பெட்ரோல் டீசல் கலால் வரி – ஒரு பகற்கொள்ளை

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பெட்ரோல், டீசல் பயன்பாடு மிகவும் குறைந்திருந்த சூழலிலும் ஒன்றிய அரசின் பெட்ரோல்டீசலுக்கான கலால் வரி வருவாய் கடந்த நிதியாண்டை விட 2020- 2021-ம் நிதியாண்டில் 88% உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அன்றாடம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்து கடந்த ஒருமாதமாக ரூ.100-க்கு பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், அதற்கு நிகராகவும் அதிகமாகவும் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி வந்துள்ளது மோடி அரசு.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், கலால் வரியை பெட்ரோலுக்கு ரு.13-ம் டீசலுக்கு ரூ. 16-ம் உயர்த்தி வந்தது ஒன்றிய அரசு. மீண்டும் பெட்ரோல் மீதான வரியை 65% அளவிற்கும், டீசல் மீதான வரியை 79% அளவிற்கும் உயர்த்தியது மோடி அரசு.

படிக்க :
♦ கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
♦ பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

இதன் விளைவாக, கடந்த 2019-2020-ம் ஆண்டில் டீசல் மீது விதிக்கப்பட்ட கலால்வரி ரூ. 1,12,032 கோடியாக இருந்த நிலையில், நடப்பு 2020-2021 நிதியாண்டில் அது, ரூ. 2.3 இலட்சம் கோடி ரூபாயாக கிட்டத்தட்ட இருமடங்காக – அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ. 66,279 கோடியாக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி, இந்த நிதியாண்டில் ரூ. 1 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்தனைக்கும் 2020-ம் ஆண்டில் பெரும்பகுதி முழு ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைவாகவே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு வரி வருவாயை வசூலிக்கும் மோடி அரசு, அதனை எங்கே செலவிடுகிறது என்ற கேள்விக்கு இதுவரை வெளிப்படையான பதிலை ஒன்றிய அரசு எங்கும் எப்போதும் கூறுவதுல்லை. கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக செலவிடுவதாக அவ்வப்போது சொல்லிவரும் மோடி அரசு, இந்தியா முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவது குறித்து வாய்திறக்க மறுக்கிறது.

ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது இலாபத்தில் அரசுக்கு கொடுக்கும் பங்கீட்டுத் தொகை இந்த ஆண்டு மத்திய அரசுக்குக் கிடைத்தும், நிதி போதவில்லை என்று கூறி பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அதிகரித்து மக்களிடமிருந்து பணத்தை பகல்கொள்ளையடித்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள், இலாபத்தில் இயங்கும் பிற பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றுத் தின்ன முடிவெடுத்துள்ள மோடி அரசுக்கு, அடுத்த ஆண்டில் இந்த பொதுத்துறை நிறுவனங்களின் இலாபப் பங்கீட்டுத் தொகை கிடைக்கப் போவதில்லை. அந்நிலையில், இந்த வருவாயை ஈடு செய்ய பெட்ரோல் டீசல் மீதான வரியை தொடர்ந்து உயர்த்திச் செல்லுவது ஒன்றே ஒன்றிய அரசுக்கு முன்னிருக்கும் வழி.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வாக நம் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஆகவே, எதிர்வரும் ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மட்டுமல்ல, வாழ்க்கைகான செலவுகளே இருமடங்கு அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதி !

செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

000

கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசு !

ன்றிய அரசு கடந்த ஜனவரி மாதம், பட்ஜெட் அறிவிப்பில் இந்தியா முழுவதும் உள்ள 43 கிராம வங்கிகளை, ஸ்பான்சர் வங்கிகளின் கீழ் கொண்டுவருவது மற்றும் தனியார்மயப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் அவற்றை அதிகக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்தது.

இந்தியா முழுவதும் மொத்தம் 43 மண்டல கிராமப்புற வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு தமிழகத்தில் செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி என்பது மண்டல கிராமப்புற வங்கிகளின் பிரிவில் வரும் வங்கியாகும்.

இத்தகைய மண்டல கிராமப்புற வங்கிகளுக்கு இந்தியா முழுவதும் 21,871 கிளைகள் இருக்கின்றன. இந்தியா முழுவதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் இந்த மண்டல கிராமப்புற வங்கிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. கிராமப்புற மக்கள் பெறும் கடன்களில் கிட்டத்தட்ட 90% கடன்கள், இந்த வங்கிகளில் இருந்தே பெறப்படுகின்றன.

விவசாயக் கூலிகள், சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழில் செய்பவர்கள் ஆகியோர் தான் இதில் பெரும்பாலும் பலனடைபவர்கள். கிராமப்புற தொழில்களும் பொருளாதாரமும் இந்த வங்கிகளைச் சார்ந்து கூட்டுறவு வங்கிகளைச் சார்ந்துமே நகர்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

படிக்க :
♦ பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !
♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

அத்தகைய முக்கியத்துவம் மிக்க இந்த வங்கிகளை ஸ்பான்சர் வங்கிகளின் கீழ் ஒருங்கிணைத்துக் கொண்டு வருவதன் மூலமும், தனியார்களிடம் விற்றுவிடுவது மூலமும், இவற்றை மையப்படுத்துவது மற்றும் இவற்றின் மீதான கண்காணிப்புகளை அதிகரிப்பதையும் செய்யப் போவதாக கடந்த ஜனவரி -2021 பட்ஜெட் கூட்டத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டது.

இந்த 43 வங்கிகளை இப்போதே இலாபத்தின் அடிப்படையில் மூன்று பிரிவாகப் பிரித்து, இலாபமாக இயங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பது என்றும், ஒன்றிய அரசின் பங்குகளை ஸ்பான்ஸர் வங்கிகளுக்கே கொடுத்துவிடுவது என முடிவெடுத்துள்ளது மோடி அரசு.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையானது, கிராம வங்கிகளை ஒட்டுமொத்தமாக பெரும் தனியார் வங்கிகளின் கைகளுக்குள் கொண்டு செல்லும். அப்படிச் சென்றால், இந்த வங்கிகள் அனைத்தும் இலாப நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படும். அத்தகைய சூழலில், சிறு குறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வரும் கடன்கள் எல்லாம் படிப்படியாகக் வெட்டப்பட்டு, வட்டி அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது மக்கள் நலனை பின்னுக்குத் தள்ளி, படிப்படியாக கிராம வங்கிகளை இழுத்து மூடுவதை நோக்கியே இட்டுச் செல்லும் என்பதைச் சுட்டிக் காட்டி, கிராம வங்கி ஊழியர்கள், கிராம வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ”கிராம வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்காதே ! தேசிய கிராம வங்கியை ஏற்படுத்து!” உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் மனு அளித்துப் போராடி வருகின்றனர்.

விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளின் கைகளில் விவசாயத்தை ஒப்படைக்கவே வேளாண் சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டுவந்தது. அதன் இன்னொரு பகுதியாக காலங்காலமாக விவசாயிகளுக்கு கடன் வழங்கி வந்த கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இது வெறுமனே கிராம வங்கி ஊழியர்கள் பிரச்சினை அல்ல, அனைத்து விவசயிகளின் பிர்ச்சினையாகும். உணவு உண்ணும் ஒவ்வொருவரின் பிரச்சினையுமாகும். இதனை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும்.

செய்தி ஆதாரம் : தீக்கதிர்

கர்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க