இந்தக் காரணத்துக்காகவே அதனுடைய சோர்வூட்டுகின்ற முடிவுகளைப் பற்றி நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.”(4)

சமீப காலத்தில் மேற்கு நாடுகளில் தோன்றியிருக்கும் “தீவிரமான” அரசியல் பொருளாதாரம் மரபுவழிப்பட்ட கோட்பாடுகளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்மைகளுக்கு மறுப்பைத் தெரிவிக்கிறது. சமூக – பொருளாதார ஆராய்ச்சியை நிராகரித்ததற்காகவும் வடிவங்களையே முக்கியமாகக் கொண்டதற்காகவும் அவற்றின் மலட்டுத் தன்மைக்காகவும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பொருளாதாரத்தின் முக்கியமான மரபுகளை இந்தப் போக்கின் பிரதிநிதிகள் குறிப்பிடத்தக்க வகையில் விமர்சிக்கிறார்கள். மார்க்சை ரிக்கார்டோவுடன் இணைக்கின்ற – சமூகத்தில் வருமானங்கள் பகிர்ந்து கொடுக்கப்படுவது பற்றிய பிரச்சினையை வர்க்க ஆய்வு செய்கின்ற அணுகுமுறையின் வன்மையை அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இவ்விதமான நிகழ்வுப் போக்குகள் இயற்கையாகவே வரவேற்கப்பட வேண்டியவை. எனினும் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தையும் ஒரே விஞ்ஞான முறையாக “இணைக்கின்ற” கருத்து கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும். மார்க்சியவாதிகளுக்குப் பொருளாதாரத் தத்துவம் என்பது சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றி அமைப்பதற்கான அவசியத்தை வாதிடுகின்ற அடிப்படையாக இருக்கிறது; ஆனால் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இவர்களில் தீவிரவாதிகளும் அடங்குவர் – இந்த முடிவுகளுக்கு வருவதில்லை.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சீர்திருத்தவாதமும் அதனோடு தொடர்புடைய வலதுசாரி சந்தர்ப்பவாதமும் மார்க்சியத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகச் சிந்தனையின் மனிதாபிமான, மிதவாத மரபில் மட்டுமே வேரூன்றியிருக்கின்ற போக்காகக் கருதுவதற்கு முற்படுகின்றது. மார்க்சியம் பிரதானமாகத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான சித்தாந்தம் என்பதும் மிதவாதத்தின் எந்த வடிவத்திலிருந்தும் கோட்பாட்டளவில் முற்றிலும் வேறாக இருப்பது என்பதும் மழுப்பப்படுகிறது. மார்க்சியத் தத்துவம் அதன் புரட்சிகரமான நடவடிக்கையிலிருந்து அடிக்கடி பிரிக்கப்படுகிறது.

பெருந்திரளான மக்களிடம் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளைப் பரப்புவதில் “இடதுசாரி” திருத்தல்வாதத்தையும் வறட்டுச் சூத்திரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது அதிக முக்கியமானது. இந்தப் போக்குகளின் பிரதிநிதிகள் மார்க்சியத்துக்கு முந்தியவர்களின் கொள்கைகளையும் கருத்துக்களையும் புறக்கணிக்க முயல்கிறார்கள். சமூக வளர்ச்சி என்பது புறவயமான விதிகளுக்கு ஏற்ப நடைபெறுகின்ற நிகழ்வுப் போக்கு என்ற மார்க்சியக் கருத்தை, அதன் விஞ்ஞான ஆராய்ச்சிப் பகுதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். பொருளாதாரத்தில் மனம்போனவாதமும் அரசியலில் வீரசாகசமும் “இடதுசாரி” திருத்தல்வாதத்தின் குறியடையாளங்களாகும்.

புரூதோன்

மார்க்சியத்தை புரூதோன், கிரொபோட்கின் ஆகியோரது – இவர்களுக்கும் மார்க்சுக்கும் பல அம்சங்கள் ஒத்துவருவதாகச் சொல்லப்படுகிறது – அராஜகவாதக் கருத்துக்களோடு இணைப்பவர்களைப் ”புதிய இடது” அணியினரிடம் பார்க்கிறோம். ஆனால் மார்க்சும் எங்கெல்சும் புரூதோனையும் அவருடைய போதனையையும் எதிர்த்துப் பல வருடங்களுக்கு மேல் உக்கிரமான போர் நடத்தியது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.

முதலாளித்துவக் கலாச்சாரத்தின் எல்லா அம்சங்களையும் கூறுகளையும் நிராகரிக்கும்பொழுது ”எதிர்க் கலாச்சாரம்” என்ற கருத்து சில சமயங்களில் வளர்ச்சி அடைகிறது. ஒரு புதிய, முதலாளித்துவ எதிர்ப்புக் கலாச்சாரத்தை வெறும் காற்றைக் கொண்டு நிர்மாணிப்பதற்குச் செய்யப்படுகின்ற முயற்சிகளின் பொருந்தாத் தன்மையையும் தீமைகளையும் மார்க்சிய லெனினியம் தத்துவத்திலும் நடைமுறையிலும் விளக்கிக் காட்டியிருக்கிறது. புதிய கலாச்சாரம் பழையதை ஒரரேயடியாக நிராகரித்துவிடுவதில்லை, ஆனால் அதிலுள்ள மிகச் சிறந்த, முற்போக்கான கூறுகளைப் பயன்படுத்துகிறது.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் முதலாளித்துவ அமைப்பு சரியானதே என்று காட்டும் நோக்கத்தைக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்களை அம்பலப்படுத்தி விமரிசனம் செய்தார்கள்; அவற்றின் சமூகத் தோற்றுவாய்களையும் நோக்கங்களையும், பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளையும் நிகழ்வுப் போக்குகளையும் பற்றி அவர்களுடைய மேலெழுந்தவாரியான, விஞ்ஞானத்துக்குப் புறம்பான கருத்துக்களை வெளியே கொண்டு வந்தார்கள்.

தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஆபத்தேற்படுத்துகின்ற, அதன் புரட்சிகரமான கடமைகளிலிருந்து தைத் திசை திருப்புகின்ற சித்தாந்தத்தின் மீது அவர்களுடைய தாக்குதல் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லாத வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் முதலாளித்துவப் பொருளாதாரக் கருது கோள்களிலிருந்து புறவய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்ற பகுத்தறிவுக்கு ஏற்ற கூறுகளைத் தேர்ந்தெடுப்பதை மார்க்சிய மூலவர்கள் தங்களுடைய விமரிசனத்தின் நோக்கமாகக் கொண்டிருந்தனர். முதலாளித்துவ அறிஞர்களின் ஸ்தூலமான பொருளாதார எழுத்துக்களைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்ட விதத்தில் வற்புறுத்தினார்கள்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : மூன்று நூற்றாண்டுகள் 

அடிக்குறிப்பு:
1) V.I. Lenin, Collected Works, Vol. 21, p.50
2) J.Schumpeter, History of Economic Analysis, N.Y., 1955, p.390.
3) J.strachey, Contemporary capitalism, London, 1956, pp. 14-15.
4) R.Heilbroner, The Worldly Philosophers. The Lives. Times and Ideas of the Great Economic thinkers, 3rd ed., N.Y., 1968, p. 153.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க