மார்க்ஸ் பிறந்தார் – 18
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம்
நரகத்தின் வாயிலில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைப் போல, விஞ்ஞானத்தின் வாயிலிலும் இந்தக் கோரிக்கை வற்புறுத்தப்பட வேண்டும்: “இங்கே அவநம்பிக்கைகளை அகற்றிவிடுங்கள்; எல்லாவிதமான கோழைத்தனத்தையும் ஒழித்துவிடுங்கள்.” கார்ல் மார்க்ஸ்(1)
1840 -களில் பாரிஸ் நகரம் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாக இருந்தது. போலந்து, இத்தாலி, ருஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் அரசியல் அகதிகளும் அங்கே திரண்டிருந்தார்கள். ஜெர்மனியைப் போலன்றி அங்கே ஒவ்வொன்றும் புரட்சியை – சமீப காலத்திய மாபெரும் சம்பவங்கள், புதிய சமூக யுத்தங்களை எதிர்நோக்குதல் ஆகிய இரண்டையுமே-முனைப்புடன் நினைவுறுத்தியது.
அக்காலத்திய பாரிஸ் நகரத்தைப் பற்றி இளம் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: “பிரான்சில் மட்டுமே பாரிஸ் உண்டு – அது ஐரோப்பிய நாகரிகத்தின் மிகச் சிறந்த பரிணாமம், அங்கே ஐரோப்பிய வரலாற்றின் அனைத்து நரம்புகளும் ஒன்று சேர்கின்றன, அங்கே உலகம் முழுவதையும் நடுங்கச் செய்யக் கூடிய மின்சார அதிர்ச்சிகள் குறிப்பிட்ட இடைக்காலங்களில் வெளிவருகின்றன; வேறு மக்களைக் காட்டிலும் அந்த நகரத்தின் மக்கள் ஆனந்தமாக வாழ்கின்ற ஈடுபாட்டையும் வரலாற்று நடவடிக்கைக்குரிய உந்துதலையும் ஒருசேரப் பெற்றிருக்கிறார்கள், ஏதன்ஸ் நகரத்தின் மிகவும் பண்பட்ட சிற்றின்பப் பிரியரைப் போல எப்படி வாழ்வதென்றும் அதிகமான வீரமுடைய ஸ்பார்ட்டனைப் போல எப்படி மரணமடைவதென்றும் அவர்களுக்குத் தெரியும்.”(2)
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயர்ந்த இலட்சியங்களுக்குப் பதிலாக பணவேட்டையை இலட்சியமாக்கிவிட்ட முதலாளித்துவ அமைப்பின் மீது தீவிரமான அதிருப்தி பாரிசைப் போல வேறு எங்கும் இருக்கவில்லை.
முதலாளித்துவத்தை அகற்றப் போகின்ற சமூகத்தைத் தத்துவ ரீதியில் முன்னூகிக்கின்ற சமூகச் சிந்தனை பாரிசில் தோன்றியதும் தற்செயலானதல்ல. சான்-சிமோனுக்கும் ஃபூரியேயுக்கும் பிறகு கற்பனைச் சமூகங்களை வர்ணித்த காபே, டெஸமீ, பிளான்கி, புரூதோன், லெரூ ஆகியோர் முற்போக்கு அறிவுப் பகுதியினரிடமும் தொழிலாளர்கள் வட்டாரங்களிலும் சங்கங்களிலும் மாபெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். பிரான்சின் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து நிற்கக் கூடிய மாபெரும் சமூக சக்தியாக உருவாகிவிட்டது.
எதிர்கால வரலாற்று வளர்ச்சியைப் பற்றிப் பாரிசில் தோன்றிய காட்சித் தொடர் ஜெர்மனியுடன் சிறிதும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பரந்தகன்றும் நெடுநோக்குடையதாகவும் இருந்தது. எனவே மார்க்ஸ் பாரிசில்தான் மார்க்சியவாதி ஆனார் என்பதும் விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தீர்மானமான கருத்துக்கள் அங்கே தான் வகுத்துரைக்கப்பட்டன என்பதும் இயற்கையே.
