2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்குப் பிறகு, தற்போது பெய்த கனமழையானது சென்னை மக்களை மீண்டும் கொடும் துயரத்தில் தள்ளியிருக்கிறது. மழைக்காலங்களில் வழமையாக பாதிக்கப்படும் சென்னைப் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி போன்ற பகுதிகள் மட்டுமல்லாமல் தி.நகர், புரசைவாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்டு நகரத்தின் பல முக்கிய பகுதிகளும் வெள்ளக்காடாகியுள்ளன.
பல பகுதிகளில் படகுகளின் மூலம்தான் போக்குவரத்து மேற்கொள்ளமுடியும் என்ற நிலை உருவாகியது. சாலைகளில் தேங்கிய மழைநீர், வடிகால்கள் வழியே வெளியேறவில்லை. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அனைத்து பொருட்களையும் நாசப்படுத்திவிட்டது.
சென்னையின் இந்த துயரத்திற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று சுற்றுச்சூழல் பேரழிவு. ‘‘இது வழமையாக பொழிகின்ற மழைபோல அல்ல. இயல்புக்கு மாறான அதிதீவிர மழை. காலநிலை மாற்றத்தின் விளைவாக ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களிலேயே பெய்து விடுகிறது’’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உலகளாவிய அளவில் ஒருபுறத்தில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு மற்றொரு முக்கியக் காரணம் இருக்கிறது.
படிக்க :
சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் !
சென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி !
அந்த இரண்டாவது காரணம், ஆக்கிரமிப்புகள். நீர்த் தேக்கங்களாகவும் வெள்ளநீர் வடிகால்களாகவும் செயல்படக்கூடிய ஏரி, குளம், குட்டை போன்றவற்றை ஆக்கிரமித்து குடியிருப்புகள், நிறுவனங்களை கட்டிவைத்தது; மழைவெள்ளம் வடிவதற்கான முறையான கால்வாய்களை வடிவமைக்காதது, இதற்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் போன்றவைகள்தான்.
இந்த இரண்டு காரணங்களுமே பாரிய முறையில் நாம் பரிசீலிக்க வேண்டியவை.
பேரிடர்களுக்கு இடையில் வாழும் காலம்..
இலாபவெறி பிடித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் இயற்கையை வரைமுறையின்றி சுரண்டியதன் விளைவாக உயிர்க்கோளமே பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. அதீதமழைப் பொழிவு, கடும் வறட்சி, எதிர்பாராத திடீர் புயல்கள், தகிக்கும் வெப்ப அலை என காலநிலை மாற்றத்தால் பல்முனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறது மனித குலம். ‘‘ஒரு பேரிடரைக் கடந்து வந்தால் சற்று இடைவெளிக்குப் பிறகு மற்றுமொரு பேரிடரை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கலாம். இது பேரிடர்களுக்கு இடையில் வாழும் காலம்’’ என எச்சரிக்கிறார்கள் சூழலியல் செயல்பாட்டாளர்கள். சென்னை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
கடந்த 2011-ம் ஆண்டு தானே புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சென்னையே மிதந்தது, அதன்பிறகு 2017-ல் ஒக்கிப்புயல், 2018-ல் கஜா புயல், 2019-ல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு, 2020−ம் ஆண்டு நிவர் புயல், கோடைக்காலத்தில் இதுவரை இல்லாத அளவு 106 டிகிரிக்கு அதிகரித்த வெப்பநிலை என பல்வேறு பேரிடர்களைச் சந்தித்திருக்கிறது சென்னை. அதன் தொடர்ச்சிதான் தற்போதைய அதீத கனமழை.
கடந்த நவம்பர் 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை சென்னையில் பெய்த மழை வழக்கத்தைக் காட்டிலும் ஐந்தரை மடங்கு அதிகம். வானில் எங்கும் கருமேகங்கள் சூழ்ந்தவண்ணமிருந்தன. மேற்சொன்ன ஆறு நாட்களில் பெய்த மழையின் அளவு 46 செ.மீ ஆகும். இது வழக்கமாகப் பெய்கின்ற அளவை விட 491 சதவிகிதம் அதிகமாகும். இவையெல்லாம் காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் என்கிறார்கள் சூழலியல் செயல்பாட்டாளர்கள்.
