மெட்ரோ இரயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழில்நுட்ப தொழிலாளர்கள் அனைவரும் (250 பேர்) கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 15 நாட்களாக தினமும் தமது பணி நேரம் முடிந்த பிறகு சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ இரயில் நிறுவன அலுவலகத்தின் வெளி கதவுக்கு உள்ளே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் தொழிலாளர்கள்.

கடந்த 2018 ஜூலை மாதம் தங்களது ஊதிய உரிமைகளுக்காகப் போராடிய மெட்ரோ ரெயில் ஊழியர்கள் (கோப்புப் படம்)

மெட்ரோ ரயில் சேவையை இயக்குவதற்கான தொழிலாளர்களை காண்டிராக்டர் மூலம் நியமிப்பதை கண்டித்தும், இதனாலும் நிர்வாகத்தின் பிற செலவு குறைப்பு நடவடிக்கைகளாலும் மெட்ரோ ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதையும், நிர்வாகம் நிரந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பராமரிப்பு ஊதியம் மறுத்து வேலையை விட்டு துரத்த முயற்சிப்பதையும் கண்டித்து இந்தத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாகம் தொழில்நுட்ப ஊழியர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டி குறை ஊதியம் கொடுக்கின்றது. அரைகுறையாக முடிக்கப்பட்ட கட்டுமான வேலைகள், அபாயகரமான செயல்பாட்டு நடைமுறைகள் என்று மெட்ரோ ரயில் செயல்பாடே அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வேலைப் பளு அதிகமாக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர் பொறுப்பில் இருக்கும் ஊழியர்களின் நிலைமை பரிதாபமானது. ஒவ்வொரு ரயிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் போக வேண்டிய வேகம், சேர வேண்டிய இடம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு அதை கணினி மூலம் இயக்கி கட்டுப்படுத்துவது, விபத்துகள் நேராமல் திட்டமிடுவது ஆகிய அழுத்தம் நிறைந்த இந்த வேலை இது.

பல ஆயிரம் கோடிகளை தின்று காட்சிப் பொருளாக இருக்கும் சென்னை மெட்ரோ ரயில்.

உதாரணமாக, ஹாங்காங் மெட்ரோவில் இந்த வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை கொடுக்கப்படுகிறது. அப்போதுதான் மன அழுத்தத்தை தெளிவாக்கிக் கொண்டு வேலையை தொடர முடியும். ஒருவர் எழுந்தவுடன் இன்னொருவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் போதுமான ஊழியர்களை நியமித்து இயக்குகின்றனர்.

ஆனால், சென்னை மெட்ரோவில் 14 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 4 பேரை உட்கார வைக்கின்றனர். செலவு குறைப்பு என்ற பெயரில் போதுமான ஊழியர்களை நியமிக்காமல் தொழிலாளர்களை துன்புறுத்தி, பயணிகளின் பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர் மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள்.

மேலும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இருக்க வேண்டிய நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு 3 ஷிஃப்ட்-க்கு தலா ஒருவரை நியமிக்காமல், 2 தொழிலாளர்களை தலா 10 மணி நேரம் இரண்டு ஷிஃப்ட் வேலை பார்க்கச் சொல்கின்றனர். மீதி 4 மணி நேரமும், 5 நிலையங்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற விகிதத்தில் கண்காணிக்கச் சொல்கின்றனர்.

பராமரிப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் போன்றவை நடைபெறும் இரவு நேரங்களில் இத்தகைய செலவு குறைக்கும் நடவடிக்கையால் விபத்துகள் நடக்கும் சாத்தியங்கள் அதிகமாயிருக்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் இத்தகைய விபத்தில் 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது போன்ற விபத்து செய்திகளை வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்கிறது நிர்வாகம். விதிமுறைகளுக்கு ஏற்ப ரயில்வே பாதுகாப்பு கமிஷனுக்குக் கூட தகவல் தெரிவிப்பது இல்லை.

கடந்த ஒரு ஆண்டில் இத்தகைய விபத்தில் 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது போன்ற விபத்து செய்திகளை வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்கிறது நிர்வாகம்.

மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட, நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்படும் இடத்தில் காண்டிராக்ட் நிறுவனம் மூலமாக சுமார் 600 தொழிலாளர்களை அமர்த்தியுள்ளது. உதாரணமாக, மெட்ரோ ரயில் ஓட்டும் நிரந்தர தொழிலாளியின் மாதச் சம்பளம் ரூ 35,000 என்றால் அதே இடத்தில் அமர்த்தப்படும் காண்டிராக்ட் தொழிலாளிக்கு வெறும் ரூ 12,000 மட்டுமே ஊதியமாக கொடுக்கப்படுகிறது.

ஆனால், மெட்ரோ ரயில் நிறுவனமோ காண்டிராக்ட் எடுத்திருக்கும் மெம்கோ என்ற நிறுவனத்துக்கு சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ரூ 28,000 வரை கொடுக்கிறது. வித்தியாசத்தை காண்டிராக்டர் மெம்கோவும் (ஜப்பானிய மிட்சுபிஷியின் கிளை நிறுவனம்), காண்டிராக்ட் விட்ட மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகளும் விழுங்கி விடுகிறார்கள்.

