அரியானா அங்கன்வாடி தொழிலாளர்கள் மிகவும் குறைவான ஊதியங்களை மட்டுமே பெறுபவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் ஊதிய உயர்வு கொடுக்காமல் துரோகமிழைப்பது அரசின் வாடிக்கையாகிவிட்டது.
அரியானா அரசு மற்றும் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் நீண்டகாலம் நிலுவையாக உள்ள ஊதியத்தை செலுத்த வேண்டும் என கோரி குருகிராமில் உள்ள விகாஸ் சதனுக்கு வெளியே நூற்றுக்கணக்கான அங்கன்வாடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 29, 2021 அன்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அங்கன்வாடி தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்தில் மாதாந்திர மதிப்பூதியம் (தொழில் பணிகளுக்காக மனமுவந்து கொடுக்கப்படும் ஊதியம்) அதிகரிக்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு (2019-20 மற்றும் 2020-21) நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றும் அனைத்து அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதத் தொகையும் வழங்கப்படவில்லை.
அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான அங்கன்வாடி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும், தற்போது தனது சொந்த வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்குவதாகவும், அரியானா அரசு பணி நீக்கம் நோட்டீஸ் மூலம் தொழிலாளர்களை அச்சுருத்துவதாகவும், அவர்களின் போராட்டங்களை அரசுப் பணிகளில் தடையாக கூறுவதாகவும் அரியானா அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கன்வீனர் பபிதா கூறினார்.
ஜனவரி 21 அன்று 43 வயதான கிருஷ்ணா யாதவ், குர்கான் மாவட்ட திட்ட அலுவலகமான ஐசிடிஎஸ்-ல் இருந்து தனது பணி நீக்கக் கடிதத்தைப் பெற்றார். 16 ஆண்டுகளாக ஐசிடிஎஸ் ஊழியராக பணியாற்றிய யாதவ் போராட்டங்களில் பங்கேற்று பணிநீக்கம் செய்யப்பட்ட மற்ற 50 பெண்களைப் போல தானும் குறிவைக்கப்பட்டதாக கூறுகிறார்.
“நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை கோரும்போது நாங்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்றும் ஒரு திட்டத்தின் கீழ் மட்டுமே வேலை செய்கிறோம் என்றும் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் எங்கள் கல்வி புரிதலுக்கு அப்பாற்பட்ட வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறோம். டேட்டா என்ட்ரி, எக்செல் ஷீட் ஆவணங்களை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பல ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவு சேகரிப்பு, துப்புரவு ஆய்வுகள், அஞ்சல் திட்ட விழிப்புணர்வு மற்றும் சமீபத்தில் கோவிட்-19 நிவாரணம் மற்றும் தடுப்பூசி உதவி ஆகியவற்றில் பல அங்கன்வாடி ஊழியர்கள் அரசாங்கத்திற்கு வேலை செய்தார்கள்.
நாங்கள் அரசு ஊழியர்கள் பெறும் சலுகைகளை பெறவில்லை. மிகக் குறைந்த மதிப்பூதியம் தான் பெறுகிறோம். ஆனால் வேலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது அரசின் அடக்குமுறை. அரியானா அங்கன்வாடி தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.12,000 மற்றும் ரூ.6000 மதிப்புள்ள ஊதியங்களை மட்டுமே பெறுபவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு துரோகம் செய்வது அரசின் வாடிக்கையாகிவிட்டது” என்று யாதவ் கூறினார்.
அரியானா அங்கன்வாடி தொழிலாளர்கள் சங்கத்தில் தலைவர் சரஸ்வதி, “2018-ம் ஆண்டில் மாநில முதல்வர் மனோகர் லால் மற்றும் பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் தங்களில் ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்தனர். ஆனால், இருவரும் தற்போது பின்வாங்கிவிட்டனர்” என்றார்.
அங்கன்வாடி தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என்றும், ஐசிடிஎஸ் திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்கள் என்பதால் அவர்கள் மதிப்பூதியம் (தொழில் பணிகளுக்காக மனமுவந்து கொடுக்கப்படும் ஊதியம்) மட்டுமே பெற முடியும் என்றும் அரசு கூறுகிறது.
தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே வழங்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு அங்கன்வாடி தொழிலாளர்களும் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அங்கன்வாடி தொழிலாளர்களை சுரண்டி கொழுக்கும் ஒன்றிய மாநில அரசுகள் அவர்களை மிகவும் இழிவாக நடத்துகிறது என்பதற்கு தொகுப்பூதியம் உயர்த்த முடியாது என்ற திமிரான நடைமுறையே நமக்கு உணர்த்துகிறது. அங்கன்வாடி தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கவும், அவர்களின் ஊதியம் உயர்த்தப்படவும் நாட்டின் உழைக்கும் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.