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒட்டுமொத்த மழையின் அளவானது 4.4 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இந்நூற்றாண்டின் இறுதியில் 20.5 சதவிகிதமாக அவை மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். ‘‘மழையின் அளவு அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. 60 நாட்களில் பெய்யும் மழை வெறும் 20 நாட்களிலேயே பெய்யும். ஒரே நேரத்தில் மழை பெய்துவிடுவதால் அதைத் தேக்கிவைப்பது இயலாத காரியமாக இருக்கும். இதனால் வறட்சி ஏற்படும்’’ என்று சொல்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்.
பக்கிங்காம் கால்வாயை அழித்துக் கட்டப்பட்டிருக்கும் சென்னை இரயில் வழித்தடம்
கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், ‘ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழு’ என்ற அமைப்பானது (CEEW – council for energy, environment and water) இந்தியாவின் காலநிலை பாதிப்பு குறித்து மாவட்ட அளவிலான மதிப்பீட்டாய்வை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் அதிக வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் சென்னை ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எந்த நகரம் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தன் கட்டமைப்புகளை இழந்த சென்னை
சென்னையைப் பொருத்தவரையில் தீவிர மழைப்பொழிவின் காரணமாக ஆற்றிலோ, ஏரிகளிலோ நிரம்பி வழிந்தோடும் நீர் ஒருபுறம் வெள்ளத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது என்றால், மறுபுறத்தில், ‘‘மிகக் கன மழை’’ ஒன்றுக்கே சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்கிவிடுவதோடு, சுரங்கப் பாதைகள் வரை நிரம்பிவிடுகின்றன. ஆறு, ஏரி, குளம், கால்வாய், குட்டை என சென்னையின் பூர்வீக நீராதாரங்கள் அனைத்தையும் சிதைத்துவிட்டு நிற்பதோடு, முறையான வடிகால் கட்டமைப்புகளை வடிவமைக்காமலும் பராமரிக்காமலும் விட்டதுதான் சென்னை தத்தளிப்பதற்கு காரணம்.
000
இன்றைய சென்னை நகரம் ஒருகாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நஞ்சை விவசாயம் (நெல் விவசாயம்) செய்து வந்த பாசனக் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. எண்ணற்ற ஏரிகள், கோயில் குளங்கள், குட்டைகள் என நீர்த் தேக்கங்கள் நிறைந்த பகுதி. சென்னையை ஊடறுத்துப் பாய்ந்து ஓடும் கூவம், அடையாறு, கொற்றலை ஆகிய ஆறுகள் இன்றுள்ளது போல கழிவுநீர் சாக்கடைகளல்ல. அன்றைய சென்னையின் விவசாயத்திற்கு உயிராதாரமாக இருந்தவை. வெள்ளம் வந்தாலும் நெல்வயல்களில் நீர்வடிவது போல, விரைவாக வெளியேறும் வகையில் ஏரிகள் ஆறுகளோடு இணைக்கப்பட்டிருந்தன. சென்னை வங்கக் கடலோரம் அமைந்துள்ளதால் ஆற்றின் வெள்ளம் கூட எளிதாக கடலில் கலந்துவிடும் வண்ணம் இருந்தது.
கூடுதலாக, நகரத்தினுள் மிகப்பெரிய வெள்ள நீர் வடிகாலாக செயல்பட்டது பக்கிங்காம் கால்வாய். சுமார் 210 ஆண்டுகளுக்கு முன்பு (1806−ம் ஆண்டு) வெள்ளையர்களால் வட சென்னையையும் எண்ணூரையும் இணைப்பதற்காக வெட்டப்பட்ட பங்கிங்கம் கால்வாய், பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சுமார் 792 கிலோ மீட்டர்கள் வங்க கடற்கரையோரம் பயணித்து, சென்னையின் ஊடே ஓடிக் கடந்து, விழுப்புரத்திற்கு அருகே முடிவடைகிறது.
பக்கிங்காம் கால்வாயின் சிறப்பு என்னவென்றால், அது சென்னையில் ஓடுகின்ற மூன்று ஆறுகளையும் பல்வேறு கால்வாய்களையும் இணைக்கிறது. நகரத்திற்குள் ஓடுகின்ற மழைநீரை மட்டுமல்லாமல், ஏரிகளிலிருந்து வடியும் உபரிநீரையும் உள்ளிழுத்துக் கொண்டு விரைவாக வெளியேற்றும் வேலையைச் செய்தது. மேலும் தென்சென்னையில் பொழிகின்ற மழைநீரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள் வழியாக வழிந்தோடி பங்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. இதுபோன்ற வெள்ள வடிகால் இந்தியாவின் வேறெந்த நகரத்திற்கும் இல்லாத சிறப்பு.
