privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கல்வி உரிமையை பறிப்பது நீட் - தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !

கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !

-

மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்க ‘நீட்’ (NEET) தொழிலாளிகளின் தொழில் உரிமையைப் பறிக்க ‘நீம்’ (NEEM) குடிமக்கள் வாழ்வை அழித்துக் குடியரசுக் கொண்டாட்டம்!

ண்ணூர் அசோக் லேலாண்டில் பணி புரியும் 100 தொழிலாளர்கள் தங்கள் உணவு இடைவேளையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அசோக் லேலாண்ட் நிர்வாகம் நிரந்தரப் பணியாளர்களின் உற்பத்தி சார்ந்த வேலைகளில் தொழிற் பழகுநர்கள் (Apprentices) மூலம் நடத்துவதற்கு எதிராக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த எதிர்ப்பை அவர்கள் நிர்வாகத்திற்காக மட்டுமின்றி, இதற்கு ஆதரவாகச் செயல்பட்ட தொழிற்சங்கத் தலைமைகளுக்கு எதிராகவும் பதிவு செய்தார்கள்.

நிரந்தரத் தொழிலாளர்களின் பணியில் இப்படி நேரடியாக தொழில் பழகுநர்களைப் பயன்படுத்தும் திட்டத்திற்கு, தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘நீம்’ எனப்படும் திட்டம் வழி வகுக்கிறது. இந்தத் திட்டத்தின்படி தொழிற்சங்கமும் நிர்வாகமும் போட்டுள்ள ஒப்பந்தம் தொழிலாளர்களை நிர்பந்தப்படுத்துகிறது.

(மாதிரிப்படம்)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள “தேசிய வேலை வாய்ப்பை உயர்த்தும் திட்டம் (National Employability Enhancement Mission) என அழைக்கப்படும் இந்த ‘நீம்’ -ஐக் கண்டு நிரந்தரப் பணியாளர்கள், அஞ்சுகிறார்கள். இது கொல்லைப்புற வழியாக தொழிற்சாலையின் நேரடி உற்பத்தியில் சட்டவிரோதமாக நுழைக்கப்படும் ஒப்பந்த முறை என்பதாலும் தொழிலாளிகளின் கூட்டு பேர உரிமையை ஒழித்துக் கட்டிவிடும் என்பதாலும் இதனைக் கண்டு தொழிலாளர்கள் அஞ்சுகிறார்கள்.

அகில இந்திய தொழிற்கல்வி மையம், AICTE (ALL India Council for Technical Education) மூலம் 2013 -இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நீம்’ திட்டம் 2017 -இல் பா.ஜ.க.வின் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவம் இந்தத் திட்டத்தின் மூலம் பணிக்கு வரும் தொழிற் பழகுநர்கள் இதுவரை நிரந்தரப் பணியாளர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நேரடி உற்பத்தியில் ஈடுபடும் விதமாக கனரக வாகன உற்பத்தி (Automobiles), மின்னணுவியல் (Electronics) துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சமென இந்தத் திட்டத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2006 -இல் இந்தத் திட்டம் நோக்கியா, ஃபாக்ஸ்கான், ஹூண்டாய் போன்ற நிறுவனங்களால் அவர்களின் நிறுவன உற்பத்திக்கான புதிய உற்பத்தி சக்திகளை உருவாக்குவது என்ற வகையில் அவர்களே இதுபோன்ற பயிற்சியினை அளித்து உருவாக்கினார்கள். இந்த வகை தொழில் பழகுநர்கள் தொழிலக நிலை ஆணைகள் சட்டம் (Industrial Standing Orders Act) அல்லது தொழிற்பழகுநர்கள் சட்டம் (Apprentices Act) கீழ் வராது.

