டெல்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி நிர்வாகம் தலைநகரின் பல இடங்களை ‘அழக்காக்கும்’ பணியில் ஈடுபட்டுள்ளது.

டெல்லி மார்க் விகாஸ் மற்றும் யமுனை நதிக்கரையோரங்களில் வசித்துவரும் ஏழைக் குடும்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. உழைக்கும் மக்களை அப்புறப்படுத்தி ‘டெல்லியை அழகுபடுத்தும்’ நடவடிக்கையால் யமுனை நதிக்கரையில் வசித்து வந்த 40 குடும்பங்கள் தற்போது நிர்க்கதியாகியுள்ளன.

இப்பகுதியில் பிறந்து வளர்ந்த 40 வயதான ராஜூ பால் என்பவர், அவரது சிறு வயதில் இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கிறார். ஆனால், இயற்கை சூழலாலும் அரசின் நெருக்கடியாலும் பலர் இப்பகுதியினை விட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

படிக்க : ஸ்டெர்லைட்டின் சதிகளை நிரந்தரமாக முறியடிப்பது எப்போது?

2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடந்தபோது பல குடும்பங்கள் யமுனை நதிக்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பும்படி மிரட்டப்பட்டன. ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இப்பகுதியை விட்டால் வேறு வழியேதுமில்லை. அப்பகுதியில் வசித்த பலர் அக்கம்பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்றும், அங்குப் பிழைக்க வழியேதுமில்லாததால் மீண்டும் யமுனை நதிக்கரைக்கே திரும்பியுள்ளனர்.

தற்போது டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை ‘புத்தம் பொலிவுடன்’ வைத்திருக்க, டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைநகரை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறதாம்.

காமன்வெல்த் போட்டி நடந்தபோது முன் அறிவிப்பு ஏதுவுமின்றி அதிரடியாக மக்களைக் குடிசைகளை விட்டு அப்புறப்படுத்தியதை போலவே, தற்போதும் முன் அறிவிப்பு ஏதுவுமின்றி அப்புறப்படுத்தும் பணியில் டெல்லி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், “நாங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்படலாம்” என்று கூறும் அவரிடம் அடுத்து எங்கே செல்வது என்ன செய்வது என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. “இங்கு வசிக்கும் பலரும் தினக்கூலிகள்தான்; கிடைக்கும் வேலைகளைச் செய்பவர்கள். நாங்கள் இருக்க இடம் தேடிச் செல்ல ஒருநாள் கூலியைவிட்டுச் செல்லவேண்டும். இல்லையெனில், புல்டோர்சர்கள் எங்கள் வீடுகளைத் தரைமட்டமாக்கும் வரை இங்கேயே பிழைப்பைப் பார்த்திருக்க வேண்டும்” என்கிறார் ஆதங்கத்துடன்.

படிக்க : மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

நகரங்களை ‘அழக்காக்கும்’ பணி என்றாலே அதற்குப் பலிகடா உழைக்கும் மக்கள்தான். கடந்த ஆண்டு, ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றபோது அதற்காக மும்பையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வெளிநாட்டுப் பிரதிகளில் கண்ணில் படாதவாறு குடிசை பகுதிகள் ஜி-20 மாநாட்டுப் பேனர்களாலேயே திரையிட்டு மறைக்கப்பட்டன. அதேபோல், 2020 ஆம் ஆண்டு டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது காந்திநகரிலிருந்து அகமதாபாத் வரை செல்லும் சாலையில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டன.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் குடிசைவாழ் பகுதி மக்களை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டே வந்திருக்கின்றன. பாசிச பாஜக ஆட்சியில் இதன் வீரியம் அதிகம். வானுயர கட்டடங்களையும், சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் குப்பைகளையும், மனித கழிவுகளையும் அகற்றி நாட்டை சுத்தமாக வைத்திருக்கும் உழைக்கும் மக்கள்தான் ஆளும் வர்க்கங்களின் பார்வைக்கு ‘அசிங்கம்’. இவர்களை அகற்றுவதுதான் இவர்களது அகராதியில் ‘நாட்டை அழகாக்குவது’.

உண்மையில், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஏவிவிடும் பாஜக அரசும் ஆளும் வர்க்கங்களும்தான் இந்நாட்டைப் பீடித்திருக்கும் அசிங்கங்கள், அழுக்குகள். குப்பை கூளங்களோடு இவர்களையும் அகற்றுவோம்!

தங்களது பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் 40 குடும்பங்களில் ஒரு குடும்பம்.

000

எப்போதுவேண்டுமானாலும் குடிசைகள் தகர்க்கப்படும் என்ற நிலையிலும் அன்றைய தேவைக்காக நகர்ப்புறத்துக்கு பிழைப்புத்தேடி செல்லும் வியாபாரி.

000

புல்டோர்சர்கள் வந்தால் எதுவும் மிஞ்சாது என்ற அச்சத்தில் தங்களது தட்டுமுட்டு சாமான்களை தயாராக வண்டியில் ஏற்றிவைத்திருக்கும் காட்சி.

000

மாசுபட்ட, சுகாதார சீர்கேடாக இருக்கக்கூடிய யமுனை நதிக்கரை.

தாரகை
நன்றி: த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க