சென்னையும் புதிய தாராளவாத ‘வளர்ச்சியும்’
பலநூறு ஆண்டுகளாக சென்னையின் பூர்வகுடி மக்களின் உழைப்பால் பராமரிக்கப்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் எல்லாம் வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் மராமத்துப் பணிகள் செய்யாமல் விடப்பட்டன. விதிவிலக்காக பக்கிங்காம் கால்வாய் சரக்குகள் ஏற்றிச் செல்வதற்கான வழித்தடமாகப் பயன்பட்டதால் அது முறையாக பராமரிக்கப்பட்டது. 1990-களுக்குப் பின் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர்தான் மேற்கண்ட கட்டமைப்புகள் அனைத்தும் நாசமாக்கப்பட்டு அதன் மேல் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ கட்டியெழுப்பப்பட்டன. அதற்கு முதல் பலி பக்கிங்காம் கால்வாய்.
1995-ம் ஆண்டின் இறுதியில், பக்கிங்காம் கால்வாய் பகுதியை சிதைத்து, அதன்மேல்தான் பறக்கும் ரயில் (MRTS) என்று அழைக்கப்படும் வேளச்சேரி இரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. விளைவு, அடுத்த ஆண்டே (1996) ஆகஸ்ட் மாதம் பெய்த கன மழையால் சென்னை பெரு வெள்ளத்தைச் சந்தித்தது. அப்போதே ‘‘எக்ஸ்னோரா இண்டர்நேஷனல்’’ என்ற தன்னார்வ நிறுவனம், வெள்ளத்திற்குக் காரணம் இரயில்வேயின் கட்டுமானப் பணிகள்தான் என ஆதாரங்களோடு முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. உடனடியாக அக்கட்டுமானப் பணிக்குத் தடைவிதிக்காத நீதிபதிகள், வழக்கினை ‘விசாரிக்கலாம்’ என பத்து ஆண்டுகள் கடத்தினர். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
இறுதியாக, 2006-ம் ஆண்டு இவ்வழக்கின் தீர்ப்பில், ‘‘சென்னை வெகுவேகமாக நகரமயமாகி வருவதால் பள்ளிக்கரணை போன்ற சதுப்பு நிலங்களையும் ஏரிகளையும் காப்பாற்ற முடியாது’’ என்ற அரசு முன்வைத்த வாதத்தை அடுத்து ‘மதிப்பிற்குரிய’ நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ‘‘பறக்கும் இரயில் போன்ற பல திட்டங்களை உருவாக்கினால்தான் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும். சுற்றுச்சூழல்வாதிகள், தன்னார்வலர்கள் தேவையற்ற விவாதங்களை நடத்தி ஒன்றுமில்லாததைப் பெரிதாக்குகிறார்கள்’’ என்றது. இன்று அதே நீதிமன்றம்தான் 2015 மழைவெள்ள பாதிப்புக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் குறித்துக் கவலைப்படுகிறது.
1996-ம் ஆண்டிற்குப் பிறகு 1998, 2005, 2015 என பலமுறை சென்னை வெள்ள பாதிப்புகளைக் எதிர்கொண்டிருக்கிறது. பக்கிங்காம் கால்வாய் சிதைப்பு மட்டுமல்லாமல் 1990-களிலிருந்து சென்னையின் ஏரி, குளங்கள், சதுப்புநிலங்கள், கால்வாய்கள் என அனைத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆக்கிரமித்தபோது ‘வளர்ச்சியின்’ பெயரால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என்றபோதும் ‘வளர்ச்சியை’ பாதிக்கும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக அரசே சட்டப்பூர்வமாக மாற்றியது.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்து town and country planing act என்ற சட்டத்தை 1998-ம் ஆண்டு ஒருமுறையும் 2007-ம் ஆண்டு மற்றொரு முறையும் கொண்டுவந்த தமிழக அரசின் நடவடிக்கை அதற்கு ஒரு சான்று. இவ்வாறாக, சென்னையிலுள்ள கட்டிடங்களில் 50 சதவிகிதம் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
000