புரட்சிகரமான தத்துவத்தைப் படைப்பதற்கு, உண்மையான போர் முழக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கு கடந்த காலத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்துவது அவசியம். மார்க்ஸ் ஜெர்மனியில், கிரைத்ஸ்னாக்கில் இந்த அனுபவத்தை ஆராய்வதற்குத் தொடங்கியிருந்தார்; ஆனால் இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு மிகச்சிறந்த நிலைமைகளை அவர் பாரிசில் கண்டார். அவர் முதலாளி வர்க்க வரலாற்றாசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, தியேர், மற்றும் இதரர்களுடைய நூல்களைப் படித்தார். பிற்காலத்தில் மார்க்ஸ் எழுதியதைப் போல அவர்கள் தற்காலத்திய சமூகத்தில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவர் மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோருடைய சமூகத் தத்துவங்களையும் படித்தார்.
எல்லா வரலாறுமே வர்க்கங்களின் போராட்டத்தின் வரலாறு என்றால் பின்வரும் கேள்விகள் தர்க்க ரீதியான முறையில் தோன்றுகின்றன: தற்காலத்திய நிலைமைகளில் புரட்சிகரமான சக்தியைக் கொண்டிருக்கின்ற வர்க்கம் எது? எதிர்காலம் எந்த வர்க்கத்துக்குச் சொந்தம்? அந்த எதிர்காலம் எவ்விதமாக இருக்கும்?
பிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்திலிருந்து நேரடியாகத் தோன்றிய பிரெஞ்சுக் கற்பனாவாத சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தை விமர்சன ரீதியில் ஆராய்வதை நோக்கி மார்க்ஸ் மறுபடியும் திரும்பினார். முதலாளித்துவச் சமூகம் மனிதாபிமானக் கோட்பாடுகளுடன் பொருந்தவில்லை என்ற அடிப்படையான விமர்சனத்தை சான்-சிமோனும் ஃபூரியேயும் ஏற்கெனவே செய்திருந்தனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி எழுதினார்கள் என்ற போதிலும் அதை ஒடுக்கப்பட்டு, நலிந்து வாடுகின்ற பகுதியாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் இரக்கம் காட்டி உதவியளிக்க வேண்டிய பகுதியாகவே கண்டார்கள்.
ஹெகல் உலகம் முழுவதையும் தனிமுதலான ஆன்மாவின் வெளியீடு என்று கருதியதைப் போல கற்பனாவாதிகள் சோஷலிசம் மனித உறவுகளைப் பற்றிய தனிமுதலான உண்மையின் வெளியீடு என்று கருதினார்கள். ஹெகலின் தவறான தொடக்க நிலை தனிமுதலான ஆன்மா தன்னைப் புரிந்து கொள்கின்ற வறட்டுக் கோட்பாட்டுத்தனமான அமைப்பை ஏற்படுத்துவதற்கு இட்டுச் சென்றது; அது போல கற்பனாவாதிகளுக்கு – அவர்களில் மிகச் சிறந்தவர்களுக்கும் கூட (குறிப்பாக ஃபூரியேயுக்கு) – எல்லாமே சமூக வளர்ச்சிக்கு இலட்சிய ரீதியான திட்டங்களைத் தயாரிப்பதாக மட்டுமே இருந்தது, இத்திட்டங்களைப் புரிந்துகொண்டால் எல்லா முரண்பாடுகளும் தீர்ந்துவிடும்.
ஹெகலை முறியடிப்பதும் சமூகக் கற்பனாவாதத்தை வெல்வதும் இரண்டு இணைகரமான கடமைகளாக இருக்கவில்லை. அவை ஒரே கடமையே. மனித சமூகத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற முக்கியமான காரணியைக் கண்டுபிடித்துவிட்டால் அக்கடமையை நிறைவேற்ற முடியும்.
எதார்த்தம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய “முன்னரே தயாரிக்கப்பட்ட அமைப்பு”, “வறட்டுக் கோட்பாட்டுவாத சூக்குமமான கருத்தமைப்புகள்” ஆகியவற்றைத் தயாரிப்பது ஹெகலின் போதனையிலோ அல்லது கற்பனாவாத சோஷலிசத்திலோ ஒருபோதும் மார்க்சை ஈர்க்கவில்லை. மனிதகுலச் சிந்தனையின் மிகச் சிறந்த சாதனைகளான இவை இரண்டுமே உலகத்தை மாற்றத் தகுதியான கருவியாக இருக்கவில்லை.
ஆனால் இரண்டு போதனைகளுமே தம் எதிர்மறையையும் தமக்குள் கொண்டிருந்தன. ஹெகலிடம் சிந்தனையின் இயக்கவியல் முறை இந்த எதிர்மறையாகும். முதலாளித்துவ உடைமை உறவுகள், மனிதனை முடமாக்குகின்ற மனிதனுடைய சாராம்சத்துக்குப் பொருந்தியிராத உறவுகள் என்ற விமர்சனம் சமூகக் கற்பனாவாதிகளிடம் உள்ள எதிர்மறையாகும்.
