பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்டக் குட்ட குனியாதே !

மோடி அரசு பின்பற்றிவரும் இந்த கார்ப்பரேட் கொள்கைகளால், இலங்கை, ஆப்கானிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர், மார்ச் 22-ம் தேதி முதல் பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. சென்ற மாதம் இறுதி நாளான 31-ம் தேதியோடு, மொத்தம் பத்து நாட்களில் ஒன்பதுமுறை விலை உயர்ந்துவிட்டது.
31-ம் தேதிவரை சென்னை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.5 காசுகளும், டீசல் விலை ரூ.6.9 காசுகளும் உயர்ந்துள்ளன. இனியும் இவ்வாறே விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்க முடிகிறது. சுமார் ரூ.20 வரை உயரும் என்று ஊடக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை கடந்த மாதம் 22-ம் தேதி ஒரே நாளில் ரூ.50-யும், வணிக எரிவாயு உருளை விலை இம்மாதம் முதல் நாளான ஏப்ரல் 1-ம் தேதி, ஒரே நாளில் ரூ.250-யும் உயர்த்தப்பட்டுள்ளது. மோடி பதவி ஏற்றதிலிருந்து தற்போது வரை ரூ.540 வரை சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்துள்ளதாக கே.எஸ். அழகிரி கூறுகிறார்.

படிக்க :

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !

சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?

உக்ரைன் – இரசியா இடையிலான போர் காரணமாக, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதே பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கான காரணமாக மோடி அரசு கூறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதியே போர் தொடங்கிவிட்டது; ஆனால், தேர்தல் காரணமாக 137 நாட்களாக விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் தன் குரூர புத்தியைக் காட்டிவிட்டது மோடி அரசு.
ஏழை எளிய மக்களைப் பொருத்தவரை, அதிகரித்துவரும் இந்த விலை உயர்வு பெரும் தாக்குதலாகவே அமையும். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட கூலி ஏழை மக்களை இது பெரிய அளவில் பாதிக்கும். டீசல் விலையுயர்வு காரணமாக பல சரக்கு லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் பேருந்துப் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், அதாவது ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு முன்பு, ‘பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய அரசின் வரியைக் குறைத்துவிட்டோம்’ என தம்பட்டம் அடித்தார்கள் பா.ஜ.க.வினர். ஆனால், வரிக் குறைப்புக்கு பின்பு கூட அரசு வசூலிக்கும் மொத்த வரிவிகிதம் சராசரியாக பெட்ரோல் விலையில் 50 சதவிகிதமும், டீசல் விலையில் 40 சதவிகிதமும் இருந்தன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றத்திற்கு ஏற்ப, இந்த வரி விகிதத்தைக் குறைத்துக் கொண்டால் கூட எரிபொருட்களின் விலை இவ்வாறு உயருவதைத் தடுத்து சீராக வைத்திருக்க முடியும். ஆனால், முதலாளிகளுக்கு சலுகை காட்டக் கூடிய மோடி அரசு, சாமானிய மக்களுக்கு கருணை காட்டப் போவதில்லை.
‘வரி’ என்ற பெயரில் மக்களை ஒட்டச் சுரண்டி கொள்ளையடிக்கும் நிதி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வரிச்சலுகை, வாராக்கடன் தள்ளுபடி, மூலதனக்கடன் என்ற பெயர்களில் வாரியிறைக்கப்பட இருக்கிறது. இப்படி சமூகத்தில் ஒருபக்கம் தரித்திர நிலையையும் மற்றொரு பக்கம் சொர்க்கப் புரியையும் உருவாக்கி வருகிறது மோடி அரசு.
மோடி அரசு பின்பற்றிவரும் இந்த கார்ப்பரேட் கொள்கைகளால், இலங்கை, ஆப்கானிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலால் கிளப்பிவிடப்படும் பொய்ப் பிரச்சாரங்கள், மதவெறிக் கலவரங்கள் ஆகியவை நமது பிரச்சினைகளிலிருந்து நம்மையே திசைதிருப்புகிறது. விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வேண்டிய உழைக்கும் மக்கள், “இலாவண்யாவை மதமாற்றம் செய்திருக்க வாய்ப்பிருக்கிறதா, இந்தமுறை சிவராத்திரிக்கு என்ன விசேசம், முசுலீம் மாணவிகள் ஹிஜாப் அணிவது சரியா” என்று பேசிக் கொண்டிருக்கிறோம். பேச வைத்திருக்கிறார்கள் காவிகள்.

படிக்க :

பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் – டீசல் ஜி.எஸ்.டி வரி நாடகம் !

இதோ, ‘கோயில் திருவிழாக்களில் முசுலீம்களை அனுமதிக் கூடாது, முசுலீம் கடையில் கறி வாங்கக் கூடாது’ என அடுத்தடுத்த அவல்களை நமது வாயில்போட தயாராக வைத்திருக்கிறது சங்கிக் கூட்டம். மாறாக காவிக் கொடியைத் தூக்கிக் கொண்டு திரியும் எந்த காலிப்பயலும் நமது பட்டினித் திண்டாட்டத்திற்கு வழிசொல்வான் இல்லை.
இவர்களது பிரச்சாரத்திற்கு பலியாகிக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், தனது அன்றாடப் பிரச்சினைகளை எல்லாம் உணர்ந்தால் கூட வீதிக்கு வந்து உரிமைக் குரல் எழுப்பாமல், ‘தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்று கிடக்கும் போக்கு மற்றொருபுறம். குட்டக் குட்ட குனிந்துகொள்வது குட்டுபவனை மேலும் ஊக்கப்படுத்தவே செய்யும். அமைதியைக் களைத்துவிட்டு அமைப்பாய் திரண்டு போராடாமல் தீர்வில்லை மக்களே !

புதிய ஜனநாயகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க