அமிதாங்ஷூ ஆச்சாரியா மற்றும் அஜயா தீட்சித் ஆகிய சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து எழுதிய ‘‘நீருடன் வாழக் கற்றுக் கொள்வது’’ என்ற கட்டுரையில் ‘‘நகர்ப்புற நீர் வழித்தடங்கள் மற்றும் சதுப்பு நிலங்களின் மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளர் உண்மையில் தமிழக அரசு என்று சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழக நீர்நிலைகளில் நடைபாதைகள், பேருந்து முனையங்கள் மற்றும் ஐ.டி. பூங்காக்களை அரசு உருவாக்கியுள்ளது’’ என்று குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் அக்கட்டுரையில் நகர்ப்புறங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘‘காலநிலை நெருக்கடி பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களைத் தேடுகையில், காலநிலையானது, முன்னெப்போதையும் விட தீவிர மழை நிகழ்வுகளை மிகவும் கடுமையானதாகவும் கணிக்க முடியாததாகவும் ஆக்கியுள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் வெள்ளம் மீண்டும் மீண்டும் வருவதை ஓரளவு மட்டுமே விளக்குகிறது. இதற்கான விளக்கமும் நில அரசியலில் புதைந்து கிடக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து நகரங்களும் நீர்நிலை நகரங்கள். அவை ஆறுகளால் இழைக்கப்பட்டவை, சதுப்புநிலங்கள் மற்றும் நீரூற்றுகள் கொண்டவை, மேலும் அவை கண்ணுக்கு தெரியாத நீர்நிலைகளின் மேல் உருவாக்கப்பட்டுள்ளன’’ என்கிறார்கள்.
இப்படி நில அமைப்பை, சூழலியலை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவற்றை சிதைக்கும் வகையில் கட்டியமைக்கப்பட்ட நகரங்கள் அனைத்தும் புதிய தாராளவாதம் உருவாக்கிய ‘வளர்ச்சி’யாகும். அதன் பரிசுதான் வெள்ளப் பேரிடர்.
யார் ஆக்கிரமிப்பாளர்கள்?
சென்னை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும்போது மட்டும்தான் ஆக்கிரமிப்பு குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. அவ்வாறான நேரங்களில் பொதுவாக ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லும்போது அனைத்து மக்களையும் அதற்குள் நிறுத்திப் பேசும் போக்கு மேலோங்கி இருக்கிறது. ஆற்றங்கரையோரம் போடப்பட்ட சிறு குடிசைகள் மற்றும் சிறு வீடுகளில் உள்ள சாதாரண மக்களைக் குற்றவாளியாக்குகிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மைநிலவரம் இந்த இலக்கணத்திற்கு எதிர்நிலையாக உள்ளது.
2015 வெள்ளத்திற்குப் பிறகு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு, ‘‘நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பும் மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாததும்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம்’’ என்று கூறியது. அதைத் தொடர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள 71,262 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றும் பணியைத் தொடங்கினார்கள். இதுதொடர்பாக, ‘‘மிதக்குமா, மீளூமா?’’ என்ற தலைப்பில் 21.11.2020 அன்று விகடன் இணையதளத்தில் வெளிவந்த சிறப்புக் கட்டுரை ஒன்று, மொத்தமுள்ள 71,262 ஆக்கிரமிப்புகளில் 17,400 மட்டுமே அகற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து கூறியது.
மேலும், ‘‘முதல்வர் அகற்றியதாகக் குறிப்பிட்ட 17,400 ஆக்கிரமிப்புகளும் ‘கல்வித்தந்தைகள்’ கட்டிய வானுயரக் கல்லூரிகளா, கார்ப்பரேட் மருத்துவமனைகளா, பிரமாண்டமான ஜவுளிக் கடைகளா, மலைக்கவைக்கும் மால்களா என்றால் சத்தியமாக இல்லவே இல்லை. ஓலைக் குடிசையில் சாக்கைப் போட்டு ஒண்டியிருப்பவர்களை விரட்டிவிட்டு, ‘ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டோம்’ என்று பொல்லாத கணக்கு எழுதுகிறது அரசு. சொல்லப்போனால், ‘‘அந்தக் குடிசைகளையெல்லாம் அகற்றவே தேவையில்லை… வெள்ளம் வந்தால், தானாக மிதந்து சென்றுவிடும்’’ என்று எந்த வகையான ‘ஆக்கிரமிப்புகள்’ அகற்றப்பட்டன என்பதையும் கட்டுரையாளர் அம்பலப்படுத்தியுள்ளார்.
