சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!

பல்வேறு துறைகளின் உள்ள மானியங்களையும் சலுகைகளையும் குறைத்துள்ள மோடி அரசு, நம்மிடமிருந்து வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்துவிட்டு நம்மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது.

0

2019-20-ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்களின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.பி., எம்.பத்ருதீன் அஜ்மலின், சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்ட மத்திய திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட நிதி மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை ஆகிய புள்ளிவிபரங்களை கேட்டு கேள்வி எழுப்பினார்.

கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், முஸ்லீம்கள், பார்சிகள் மற்றும் ஜைனர்கள் என ஆறு மையமாக அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. “பல்வேறு திட்டங்களுக்கான உடல் மற்றும் நிதி சாதனைகள்” என்ற பிரிவின் கீழ் உள்ள விவரங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடுகள் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

மெட்ரிக் உதவித்தொகைக்கான பயனாளிகளின் எண்ணிக்கை 2019-20-ல் 7.43 லட்சத்தில் இருந்து 2021-22ல் 7.14 லட்சமாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நிதியும் ரூ.482.65 கோடியிலிருந்து ரூ.465.73 கோடியாக குறைந்துள்ளது.


படிக்க : சர்க்கரை மானியத்தை நிறுத்து : உத்தரவிடும் உலக வர்த்தகக் கழகம் !


இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிஎச்டி வரையிலான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற, பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையும் 2019-20ல் 1,251 ஆக இருந்து 2021-22ல் 1,075 ஆக குறைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட நிதி இரண்டு ஆண்டு காலத்தில் ரூ.100 கோடியிலிருந்து ரூ.74 கோடியாகக் குறைந்தது.

‘நயா சவேரா’ பெல்லோஷிப் திட்டத்தில், 2019-20ல் 9,580 ஆக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை 2021-22ல் 5,140 ஆகக் குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் குடும்ப வருமானம் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் – 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண் மாணவர்களுக்கு மட்டுமே – கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு ரூ.165.20 கோடியிலிருந்து ரூ.91.60 கோடியாகக் குறைந்துள்ளது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 2019-20ல் 2.95 லட்சத்தில் இருந்து 2021-22ல் 1.65 லட்சமாக குறைந்துள்ளது.

‘சீகோ அவுர் கமாவோ,’ யுஎஸ்டிடிஏடி, ‘ஹமாரி தரோஹர்,’ ‘நை ரோஷ்னி’ மற்றும் ‘நை மன்சில்’ ஆகிய ஐந்து வேலைவாய்ப்புத் திட்டங்கள், ‘பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன்’ (PM VIKAS 2022-23) என்ற ஒரே திட்டத்தில் இணைக்கப்பட்டன.

‘நை மன்சில்’ திட்டத்தின் கீழ், 2019-20ல் 22,359 ஆக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, 2021-22ல் 5,312 ஆக வெகுவாகக் குறைந்துள்ளது.

ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின் கீழ் – இது 9-ஆம் வகுப்பு முதல் பிஎச்டி வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதில், 2019-20ல் ரூ.1,424.56 கோடியாக இருந்த நிதி 2021-22ல் ரூ.1,329.17 கோடியாக குறைக்கப்பட்டது.

இதேபோல், யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி மற்றும் பிஎஸ்சி தேர்வில் பங்கேற்கும் சிறுபான்மை மாணவர்களை ஆதரிக்கும் ‘நை உதான்’ திட்டத்தில், 2019-20ல் ரூ.8.01 கோடியாக இருந்த நிதி, 2021-22ல் ரூ.7.97 கோடியாகக் குறைந்தது.


படிக்க : பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்டக் குட்ட குனியாதே !


மேல்கூறிய அனைத்து புள்ளிவிபரங்களும் மத்திய அமைச்சர் ஸ்மிதி ராணி கூறிய ஒப்புதல் வாக்குமூலங்கள். நாடுமுழுவதும் மோடி அரசு சிறுபான்மை மக்களுக்கான மானியங்களை குறைத்து அவர்களை வஞ்சித்து வருகிறது என்பதே இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி. இந்த துறையில் மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இதுதான் கதி.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு துவங்கி, அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி வரை உழைக்கும் மக்களை சுரண்டி வருகிறது பாசிச மோடி அரசு. பல்வேறு துறைகளின் உள்ள மானியங்களையும் சலுகைகளையும் குறைத்துள்ள மோடி அரசு, நம்மிடமிருந்து வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்துவிட்டு நம்மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசை உழைக்கும் மக்களை ஒண்றினைந்து வீழ்த்துவதே நம்முன் இருக்கும் முதன்மை பணி.


கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க