அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் (AIBEA) சுற்றறிக்கையின் தமிழாக்கம்

கேள்வி :

கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான அனுமதி – இந்திய ரிசர்வ் வங்கியின் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் பின்புலம் என்ன?

பதில் :

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் தாங்களாகவே தங்களது சொந்த வங்கிகளை தொடங்க அனுமதிக்கப்படலாம் என்ற பரிந்துரையினை ரிசர்வ் வங்கி குழு ஒன்று அளித்துள்ளது. இதன் மீது அதிக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு மோசமான எண்ணமாகும். ஏனெனில், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு கசப்பான அனுபவங்கள் உள்ளன.

தனியார் வங்கிகளின் தவறான நிர்வாகம் என்பது நமது நாட்டில் ஒரு புதிய செய்தியல்ல. பல்வேறு சமயங்களில் ஏதாவது ஒரு தனியார் வங்கி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

படிக்க :
♦ வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !
♦ அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

சில மாதங்களுக்கு முன்னால், யெஸ் வங்கி நெருக்கடியில் சிக்கியதையும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தலையீட்டினால், பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து முதலீட்டினைப் பெற்று எவ்வாறு மீண்டு வந்தது என்பதனையும் பார்த்தோம். இப்போது லக்ஷ்மி விலாஸ் வங்கி DBS வங்கிக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களைப் பார்க்கும் போது இதுபோன்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. 1930, 1940 மற்றும் 1950-களில் நமது நாட்டில் அனைத்து வங்கிகளும் தனியார் வங்கிகளாகவே இருந்தன. அவற்றில் சில அந்நிய வங்கிகளாகவும் இருந்தன. பல தனியார் வங்கிகள் தோல்வியடைந்து, மூடப்பட்டன.

இந்த வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வைத்திருந்த அப்பாவி மக்கள் தங்களது பணத்தினை இழந்தனர். 1913 தொடங்கி 1960 வரை 1639 வங்கிகள் இவ்வாறு தோல்வியடைந்து மூடப்பட்டுள்ளன. 1939 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் அதிகபட்சமாக முறையே, 117 மற்றும் 107 வங்கிகள் திவாலாகியுள்ளன.

பல போராட்டங்கள் அக் காலத்தில் நடைபெற்றன. நாடாளுமன்றத்திலும் விவாதங்களை அன்றைய ஏ.ஐ.பி.இ.ஏ பொதுச் செயலாளர் பிரபாத்கர் போன்றோர் முன்னெடுத்தனர். வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 45 ஆவது பிரிவில் ஓர் திருத்தம் கொண்டு வர இந்தப் போராட்டங்கள் மற்றும் முயற்சிகளின் காரணமாக இருந்தன.

வாராக்கடன் புகழ் மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.

இதன் மூலம், பொதுநலனுக்காக எந்த ஒரு வங்கியின் செயல்பாடுகளிலும் ரிசர்வ் வங்கி தலையிடலாம் என்றும், நலிவடைந்த வங்கியினை வேறொரு வங்கியுடன் இணைக்கலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது.

இந்தத் திருத்தத்தின் மூலம், வங்கிகள் திடீரென மூடப்படுவது நிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து நமது நாட்டில் எந்த ஒரு வங்கியும் மூடப்படவில்லை . நலிவடைந்த எல்லா வங்கிகளும், அவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டன.

1961 முதல் 1968 வரை, தோல்வியடைந்த 263 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன. எந்த ஒரு வங்கியும் மூடப்படவில்லை . இதில் அதிகபட்சமாக 1964 இல் 82 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன.

1969 – வங்கிகள் தேசியமயமாக்கலின் பொற்காலம் துவங்கியது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டால்தான் மக்களின் பணம் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, அந்தப்பணம் தனியாரின் லாபவேட்டைக்குப் பதிலாக தேசத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்ற கருத்து வலுப்பெற்றது.

அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், டாட்டா, பிர்லா போன்ற பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த 14 பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கினார்.

தனியார் வங்கிகளின் நஷ்டங்களை விழுங்கிய மக்கள் பணத்தினைக் காக்கும் நீலகண்டன் போல் பொதுத்துறை வங்கிகள் அமைந்தன.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின், தோல்வியடைந்த பல்வேறு தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளின் நஷ்டம் என்னும் விஷத்தினை விழுங்கி, வங்கிகளில் வைப்புத்தொகையாக இருக்கும் மக்களின் மதிப்புமிக்க சேமிப்பினைக் காக்கும் ஆபத்தாண்டவர்களாக உருவெடுத்துள்ளன.

1969 தொடங்கி 2020 வரை 25 தனியார் வங்கிகள் பல்வேறு பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பெருகி வரும் வராக்கடன்கள் இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது; யார் உண்மையான குற்றவாளிகள்?

இந்த வராக்கடன்களின் பின்னால் இருப்பவர்கள், கார்ப்பரேட்டுகளும், வேண்டுமென்றே கடன்களை திரும்பச் செலுத்தாதவர்களும்தான் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்த வகையில் 2001 முதல் 2019 வரை தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன்களின் அளவு ரூ.6,94,037 கோடிகளாகும். இதில் 2014 முதல் 2019 வரை மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு மட்டும் ரூ.5,48,734 கோடிகள்.

படிக்க :
♦ பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !
♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

IBC – திவால் சட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் யார்? மற்றும் இழப்பினை சந்தித்தது யார்?

திவால் சட்டம் என்ற பெயரில், கடன்களை திரும்பச் செலுத்தாத கார்ப்பரேட் முதலாளிகள், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடன் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வராக்கடன்கள் பிற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக, இந்த செயல்முறையில், வங்கிகள் இழப்பினை சந்திப்பவையாகவும், கார்ப்பரேட் முதலாளிகள் பயனடைபவர்களாகவும் உள்ளன.

உதாரணமாக,
ALOK INDUSTRY யின் ரூ.30,200 கோடி கடனை REILANCE நிறுவனம் ரூ.5,052 கோடிக்கு வாங்கியுள்ளது (83% தள்ளுபடி).

MONNET ISPAT நிறுவனத்தின் ரூ.11,478 கோடி கடனை JSW நிறுவனம் ரூ. 2,892 கோடிக்கு வாங்கியுள்ளது. (75% தள்ளுபடி).

ELECTRO STEEL நிறுவனத்தின் ரூ.13,958 கோடி கடனை VEDANTA நிறுவனம் ரூ.5,320 கோடிக்கு வாங்கியுள்ளது (62% தள்ளுபடி).

மொத்தத்தில் கடன்களை திரும்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு ரூ.68,607 கோடிகள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வராக்கடன்களுக்காக நிதி ஒதுக்குவதன் காரணமாக வங்கிகளின் லாபம் குறைகிறது.

இந்தக் குற்றவாளிகளிடமும், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமும், ஏமாற்றுக்காரர்களிடமும் நாம் வங்கிகளை ஒப்படைக்க முடியுமா? என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி.

வங்கிகள் மக்களின் பணத்தைக் கையாளுகின்றன. மக்களின் சேமிப்பைக் கையாளுகின்றன. இந்தக் கார்ப்பரேட்டுகளிடம் வங்கிகளை ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது. நமக்கு மிகவும் மோசமான அனுபவம் உள்ளது.

கடந்த காலம் கசப்பானது
நிகழ்காலம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை.
எதிர்காலம் பேரழிவு தருவதாக இருக்கும்

மக்கள் பணம் மக்கள் நலனுக்கே
கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கல்ல

AIBEA சுற்றறிக்கை

தமிழாக்கம் : ஆர். மகாதேவன்
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், அம்பாசமுத்திரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க