மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!

25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.

0

காராஷ்டிரா மாநிலத்தில் அங்கன்வாடி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தினால் வாழ்க்கை நடத்த முடியாமல் போராடி வருகின்றனர். ஊதிய உயர்வுக்காகவும், அரசு ஊழியர் அங்கீகாரம் வழங்கக் கோரியும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் அங்கன்வாடி பணியாளர்களாக பணிபுரியும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களில் மிட்காரியும் ஒருவர். “எங்களுக்கு தகுந்த ஊதியம், எரிபொருள் கொடுப்பனவு தேவை. அரசு எங்களை முழுநேர அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும்” என்று மிட்காரி கூறினார்.

பணியில் 21 ஆண்டுகளுக்கு முன்பு காந்தா மிட்காரி பணியில் சேரும் போது வயது 30, அப்போது அவரது கணவர் அவரை விட்டு பிரிந்தார். அசையும் அல்லது அசையா சொத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில் கைக்குழந்தையுடன், மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள மந்தா தாலுகாவில் உள்ள மையங்களில் ஒன்றில் அங்கன்வாடி ஊழியராக வேலை செய்ய மிட்காரி முடிவு செய்தார்.

அவர் வேலையில் சேரும்போது அவரது சம்பளம் மாதம் ரூ.700 ஆக இருந்தது. 21 வருடங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்த வேலை இன்று மாதம் ரூ.8,500 ஆக உயர்ந்துள்ளது. 2001-இல் வாங்கி சம்பளம் போதுமானதாக இல்லை, 21 ஆண்டுகள் கழித்து 2022-இல் வாங்கும் சம்பளமும் போதுமானதாக இல்லை என்று மிட்காரி கூறுகிறார்.

படிக்க : ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!

மும்பையின் டிராம்பே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார் 49 வயதான சங்கீதா காம்ப்ளே.

காம்ப்ளே தனது சராசரி நாள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்கிறார். வேலை மதியம் 1 மணிக்கு முடிவடைய வேண்டும் என்றாலும், அவள் மாலை வரை வேலை செய்கிறார். “எனது அங்கன்வாடியில் பதிவு செய்யப்பட்ட 47 குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது எனது வேலை. குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மையத்திற்கு வருவதை உறுதி செய்வதிலிருந்து அவர்களின் அன்றாட உணவுத் தேவைகளைக் கவனித்துக்கொள்வது வரை, நானும் எனது உதவியாளரும் ஒவ்வொரு நாளும் மதியம் வரை இருக்கிறோம். இது முடிந்ததும், ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எங்களின் தினசரி வேலைகள் அனைத்தையும் நாங்கள் கவனித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் – இது மிகவும் சிறிய குழந்தைகள் நிறைந்த மையத்தை கையாளும் போது செய்ய முடியாத ஒன்று” என்கிறார் காம்ப்ளே.

காம்ப்ளே அங்கன்வாடி ஊழியராக வேலைக்குச் சென்றபோது, ​​அவருக்கும் மிகக் குறைந்த சம்பளம் ரூ.900 வழங்கப்பட்டுள்ளது. இன்று அது ரூ.8,500 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பணம் மும்பை போன்ற நகரங்களில் உயிர்வாழ போதாது என்கிறார்.

பெரும்பாலான மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்கள் வாடகை இடத்தில் செயல்படுகின்றன. ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.750 ஊதியமாக அரசு வழங்குகிறது. காம்ப்ளே கூறுகையில், சமூக இடங்கள் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு சிறிய கிராமத்தில் பணம் போதுமானதாக இருந்தாலும், ஒரு மெட்ரோ நகரத்தில் ஒரு மையத்தை நடத்துவதற்கு அது போதுமானதாக இல்லை. இந்த வாடகைத் தொகையும் பல மாதங்களாகத் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்கிறார் காம்ப்ளே. “கடந்த எட்டு மாதங்களாக வாடகைப் பணத்தை எனக்கு திருப்பிக் கொடுக்கக் காத்திருக்கிறேன். கடந்த ஆண்டு, பணத்தைத் திருப்பிச் செலுத்த ஒரு வருடத்திற்கு மேல் ஆனது” என்று காம்ப்ளே கூறுகிறார்.

மற்றொரு அங்கன்வாடி பணியாளரான சஜேதா சையத், வாடகை செலவுகளுடன், மாதாந்திர எரிபொருள் செலவையும் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். “மே மாதத்தில் இருந்து உணவு சமைத்த நான்கு கேஸ் சிலிண்டர்கள் தீர்ந்துவிட்டன. ஒவ்வொன்றும் ரூ.1,100. ஆனால் இந்த பணத்தை அரசு இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஓய்வு பெற்றாலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. 75,000 ரூபாய் அல்லது 1,00,000 ரூபாய் அவர்களின் பதவிக்காலத்தைப் பொறுத்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த பணம், ஜல்னாவில் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என்று சையத் கூறுகிறார்.

படிக்க : அங்கன்வாடி தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !

“நீங்கள் எந்த ஐசிடிஎஸ் மையத்திற்குச் சென்றாலும், குறைந்தபட்சம் 5-6 ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் தங்கள் ஓய்வு ஊதியத்திற்காக உயர் அதிகாரிகளைச் சந்திக்க வரிசையில் நிற்பதைக் காணலாம். 25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.

இந்த போராட்டம் ஒரு மாதமாக நீடித்து வரும் நிலையில், மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் காத்திருக்க அங்கன்வாடி பணியாளர்கள் நடவடிக்கை குழு (AWAC) முடிவு செய்துள்ளது. “நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். போராட்டத்தைத் தொடருவோம்” என்று காம்ப்ளே கூறினார்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பெண்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள் வாழ்வு மேம்படத்தான் அங்கன்வாடி பணி வழங்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால் அங்கன்வாடியில் பணிபுரியும் பெண்களுக்கு தனது வாழ்கை தேவையை கூட பூர்த்தி செய்யமுடியாத அளவு மிகவும் சொற்பமான சம்பளத்தையே ஊதியமாக பெறுகிறார்கள். வயதான பணியாளர்களுக்கான ஒய்வுதியமும் முறையாக வழங்குவதில்லை. அதை வாங்க அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

தொடர்ந்து மகாராஷ்டிர அரசால் வஞ்சிக்கப்பட்டுவரும் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் போராட்டங்களை உழைக்கும் மக்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டியது அவசியமாகிறது.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க