ஓசூரின் நடுத்தர வர்க்க தெருவொன்றில் 20 ஆண்டுகளாக வசிக்கும் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். குடும்பத்தலைவியான அவர் உதவும் மனப்பான்மை கொண்டவர், சுற்றியிருப்போரோடு நல்ல இணக்கமான நட்பை பேணுபவர். சுமார் 20 வீடுகள் கொண்ட அவரது தெருவில் நிகழ்ந்த (அவர் விவரித்த) சில சம்பவங்கள் நாம் எத்தகைய மோசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறோம் என்பதை முன்னறிய உதவும்.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட மிகவும் பரபரப்பாக வேலை நடந்த ஒரு சிறுதொழில் நிறுவன அதிபர் இன்று மொத்த நிறுவனம் மற்றும் இதர சொத்துக்களை விற்றுவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். கனவுகளோடு கட்டிய அவர் வீடு விற்பனைக்கு வரவிருக்கிறது. அடையாள மறைப்புக்காக இன்னும் கசப்பான மேலதிக தகவல்களை தவிர்க்க வேண்டியிருக்கிறது.
அடுத்தவர் இரண்டு நிறுவனங்களை நடத்தியவர், உயர் மத்தியதர வாழ்க்கை வாழ்ந்தவர். கடந்த ஆறு மாதங்களில் அடுத்தடுத்து இரு நிறுவனங்களையும் மூடிவிட்டார். கம்பெனி விற்பனைக்கு தயாராக இருக்கிறது. வேறெதுவும் விற்பதற்கு பாக்கியில்லை. வீட்டைக் காலி செய்துவிட்டு போயிருக்கிறார்கள். பள்ளிக் கட்டணத்துக்கு வழியில்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதாக தகவல். இங்கேயும் மேலதிக தகவல்கள் நம்மை அச்சுறுத்தவல்லவையே.
அதே தெருவில் வசித்த ஒருவர் இன்னும் சிறிய நிறுவனம் நடத்தியவர், கொஞ்சம் முன்பே நட்டத்தை சந்தித்து நிலைமை கைமீறும் முன்பு எந்திரங்களை விற்றுவிட்டு ஊரை காலி செய்துகொண்டு போயிருக்கிறார்.
அந்த தெருவில் குடியிருந்த சமீபத்தில் மணமான ஒரு இளைஞர் தமது வாடகை வீட்டை காலி செய்துகொண்டு போயிருக்கிறார். மனைவியை சொந்த ஊரில் தங்கவைத்துவிட்டு இவர் நண்பர்களோடு அறையொன்றை பகிர்ந்துகொண்டு வாழ்கிறார். காரணம் மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே அவர் பணியாற்றும் நிறுவனத்தில் வேலை இருக்கிறது. குடும்பமாக வாழ சம்பளம் போதவில்லை.
படிக்க:
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
♦ இந்திய நாடு, அடி(மை) மாடு !
வெறுமனே 20-30 குடும்பங்களை உள்ளடக்கிய சிறிய தெருவொன்றின் நிலை இது. ஏனைய இடங்களின் நிலை இப்படியே இருக்கவேண்டும் என அவசியமில்லை. ஆனாலும் இந்த ஒற்றை சிறு பரப்பின் சூழல் ஏனைய பகுதியினருக்கு ஒரு எச்சரிக்கை. மேற்சொன்ன யாரும் ஊதாரிகளோ சூதாடிகளோ அல்ல. அரசு மற்றும் சுயமுன்னேற்ற பிரச்சாரகர்களின் அறிவுரைக்கிணங்க சுய தொழில் செய்தவர்கள். அதில் தேவைக்கு அதிகமாக உழைத்து நடுத்தர வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியான செய்திகள் உங்கள் வசிப்பிடத்திலும் இருக்கக்கூடும். அப்படியில்லை என்றால் இனி வந்தே தீரும்.
காரணம், நாடு முழுக்க நுகர்வு என்பது மந்தமாகியிருக்கிறது. அதனால் உற்பத்தி குறைப்பும், வேலையிழப்பும் முழுவீச்சில் ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே இதன் தாக்கத்தில் இருந்து நாம் யாருமே தப்ப முடியாது. நம் வேலையோ வருவாயோ ஏதோ ஒன்று பாதிக்கப்படப்போகிறது. இதனை பெருந்தொகையான மத்தியதர வர்க்கம் உணரத் துவங்கிவிட்டதாகவே ஊகிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு இதனை சொன்னபோது எதிர்மறையாக பேசுவதாக சலித்துக்கொண்ட பலரும் இப்போது மெல்ல ஆமோதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெங்களூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. மேலும் சில மூடப்படவிருப்பதாக தொழிலாளர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனாலும் ஒரு பிடிவாதமான நம்பிக்கை மத்தியதரவர்க்கத்திடம் இருக்கிறது. அதனை நம்பிக்கை என்றுகூட சொல்ல முடியாது, ‘விஷ்ஃபுல் டெல்யூஷன்’ (Wishful delusion) என்று சொல்லலாம். அதாவது அதீத விரும்பம் மிகைநம்பிக்கையாக மாறியிருக்கும் நிலை. நமக்கு எதுவும் மோசமாக நடந்துவிடக்கூடாது எனும் பெருவிருப்பம் நமக்கு எதுவும் மோசமாக நடந்துவிடாது எனும் மிகை நம்பிக்கையாக உருமாறியிருக்கிறது. நேரிலும் சமூக ஊடகங்களிலும்கூட இவர்களோடு உரையாடுவதில் பெரிய இடையூறாக இருப்பது உண்மையைவிட்டு விலகி ஓடும் இந்த இயல்புதான். இது வெறிபிடித்ததுபோல பக்தியின் பக்கமும் சோதிடத்தின் பக்கமும் மக்களை தள்ளுகிறது. யதார்த்தம் கசப்பானதாக இருப்பதால் அதனை சுட்டிக்காட்டாத கோயில் சிலைகளும், போலி நம்பிக்கையளிக்கிற அல்லது பரிகாரம் போன்ற எளிய மற்றும் தனிப்பட்ட தீர்வுகளை தருகிற சோதிடர்களும் நடுத்தர வர்க்கத்தை வசீகரிக்கிறார்கள்.
