சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தமது இருப்புத் தொகை (Reserve fund) நிதியில் இருந்து ரூ.1,76,000 கோடியை மத்திய அரசுக்கு அள்ளி வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக நெருங்கிவரும் சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பார்ப்பதற்கு முன்னர், ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதி என்றால் என்னவென்று பார்க்கலாம். அதாவது நமது நாட்டில், தங்கம், அன்னிய நாட்டு பணம் (டாலர்), அரசு பத்திரங்கள் ஆகிய வடிவத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கையிருப்புதான் ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதி (Reserve) என்று அழைக்கப்படுகிறது. இதன் மதிப்பு தற்போது சுமார் 430 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த மதிப்பு நிலையானதாக இருக்காது. நாட்டுற்குள் வரும் அன்னிய முதலீடுகள், தங்கம், வெளிநாட்டு நாணய விற்பனை வாங்கல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பு மாறுபடும்.
இந்த மாறுபாட்டின் போது இக்கையிருப்பின் மதிப்பு ஓரளவுக்கு அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கப்படும் மதிப்பு ஒரு இருப்புத் தொகையாக ரிசர்வ் வங்கியில் இருக்கும். இதனையே முதன்மையான இருப்புத் தொகை (Primary Reserve) என்று குறிப்பிடுகின்றனர். இந்த மதிப்பு தற்போது ரூ. 6.91 இலட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால் இந்த மதிப்பு கையில் பணமாக இல்லை. ஏனெனில் இந்தியாவின் இருப்பு நிதியான 430 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பின் மதிப்பு அதிகரித்த தொகைதான் இந்த முதன்மையான இருப்புத் தொகை (Primary Reserve). ஆகவே இந்தப் பணம் கருத்தளவில் இருக்கும் பணம் மட்டுமே. 430 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பை விற்கும்போது மட்டுமே இந்தக் முதன்மை இருப்புத் தொகை பணமாகக் கிடைக்கும். ஆகவேதான் இதை கருத்தளவில் இருக்கும் கையிருப்புத் தொகை என்று அழைக்கிறோம்.
உதாரணத்திற்கு நீங்கள் ரூ. 200 மதிப்புள்ள ஒரு பங்கை (share) வாங்குகிறீர்கள். ஓராண்டு கழித்து அதன் சந்தை மதிப்பு ரூ. 250 ஆக அதிகரிக்கிறது. இப்போது உங்களது இருப்பு சொத்து (Reserve) ரூ.250 . முதன்மை இருப்புத் தொகை (Primary Reserve) ரூ.50 இந்த முதன்மை இருப்புத் தொகையை நீங்கள் பணமாக எடுக்க வேண்டுமானால், உங்களது இருப்பு சொத்தான (Reserve) அந்தப் பங்கை விற்பனை செய்து அதனை யாராவது ரூ.250 கொடுத்து வாங்கினால்தானே முதன்மை இருப்புத் தொகையாகிய (Primary Reserve) ரூ.50-ஐ நீங்கள் கையில் பெற முடியும். அது போலத்தான் இந்த ரூ. 6.91 லட்சம் கோடி தொகையும். மேலும் பணமாக ரிசர்வ் வங்கியின் கையிருப்பு ஈட்டிய லாபம், சுமார் ரூ. 2.09 லட்சம் கோடியையும் சேர்த்து சுமார் ரூ.9 லட்சம் கோடி முதன்மை இருப்புத் (primary reserve) தொகையாக இருந்தது. அந்த 430 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்தை விற்காமல், இந்த ரூ.6.91 இலட்சம் கோடியை பணமாக கையில் எடுக்க முடியாது.
படிக்க :
♦ டியர் மிடில்கிளாஸ், மூழ்கும் கப்பலில் பாதுகாப்பான இடம் எதுவும் கிடையாது !
♦ நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
இந்த ரூ.6.91 இலட்சம் கோடி தொகையைத்தான் உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இருந்த காலகட்டத்தில் தனக்குத் தரக் கூறி மத்திய அரசு கேட்டது. வெறும் பேப்பரில் எழுதப்பட்ட மதிப்பை ரிசர்வ் வங்கி இருப்பை (Reserve) விற்காமல் எங்கிருந்து எடுத்துத் தர முடியும்? ஆகையால், முடியாது என மறுத்துவிட்டார் உர்ஜித் படேல்.
அதனைத் தொடர்ந்து உர்ஜித் படேலை விரட்டிவிட்டு, தனக்கு ஆதரவான சக்திகாந்த தாஸ் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தது மத்திய மோடி அரசு. அதன் பிறகுதான் இந்தத் தொகையை ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் பிமல் ஜலான், முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரி ராகேஷ் மோகன் உள்ளிட்டோரைக் கொண்ட ஒரு கமிட்டியை அமைக்கிறது மத்திய அரசு.
இந்தக் கமிட்டி, ரிசர்வ் வங்கியில் எவ்வளவு இருப்பு (Reserve) இருக்க வேண்டும், எந்த வகையில் அது இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய பணிக்கப்பட்டது. அதாவது ரிசர்வ் வங்கியின் பொருளாதார முதலீட்டுச் சட்டகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இக்கமிட்டி முடிவு செய்யும்.
