சென்னையின் பல்வேறு இடங்களில் புதிய பூங்காக்கள் அமைக்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு, கடந்த ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் மீண்டும் சிங்காரச் சென்னை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தி.மு.க அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்காவை ஆய்வு செய்வதற்காக வந்த அமைச்சர் கே.என்.நேரு பூங்காவை பார்வையிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மக்கள் இயற்கை சூழலை மேம்படுத்துவதற்கும், நகர மக்கள் காண முடியாதப் பறவையினங்களை கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த பூங்காவை அமைத்து செயல்படுத்தினார்கள். கடந்த 10 ஆண்டுகாலம் இதை பராமரிக்காத காரணத்தால் பூங்கா பார்ப்பதற்கு நல்ல முறையில் இல்லை. எனவே இதை மறுசீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பக்கிங்காம் கால்வாய், எண்ணூர், கோவளம், முட்டுக்காடு ஆகிய இடங்களிலும் இதே போன்ற பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. அடையாறு, கூவம் ஆற்றங்கரைகளில் மரம் நடுவது, ஆற்றங்கரைகளை அழகுபடுத்துவது ஆகியவற்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு உத்தேசமாக ரூ.2,500 கோடி செலவாகும்” என்று கூறியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.

படிக்க :
♦ வளர்ச்சியின் வன்முறை!
♦ சென்னையில் இனி குப்பங்கள் இல்லை! வந்துவிட்டன குபேரர்களின் மாளிகைகள்!

கடந்த தி.மு.க ஆட்சியில் 2006 முதல் 2011 ஆகிய ஆண்டுகளில் சிங்காரச் சென்னை திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. “சர்வதேச தரம் வாய்ந்த சிங்காரச் சென்னை” என்ற ‘கனவுத்’ திட்டத்தின் ஓர் அங்கம்தான் அடையாறு பூங்கா என்று அழைக்கப்படும் தொல்காப்பிய பூங்கா.

தொல்காப்பிய பூங்கா, ரூ.100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு ரூ.69 கோடியில் அடையாறு கழிமுகப் பகுதியில், சுமார் 358 ஏக்கர் நிலப்பரப்பில் 2007-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த பூங்காவை அமைப்பதற்காக அடையாறு கரையில் இருந்த குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டு அங்கிருந்த மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகிநகர் போன்ற சென்னையின் புறநகர் பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

சென்னையை அழகுபடுத்துவதாகக் கூறி, கடந்த 2005-ம் ஆண்டு ஜெயாவின் அடிமை ஒபிஎஸ் ஆட்சியில், தமிழக நகர வளர்ச்சி திட்டம்-2 என்ற பெயரில் சென்னையில் உள்ள 122 குடிசைப் பகுதிகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

தொல்காப்பிய பூங்கா

அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில் சிங்காரச் சென்னை என்ற பெயரில் பல்வேறு குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டன. அங்கு பல்வேறு பூங்காக்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்றுதான் தொல்காப்பியப் பூங்கா.

கடந்த 2012-ம் ஆண்டு ஜெயாவின் ஆட்சியில், அச்சமயத்தில், கூவம் கரையில் கட்டவிருந்த அதிவிரைவு சாலைக்காக மர்கீஸ் கார்டன் பகுதி குடிசைப்பகுதி; மெட்ரோ ரயில் அமைப்பதற்காக அம்பேத்கர் நகர் குடிசைப்பகுதி ஆகியவை அகற்றப்பட்டு அங்கு வாழ்ந்த ஏழை மக்கள், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கன்னடபாளையம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு குப்பைகளை போல் தூக்கி வீசப்பட்டனர்.

தொல்காப்பியப் பூங்கா மட்டுமல்ல, நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பல்வேறு பூங்காக்களில் ஏழைச் சிறுவர்கள் விரட்டியடிக்கப்படுவது எந்த ஆட்சி வந்தாலும், அன்றாடம் காணக் கூடிய சம்பவம்தான். ஏழைகளின் குடிசைகளை அகற்றி, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்து கட்டப்படும் பூங்காக்களில் ஏழைகளின் குழந்தைகளுக்கு இடமில்லை என்பதுதான் எதார்த்தம்.

நடுத்தரவர்க்க, மேட்டுக்குடி மக்களின் மாலை நேரப் பொழுது போக்கிற்கான பூங்காக்கள், முக்கியச் சாலைகளின் இருபுறங்களிலும் சித்திரங்கள் உள்ளிட்ட அழகுபடுத்தல் பணிகளுக்காக திமுக அரசு ரூ. 2500 கோடி செலவழிக்க உள்ளது.

பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த மாநில அரசின் வரியைக் குறைக்குமாறு கேட்டபோது, பணமில்லை என்று கூறிய திமுக அரசுக்கு, பூங்காக்களை அமைக்க மட்டும் எங்கிருந்து ரூ.2500 கோடி வருகிறது?

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து ஒட்டு மொத்த தமிழ்நாடே வேலை, வாழ்வாதாரம் இழந்த நிலையில் தவிக்கும் சூழலில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களுக்கு நிதிஒதுக்கவில்லை.

அடுத்து வரவிருக்கும் கொரோனாவின் மூன்றாம் அலைக்கான முன் தயாரிப்புகளுக்காக நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில், பூங்காக்களுக்கும் சென்னையை அழகுபடுத்துவதற்கும் என திமுக அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது.

நடந்து முடிந்த தேர்தலுக்குத் தாம் செலவழித்த தொகையை சம்பாதிப்பதற்காகத்தான் இத்தகைய 2500 கோடி பூங்கா திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றனவா என்ற சந்தேகத்தையே திமுகவின் இந்த நடவடிக்கை எழுப்புகிறது.


சந்துரு
செய்தி ஆதாரம் : Dinamani