யார் இந்த சக்திகாந்த தாஸ் ?
மோடி தலைமையிலான மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த நிலையில், உடனடியாக சக்திகாந்த தாஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மத்தியில் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிதியமைச்சகத்தின் வருவாய்துறையில் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். அதன்பின் பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணியாற்றிய சக்திகாந்த தாஸ், 2017 மே மாதம் ஓய்வுபெற்றார். தற்போது நடந்துகொண்டிருக்கும் ஜி-20 மாநாட்டில் மத்திய அரசின் சார்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவில் 1957-ஆம் ஆண்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி சக்திகாந்த தாஸ் பிறந்தார். வரலாற்றுத் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இந்திய ஆட்சிப் பணி சேவையில் 1980-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சேர்ந்தார். அவருக்கு தமிழக பிரிவு ஒதுக்கப்பட்டது. பின்னர் காலஞ்சென்ற ஜெயலலிதாவின் நன்னம்பிக்கை பாத்திரமானார். பிரதமர் மோடியின் முதன்மை செயலராக உள்ள நிருபேந்திர மிஸ்ராவுக்கு மிக நெருக்கமானவராக சக்திகாந்த தாஸ் கருதப்படுகிறார்.
மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆதரித்து பேசிய அதிகாரி இவர்தான். பணமதிப்பழிப்பால் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்றும், கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்படும் என்றும் மோடியின் நடவடிக்கையை ஆதரித்து பேசி ஊடக வெளிச்சத்துக்கு வந்தவர். பணமதிப்பு நீக்கத்தால் டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரிக்கும் எனவும் அப்போது அவர் பேசினார்.
படிக்க:
♦ ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ?
♦ ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
மோசமான அரசின் முடிவை மோசமான அதிகாரியாக செயல்படுத்தியவர் சக்திகாந்த தாஸ். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது வங்கிகள் முன் மக்கள் மணிக்கணக்கில் நின்றிருந்த நேரத்தில், ஒரு நாளில் ரூ. 4500 எடுக்கலாம் என்ற முடிவை ரூ. 2000தான் எடுக்க முடியும் என மாற்றியவர் இவர். அதோடு வங்கியில் பழைய நோட்டுக்களை மாற்ற வருகிறவர்களின் கையில் மை வைக்க வேண்டும் என்றும் அதனால் ஒருவரே திரும்ப திரும்ப வங்கிக்கு வருவது தடுக்கப்படும் என்றும் அறிவித்தவர். போதிய மை வங்கிகளுக்கு அனுப்பப்படாத காரணத்தால் அந்த அறிவிப்பு சில நாட்களில் குப்பைக்குப் போனது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் விவசாயிகள் விதைக்கும் பருவத்தில் இருந்தனர், அப்போது அவர்களுக்கு அதிகப்படியான பணம் தேவைப்பட்டது. ஆனால்,விவசாயிகள் ரூ. 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என சொன்னவர் சக்திகாந்த தாஸ். மேலும் திருமணங்களுக்கு ரூ. 2.5 இலட்சம் வரை வங்கிகளில் எடுத்துக் கொள்ள முடியும் என அறிவித்தார். இன்னும் அதிகப்படியான பணம் வேண்டுமெனில் வங்கி மேலாளரை அணுகலாம் எனவும் அவர் சொன்னார். உட்சபட்சமாக, விவசாயிகள், பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்படவே இல்லை என அடித்துச் சொன்னார்.
எவ்வளவுதான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆதரித்து பூசி மொழுகினாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில விவசாயிகள், சிறு தொழில் முனைவோரால் இன்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது பாஜக.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் எதிர்மறை விளைவுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, அடுத்த காலாண்டில், மிகவும் நேர்மறையான முடிவுகளைக் காணலாம் என்றார். உர்ஜித் பட்டேலின் தீடீர் ராஜினாமா சர்ச்சையை கிளப்பிய நிலையில், சக்திகாந்த தாஸின் உடனடி நியமனம் புருவங்களை உயர்த்தியுள்ளது.
டிசம்பர் 14-ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மோடி அரசுக்கு நெருக்கமான சக்திகாந்த தாஸின் நியமனம் என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்நோக்கப்படுகிறது. உண்மையில், சக்திகாந்த தாஸின் நியமனம் அடுத்த என்ன நிகழுமோ என்கிற பதட்டத்தை, பீதியை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே ரிசவர் வங்கியை ரிலையன்ஸ் வங்கியாக மாற்றும் பணியினை மோடி அரசு துவங்கி விட்டது. அதன் போக்கில்தான் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தார். இப்போது மோடி அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சக்திகாந்த் தாஸ் பதவியேற்றிருக்கிறார். இனி குருமூர்த்தி அணி காவிப்படையின் பொருளாதாரத் தாக்குதலை சுதந்திரமாக நடத்தும் என நம்பலாம்.
– கலைமதி
செய்தி ஆதாரம்:
Shaktikanta Das, Modi Govt’s Point-Man for Demonetisation, is New RBI Governor
Opinion: New RBI chief Shaktikanta Das’s actions after note ban show why he is a poor choice
மொத்தத்தில் பிஜேபியின் சொல் பேச்சு கேட்கிற எள் என்றால் எண்ணையாக நிற்கிற ஒரு அடிமை கிடைத்து விட்டது என்று சொல்லூங்கோ