இந்த உறவுகளின் தன்மையைச் சட்ட ரீதியில் மட்டுமின்றி பொருளாதாரக் கோணத்திலும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக மார்க்ஸ் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, மாக்கூலோஹ், ஜேம்ஸ் மில், ழான் படீஸ்ட் ஸேய், ஸ்கார்பெக், டெஸ்டூட் டெ டிரஸி, புவாகில்பேர் ஆகியோர் எழுதிய நூல்களை ஆராய்ச்சி செய்தார். இளைஞரான பிரெடெரிக் எங்கெல்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனத்தின் உருவரைகள் என்ற கட்டுரையை Deutsch-Französische Jahrbücher -இல் எழுதியிருந்தார். மார்க்ஸ் அதை மேதாவிலாசம் நிறைந்ததென்று கூறினார். அவர் அரசியல் பொருளாதாரத்தை ஆராய்வதற்கு இக்கட்டுரையும் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும்.
மார்க்ஸ் பாரிசில் வசித்த பொழுது அரசியல் எதிர்த்தரப்பின் தலைவர்கள், புரட்சிகர ஜனநாயகவாதிகளும் சோஷலிஸ்டுகளுமான லுயீ பிளாங், பியேர் லெரூ, ஹென்ரிஹ் ஹேய்னெ, ஜொஸேப் புரூதோன் மற்றும் மிஹயீல் பக்கூனின் ஆகியோருடன் நட்புக் கொண்டு பழகினார்.
தத்துவ ரீதியான விமர்சனத்தை வர்க்கங்களின் உண்மையான போராட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று மார்க்ஸ் விரும்பினார். ஆகவே அவர் ஜெர்மானியக் கைவினைஞர்கள், பிரெஞ்சுத் தொழிலாளர்களுடைய புரட்சிகர வட்டாரங்களில் நெருங்கிப் பழகினார். பாரிஸ் கதவுகளில் ஒன்றின் அருகில், வின்சென் கோட்டைக்குப் பக்கத்தில் நடைபெற்ற புரட்சிகரத் தொழிலாளர்களின் கூட்டங்களில் மார்க்ஸ் கலந்து கொண்டதாகப் போலீஸ் இலாகா அறிக்கைகளில் எழுதப்பட்டிருக்கிறது.
எதற்காகப் போராட வேண்டும், எப்படிப் போராட வேண்டும் என்று அறிந்திருக்கின்ற உண்மையான அரசியல் போராட்டக்காரனின் உறுதியும் தெளிவும் மார்க்சிடம் இருப்பதைக் கண்ட புரட்சிகரத் தொழிலாளர்கள் அவர் மீது அதிகமான பற்றுதலைக் கொண்டார்கள். ஜெர்மானியத் தொழிலாளர்களின் அரசியல் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஹேர்மன் ஏவெர்பேக் பின்வருமாறு எழுதினார். “கார்ல் மார்க்ஸ்… கோ. எஃப். லேஸ்ஸிங்கைப் போல குறிப்பிடத்தக்க மேதை என்பதில் சந்தேகமில்லை. அசாதாரணமான அறிவும் இரும்பு மனமும் கலங்காத மதிநுட்பமும் பரந்த ஞானமும் கொண்டிருக்கின்ற கார்ல் மார்க்ஸ் பொருளாதார, அரசியல், சட்டவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.”(3)
மார்க்ஸ் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை நேரடியாகத் தெரிந்து கொண்டார்; புரட்சிகரத் தொழிலாளர்களின் தார்மிக சக்தி, அறிவு வேட்கை மற்றும் மானுடச் சிறப்பை அவர் மென்மேலும் அதிகமாகப் போற்றலானார். அவர் 1844 ஆகஸ்ட் 11ந் தேதியன்று லுட்விக் ஃபாயர்பாஹுக்குப் பின்வருமாறு எழுதினார்: “பிரெஞ்சுத் தொழிலாளர்களிடம் உள்ள பரிசுத்தமான புதுமையை, உழைப்பினால் உருக்குலைந்து போன இந்த மனிதர்களிடமிருந்து பீறிட்டுக் கிளம்புகின்ற மேன்மையை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அவர்களுடைய கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் பாட்டாளி கூட மாபெரும் காலடிகளை முன்னால் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் பிரெஞ்சுத் தொழிலாளர்களுடைய கலாச்சாரப் பின்னணி அவரிடம் இல்லை. ஆனால் ஸ்விட்சர்லாந்து, லண்டன் மற்றும் பாரிசில் இருக்கின்ற ஜெர்மானியக் கைவினைஞர்களின் தத்துவ ரீதியான தகுதிகளை வலியுறுத்துவதற்கு நான் மறந்துவிடக் கூடாது. எனினும் ஜெர்மானியக் கைவினைஞர் இன்னும் அதிகமான அளவுக்குக் கைவினைஞராகத்தான் இருக்கிறார்.