ஆனால் தற்காலிக ஆற்றுப்படுத்துதல்களுக்கு இனி பலன் ஏதும் இருக்கப்போவதில்லை. நாம் ஒரு வதைமுகாமின் வாயிலில் நிற்கிறோம். ஒரு வதைமுகாமின் அதிகபட்ச சவுகர்யம் என்பது உங்கள் பழைய நினைவுகளும் சக மனிதர்களின் அன்பும் அரவணைப்பும்தான். அதுதான் இனி பெரும்பான்மை இந்தியர்களின் தலைவிதி.
உங்கள் வருமானத்துக்கான கதவுகள் மூடப்படுகின்றன. பொருளாதாரத்தேக்கம் எல்லா தரப்பு மக்களின் வருமானத்தையும் பறிக்கும் அல்லது குறைக்கும். அது இன்னும் மோசமான தேக்கத்தை நோக்கி இட்டுச்செல்லும். அது வாங்கும் திறனை சிதைத்து இன்னும் அதிகமாக பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும். 2009 அமெரிக்க பொருளாதார பெருமந்தத்தின்போது பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனை 15% சம்பள வெட்டை கொண்டுவந்தது. சீக்குகளுக்கு பஞ்சமில்லாத ஊரின் ஆஸ்பத்திரியே சம்பளத்தில் கைவைக்கும் எனில் ஏனைய துறைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
மிடில் கிளாசின் இன்னொரு பெரிய நம்பிக்கை அவர்களது சேமிப்பு அல்லது சொத்துக்கள். அவையும் இனி கைகொடுக்கப் போவதில்லை. நிலமதிப்பு அப்படியேதான் இருக்கிறது. ஆனால் வாங்க ஆளில்லை. நிலமும் வீடும் இன்று ஒரு செத்த முதலீடு. அவை கூடுதலாக செலவு வைக்குமேயன்றி இனி லாபம் தரப்போவதில்லை. வங்கி சேமிப்புக்கள் மீதான வட்டி 15 ஆண்டுகளில் பாதியாக குறைந்திருக்கிறது. இன்று அது உண்மையான பணவீக்க விகிதத்தைவிட குறைவு. ஆக உங்கள் வங்கி சேமிப்பின் மதிப்பு ஆண்டுதோறும் குறைகிறது, வட்டியோடு சேர்த்து கணக்கிட்டாலும்கூட.
படிக்க:
♦ தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !
பென்ஷன் திட்டங்கள், எல்.ஐ.சி மற்றும் பி.எஃப் ஆகியவையும் பங்கு சந்தையில் பணத்தை கொட்டுகின்றன. அதன் பணத்தை விழுங்கிய ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனம் இனி பிழைக்க வழியில்லை எனும் நிலையில் இருக்கிறது. பணம் போட்ட பாவத்துக்காக ஐ.டி.பி.ஐ வங்கியை அதன் முரட்டு நட்டத்தோடு கைப்பற்றி கட்டிக்கொண்டு அழுகிறது எல்.ஐ.சி. புதிய பென்சன் திட்டத்தின் வட்டியும் சமீபத்தில் 8% இல் இருந்து 7.9% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கடைசி கையிருப்பு 1.76 லட்சம் கோடி அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டிருகிறது. அடுத்து மிச்சம் இருப்பது பி.எஃப் பணம் மட்டும்தான். அதுவும் தேசபக்தி கணக்கில் வரவு வைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இதன் சமூக தாக்கங்களை நாம் இன்னமும் யோசிக்கக்கூட இல்லை. பொருளாதாரத்துக்கும் சமூக குற்றங்களுக்கும் (மனநலத்துக்கும் கூட) நேர்மறையான தொடர்புண்டு. தஞ்சையில் 2 வருடங்கள் மழை இல்லாவிட்டால் வழிப்பறியும் திருட்டும் அதிகம் நடக்கும். ஆதரவற்ற பிள்ளைகளும் கல்வி மறுக்கப்படும் பிள்ளைகளும்தான் சமூக விரோதிகளின் இலக்கு. கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வுகால பராமரிப்பு ஆகியவற்றுக்கு அரசு பொறுப்பெடுத்துக்கொள்ளும் நாடுகளில் தற்கொலை விகிதம் மிகக்குறைவு. இந்த கோணத்தில் பார்க்கையில் நாம் இன்னும் மோசமான சமூகக்குற்றங்களை எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பது தெரியும். பொருளாதாரம் மோசமடைவதால் உருவாகும் எல்லா குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படப் போவது மிடில்கிளாஸ்தான். காரணம் அதுதான் சுலபமான இலக்கு.