ரயில் பெட்டியை சப்ளை செய்வது அல்ஸ்டோம் நிறுவனம், திட்டப்பணிக்கு கடன் கொடுத்து வட்டியுடன் வசூலிப்பது ஜப்பான் நிதி நிறுவனம், சுரங்கம் குடையும் வேலைக்கான காண்டிராக்ட் ரசிய நிறுவனத்துக்கு, சிக்னலிங் கருவிகளை விற்பது சீமன்ஸ், ரயில் தண்டவாளம் தயாரித்து அளிப்பது சோமா, அல்ஸ்டோம் போன்ற நிறுவனங்கள் என்று திட்டச் செலவான ரூ 20,000 கோடியில் (இத்துடன் வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்ட்ரல் வரையிலான பாதைக்கு கூடுதலாக ரூ 5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது) பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் குளிர குளிர குளித்து விட்டிருக்கின்றனர்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பளுதூக்கியில் ஏற்பட்ட மின்விபத்து காரணமாக படுகாயமுற்ற உமாபதி சங்கம் லால்.

ரயில் நிலையங்களையும், சுரங்கங்களையும், உயர்த்தப்பட்ட பாதைகளையும் தமது கைகளால் கட்டி எழுப்புவதற்கு காண்டிராக்டர்கள் மூலம் வட மாநில தொழிலாளர்களை அமர்த்தி குறைந்த பட்ச கூலி கொடுத்து (8 மணி நேரத்துக்கு ரூ 160, 4 மணி நேர ஓவர் டைமுக்கு ரூ 80 = ஒரு நாளைக்கு ரூ 240 சம்பளம்), வேலை வாங்கியது இந்த சர்வதேச தரத்திலான மெட்ரோ ரயில் திட்டம். இப்போதோ, மெட்ரோ ரயிலை இயக்கும் தொழில்நுட்ப ஊழியர்களையும் காண்டிராக்ட் முறையில் அமர்த்தி சொற்ப கூலியில் வேலை வாங்குகிறது நிர்வாகம்.

சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் ! வினவு கட்டுரை இணைப்பு

பன்னாட்டு கார்ப்பரேட் விற்கும் பொருளுக்கு சர்வதேச விலை, தொழிலாளர்களுக்கு இந்தியக் கூலி, தரகு வேலை பார்க்கும் இந்திய முதலாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுக்கித் தின்ன வாய்ப்பு – இதுதான் சர்வதேச தரத்தின் பொருள்.

ஆனால், இதனால் சென்னையின் உழைக்கும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.  சர்வதேச தரம் என்றால் அதில் அழுக்கான உழைக்கும் மக்கள் வரக்கூடாது என்பது இந்த கனவான்களின் விதி. எனவேதான், சென்னை மெட்ரோ ரயிலில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏர்போர்ட் போக ரூ 50 கட்டணம், பச்சையப்பன் கல்லூரியிலிருந்து போக வேண்டுமானால் ரூ 60 கட்டணம். இவ்வாறு உழைக்கும் மக்களுக்கு எட்டா கனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரூ 25,000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகால், வெள்ளைச் சட்டை கனவான்களின் போலி கவுரவத்துக்கு இரை போடும் அளவில் மட்டும் உள்ளது; மக்கள் பயன்பாடு இல்லாமல் காத்தாடுகிறது. எனவே, தவிர்க்க இயலாமல் வருமானம் குறைவாகவே உள்ளது.

ரூ 25,000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகால், வெள்ளைச் சட்டை கனவான்களின் போலி கவுரவத்துக்கு இரை போடும் அளவில் மட்டும் உள்ளது; மக்கள் பயன்பாடு இல்லாமல் காத்தாடுகிறது.

இதையே காரணம் காட்டி செலவுக் குறைப்பு என்று தொழிலாளர்களின் வருவாயில் கைவைக்கிறது நிர்வாகம். நிரந்த ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்க வேண்டிய 15% ஊதிய உயர்வை 10% ஆகக் குறைத்து, இதுவரை வழங்கப்பட்டு வந்த பல்வேறு படிகளை முன் தேதியிட்டு ரத்து செய்திருக்கின்றது. மேலும், வருடாந்திர பயண படி, மகப்பேறுக்கான தந்தை விடுப்பு ஆகியவற்றையும் வாய்மொழியாக ரத்து செய்திருக்கிறது நிர்வாகம்.

இதை எதிர்த்து போராடும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சென்னை குறளகம் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழில் தாவா தாக்கல் செய்துள்ளனர். வேலைக்கு கூட பாதிப்பு வராமல் சொந்த நேரத்தில் போராடி வரும் ஊழியர்களை நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்துகிறது நிர்வாகம்.

என்ன ஆனாலும் சரி, வேலையே போவதாக மிரட்டினாலும் சரி, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக உள்ளனர் தொழிலாளர்கள். அவர்கள், காண்டிராக்ட் தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு, கட்டுமான தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட்டு போராடுவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயில் செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் எழுந்து நிற்கும் மெட்ரோ ரயில் கட்டமைப்பை பாதுகாத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மீட்டெடுக்க முடியும்.

அவ்வாறு மக்கள் நலனுக்கான கட்டமைப்பாக மெட்ரோ ரயிலை மாற்றுவதன் மூலம் அதன் தொழிலாளர்கள்  தங்களது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

  • குமார்

புதிய தொழிலாளி ஜூலை 2018 இதழ்
நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க