ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!

அங்கன்வாடி ஊழியர்கள் நாள் முழுவதும் வேலை செய்தாலும் மாதம் ரூ. 7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அரசுக்கு சுமார் 100 கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை!

0

டிசா மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்று (22.11.2022) 60,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு கோரியும் அரசு ஊழியராக தகுதி வழங்கக் கோரியும் அவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தலைநகர் புவனேஸ்வரில் நேற்று (21.11.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, அம்மாநில சட்டசபையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியராக மாற்றப்படுவதுடன், அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை ரூ.18,000 ஆகவும் உதவியாளர்களின் ஊதியத்தை ரூ.9,000 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

“ரூ.5,000 ஓய்வூதியம் என்ற எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால், வேலைநிறுத்தம் தொடரும்” என்று அனைத்து ஒடிசா அங்கன்வாடி பெண் ஊழியர்கள் சங்கத்தின் (All Odisha Anganwadi Lady Workers) தலைவர் சுமித்ரா மொஹாபத்ரா கூறியுள்ளார்.

பணிக்காலத்தின் போது உயிரிழந்த அங்கன்வாடி ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்துப் பேட்டியளித்த அனைத்து ஒடிசா அங்கன்வாடி பெண்கள் சங்கத்தின் செயலாளர் ஜுனுபாமா சத்பதி, “இன்று இரண்டாவது நாள். போராட்டத்தின் முதல் நாளான நேற்று 50,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்று 500-க்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம். இதேபோல 314 வட்டாரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அங்குள்ள வட்டார அலுவலகங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்று கூறினார்.

மாநில அரசின் முன்னோடித் திட்டங்களான மமதா யோஜனா மற்றும் ஹரிஸ்சந்திரா யோஜனா போன்றவை அங்கன்வாடி ஊழியர்களால்தான் வெற்றியடைந்தன என்றும் அவர்கள் கூறினர். இருப்பினும் தங்கள் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிருப்தியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.


படிக்க: அங்கன்வாடி தொழிலாளர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !


அங்கன்வாடி ஊழியர்கள் நாள் முழுவதும் வேலை செய்தாலும் அவர்களுக்கு மாதம் ரூ.7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது என்று மொஹாபத்ரா குற்றம் சாட்டினார்.

அகில பாரதிய அங்கன்வாடி மகா சங்கத்தின் அமைப்பு செயலாளர் அஞ்சலி படேல், “எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசுக்கு சுமார் 100 கடிதங்கள் எழுதியுள்ளோம். ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக, அரசாங்கம் எங்களை அவமதிக்கும் விதமாக எங்களின் பணிச்சுமையை கூட்டியுள்ளது. அரசுக்கு 15 நாள் நோட்டீஸ் கொடுத்த பின்பு தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறினார்.

இப்போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பசந்தி ஹெம்ப்ராம் (Basanti Hembram), “மாநில அரசு அங்கன்வாடி ஊழியர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளது. அவர்களின் ஊதியமானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பகிர்வு அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போதைய கோரிக்கைகள் குறித்து ஒடிசா அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும்” என்று கூறினார்.

ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி உட்பட நாடு முழுவதிலும் அங்கன்வாடி ஊழியர்கள் வஞ்சிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க