மீதமுள்ள சுமார் 53,000 ஆக்கிரமிப்புகளும் யாருடைய ஆக்கிரமிப்புகள் என்று சொல்லாமலே விளங்கும். சந்தேகமில்லாமல் அவை, கல்வித் தந்தையர்களின் கல்லூரிகள், கார்ப்பரேட் மருந்துவமனைகள், பிரம்மாண்ட ஜவுளிக்கடைகள், மால்கள், அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் போன்றவைதான்.
பொத்தேரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், குன்றத்தூர் மாதா கல்லூரி, போரூர் ராமச்சந்திரா கல்லூரி, மதுரவாயில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், ஜேப்பியாரின் பனிமலர், சத்தியபாமா, ஆவடி வேல்டெக், செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி போன்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்; இராமாபுரம் மியாட் மருத்துவமனை, பாடி சரவணா ஸ்டோர்ஸ் போன்றவையெல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான். அமைந்தகரையில் உள்ள ‘‘ஸ்கை-வாக்’’ மால் கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஐடி கம்பெனிகளும் ரியல் எஸ்டேட் கும்பல்களும் ஆக்கிரமித்துள்ளன.
இவையெல்லாம் ஒருநாளும் விவாதப் பொருளாவதில்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் குடிசையில் வசிக்கின்ற சாதாரண அடித்தட்டு மக்களை நகரப்புறங்களுக்கு வெளியே வீசி எறிகிறார்கள். மறுகுடியமர்வு என்று இவர்களைக் கொண்டுபோய் குடியேற்றும் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளே கூட ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான். ஸ்மார்ட் சிட்டி, சிங்காரச் சென்னை என்று நகரங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கும் அரசுக்கு ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்பது ஒரு சாக்காக அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை.
அ.தி.மு.க.வின் கொள்ளையும் தி.மு.க.வின் கொள்கையும்
கடந்த 2015 வெள்ள பாதிப்புக்குப் பிறகு, சென்னை நகரில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைப்பதற்கென்றே ரூ.8,820 கோடி ஒதுக்கியது எடப்பாடி அரசு. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென பிரத்யேகமாக சென்னையில் ரூ.1,200 கோடிகளை ஒதுக்கியது. இந்த ரூ.10,020 கோடி பணமும் எப்படி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை இந்த பெருமழை காட்டிக் கொடுத்துவிட்டது. ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ‘‘ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை தி.மு.க. அரசு’’ என கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
குளமாகத் தேங்கி நிற்கும் மழை நீரில், தன் குழந்தையை பாதுகாப்பாக தக்கை ஓட்டில் அழைத்துச் செல்லும் பெற்றோர்கள்.
சென்னையின் உள் மற்றும் பிரதான சாலைகளின் மொத்த நீளம் சுமார் 3,000 கி.மீ. உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பராமரிக்கும் வடிகால்களின் நீளமோ 1,894 கி.மீ. மட்டுமே. போதுமான வடிகால்கள் இல்லாததே மழைநீர்த் தேக்கத்திற்கு முக்கிய காரணம் என்பதால் கூடுதலாக பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, அதற்குத்தான் ரூ.8,820 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் அவ்வாறு புதிய வடிகால்கள் எதையும் கட்டவில்லை. ஏற்கெனவே இருந்த பழைய வடிகால்களையே இடித்து புதியதைப் போல கட்டி கணக்கு காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் பினாமிகளுக்குத்தான் பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் சென்றுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்கள் சில குறிப்பிட்ட பெரிய வடிகால்களோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த பெரிய வடிகால்கள் அடையாறு, கூவம், கொற்றலை என சென்னையிலுள்ள மூன்று ஆறுகளோடு இணைக்கப்பட்டிருக்கும், அதன் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் நீரை பெரிய வடிகால்கள் ஆற்றில் கொட்டும், ஆற்றில் கலக்கும் நீர் வங்கக்கடலை நோக்கிப் பயணிக்கும். இதுதான் மழைநீர் வடிகால்கள் செயல்படும் முறை.
ஆனால் நகரத்திலுள்ள பெரும்பான்மையான வடிகால்கள் பெரிய வடிகால்களோடு இணைக்கப்படாமல் துண்டுதுண்டாக அப்படியே விடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும்போது குறிப்பிட்ட தூரம்வரை செல்லும் நீர் அதன் கொள்ளளவு முடிந்ததும் ஏற்கெனவே அதனுள்ளிருந்த சாக்கடையோடு சேர்ந்து மேலே கொப்பளித்து வந்து நாறுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.200 கோடி செலவு செய்யப்பட்ட தியாகராய நகரில், மழைநீர் குளம் போலத் தேங்கிக் கிடக்கிறது.