இந்தக் கமிட்டி தற்போது பின்வரும் முடிவை அறிவித்துள்ளது. உர்ஜித் படேல் சொன்னது போல இந்த ரூ. 6.91 லட்சம் கோடியில் கைவைக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது பிமல் ஜலான் கமிட்டி. மேலும் உண்மையான லாபத் தொகையில் எவ்வளவு மத்திய அரசுக்குக் கொடுக்கலாம் என்பதையும் அது தீர்மானித்திருக்கிறது.
அதாவது ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்து மதிப்பில் 5.5%-லிருந்து 6.5% அளவிற்கான தொகையை மட்டும் தன் இருப்பாக (Reserve) வைத்துக் கொண்டால் போதும் என்று கூறியிருக்கிறது இந்தக் கமிட்டி. இதற்கு முன்னர் 10 – 11 %-ஆக இருந்த இந்த அளவை தற்போது குறைத்திருப்பதன் மூலம் மீதத் தொகையை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க அனுமதி கொடுத்துள்ளது இந்தக் கமிட்டி. அவ்வகையில் ரிசர்வ் வங்கி தனது இருப்பிலிருந்து ரூ. 1,76,000 கோடியை மத்திய அரசுக்குத் தரவேண்டும்.
“ரிசர்வ் வங்கியில் சும்மா இருக்கும் இந்தத் தொகையை மத்திய அரசிடம் கொடுத்தால் பொருளாதாரச் சுழற்சிக்கு இந்தப் பணம் பயன்படும் அல்லவா ?”என்ற கேள்வி நமக்குள் எழலாம். அதற்கு நாம் ரிசர்வ் வங்கி எதற்காக இருப்பை (Reserve) குறைந்தபட்ச அளவு நிர்ணயித்துப் பராமரித்து வருகிறது என்பதைப் பார்க்கலாம்.
நமது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், அன்னியச் செலாவணி, பணத்தின் மதிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாகக் கண்காணித்து அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தி நாட்டை பொருளாதாரத் தாக்குதல்கள் மற்றும் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதுதான் ரிசர்வ் வங்கியின் பணி. அத்தகைய ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் இருக்கிறது. இந்த தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு எவ்விதத்திலும் தலையிட முடியாது.
படிக்க :
♦ ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?
♦ ரிசர்வ் வங்கியையும் முதலாளிகளுக்குத் திறந்துவிடக் கதறும் சங்கிகள் !
குறிப்பாக, ரிசர்வ் வங்கியின் முக்கியக் கடமைகளாக மூன்று விசயங்கள் சொல்லப்படுகிறது. 1. நிதி ரீதியான ஸ்திரத்தன்மையைக் காப்பது, 2. பண ரீதியான ஸ்திரத்தன்மையைக் காப்பது, 3. செலாவணி ரீதியான ஸ்திரத்தன்மையைக் காப்பது. இந்த மூன்று விவகாரங்களில் எதில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு ரிசர்வ் வங்கிதான் பொறுப்பு.
மேலும் இந்த மூன்று விவகாரங்களில் எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் அது ஒட்டுமொத்த நாட்டையும் நடுத்தெருவில் நிறுத்திவிடும். அத்தகைய முக்கியத்துவம் கொண்ட இவ்விவகாரங்களை சீராகக் கொண்டு செல்வதற்கு இடையூறாக ரிசர்வ் வங்கிக்கு பல்வேறு முன்னறிய முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. வேறு இரு வெளிநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் அல்லது பொருளாதாரத் தடை, பங்குச் சந்தை வீழ்ச்சி போன்றவை கூட இந்த மூன்று விவகாரங்களைப் பாதிக்கும்.
அப்போது இந்திய பணமதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றைச் சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இந்தக் கையிருப்பு (Reserve) கண்டிப்பாக இருக்க வேண்டும். தற்போது இந்த ரிசர்வ் கையிருப்பைக் குறைத்துள்ளது இந்தக் கமிட்டி. இது அடுத்து வரும் ஏதேனும் பொருளாதார வீழ்ச்சியில் ரிசர்வ் வங்கியைக் கையறு நிலைக்கே இட்டுச் செல்லும். நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும்.
