திமுக அரசு பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை லிட்டர் ஒன்றிற்கு ரூ.3  குறைத்துள்ளது. இது ஒன்றிய அரசு மக்களின் மீது சுமத்தியிருக்கும் பெட்ரோல் வரி விதிப்பின் பொருளாதாரச் சுமையிலிருந்து ஒரு சிறு பகுதியை குறைக்க வழி வகுத்துள்ளது.
ஆனால், ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் விலையில் ஒரு பைசாக்கூட குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
ஒன்றிய – மாநில அரசுகள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் கிட்டத்தட்ட ரூ.60-ஐ வரியாக வசூலித்து வருகின்றன. இதில் பெரும்பகுதி ஒன்றிய அரசுக்குச் சென்றடைகிறது. ஒரு ஆட்டோ ஓட்டுநர் நாளொன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறார் எனில் ஒரு நாளைக்கு மட்டும் ரூ.300 கலால் வரியாகச் செலுத்துகிறார். ஒரு மாதத்திற்கோ ரூ.9000 தண்டம் கட்டுகிறார். இவருடைய மாத வருமானத்தில் 50 சதவிகிதத்தை வரியாகச் செலுத்துகிறார்.
ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து இருக்கிறது மோடி அரசு. அந்த வரியையும் ஒழுங்காகக் கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வங்கிகளில் வாங்கிய கடனையும் கட்டாமல் தள்ளுபடி பெற்று அந்நிய செலாவணி மோசடி, உள்ளிட்ட பல வழிகளில் கொள்ளையடிக்கின்றது கார்ப்பரேட் கும்பல்.
கார்ப்பரேட்களுக்கு 40 சதவிதம் வரியிலிருந்து 25 சதவிதமாக வரியை குறைந்துள்ளனர். இதில் ஏற்பட்ட 15 சதவித வரி இழப்பை, பெட்ரோல் விலையில் கலால் வரியாகத் திணித்து நமது தலையில் இடியாக இறக்கியுள்ளது ஒன்றிய அரசு.
அன்றாடங்காய்ச்சிகளிடம் இருந்து ஈவிரக்கமற்றும் கொள்ளையடிக்கும் மோடி தலைமையிலான பாசிச கும்பலிடம் வரியைக் குறைக்கச் சொல்லிக் கேட்டால், பணமில்லை, கடனிருக்கிறது எனக் கதையளக்கிறது.
படிக்க :
பெட்ரோல் டீசல் கலால் வரி – ஒரு பகற்கொள்ளை || கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசு !
பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லை – பூங்காக்களுக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கும் திமுக அரசு
எண்ணெய் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக, எரிபொருளுக்கான விலையைத் தீர்மானிக்கும் உரிமையை ஒன்றிய அரசு அவர்களிடமே அள்ளிக் கொடுத்ததால் இன்று அவர்கள் வைத்ததுதான் விலை. தமது விருப்பத்துக்கு ஏற்ப – பெரும் இலாபத்தை எடுப்பதற்கு ஏற்ப – சுத்திகரிப்புச் செலவை அளவுக்கு அதிகமாக கணக்குக் காட்டி கார்ப்பரேட்டுகள் பகல் கொள்ளையடிக்கும் வகையில் விதிமுறைகளை ஏற்கெனவே மாற்றியுள்ளது ஒன்றிய அரசு.
சுத்திகரிப்புக்கான செலவு உள்ளிட்டு அடக்க விலையாக 1 லிட்டருக்கு ரூ.10 என்று இருந்ததை படிப்படியாக இன்று ரூ.40-வரை உயர்த்தி வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றனர், தனியார் நிறுவனங்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 எனில், அதில் கார்ப்பரேட்கள் ரூ.40-ஐ விலையாகவும், ஒன்றிய – மாநில அரசுகள் ரூ.60-ஐ வரியாகவும் சுருட்டிக் கொள்கின்றன.
