பெங்களூரில் உள்ள ஸ்விகி டெலிவரி தொழிலாளர்கள் ஜூலை 21 முதல் வேலைக்கேற்ற ஊதியம் மற்றும் ‘வெளிப்புற டெலிவரிகளுக்கு’ ஊக்கத்தொகை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு முழுவதும் பல்வேறு டெலிவரி தொழிலாளர் சங்கங்களால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் போராட்டத்தை கைவிட்ட நிலையில், டெலிவரி பாய்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் ஏற்பாடு செய்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெலிவரி தொழிலாளர்கள் தங்கள் டெலிவரி அலுவலகத்தில் இருந்து வெளியேறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலையான ஊதியத் திட்டம் எதுவும் இல்லை என்றும், நீண்ட தூரம் பயணம் செய்தாலும் சொற்பத் தொகைதான் கிடைக்கிறது என்றும் டெலிவரி தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டெலிவரி தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.40 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தினமும் ரூ.300 முதல் ரூ.400 வரை பெட்ரோல் போடுவதற்கே செலவாகி விடுகிறது. மீதி பணம் எங்களுக்கு பற்றாகுறையாகவே இருக்கிறது. முன்பெல்லாம் 70-80 கிலோமீட்டர் பயணம் செய்வதன் மூலம் எங்கள் தினசரி இலக்குகளை அடைந்துவிடுவோம். ஆனால் இப்போது அது 140-180 கிலோமீட்டர் வரை ஓட்டினால் தான் எங்கள் இலக்குகளை அடைய முடிகிறது” என்று ஐந்து ஆண்டுகளாக ஸ்விகி நிறுவனத்தில் டெலிவரி தொழிலாளியாக வேலை செய்யும் நாகபூஷன் கூறினார்.
படிக்க : தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
ஒரு வருடமாக பணிபுரியும் மற்றொரு ஸ்விகி டெலிவரி தொழிலாளி சிவக்குமார் கூறுகையில், “ஸ்விகி மிகக் குறைவான ஆடர்களை மட்டுமே பெறுகிறது போலும். ஏனெனில் எங்களுக்கு ஆடர்களையே வழங்குவதில்லை. நாங்கள் நகரின் எங்கள் எல்லைக்கு வெளியே சென்றாலும், அந்த ஆர்டர்கள் Shadowfax அல்லது Rapido-க்கு சென்றுவிடுகிறது. ஆர்டர்கள் அதிகமாக வரும் பட்சத்தில், 1-2 மணி நேரம் காத்திருந்தும் எங்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் இறுதியாக நகரின் வெளியே ஆர்டர்களை தேடிச் செல்லும்போது, அவர்கள் எங்களுக்கு மிகக் குறைவாகவே பணம் செலுத்துகிறார்கள். நான் எப்படி இவ்வளவு தூரம் சொற்ப பணத்திற்காக பெட்ரோல் செலவழித்து செல்ல முடியும்? பெட்ரோலுக்கு 300 ரூபாய் செலவழிக்கிறோம், இன்னும் 500 ரூபாய்தான் மிச்சம். இந்த சொற்ப கூலியை வைத்து என்ன செய்வது?” என்று கூறினார்.
‘நகரின் வெளியே’ உள்ள பகுதிகள் என்பது டெலிவரி தொழிலாளர்களால் அவர்களது பணிப் பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளாகும்.
அனைத்து ஆர்டர்களுக்கும் அடிப்படை ஊதியம் ரூ.35 மற்றும் நீண்ட காத்திருப்பு நேரத்திற்கான கூடுதல் கட்டணம் மற்றும் வாடிக்கையாளர் அதிகம் ஆடர் செய்யும் இடம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றும், ஆர்டர் ஒரு மைலுக்குள்ளாக இருந்தாலும், ஒரு மைலுக்கான தொகையை வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் மற்றும் கடைசி மைல் உட்பட எட்டு கிலோமீட்டருக்கு மேல் உள்ள ஆர்டர்களுக்கு கூடுதலாக ரூ.12 செலுத்த வேண்டும் என்பது வேறு சில கோரிக்கைகள்.
மேலும், மாதாந்திர போனஸ் மற்றும் வாராந்திர பெட்ரோல் கொடுப்பனவை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் (இஎஸ்ஐ) மற்றும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) சலுகைகளுடன் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு அடிப்படை ஊதியத்தை ரூ.40 ஆக உயர்த்தவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்விகியுடன் தொடர்புடைய போதுமான தொழிலாளர்கள் இருந்தபோதிலும், அந்நிறுவனம் தனது ஆர்டர்களை Shadowfax மற்றும் Rapido ஆகிய நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறது என்று டெலிவரி தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
Shadowfax என்பது பல்வேறு வணிகங்களுக்கு தளவாட மற்றும் விநியோக சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். அதே நேரத்தில் Rapido ஒரு பைக் டாக்ஸி பயன்பாடாகும்.
படிக்க : சாதி ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் டெலிவரி தொழிலாளர்கள் !
ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தியும், ஸ்விகி நிறுவனம் தங்களை சந்திக்கவில்லை என்றும், தங்களது கோரிக்கைகள் நேரில் விவாதிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினர்.
கிக் பொருளாதாரத்தின் கீழ் இயங்கும் ஸ்விகி, சொமாடோ, ரேபிடோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பை சிந்தாமல் சிதறாமல் சுரண்டி கொழுத்து வருகிறது. ஆனால் தனக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலனை பற்றி இந்நிறுவனங்கள் கடுகளவும் சிந்திக்கப்போவதில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கி தருகிறேன் என்ற சொன்ன மோடி அரசு, பக்கோடா விற்பது கூட வேலைதான் என்று அலட்சியமான பதிலை கூறியது. தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் இந்த ஆன்லைன் நிறுவனங்களில் நவீன கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர் பட்டதாரி இளைஞர்கள். இக்கொத்தடிமைகள் (டெலிவரி தொழிலாளர்கள்) தங்களின் தொழிலாளர் உரிமைக்காக போராட அனைவரும் புரட்சிகர சங்கமாக ஒன்றிணைவது அவசியம்.
புகழ்