நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !

1

கம்யூனிசம் வெல்லும் !

2017 – கார்ல் மார்க்ஸின் மூலதனம் வெளியிடப்பட்டதன் நூற்று ஐம்பதாவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூறாவது ஆண்டு. சீனத்தின் மாபெரும் கலாச்சாரப் புரட்சிக்கும் இந்தியாவின் நக்சல்பாரி எழுச்சிக்கும் இது ஐம்பதாம் ஆண்டு.

பல்வேறு கற்பனாவாத சோசலிசப் போக்குகள் கோலோச்சிய ஒரு காலத்தில், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தை வழங்கினார் மார்க்ஸ். தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள் தோன்றிய பொருளாதாரவாதம், இடது சாகசவாதம், தேசவெறி ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் லெனின்.

பின் தங்கிய விவசாய நாட்டில் புரட்சியைச் சாதித்தது மட்டுமின்றி, சோசலிச சமூகத்திலும் முதலாளித்துவ மீட்சி சாத்தியமே என்று எச்சரித்து, அதனை எதிர்த்துப் போராடுவதற்குத் தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியையும் நடத்திக் காட்டினார் மாவோ, ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு என்ற சமரசவாத அரசியலிலிருந்தும், நாடாளுமன்றச் சரணடைவுப் பாதையிலிருந்தும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தை மீட்டு புரட்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது நக்சல்பாரி எழுச்சி.

இவையனைத்தும் இடையறாமல் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகள். இப்போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் பின்னடைவுக்கும் தோல்விக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதன் பொருள் முதலாளி வர்க்கம் அறுதி வெற்றி பெற்று விட்டது என்பதல்ல.

ஆனால், அப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தவே உலக முதலாளி வர்க்கம் தொடர்ந்து முயற்சிக்கிறது. தனது மூலதனம் நூலின் மூலம் அந்தப் பிரமையைத் தகர்த்தெறிந்தார் மார்க்ஸ். வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தில் முதலாளித்துவம் எப்படித் தோன்றியது என்பதையும், தனது உள் முரண் பாடுகள் காரணமாக அது அழிவை நோக்கிச் செல்வது ஏன் தவிர்க்கவியலாதது என்பதையும் அறிவியல்பூர்வமாக நிறுவினார்.

உலகப் போர்களும் புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும், முதலாளித்துவப் போட்டியும், சுரண்டலும் தோற்றுவித்த தவிர்க்கவியலாத விளைவுகள்தான். அவற்றைத் தற்செயல் நிகழ்வுகளாகக் காட்டுவதன் மூலம்தான் சாகாவரம் பெற்று விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறது சர்வதேச மூலதனம்.

மீட்சியே இல்லாமல் தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவாக அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான பல நாடுகளில் வெடித்துக் கிளம்பும் மக்கள் போராட்டங்களும் உலக முதலாளித்துவக் கட்டமைவு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்குச் சான்று கூறுகின்றன. கடுமையான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய இளம் தலைமுறையினர் மத்தியிலேயே இந்த நெருக்கடி, மார்க்சியத்தை நோக்கிய ஈர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.

உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைவுகளின் தோல்வி மறைக்கவே முடியாத அளவுக்கு மக்களிடம் அம்பலமாகி வருவதால், ஆளும் வர்க்கங்களே புதிய மீட்பர்களை இறக்கி விடுகின்றன. பாசிஸ்டுகள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள் முதல் அரசியல் கோமாளிகள் வரையிலான பலரும் மக்களைத் திசை திருப்ப அரசியல் களத்தில் நிற்கிறார்கள்.

இந்நிலையில் இளம் தலைமுறை தொழிலாளி வர்க்கத்தினரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்வது காலத்தின் தேவை. இதனைக் கருத்தில் கொண்டே இந்த இதழைக் கொண்டு வந்திருக்கிறோம்.

– புதிய ஜனநாயகம், நவம்பர் 2017.

**************************************************************************************************************************

ரஷ்ய சோசலிசப் புரட்சி நூறாம் ஆண்டு நிறைவு – அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

**************************************************************************************************************************

——————————————————————————————————————–

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

 

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

ஊடகத்துறையில் அஞ்சாமல், தளராமல், அறிவார்ந்து வினவு செயல்பட நீங்களும் தோள் கொடுக்க வேண்டாமா? ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சிகர வாழ்த்துக்குக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க