“என்ன இருந்தாலும், வரலாறு நம்முடைய நாகரிகமடைந்த சமூகத்தின் இப்படிப்பட்ட “காட்டுமிராண்டிகளிடமிருந்து தான் மனித குலத்தை விடுதலை செய்யப் போகின்ற செய்முறைக் கூறைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.”(4)
கற்பனாவாதிகள் பாட்டாளி வர்க்கத்தைத் தங்களுடைய உணர்ச்சிகரமான கொந்தளிப்புக்களுக்கு இலக்காகக் கருதினார்கள்; ஆனால் மார்க்ஸ் அதைப் புரட்சிகரமான நடவடிக்கைக்கு உரிய சக்தியாகக் கருதினார்.
தத்துவத்தையும் நடைமுறையையும், தத்துவஞானத்தையும் உலகத்தையும் இணைக்கின்ற சங்கிலி பாட்டாளி வர்க்கம்! மார்க்ஸ் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்துக்கு விமர்சனம் முகவுரை என்ற கட்டுரையில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார். அக்கட்டுரை உருவத்திலும் உள்ளடக்கத்திலும் விஞ்ஞானக் கட்டுரைக்கு மிகச் சிறந்த உதாரணம் என்று கூறலாம். இக்கட்டுரையும் சிந்தனைப் போக்கில் இதை மிகவும் ஒட்டி வருகின்ற யூதப் பிரச்சினையைப் பற்றி என்ற கட்டுரையும் 1844ம் வருடத்தின் தொடக்கத்தில் Deutsch-Französische Jahrbicher என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தன.
“ஒவ்வொரு ரகத்தையும் சேர்ந்த அடிமைத்தனத்தை நொறுக்காமல்” உண்மையான மனிதகுல விடுதலை என்பது சாத்தியமில்லை; மிக அதிகமாகப் பறிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருப்பது பாட்டாளி வர்க்கமே என்று மார்க்ஸ் இக்கட்டுரைகளில் எழுதினார். சமூகத்தின் எல்லாத் துறைகளையும் விடுதலை செய்யாமல் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்ள முடியாது.
மனிதகுல விடுதலையின் தலை தத்துவஞானம், அதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.(5)
மார்க்ஸ் முன்னோக்கி வைக்கின்ற முக்கியமான காலடியை இக்கட்டுரைகளில் பார்க்கிறோம். அவர் உண்மையான போர் முழக்கத்தையும் அதை நிறைவேற்றக் கூடிய தகுதியைக் கொண்ட, மனிதகுலத்தின் மனிதாபிமான இலட்சியங்களைச் சாதிக்கக் கூடிய தகுதியைக் கொண்ட “பொருளாயதச்” சக்தியையும் கண்டுவிட்டார். மார்க்சின் இந்தக் காலடி கருத்துமுதல்வாதத்திலிருந்து பொருள்முதல்வாதத்துக்கு, புரட்சிகரமான ஜனநாயகத்திலிருந்து கம்யூனிசத்துக்கு அவருடைய இறுதியான மாற்றம் என்று லெனின் வர்ணித்தார்.(6)
இருபத்தாறு வயதில் மார்க்ஸ் உலகத்தைப் பற்றிப் புதிய கண்ணோட்டத்தின் சிகரங்களை அடைந்துவிட்டார். ஒப்புவமையில்லாத தத்துவச் சிந்தனைக்குப் பிறகே இது சாத்தியமாயிற்று. தத்துவஞானம், சமூகச் சிந்தனை ஆகிய துறைகளில் ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மொத்தப் பாரம்பரியத்தையும் அவர் தன்வயப்படுத்திக் கொண்டு விமர்சன ரீதியில் திருத்தியமைத்தார்.