இது தொழிற்சாலை பயிற்சியாளர்கள் என்று அழைக்கப்படும் முற்றும் முழுவதும் நிர்வாகத்தின் பொறுப்பில் வரும் புதிய திட்டமாகும். இந்தத் திட்டம் நிரந்தரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் நிறுவனத்தின் மையமான உற்பத்தியை நிரந்தரப் பணியாளர்களுக்கு நேரடியாக பல கோணங்களில் உதவும் திட்டம் என மத்திய அரசால் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் எடுக்கப்படும் பயிற்சியாளர்கள் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மூலம் ஒப்பந்ததாரர்கள் அல்லாத அதே மாதிரியான வேலையாட்களாக நிர்வாகத்தால் எடுக்கப்படுவார்கள். இப்படி எடுக்கப்படும் இளம் தொழிலாளர்கள் ஒரு வேளை 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகத்திற்குத் தேவைப்படுவார்களேயானால் பணி நிரந்தரமும் செய்யப்படலாம் என்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதுவும் இதுவரை தனியார் நிறுவனங்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட எல்லா வகை தொழிலாளர்களுக்கும் நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு உகந்ததாக இல்லாத வாக்குறுதியாகவே கடந்த காலங்களில் இருந்தது போலவே இதுவும் இருக்கும்.

முதலாளிகளுக்கு இந்தப் பயிற்சியாளர்களைச் சட்டப்பூர்வமாக்கியது மட்டுமல்ல, அதற்கு மேலும் செல்கிறது இந்தத் திட்டம். இது தனியார் துறைக்கு மட்டுமேயானது, மேற்படி நிறுவனங்கள் இந்த நீம் திட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. இந்தப் புதியத் திட்டம் பயிற்சியாளர்கள் என்ற வரையறையையே மாற்றுகிறது.

தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான ஒரு சிறந்த தரகனைப் போல் இந்தத் திட்டம் செயல்படுமென மத்திய அரசு வாய்க் கூசாமல் முன் மொழிகிறது. இந்த நீம் திட்டம் மூலம் எடுக்கப்படும் தொழிலாளர்களுக்கு தொழில் துறையில் பணி புரியும் பயிற்சியற்ற பொது ஊழியர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் படி ஊதியம் வழங்கப்படும். அதே சமயம், இந்தத் தொழிலாளர்கள் Skilled Labour -களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுவார்கள். Skilled Labour -களுக்கு வழங்கப்படும் எந்த வித சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

பணியின் போது பாதுகாப்பு என்பதும் இவர்களது சொந்தப் பொறுப்பையே சாரும். பணியில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டப்படியான (Workmen Compensation Act) எந்தவித பாதுகாப்பையும் இழப்பீட்டையும் இந்தப் பணியாளர்கள் கோரமுடியாது.
இதுவரை நிரந்தரப் பணியாளர்களை ஒழித்துக் கட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திக் கொண்ட முதலாளிகளுக்கு இப்போது ஒப்பந்தக்கார முதலாளிகளையும் ஒழிப்பதன் மூலம் இரட்டிப்பு உழைப்புச் சுரண்டலை ஏகபோகமாக்கிக் கொள்ள இந்த நீம் திட்டம் வழி வகுக்கிறது.

தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இவர்களை விடுவிக்கும்போது தொழிலாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள், உரிமைகளுடன் கூடிய தொழிலாளர்கள் தேவைகள் இந்த நீம் திட்டத்தின்படி இல்லாமல் ஒழிக்கப்படுகிறது. இவர்களுக்கு ESI, PF கூட கட்டவேண்டியது இல்லை. இதுவரை ஒப்பந்தப் பணியாளர்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு இந்த உரிமைகள் வழங்கப்பட்டு வந்ததோடு, சில இடங்களில் பணி தொடர்ச்சியும் போனசும் குறைந்த பட்சமாவது வழங்கி வந்தார்கள். இந்தச் சட்டம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற முறையில் பெற்று வந்த குறைந்தபட்ச சலுகைகளையும் பறித்துவிட்டது.