000
அ.தி.மு.க.வின் ஊழல் ஒருபக்கம் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கையில், ‘‘சென்னை மழைவெள்ளத்திற்கு காரணம் அ.தி.மு.க.வின் கடந்த பத்தாண்டு கால ஊழலே, இதுபற்றி ‘விசாரணை’ மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்’’ என உறுதிமொழிகிறார் மு.க.ஸ்டாலின்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து டெண்டர் ஊழல், நிர்வாக முறைகேடு – என பல விசயங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. குற்றம் சாட்டியது. ஆனால் என்ன ‘விசாரணை’ நடத்தி யாரை தண்டித்துவிட்டது? சென்னை கே.பி. பார்க் குடிசைமாற்று வாரிய கட்டிட ஊழல் பற்றி ஐ.ஐ.டி. அறிக்கை வந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொன்னார் அமைச்சர் சேகர்பாபு. டெண்டரில் ரூ.27 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் தி.மு.க. இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் காமராஜ், ரேஷன் கொள்முதலில் ரூ.2,028 கோடி ஊழல் செய்திருக்கிறார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகி இருக்கிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் மின்சாரக் கொள்முதலில் ஒரு இலட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மீதெல்லாம் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
நாம் தொடக்கம் முதலே சொல்லிவருவதைப் போல, தி.மு.க.வானது அ.தி.மு.க.வின் ஊழல் குறித்து பேசுவதெல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான். ஏனெனில், நடவடிக்கை எடுக்குமளவிற்கு தி.மு.க.வினர் யோக்கிய சிகாமணிகளல்ல. வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 10,000 கோடிக்கும் மேலான மக்கள் பணத்தை கொள்ளையடித்து தின்றுவிட்டு, தற்போது சென்னை மக்களை மீண்டும் வெள்ளத்தில் தவிக்கவிட்டிருப்பது அ.தி.மு.க. மட்டுமல்ல, துறைசார்ந்த அதிகாரிகளும்தான். அத்துறைகளின் அதிகாரிகள் இல்லாமல் ஊழல் செய்திருக்க வாய்ப்பே இல்லை. எனில், அ.தி.மு.க.வைப் பற்றிப் பேசும் தி.மு.க., அதிகாரிகளைப் பற்றி பேசவில்லையே, ஏன்?
படிக்க :
சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு
சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?
கடந்த ஆட்சியில் வெள்ளத்தடுப்பு பணிகளில் அ.தி.மு.க. அமைச்சர்களுடன் கூட்டுக் கொள்ளையடிப்பதில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சிப் பொறியாளர் நந்தகுமாருடன் உட்கார்ந்து கொண்டுதான் இந்த மழைவெள்ளம் குறித்துப் பேட்டி கொடுக்கிறார் மா.சுப்ரமணியன். இக்கொள்ளையில் பங்குபெற்ற இன்னொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கார்த்திகேயனுக்கு உயர் கல்வித்துறை செயலாளர் பொறுப்பு கொடுத்து கவுரவித்திருக்கிறது தி.மு.க. அரசு. ‘அம்மா’வின் அரசானாலும் சரி, ‘தளபதியார்’ அரசானாலும் சரி, காசு பார்க்க வேண்டுமென்றால் அதிகாரிகளின் துணையில்லாமல் முடியுமா? கொள்ளையில் கொள்கை வேறுபாடற்றவர்கள் இவர்கள். இந்த இலட்சணத்தில் குற்றவாளிகள் மீது ‘விசாரணை’ நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஏய்த்து வருகிறது தி.மு.க. போதாதகுறைக்கு ‘‘எங்கள் தலைவர் செயல்தலைவர், பாருங்கள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று நேரில் பார்வையிடுகிறார், நிவாரணம் வழங்குகிறார்’’ என விளம்பரம் வேறு.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் எல்லா ஆட்சியிலும், ஏறக்குறைய இத்தகைய ஆய்வுகளும் நிவாரணங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த ஆட்சிகளும் இதற்கெல்லாம் காரணம் முந்தைய ஆட்சிதான் எனக் குற்றம்சாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. நாமும் நிவாரணக் கோரிக்கை வைப்பதோடு முடித்துக்கொள்கிறோம். சென்னையின் துயரம் இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமென்றால், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளையை அம்பலப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காகவும் போராட வேண்டியிருக்கிறது.

பால்ராஜ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க