த்திய அரசு பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றப் போவதாக தெரிவித்துள்ளது. யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளைத்தான் இணைக்கப் போகிறார்கள்.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

இந்த இணைப்பு நடவடிக்கையால் அரசு வங்கிகள் வலுப்பெறும், நிர்வாகச் செலவுகள் குறையும், புதிய கிளைகள் துவங்கப்படும், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றெல்லாம் அரசாங்கம் தெரிவிக்கின்றது. இவை உண்மையா?

CP Krishnan
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தில் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன்

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தில் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அரசின் வாக்குறுதிகளை மறுப்பதோடு இந்த இணைப்பு கார்ப்பரேட்டுகளுக்கே பயனளிக்கும் என்கிறார்.

முதலில் இந்த வங்கிகளின் இணைப்பால் அடுத்த சில மாதங்களுக்கு இணைப்பு வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அன்றாட வங்கி நடைமுறை வேலைகள் பாதிக்கப்படும். மென்பொருள் இணைப்பு, மனித வள இணைப்பு, பணிமாற்றம் என்று ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சவாலான பிரச்சினைகள் இருக்கின்றன. ஏட்டில் இணைக்கப்பட்ட இணைப்பை நடைமுறையில் கொண்டு வருவதற்கு ஆயிரெத்தெட்டு சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் சாதாரண வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதற்கு கடந்த கால கசப்பான வரலாற்றுச் சான்றே உண்டு. 2017-ல் ஸ்டேட் வங்கியில் ஐந்து துணை வங்கிகளும், பாரத் மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட பிறகு 2000-த்திற்கும் மேற்பட்ட கிளைகளும் மூடப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

மேற்கண்ட செய்தி காட்டுவது என்ன? ஆறு இலட்சம் கிராமங்கள் உள்ள நமது நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் கிராமப்புற கிளைகள் சுமார் 35,000 மட்டுமே உள்ளன. தற்போதைய இணைப்பு என்பது இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்குமேயன்றி அதிகப்படுத்தாது.

படிக்க:
வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !

உண்மையில் அரசின் நோக்கம் என்ன? அரசு வங்கிகளை தனியார்மயப்படுத்துவதுதான். இதை 1991-ம் ஆண்டுமுதல் அமல்படுத்தி வருகிறார்கள். இது ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கியின் கட்டளையும் கூட. அப்படி தனியார்மயமாக்குவதற்கு காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசு வங்கிகளை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக மாற்றி அமைக்க வேண்டுமென்பது ஐ.எம்.எஃப்-ன் கட்டளை! அதைத்தான் தற்போது அமல்படுத்தி வருகிறார்கள்.

அதன் மூலம் ஓன்றிரண்டு பெரிய வங்கிகள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கடன் வழங்குவதும், வராக்கடனைத் தள்ளுபடி செய்வதும் எளிதாக இருக்கும். நேரெதிராக சாதாரண மக்களுக்கான சேவையும், கடன் வழங்கலும் அரிதாகும், குறையும்.

வராக் கடன்களைப் பொறுத்த வரை ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் சட்டத்திற்கு பயந்து வாங்கிய கடனை சரியாகத் திருப்பி விடுகிறார்கள். மொத்த வராக் கடனில் ரூ.5 கோடியும் அதற்கு மேலும் வழங்கப்படும் கடன்களே மொத்தக் கடனில் 56% இருக்கின்றன. அதாவது சரியாக பாதிக்கு பாதி பெரும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுகின்றன. அதிலும் இவர்கள் திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட வராக் கடன்தான் 88% என்று ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இத்தகைய பெரிய கடன்கள் அனைத்தும் மண்டல அலுவலகங்கள், தலைமை அலுவலகங்களால் வழங்கப்படுகின்றது.

நான்கு கிளைகளுக்கு ஒரு கிளையைக் கிராமப்புறத்தில் திறக்கப்பட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியைத் தனியார் வங்கிகள் மதிப்பதே இல்லை. தனியார் துறை வங்கிகளைப் போல அரசு வங்கிகளும் கிராமப்புறங்களில் கிளைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், சாதாரண மக்களுக்கான கடன் வழங்கலை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மெக்கன்ஸி வெளிநாட்டு தனியார் நிறுவனம் வகுத்துக் கொடுத்த கொள்கையை மத்திய அரசு ஏற்று அமல்படுத்துகிறது.

தற்போதுள்ள நிலைமையில் தோராயமாக 50% கிராமப்புற மக்களுக்கு வங்கிக் கடன் கிடைக்காத காரணத்தால், அவர்கள் கந்துவட்டிக்காரர்கள், நிலச்சுவான்தாரர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும் விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் கடன் வழங்குவதில் அரசு வங்கிகள்தான் முதலிடத்தில் இருக்கின்றன. தனியார் வங்கிகள் அப்படி வழங்குவதில்லை. தற்போது இதை நிறுத்தியோ குறைத்தோ விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் கடன்களை வழங்க அரசும், ரிசர்வ் வங்கியும் அழுத்தம் கொடுக்கின்றது. இதனால் அரசு வங்கிகள் தனியார் வங்கிகளைப் போல நடத்தப்படுவதற்கு அழுத்தம் தருகின்றனர். தனியார் வங்கி உயரதிகாரிகளே அரசு வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். அந்த நிர்வாகிகளே பணக்காரர்களையும், பெரும் தொகையைக் கடனாக பெற்றவர்களையும் விசேடமாக நடத்தும்படி வங்கிகளை மாற்றி வருகிறார்கள்.