அசோக் லேலாண்ட், மாருதி, ஹூண்டாய், ஃபோர்டு, நிசான், மெர்சடிஸ் பென்ஸ் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களும், நோக்கியா, ஃபாக்ஸ்கான், சாம்சங் போன்ற மின் அணுவியல் நிறுவனங்களும் மற்றும் GEC, L&T போன்ற மின் பராமரிப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சட்டப்படியான சுரண்டலுக்கு வழி வகுப்பதற்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் உற்பத்தியில் தொழிலாளர்களிடம் நல்ல முன்னேற்றத்தையும் திறமையையும் உருவாக்கும். ஆனால் நிறுவனங்கள் இந்தத் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் போது மிகச்சிறந்த திறனாளிகளாக தொழிலாளிகளோடு நிபந்தனை இல்லாமல் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் எனக் கோருகிறது. இதன்மூலம் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு நிபந்தனைகள் மேல் நிபந்தனைகளைப் போட்டு, ஏதோ தொழிலாளர்களுக்கு சலுகை வழங்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற தொழிலாளர்களை கம்பெனிகள் ஏன் எடுக்கவேண்டும்?

இந்த நீம் திட்டம் 16 வயதிலிருந்து 40 வயது வரைக்கும் தொழிலாளர்களை வேலைக்காக பயிற்றுவிக்கப் படுபவர்களாகவே அறிவிக்கிறது. இதுவரை ITI, Diploma, Engineering என படித்து வந்தவர்கள் செய்து வந்த வேலையை அவர்கள் அல்லாதவரை பயிற்சி அளிப்பதன் பேரில் ஈடுபடுத்தித் தங்களது சுரண்டலை நிர்வாகம் தடையின்றி நடத்திக் கொள்ளும் அதே வேளையில் இதற்காகவே படித்த இளைஞர்களையும் அவர்கள் படித்தப் படிப்பையும் லாயக்கற்றதாக மாற்றுகிறது இந்தத் திட்டம்.

இதன்மூலம் தொழிற்கல்வி பயில்வதில் ஆர்வம் குன்றி, அடுத்தக்கட்ட தொழில் முன்னேற்றத்திற்கான உந்துதல் இன்றி எதிர் காலத்தில் தொழில்துறை நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பளிக்கிறது.

2013 -இல் இதை அறிமுகம் செய்தபோது, 18 வயதிலிருந்து 35 வயது வரை என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இப்போது இது 16 வயதிலிருந்து 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 40 வயது வரை வேலை தேடுபவராகவே அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.

இது தொழிலாளிகளுக்கு எதை உணர்த்துகிறது?

முதலாளிகளுக்கான அதிகப்படியான உற்பத்தி என்பதில் மட்டுமே இந்தத் தொழிலாளர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இது அசோக் லேலாண்டில் பணி புரியும் நிரந்தரத் தொழிலாளிகளுக்கு, GEC-ல் பணி புரியும் நிரந்தரத் தொழிலாளிகளுக்கும் புதுமையான திட்டம் அல்ல.

இந்த ஆலைகளை குசேலர், பிரகாஷ், மைக்கல் பெர்னான்டஸ் போன்ற தொழிற்சங்க தலைவர்கள் மூலம் தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வாங்கிக் கொடுக்கும் நோக்கத்திற்காக நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளுடன் இந்த Outsourcing முறை கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. அப்போதுதான் முதன் முறையாக நிரந்தரப் பணியாளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான வாய்ப்பை இந்தத் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் மீது திணிக்கப் பட்டது.

இந்த நீம் திட்டத்தை இப்போது தொழிற்சாலையில் புகுத்தியதால் இவர்கள் எச்சரிக்கை அடைகிறார்கள். நிரந்தரத் தொழிற்சங்க பண்பாடு கொண்ட நிறுவனங்கள் இவை. அசோக் லேலாண்டில் பணி புரியும் 1,750 நிரந்தரத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவே இங்கு அயல் பணி (Out source) முறையில் வேலை வாங்கப்பட்டு வந்தது.