ஃபாலெஸ் முதல் ஃபாயர்பாஹ் மற்றும் மோஸஸ் ஹேஸ் முடிய ஒரு சுதந்திரமான தத்துவஞானியைக் கூட- அவர் எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும்-மார்க்ஸ் ஒதுக்கவில்லை. ஹெரடோடஸ் மற்றும் ப்ளுடார்க் முதல் கிஸோ மற்றும் தியேர் முடிய எல்லா வரலாற்றாசிரியர்களும் எழுதிய அடிப்படையான நூல்கள் அனைத்தையும் அவர் படித்தார். பிளாட்டோ முதல் லெரூ மற்றும் வைத்லிங் முடிய எல்லா சமூகக் கற்பனாவாதிகள் எழுதிய புத்தகங்களையும் படித்தார்.
ஆடம் ஸ்மித் முதல் பிரெடெரிக் எங்கெல்ஸ் முடிய முக்கியமான அரசியல் பொருளாதார நூல்கள் எல்லாவற்றையும் அவர் ஆராய்ந்தார். இறுதியாக மார்க்ஸ் இலக்கியச் செல்வத்தின் எல்லாத் துறைகளையும்-லுக்ரெத்சியஸ் காருசின் கவிதையிலிருந்து ஹென்ரிஹ் ஹேய்னெயின் கவிதை முடிய, எஷ்கிலசின் சோக நாடகங்களிலிருந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முடிய, பிளாட்டோவின் உரையாடல்களிலிருந்து பல்ஸாக்கின் வசனம் முடிய-ஆழ்ந்து படித்தார்.
ஆனால் இவ்வளவு அறிவுத் திரட்டு கூட ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விரித்துரைப்பதற்குத் தன்னளவில் போதுமானதல்ல என்று தோன்றும். எல்லாக் காலங்களிலும் ஏட்டுப் புலமையாளர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் உலகத்திலுள்ள எல்லா அறிவுத் திரட்டையும் அறிந்தவர்கள், ஆனால் சுயமாக ஒரு கருத்தைக் கூடச் சிந்திப்பதற்குத் தகுதியற்றவர்கள். மார்க்ஸ் மனிதகுல மேதாவிலாசத்தின் மாபெரும் சாதனைகளைத் தன்வயப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், அவற்றை உண்மைக்கு அஞ்சாத படைப்புச் சிந்தனையின் கருவியாக, முறையாகச் செய்தார். அவர் உண்மையை ஓய்வில்லாமல் தேடினார்.
எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவென்றால் முதலில் மார்க்ஸ் ஜெர்மனியின் ஒடுக்கப்பட்ட விவசாயப் பெருந்திரளினரது கருத்தையும் பின்னர் எல்லாக் காலங்களிலும் புரட்சிகர வர்க்கங்களில் அதிகப் புரட்சிகரமான, சக்திமிக்க வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கத்தின் கருத்தையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொண்டதே.
விஞ்ஞான சோஷலிசம் (அல்லது விஞ்ஞான கம்யூனிசம் – இரண்டும் ஒன்றுதான்) மனித குலத்தின் ஆன்மிகச் சாதனைகளின் பொதுமைப்படுத்தல் மற்றும் செய்முறை விளக்கம் என்பது மட்டுமின்றி, முதலாளித்துவச் சமூகத்திலுள்ள குறிப்பிட்ட பொருளாதார மற்றும் சமூக-அரசியல் போக்குகளின் வெளியீடாகவும் (கடைசியாக இக்காரணி தீர்மானமாக இருந்தது) தோன்றியது.
இந்த உண்மையை மனதில் கொண்டுதான் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்: “புதுமையான எல்லாத் தத்துவங்களையும் போலவே நவீன சோஷலிசத்தின் மூலவேர்கள் பொருளாயத உண்மைகளில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தாலும் அது கைக்கு எட்டிய அறிவுத்துறையின் கையிருப்புச் சரக்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.”
குறிப்புகள்:
(1)கார்ல் மார்க்ஸ், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, I982, பக்கம் 14.
(2) Marx, Engels, Collected Works, Vol. 7, Moscow, 1977, p. 512.
(3) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 2, S. 18.
(4) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 355.
(5) Ibid., p. 187.
(6) V. I. Lenin, Collected Works, Vol. 21, p. 80.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
முந்தைய பாகங்கள்:
- மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
- அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
- ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
- பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
- எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
- சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
- மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
- கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
- மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
- பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
- தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
- ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
- கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
- கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
- சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
- எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
- துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !