Sunday, July 12, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சென்னை மழை வெள்ளம் - புவியியல் குறிப்பு

சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு

-

Rains in Chennaiசென்னை மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மக்கள் அனுபவித்த துயரங்கள் பரவலாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்த துயர சம்பவங்கள் தோற்றுவித்திருக்கும் மனிதாபிமானத்தோடு நிற்காமல், நடந்து முடிந்த பேரழிவை அதன் உண்மையான பின்னணியோடு அரசியல் ரீதியிலும் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இருவிதமான கண்ணோட்டங்களை வளர்க்கும் வேலையினை ஊடகங்கள் மற்றும் ஜெயாவின் அடிமைப் பட்டாளங்களான செய்து வருகின்றன. ”இயற்கையை எதிர்த்து மனிதன் என்ன செய்ய முடியும்?”, “மனிதன் பேராசையால் ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கொண்டதன் பலனை அனுபிக்கிறான்” என்பதான சமாளிப்புகள் இயற்கையையும் மக்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்றன.

இது உண்மையா?

நவம்பர் மற்றும் டிசம்பர் மாத துவக்கம் வரை வங்க கடலில் ஒன்றன் பின் ஒன்றாக உருவெடுத்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் – மண்டலங்கள் வட தமிழகத்தில் கன மழையாக பொழிந்தன. இதில் நவம்பர் மாதம் 8,9,12,13,14,15 மற்றும் 23-ம் தேதிகளில் மிக கடுமையான பொழிவு இருந்தது. மீண்டும் நவம்பர் 30 அன்று துவங்கிய மழை, டிசம்பர் மாதம் 3-ம் தேதி மாலை வரை கொட்டித் தீர்த்தது.

அக்டோபர் இறுதியில் துவங்கிய பருவமழைக் காலத்தில் தமிழகம் முழுவதிலும் 485 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது – கடந்தாண்டு பெய்த மழையின் அளவு 438 மி.மி. நவம்பர் மாதம் மட்டும் சென்னையில் பெய்த மழையின் அளவு 1218 மி.மி – கடந்தாண்டு 407 மி.மி. வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் பெய்த மழையின் அளவு 667 மி.மி – கடந்தாண்டு இதே மாதம் 147மி.மி. சந்தேகமின்றி இது அதிகளவிலான மழை தான்.

ஆனால், சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்திற்கு இந்த மழை தான் காரணமா? இல்லை. மழை வெள்ளத்தால் நிரம்பிய நீராதாரங்கள் கையாளப்பட்ட விதமும், வெள்ள வடிகால்களில் கைவிடப்பட்ட பராமரிப்புப் பணிகளும் தான் இந்தப் பேரிடருக்கான மிக முக்கியமான காரணிகள். இதில் குறிப்பாக நவம்பர் 17 மற்றும் டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் சென்னையை மூழ்கடித்த வெள்ளத்திற்கு செம்பரம்பாக்கம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர்தான் முதனத்மையான காரணி.

முதலில் சென்னையைச் சுற்றிலும் உள்ள நீராதாரங்கள் மற்றும் அதன் புவியியல் அமைப்பைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

சென்னை மாநகருக்கான மிக முக்கியமான நீர ஆதாரங்கள் நான்கு – அவை, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, சோழாவரம் ஏரி மற்றும் செங்குன்றம் ஏரி. இந்த நான்கு ஏரிகளில் இருந்து சென்னை நகருக்குள் கொசஸ்தலை ஆறு, அடையாறு மற்றும் கூவம் ஆகிய மூன்று நதிகள் பாய்கின்றன. இந்த மூன்று நதிகளையும் சென்னை கடற்கரை ஓரம் ஓடும் பக்கிங்ஹம் கால்வாய் இணைக்கின்றது.

சுமார் 210 ஆண்டுகளுக்கு முன்பு (1806-ம் ஆண்டு) வெள்ளையர்களால் வட சென்னையையும் எண்ணூரையும் இணைப்பதற்காக வெட்டப்பட்ட பங்கிங்கம் கால்வாய், பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சுமார் 792 கிலோ மீட்டர்கள் வங்க கடற்கரையோரம் பயணித்து, சென்னையின் ஊடே அதன் கரையோரம் ஓடிக் கடந்து, விழுப்புரத்திற்கு அருகே முடிவடைகிறது. இந்தக் கால்வாயின் மிக முக்கியமான இணைப்பான கூவம் – அடையாறு நதிநீர் இணைப்பு 1876-77 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைத் தாக்கி சுமார் 60 லட்சம் மக்களை பலிவாங்கிய தாது வருஷ பஞ்சத்தை அடுத்து ஏற்படுத்தப்பட்டதாகும்.

தீபகற்க இந்தியாவின் தக்காண பீடபூமியின் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் ஆங்கில ‘ஒய்’ வடிவில் எழுந்து நிற்கிறது. தக்காண பீடபூமியில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் கிழக்கே வங்கக் கடலில் கலக்கின்றன. வட தமிழகத்தைப் பொறுத்த வரையில் சென்னை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகியவை வடிகால் பகுதிகள். வட தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான நதிகள் பருவ மழையை ஆதாரமாகக் கொண்டவை.

பருவமழைக் காலங்களில் நதிகளில் பாயும் வெள்ளம் கடலில் கலந்து பயனற்றுப் போவதைத் தடுக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் நிறைய ஏரிகளும் குளங்களும் இவற்றை இணைக்கும் கால்வாய்களையும் ஏற்படுத்தி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். வெள்ளையர் ஆட்சியில் பக்கிங்ஹம் கால்வாய் உள்ளிட்ட ஒருசில நீர் மேலாண்மை திட்டங்களைத் தவிர்த்து பெரியளவிலான பணிகள் நடைபெறவில்லை. எனினும் இருப்பதைப் பராமரித்து வந்தனர். நதி நீர் கடலில் பாய்வதற்கு முன் ஒரு ஷாக் அப்சர்வர் போல செயல்பட்டு நீரை பிற பகுதிகளுக்கு பகிர்ந்தளித்த பக்கிங்ஹம் கால்வாய் மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றது.

சென்னைக்கு மேற்கே வேலூர் செல்லும் வழியில் 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள காவேரிபாக்கம் என்ற ஊரில் இருந்து உற்பத்தியாகிறது கொசஸ்தலை ஆறு. இந்த் ஆறு மொத்தம் 136 கிலோமீட்டர்கள் தூரம் திருவள்ளூர், காஞ்சி மற்றும் சென்னை ஆகிய ஊர்களைக் கடந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த கொசஸ்தலை ஆறு இரண்டாகப் பிரிவதால் உருவாகும் நதி தான் கூவம். கொசஸ்தலை ஆறும், ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து உருவாகி வட தமிழகத்தை அடையும் நகரி ஆறும் பூண்டி ஏரியை அடைகின்றன. தெலுகு கங்கை திட்டப்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரும் ஆந்திராவிலிருந்து கால்வாய் மூலம் பூண்டி ஏரியை அடைகிறது.

பூண்டி ஏரியில் இருந்து தாமரைப்பாக்கம் தடுப்பணைக்கு வரும் நீர் அங்கிருந்து சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளை அடைகின்றது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து துவங்கும் அடையாறு, முடிச்சூர், மேற்கு தாம்பரம், பம்மல் வழியாக சென்னை விமான நிலையத்தைக் கடந்து (புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் ஓடுபாதை, மிகச்சரியாக அடையாறின் மேல் அமைந்துள்ளது) நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, வழியே கடலை அடைகிறது.

இன்னொருபக்கம், இரண்டாக பிரிந்த கொசஸ்தலை ஆறு, கூவம் நதியாக வட சென்னை வழியே கடலை அடைகிறது. கொசஸ்தலை ஆறாகவே ஓடும் இன்னொரு பிரிவு, எண்ணூர் அருகே கடலில் கலக்கிறது. இம்மூன்று நதிகளும் கடலில் கலப்பதற்கு முன் பக்கிங்ஹம் கால்வாயைக் கடந்தாக வேண்டும். மேலும் மிக முக்கியமான பல பாலங்களையும் கடந்தாக வேண்டும்.

சென்னை நகரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலத்திற்கு முன் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த கால்வாய்கள் மற்றும் வடிகால்களை தூர்வாறும் பணி நடைபெற்றாக வேண்டும். தந்தி டி.வி பாண்டே போன்ற அடிமுட்டாள்கள் சொல்வதைப் போல் பராமரிப்புப் பணியை போன ஆட்சி செய்ததா இல்லையா என்பதல்ல கேள்வி – ஒவ்வொரு நாளும் மலம் கழித்து குடலை சுத்தம் செய்வதைப் போல் இந்தப் பணி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடந்தாக வேண்டும்.

அ.தி.மு.க அரசு பதவியேற்ற இந்த நான்காண்டுகளில் இது எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது, நீர் நிலைகளில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து பின்னர் பார்ப்போம். உடனடி புரிதலுக்காக, ப்ரண்ட்லைன் பத்திரிகை செய்தியில் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளர் ஒருவர் தெரிவித்த தகவலின் படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியின் சார்பாக கால்வாய் தூர்வாறுவது சீரமைப்பது போன்ற வேலைகளைச் செய்யாமலேயே அ.தி.முக கவுன்சிலர்கள் போலியான பில்களை சமர்பித்து மேற்படி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைக் கொள்ளையடித்துள்ளனர்.

ஆக, சென்னை மாநகரை ஒரு பேரழிவிற்குள் தள்ளுவதற்கான முன்தயாரிப்புகளை ஆளும் கட்சியினர் ஏற்கனவே செய்து வைத்திருந்த நிலையில் தான் வரலாறு காணாத பருவமழை துவங்கியது.

நவம்பரில் கொட்டித் தீர்த்த பருவமழை குறிப்பாக செம்பரம்பாக்கம் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகளவாக இருந்தது. இதன் விளைவாக, செம்பரம்பாக்கம் அணை அம்மாத துவக்கத்திலிருந்து மிக வேகமாக நிரம்பத் துவங்கியது. நவம்பர் 16, 17 தேதிகளில் அணை அதன் முழுக் கொள்ளளவான 3.5 டி.எம்.சி அளவை அடைகிறது. இந்நிலையில் இந்த அணையின் உபரி நீர் எவ்வாறு திறக்கப்பட்டது என்பதை கீழே காணலாம்.

(குறிப்பு: கூசெக் = Cusecs ie., Cubic feet per second கூசெக் என்பது ஒரு வினாடிக்கு எவ்வளவு நீர் பாய்கிறது என்பதைக் குறிக்கும் அளவை.)

நவம்பர் 16 : நீர் வரத்து 9717 கூசெக் – வெளியேற்றியது 64 கூசெக்

நவம்பர் 17 : நீர் வரத்து 12031 கூசெக் – வெளியேற்றியது 18000 கூசெக்

நவம்பர் 18 : நீர் வரத்து 4247 கூசெக் – வெளியேற்றியது 800 கூசெக்

நவம்பர் 19 : நீர் வரத்து 1626 கூசெக் – வெளியேற்றியது 500 கூசெக்

நவம்பர் 20 : நீர் வரத்து 3798 கூசெக் – வெளியேற்றியது 4000 கூசெக்

நவம்பர் 21 : நீர் வரத்து 2178 கூசெக் – வெளியேற்றியது 2000 கூசெக்

நவம்பர் 22 : நீர் வரத்து 1460 கூசெக் – வெளியேற்றியது 1500 கூசெக்

நவம்பர் 23 : நீர் வரத்து 3649 கூசெக் – வெளியேற்றியது 4000 கூசெக்

நவம்பர் 24 : நீர் வரத்து 5842 கூசெக் – வெளியேற்றியது 6000 கூசெக்

நவம்பர் 25 : நீர் வரத்து 5629 கூசெக் – வெளியேற்றியது 5000 கூசெக்

நவம்பர் 26 : நீர் வரத்து 2165 கூசெக் – வெளியேற்றியது 2500 கூசெக்

நவம்பர் 27 : நீர் வரத்து 1100 கூசெக் – வெளியேற்றியது 1000 கூசெக்

நவம்பர் 28 : நீர் வரத்து 610 கூசெக் – வெளியேற்றியது 500 கூசெக்

நவம்பர் 29 : நீர் வரத்து 510 கூசெக் – வெளியேற்றியது 570 கூசெக்

நவம்பர் 30 : நீர் வரத்து 500 கூசெக் – வெளியேற்றியது 600 கூசெக்

டிசம்பர் 01 : நீர் வரத்து 960 கூசெக் – வெளியேற்றியது 900 கூசெக்

டிசம்பர் 02 : நீர் வரத்து 26000 கூசெக் – வெளியேற்றியது 29000 கூசெக்

டிசம்பர் 03 : நீர் வரத்து 10200 கூசெக் – வெளியேற்றியது 11000 கூசெக்

டிசம்பர் 04 : நீர் வரத்து 4900 கூசெக் – வெளியேற்றியது 5000 கூசெக்

டிசம்பர் 05 : நீர் வரத்து 3493 கூசெக் – வெளியேற்றியது 3500 கூசெக்

டிசம்பர் 06 : நீர் வரத்து 2363 கூசெக் – வெளியேற்றியது 3000 கூசெக்

(ஆதாரம்: இந்து பத்திரிகை செய்தி இணைப்பு கீழே)

மேலே உள்ள விவரங்களின் அடிப்படையில் இருந்து பார்த்தாலே சென்னை நகரத்திற்கு நேர்ந்த அழிவிற்கான அடிப்படை என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடியும். நவம்பர் 16-ல் வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு அதற்கு மறுநாள் வெளியேற்றப்பட்ட நீரின் அளவையும் நவம்பர் 27-ல் இருந்து டிசம்பர் 1-ம் தேதி வரை வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு டிசம்பர் 2-ம் தேதி வெளியேற்றப்பட்ட நீரின் அளவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டதல்ல என்பதையும் நிர்வாக சீர்குலைவினால் செயற்கையாக ஏற்பட்படுத்தப்பட்டதே என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு குறித்தே முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் தான் கிடைக்கின்றன. 29000 கூசெக் நீர் வெளியேற்றப்பட்டது என்றும் 33,500 கூசெக் நீர் வெளியேற்றப்பட்டதென்றும் இருவிதமான தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்களின் கணிப்பின் படி அரசு சொல்லும் அளவை விட இரண்டு மடங்கு நீர் அடையாறில் ஓடி இருக்கலாம் என்கின்றனர். மேலும் அடையாறு நதியோடு செம்பரம்பாக்கம் ஏரி நீர் தவிர்த்து மேலும் சுமார் 40 சிறிய ஏரிகளில் இருந்து வரும் நீரும் சேர்ந்து தான் சென்னையை வந்து அடைகின்றது.

இதே காலகட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மட்டுமின்றி மற்ற அடையாறு நதியின் கலக்கும் மேலும் 200 ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பொழிந்துள்ளது என்பதையும் சேர்த்துக் கணக்கிட்டால் டிசம்பர் 2ம் தேதி அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படியே செம்பரம்பாக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவோடு மற்ற ஏரிகளின் உபரி நீரும் கலந்துள்ளது. குறிப்பாக அத்தனூர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட 5000 கூசெக் நீரும் அடையாறில் கலந்துள்ளது. இதன் காரணமாகத் தான் சென்னை நகரமே வெள்ளக்காடானது.

ப்ரண்ட்லைன் செய்திக் கட்டுரையின் படி, அடையாறில் வழக்கத்திற்கும் மேலாக சிறிய அளவு அதிக தண்ணீர் ஓடினாலே அதன் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதை பொதுப்பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவர். அப்படியிருக்கும் போது, ஒரே நாளில் திடீரென மிக அதிகளவில் தண்ணீரைத் திறந்து விடும் முட்டாள்தனத்தை ஏன் செய்தனர்?

யார் இதற்குக் காரணம்?

– தொடரும்

– தமிழரசன்

(மேலும் படிக்க)

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. டிச 1 ஆம் தேதி..செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குறைந்தது 60,000 கன அடிகள் உபரி நீருக்கு வெளியேற்றப்பட்டு அடையாற்றில் விடப்பட்டது என்பதுதான் உண்மை.. இந்த காணொளி நவ 16 காலை 10.51க்கு மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு திருபெருமந்தூர் ஏரி. பிள்ளைபாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளின் உபரி நீரை கொண்டுவரும் சவுத்திரி கால்வாய் இடையில் உள்ள வெங்காடு ஏரி அருகில் உள்ள இரு கல் நீர்போக்கிகளில் ஏற்பட்ட உடைப்பு பெருவெள்ளம். எடுக்கப்பட்டது.. இந்த வெள்ளம் அமரம்பேடுக்குள் நுழைந்து பூந்தண்டலம் ,, கருணாச்சேரி வழியாக திருமுடிவாக்கம் சிப்காட், கிஷ்கிந்தா, முடிச்சூர் சென்று அடையாற்றில் கலக்கிறது.. அன்று10,000 கன அடிகளுக்கு மேல் சென்ற இந்த வெள்ளம் திருமுடிவாக்கம் சிப்காட்,, முடிச்சூர், வரதராஜபுரம் மூழ்க காரணம்…..டிச1 ஆம் தேதி கனமழையிலும் இந்த பெருவெள்ளம் சென்று இருக்கும்… 30,000 கன அடிகள் நீர் பாய்ந்து சென்று இருக்கும்.. இந்த வெள்ளம், செம்பரம்பாக்கம் கலங்கல் திறப்பு, அத்தனூர் ஏரி, நந்திவரம் ஏரிகள் உடைப்பு ..இணைந்ததால் டிச1 அடையாற்றில் ஒரு இலட்சம் கன அடிகள் வெள்ளம் சென்று பேரழவை ஏற்படுத்தியது..பாலாறு வடிகால் பொதுபணித்துறை அதிகாரிகளுக்கு இது தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை..https://www.youtube.com/watch?v=xFA_UoP6kqQ

  2. அதிமுக ,திமுக,காங்கிரஸ்,பாரதிய ஜனதா அரசியல் வாதிகள் கொள்ளை அடிச்சி வச்சிருக்கிற பணத்தயெல்லாம் பிடுங்கி (அதான் சுவிசு வங்கில இருக்குதே )அமெரிக்கா நகரங்கள போல கிரவுண்டுக்கு கீழே கால்வாய் அமைத்து சாப்வேர் மூலம் கம்யூட்டர்ல நீர் மேலாண்மை செய்யும் திட்டங்களை கொண்டு வரலாம் அதுதான் சரியாக அமையும் அத விட்டுட்டு அந்த ஏரி ஆக்கிரமிப்பு இந்த ஏரி ஆக்கிரமிப்பு ஆக்கிரமித்தது முதலாளிகளா மக்களானு பேசி பிரயோசம இல்ல, அம்மா ஆணைக்கு இணங்கிதான் எங்க ஊருக்கு பக்கதுல உள்ள சின்ன டேம திறந்து விட்டதா பேப்பருல போடுரானா ஆனா செம்பரபாக்கம் ஏரில கணக்குல வராத கன அடி நீரை திறந்து விட்ட போது மட்டும் அம்மா பேரு மிஸ்ஸிங் ,சென்னை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் எலக்சன் வரப்போகுது அம்மா அழலாம் பீலின் காட்டலாம் முந்தானையில் மூக்கு சீந்தலாம் இதை எல்லாம் பார்த்து ஏமாறாமல் சரியான அடி கொடுக்க வேண்டும் தேர்தலில்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க