இந்த உண்மை நிலவரத்தை ஊத்திமூடி கச்சா எண்ணெய் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகம் போன்ற கதைகளை இதுவரை கதைத்து வந்தனர். இப்பொழுது ஒரு புதுகதையை அவிழ்த்து விட்டுகிறார் ஒன்றிய நிதி அமைச்சர் ‘நிர்மலா’!
காங்கிரஸ் அரசானது பெட்ரோல் கடன் பத்திரங்களை ரூ.1.44 லட்சம் கோடிக்கு வழங்கி, பெட்ரோல் – டீசல் விலையைக் குறைத்துக் கொண்டது. இதன் விளைவு இந்த 5 வருடத்தில் ரூ.60,000 கோடியை வட்டியாகக் கட்ட வேண்டியதாயிற்று. இந்த இழப்பை ஈடு கட்டவும், பெட்ரோல் கடனை அடைக்கவும் வேண்டியதிருப்பதால் வரியைக் குறைக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய பெட்ரோல் டீசல் வரியாக ரூ.1.80 இலட்சம் கோடி வசூலிப்பதிலிருந்து ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடியை வருடா வருடம் திருப்பிச் செலுத்தியிருந்தால் கூட வட்டியோடு கடனையும் அடைத்திருக்க முடியும். உண்மைநிலை இப்படி இருக்கும்போது வட்டியும் கொடுத்து கடனையும் அடைக்க வேண்டியதிருப்பதால்தான் வரியைக்குறைக்க முடியாது என்பது எவ்வளவு வடி கட்டிய பொய் ?
வட்டி கட்டிய கடந்த 5 வருடங்களை காட்டிலும் 2020-ல் மக்களிடமிருந்து வழக்கத்தை விட 88% கூடுதலாக ரூ.3.35 இலட்சம் கோடியை வரியாக மக்களிடமிருந்து பிடுங்கியுள்ளார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனைத்துப் பெருநிறுவனங்களின் பங்கு மதிப்பும் கொரோனா ஊரடங்கைத் தாண்டி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கத்தை விட அதிகமாக வந்த வரி வருவாயைக் கொண்டாவது கடனை திருப்பி செலுத்தியிருக்கலாமே? சாதாரண சாமானியன் கூட வட்டியுள்ள கடனை தானே முதலில் அடைக்க வேண்டும் என யோசிப்பான்; அந்த அறிவுக்கூடவா இந்த ஆளும் கட்சியின் அதிகாரவர்க்க மேதைகளுக்கு இல்லை ?
அது அப்படி இல்லை. கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதில் இவர்கள் அசகாய சூரர்கள். அதற்கேற்ற வகையில் கணக்கைப் போடுவதில் இவர்கள் பெரும் பொருளாதார மேதைகள். ஆனால் பிரச்சினை இதுவல்ல.

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாது, வரியை குறைக்க முடியாது என்பதை கொரோனா செலவு, பொருளாதார மந்தம் என கதை விட்டுக்கொண்டு சமாளித்து வந்த மோடி கூட்டத்திற்கு கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் வரியைக் குறைக்க எழுப்பப்படும் கேள்வுகளுக்கு பதில் சொல்வதற்கு இது ஒரு காரணம் அவ்வளவுதான்.

யாருக்கு சேவை செய்வது ? யாருக்காக யார் மடியை அறுப்பது? என்பதுதான் இவர்கள் யாருக்கானவர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. கார்ப்பரேட் கூட்டத்தின் மடியை நிறைக்க மக்களின் மடியைத் தான் இவர்கள் அறுக்கிறார்கள் என்பதை  பெட்ரோல் டீசல் வரியில் ஒரு ஆட்டோ ஓட்டுனரிடமிருந்து இவர்கள் ஒவ்வொரு மாதமும் பிடுங்கும் பிரம்மாண்டத் தொகையிலிருந்து முடிவு செய்து கொள்ளலாம்.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க