படிக்க:
துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019
♦ கிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்

ஸ்டேட் வங்கி “ஹை நெட் வொர்த்” எனப்படும் அதிக பணம் சேமிக்கும் வாடிக்கையாளர்களை 35,000-த்திலிருந்து 2 இலட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஓர் அரசு வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ. 50,000, நடப்புக் கணக்கில் ரூ.1 இலட்சம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை சிறப்பாக நடத்த வேண்டும் என பகிரங்கமாக சுற்றறிக்கையே வெளியிட்டுள்ளது. இப்படி அரசு வங்கிகளிலேயே பாகுபாடும் அமலுக்கு வந்து விட்டது.

வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதற்கு பிறகே மொத்தக் கடனில் சாதாரண மக்களுக்கு 40% முன்னுரிமைக் கடன் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. அதில் 18% விவசாயிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ரூ. 2 இலட்சம் வரை சிறு தொழில் கடன், ரூ. 3 இலட்சம் வரை விவசாயக் கடன், ரூ. 4 இலட்சம் வரை கல்விக் கடன் அனைத்தும் எந்தப் பிணையும் இல்லாமல், சொத்து அடமானம் இல்லாமல் வழங்குவது அரசு வங்கிகள் மட்டும்தான். இதை நீர்த்துப் போகச் செய்யவே கடந்த 28 ஆண்டுகளாக மத்திய அரசு முயன்று வருகிறது. “மக்கள் பணம் மக்களுக்கே” என்ற முழக்கத்தை முன்வைத்து வங்கி ஊழியர்களின் தொடர்ச்சியான பிரச்சாரங்களும் போராட்டங்களுமே இன்று வரை இத்திட்டத்தைக் காப்பாற்றி வருகின்றன.

bank-merger1991-ம் ஆண்டில்  காங்கிரசு அரசு, ஐ.எம்.எஃப் அறிக்கையை “நரசிம்ம கமிட்டி அறிக்கை” என்று பெயர் சூட்டி நடைமுறைப்படுத்தத் துவங்கியது. அதன்படி அரசு வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்கு விற்றது, பத்து புதிய தனியார் வங்கிகளை அனுமதித்தது, அதில் குளோபல் டிரஸ்ட் வங்கி எனும் தனியார் வங்கி 10 வருடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்ந்தது. அதை ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் என்ற அரசு வங்கியுடன் இணைத்ததால் அரசு வங்கிக்கு 1,100 கோடி நட்டம் ஏற்பட்டது. இப்படி தனியார் வங்கி நட்டத்தை அரசு வங்கியின் தலையில் சுமத்துகிறார்கள்.

தனியார்மயத்தில் பாஜக அரசு, காங்கிரசு அரசை வேகமாக முந்தி வருகிறது. 2014-ம் ஆண்டில் பிஜே நாயக் குழுவை அமைத்த பாஜக அரசு “எல்லா அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும்” என்ற பரிந்துரையை பெற்றுக் கொண்டது. அதை உடனே அமல்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். 2015-க்கு பிறகு 2 அகில இந்திய அளவிலான தனியார் வங்கிகளையும், 11 பேமண்ட் வங்கிகளையும், 10 சிறு வங்கிகளையும் இக்காலகட்டத்தில் அனுமதித்துள்ளார்கள். இவை சாதாரண மக்களுக்கு வருடம் 25% கந்துவட்டியில் கடனை வழங்கி மக்களைக் கசக்கிப் பிழிகின்றன.

இவ்வளவு தகவல்களையும்  பகிர்ந்து கொண்ட சி.பி.கிருஷ்ணன் இறுதியில் தொகுத்துக் கூறுகிறார். அதன்படி வங்கித் துறை தனியார் கைகளுக்கு சென்று விட்டால் அரசின் கட்டுப்பாடு இருக்காது. மக்களுக்கு குறைந்த வட்டியில் பிணை இல்லாமல் கடன் கிடைக்காது. ஏன், வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு கூட பாதுகாப்பு இருக்காது, இந்தியப் பொருளாதாரத்தின் அச்சாணி பெருநிறுவனங்களின் கைகளில் சிக்கிவிடும் என்கிறார் அவர்.

பா.ஜ.க அரசின் வளர்ச்சி என்பது இதுதான். பெரும் முதலாளிகளுக்கு பெருந்தொகையை கடன் வழங்க வேண்டும், அவர்களது வராக்கடன்களை ரத்து செய்ய வேண்டும், மக்களுக்கான வங்கிச் சேவைகளை குறைக்க வேண்டும் என்று ‘பீடை நடை’ போட்டுக் கொண்டு போகிறது மோடி அரசாங்கம். இந்த விவரங்களை மக்களிடம் கொண்டு செல்வதும், வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதும் நமது கடமையாகும்.


– மதன்
நன்றி : இந்து தமிழ் திசை 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க