அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்!

வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நல நடவடிக்கைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.

டந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டமானது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஏப்ரல் 27-அன்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

அதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, பணிக்கொடை பதவி உயர்வு அளிப்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவற்றில் முக்கியமான கோரிக்கையாக 10 குழந்தைகளுக்கு குறைவாக இயங்ககூடிய அங்கன்வாடி மையங்களை மினி மையங்களாக மாற்றுவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவான மினி அங்கன்வாடி மையங்களை பிரதான அங்கன்வாடி மையங்களுடன் இணைப்பதையும் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்பது தான்.


படிக்க: பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!


மேலும் பணியாளா்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 அங்கன்வாடி மையங்கள் ஒதுக்குவதை தவிா்த்து காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் ஏற்கனவே பணியில் இருக்கும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாட்டில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் தொடங்கி ஆரம்பக் கால கல்வி கற்பதற்கான சூழ்நிலை வரையிலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது குழந்தைகளின் வருகையை பொறுத்து அங்கன்வாடி மையங்களை இயக்கலாமா?வேண்டாமா? அல்லது குறைவான குழந்தைகளுடன் இயங்கக்கூடியதை பிரதான அங்கன்வாடி மையங்களுடன் இணைக்கலாம் என்று அரசு கருதுவது மக்களுக்கு பயன்படக்கூடிய அங்கன்வாடி மையங்களை ஒழித்துகட்டும் முதற்படியே.

திட்டமிட்டு குழந்தை அங்கன்வாடி மையங்களை இயக்க தனியாருக்கு அனுமதியளித்துவிட்டு, அரசு-அங்கன்வாடிகளை மேம்படுத்தாது பராமரிக்காது சீரழித்துள்ளது அரசு. இதற்கு துணைப்போன அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இன்று அங்கன்வாடி மையங்களை பற்றி கவலைப்படுபவர்களா?


படிக்க: மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!


இவர்களின் ஒரே நோக்கம் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துவது என்ற பெயரில் ஒழித்து கட்டுவது. அதன் தொடர்ச்சிதான் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைப்பது, போதுமான நிதியை ஒதுக்காதது, பணியாளர்களை நிரந்தரம் செய்யாதது, காலி பணியிடங்களை நிரப்பாதது. இவையெல்லாம் திட்டமிட்டு அரசாங்கத்தால் அமல்படுத்தப்படுகிறது.

இது எதுவும் அறிவாலயத்திற்கு தெரியாமல் அல்ல. வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நல நடவடிக்கைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.

எனவே போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் இதனை புரிந்துகொண்டு தங்கள் போராட்ட வடிவங்களை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில், அதிகாரிகளின் தற்காலிக வாக்குறுதியை ஏற்றுதான் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்பு கூட இவர்களின் போராட்டமானது நடைபெற்றது. இதே போக்குதான் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. எனவே, அரசின் காதில் தொழிலாளர்களின் குரல் கேட்க வேண்டுமென்றால், கேட்க வைக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க