இன்னொரு முக்கியமான பிரச்சினை, தாராளமயம் உருவாக்கியிருக்கும் பொருள்சார் மதிப்பீடுகள். சற்றேறக்குறைய ஒரு தலைமுறை மனிதர்கள் எல்லாவற்றையும் பொருள் சார்ந்து மதிப்பிடக் கற்றுகொண்டிருக்கிறார்கள். வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, கவலை, அந்தஸ்து, லட்சியம், வாழ்வின் அர்த்தம் என எல்லாமே பொருள் சார்ந்ததாகவே அவர்களுக்கு இருக்கிறது. மனநல ஆற்றுப்படுத்துனர்கள் எதிர்கொள்ளும் குடும்ப பிரச்சினை சம்பவங்கள் எல்லாமே பெருமளவு இந்த மதிப்பீட்டின் விளைவாக உருவானவையாகவே இருக்கின்றன. மனிதர்களின் வருவாய் ஆதாரங்கள் நாசமாகி சேமிப்புக்கள் பாதுகாப்பற்றதாகும்போது இந்த மதிப்பீட்டின் வழியே உலகைக் காண பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தம் வாழ்வே அர்த்தம்ற்றுப்போனதாக உணரக்கூடும். மனரீதியான பிரச்சினைகளையும் உறவுச் சிக்கல்களையும் இழுத்துவர அது ஒன்றே போதுமானது. இது மிகையான கற்பனை எனில் நாம் இழக்க ஏதுமில்லை, ஒருவேளை இது பகுதியளவு உண்மை என்றாலும் அதன் விளைவுகளை சமாளிக்கும் வழிகள் நம்மிடையே இல்லை.
நீங்கள் ஆசைப்படுவதற்கும் அடைய முடிவதற்கும் இடையேயான இடைவெளிதான் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸின் (Stress) வீரியத்தை தீர்மானிக்கிறது. ஆகவே இந்த பொருளாதார முடக்கம் பொருள்சார் மதிப்பீடுகளை மட்டும் கொண்டிருக்கும் பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்திடையே பரவலாக மன அழுத்த மற்றும் மனப்பதட்ட நோயாளிகளை உருவாக்கப்போகிறது. மேலும் அரசு ஜீவித்திருக்க மக்களின் ஒரு தரப்பை சுரண்டியாக வேண்டும். செருப்பால் அடித்தாலும் செக்கு மாடுமாதிரி வாழும் நடுத்தர வர்க்கமே அதன் பாதுகாப்பான ஒரே இலக்கு. எல்லாவற்றுக்கும் தனிமனித தீர்வுகளை தேடுகிற அனாதை இல்லங்களுக்கு ஒருவேளை சோறு போடுவதைவிட வேறு சமூகப் பணியையே அறிந்திராத இவர்களை சுரண்ட பெரிய துணிச்சல் அவசியம் இல்லை.
இதுவரை உழைத்த உழைப்பு வீண், சம்பாதித்தவை யாவும் அர்த்தமற்றவையாகப் போகின்றன. நிச்சயமற்ற நிகழ்காலம் கொஞ்சமும் பாதுகாப்பற்ற எதிர்காலத்தை முன்னறிவிக்கின்றது. இதுதான் நீங்கள் 2014-ல் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா.
சூழல் சீர்கேடு, சிதைந்துபோன பொருளாதாரம் மற்றும் மதவெறி என ஒரு நாட்டை பாதுகாப்பற்றதாக்கும் எல்லாமே உச்சத்தில் இருக்கும் இந்தியாவைத்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு பரிசளித்திருக்கிறோம். அதாவது அமெரிக்காவுக்கு இணையான வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவதாக சொன்ன பொய்களை நம்பி கனவு கண்டுகொண்டிருந்தோரிடம் ஆப்கானிஸ்தானைவிட மோசமான ஒரு நாட்டை டெலிவரி செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
பிரார்த்தனைகள், படிப்பு, உழைப்பு என மகிமைப்படுத்தப்பட்ட எந்த மீட்பர்களும் இந்த சாபத்தில் இருந்து நம்மை காக்கப்போவதில்லை. வீதிக்கு வருவதுதான் நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே போராட்டக்காரனாக வருவதா அல்லது பிச்சைக்காரனாக வருவதா என தேர்வு செய்யும் வாய்ப்பு மட்டுமே நமக்கு மிச்சமிருக்கிறது.
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
ஹ்ம்ம்..
உண்மை கசக்கும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.