இந்தக் கம்பெனியில் 6000 -க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்க தலைவர்களால் நிர்வாகத்துடன் சம்பள உயர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. தற்போது 2016 செப்டம்பரில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்த நிர்வாகம் முனைகிறது.  இதில் 400 விதமான வேலைகள் வெளியில் இருந்து செய்யும் ஒப்பந்த முறைக்கு விடப்பட்டுள்ளது.

அசோக் லேலாண்ட்டின் எண்ணுரர் மற்றும் ஒசூர் பணி மனைகளில் 2,154 நிரந்தரப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். உற்பத்தி சார்ந்த தொடர் வேலையில் நீம் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களைக் கொடுத்து அனுபவமிக்க தொழிலாளர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். இந்த சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் இதை மட்டும் சொல்லவில்லை. தொழிலாளர்களின் பணிக்கு பாதுகாப்பே இல்லாத வகையில் இந்த ஒப்பந்தத்தில் நீக்கு போக்காக உற்பத்தி உயர்வுக்காக மட்டுமே இது செயல்படுத்தப்படும் என அறிவிக்கிறது.

இந்த எதிர்ப்பை தங்களுக்கு இதுநாள் வரை அறிமுகமான தொழிற்சங்க இயக்கங்கள் CITU, WPTUC, முற்போக்கு தொழிலாளர் மன்றம், குசேலர் நலமன்றம், தொழிலாளர் பேரியக்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற சங்கங்களின் தலைவர்களை இந்த ஒப்பந்த முறை சம்மந்தமான குற்றவாளிகளாக அறிவித்து, தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

ஒரு சில தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தத்தின் போதே தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள். நிர்வாகம் இந்த வகைப் பயிற்சியாளர்களை உற்பத்தியில் அனுமதிக்கா விட்டால், நிரந்தரப் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து 4000 மணி நேர சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொள்வதுடன் இந்த எதிர்ப்பில் கலந்து கொள்ளும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்வோம் என நிபந்தனை போட்டுள்ளது.

நிர்வாகத்திற்கு ஆதரவான தொழிற்சங்க முடிவை எதிர்த்து, 1500 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பமிட்ட மனுவை வழங்கியுள்ளார்கள். தொழிலாளிகளின் பாதுகாப்பினைத் தொழிற்சங்க இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததே இந்தத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்குக் காரணமான அமைந்தது. மத்திய அரசு உழைக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்வி உரிமையை ‘நீட்’ என்ற தேர்வு முறையின் மூலம் பறித்தது போல, தொழிலாளர்களின் தொழில் உரிமையை இந்த ‘நீம்’ திட்டத்தின் மூலம் பறிக்கிறது.

தொழிலாளர்களின் தொழில் உரிமைகளை ஒழித்துக் கட்டும் ஆர்.எஸ்.எஸ். மோடி, குடிமக்களின் வாழ்வை அழித்து குடியரசைக் கொண்டாட இந்திய மக்களை அழைக்கிறார். தான் உலக முதலாளிகளுக்காக இதுவரை 1400 விதித் திருத்தங்களைச் செய்துள்ளதாகவும் இந்தியாவில் 90% அந்நிய நேரடி முதலீட்டினை நம்பகமாக தேசம் கடந்த தொழில் நிறுவனங்கள் செய்யலாம் என உலக நாடுகளிடம் அறை கூவுகிறார்.

இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் தொழில் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இதுவரை போராடிப் பெற்ற உரிமைகள் என்பதை உணராமல் தொழிலாளி வர்க்கம் புதிய உரிமைகளுக்காக போராடாமல் இருப்பதுடன், இருப்பதை இழப்பதற்கு எதிராகவும் போராடாமல் இனியும் இருக்கமுடியாது என்பதை உணரவேண்டும்.

பிழைப்புவாத தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவையை உணர்ந்து செயல்படவேண்டும். புரட்சிகர தொழிற்சங்கத்துக்குள் அணி சேரவேண்டும்.

-பழனி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க