இத்தகைய எதிர்பாராத பொருளாதார சூழலை எதிர்கொள்ள, எப்போதுமே ரிசர்வ் வங்கிக்கு கிடைக்கும் உண்மையான லாபத்தில், அவசர கால நிதிக்கு ஒரு தொகை ஒதுக்கப்படும். அது போக மீதத் தொகைதான் அரசுக்கு அளிக்கப்படும். இது போல அரசுக்கு அளிக்கப்படும் மீதத் தொகையே ஒவ்வொருமுறையும் குறைந்தபட்சம் ரூ.30,000 கோடியிலிருந்து, அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் கோடி வரை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு, உண்மையான லாபத்தில் அவசரகால நிதிக்கென எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை. அனைத்து லாபமுமே மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. 2017 -18 காலகட்டத்தில் இப்படி உண்மையான லாபமாக வந்த மொத்தத் தொகையான ரூபாய் ஐம்பதாயிரம் கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு அதே லாபம் ரூ. 1,23,000 (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தி மூன்றாயிரம்) கோடியாக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் இப்படி திடீரென உயர்ந்திருப்பது குறித்து பொருளாதார வல்லுனர்கள் பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
குறிப்பாக இப்படி திடீரென உண்மையான லாபம் அதிகரித்திருக்க வேண்டுமெனில், கையிருப்பு சொத்தை (Reserve) விற்றால் மட்டுமே சாத்தியமாகும் என்கின்றனர் வல்லுனர்கள். அதாவது கையிருப்பு டாலரையோ, தங்கத்தையோ வெளிச்சந்தையில் விற்றால்தான் குறுகிய காலத்தில் இத்தகைய லாபத்தை எடுக்க முடியும் என்கின்றனர். இப்படிச் செய்திருந்தால் அது மிகவும் அபாயகரமான முயற்சியாகும்.
சரி, இப்போது கொடுத்துவிட்டார்கள். இவ்வளவு பெரிய தொகையை வைத்து அரசு ஏதாவது செய்து மீண்டும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தால் நல்லதுதானே என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நம்மை மகிழ்ச்சியடையச் செய்ய மோடி அரசு தயாராக இல்லை.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?
தற்போது உள்ள பொருளாதார நிலைமைகளில் மீண்டும் பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தத் தேவையான தொகையை ஒப்பிடும்போது ரூ. 1,76,000 கோடி என்பதே மிகவும் குறைவான தொகைதான். அதிலும் இந்தத் தொகை முழுமையாக இந்திய அரசின் கைகளில் இருக்காது. இந்த ரூ. 1,76,000 கோடியை இரண்டு பகுதியாக பார்க்க வேண்டும். முதலில், இருப்பிலிருந்து 5.5%-ஆகக் கிடைத்த உபரித்தொகை ரூ. 58,000 கோடி. இரண்டாவது, உண்மையான வருவாயாகக் கிடைத்தது ரூ. 1,18,000 கோடி. ஏற்கெனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட செலவுகளுக்கு இந்த ரூ1,18,000 கோடியிலிருந்து, ரூ.90,000 கோடியை ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. மீதமிருக்கும் ரூ. 28,000 கோடியை காலாண்டு டிவிடெண்டாக கடந்த பிப்ரவரி மாதமே மத்திய அரசிடம் கொடுத்துவிட்டது ரிசர்வ் வங்கி. ஆகவே, இந்த ரூ. 1,76,000 கோடியில் மத்திய அரசுக்கு கையில் கிடைக்கவிருக்கும் தொகை வெறுமனே ரூ.58,000 கோடிதான்
இந்தத் தொகை தற்போது பொருளாதாரத்திற்குள் நுழைக்கப்படுவதும், புதியதாக ரூபாய் நோட்டு அடித்து புழக்கத்திற்கு விடுவதைப் போல் எவ்வித அடிப்படையும் இல்லாமல் இருக்கும். பண வீக்கத்தை அதிகரிக்கும் அபாயமும் இதில் உண்டு. சரியாகச் சொன்னால், வங்கி தொடங்கி அஞ்சறைப் பெட்டி வரை சேமிக்கப்பட்டிருக்கும் நமது பணத்தின் மதிப்பின் மீது நடத்தப்படும் ஒரு சூதாட்டம் இது.
நமது வங்கிச் சேமிப்பும், வாழ்க்கையும் சேர்த்து பணயம் வைக்கப்படும் இந்தச் சூதாட்டத்தில் எப்போதும் ஒரே விதிதான். இழப்பு நேர்ந்தால் நமக்கு. இலாபம் வந்தால் கார்ப்பரேட்டுகளுக்கு !
இன்று இதற்கு எதிராகப் பேசாமல் அமைதி காத்தால், சில ஆண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பழிப்பின் போது வீதியில் இரண்டு மாதங்கள் அலைந்ததைப் போன்ற நிலைமையினும் கொடுமையான நிலைமையாக, கிரீஸ் மக்கள் நடுத்தெருவில் பல மாத காலம் நின்றதைப் போன்ற நிலைதான் ஏற்படும்.
இந்தக் கட்டுரை, ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குப் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக பிபிசி இணையதளத்தின் மூத்த பத்திரிகையாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம் அவர்களிடம் எடுத்த நேர்காணலைத் தழுவி எழுதப்பட்டது.
நந்தன்
நன்றி : பிபிசி
இந்த 176000 காேடி என்றாலே வில்லங்கம் பிடித்த நம்பராச்சே …. ! இதே நம்பர் தற்பாேது பாஜக விடம் …? ஏதாே நல்லது நடந்தால் சரி …!
Central Banking system is a Gambling
Value less papers never create a ‘valuable society’
Create real value currency like Gold, silver.. then the system never ever collapse