பாஜக மோடி ஆட்சியின் எட்டாண்டுகால கார்ப்பரேட் கரசேவை: வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி!

2009-ஆம் ஆண்டில் தனித்தனியான 11 நிறுவனத்தை மட்டுமே வைத்திருந்த அதானி, கடந்த 10 வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதிலும், கடந்த 5 வருடத்தில் மட்டும் 35 நிறுவனங்களை வாங்கப்பட்டுள்ளன.

டந்த 5 வருடத்தில் வங்கியில் வழங்கப்பட்ட கடன்தொகையில் வசூலிக்க முடியாத 10.09 லட்சம் கோடி வாராக்கடனை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். மேலும், இந்த வாராக்கடன்களுக்கு காரணமான 3,312 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேசி மழுப்பியிருக்கிறார். கார்ப்பரேட் சேவகர் மோடியின் எட்டாண்டுக்கால ஆட்சியில் மட்டும் 12 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2008-2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் வாராக்கடன் தள்ளுபடி 32 ஆயிரம் கோடி, 2014-2022 வரையிலான பாஜக ஆட்சியியில் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடியாகும். சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வாராக்கடன் 365 சதவிதம் அதிகரித்துள்ளது எனவும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியை ஒப்பிடுகையில் 5 லட்சம் கோடியிலிருந்து 18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும்” குற்றம்சாட்டினார்.

மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கும்மேல் வங்கி மோசடி நடந்துள்ளது. 2015-2019 வரை மட்டும் வங்கிக்கடன் மோசடி செய்த 38 பெருமுதலாளிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி போன்ற மோடிக்கு நெருக்கமான குஜராத்திகளும் அடங்குவர்.

படிக்க : ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

பொதுத்துறை வங்கிகளில் 2019-2020-ஆம் ஆண்டில் 4,410 கடன் மோசடிகளும், 2020-2021-ஆம் ஆண்டில் 2,903 மோசடிகளும் நடைபெற்றுள்ளன. தனியார் வங்கிகளில் 2019-2020-ஆம் ஆண்டில் 3,065, 2020-2021-ஆம் ஆண்டில் 3,710 மோசடிகளும் நடந்துள்ளன. இந்த லட்சனத்தில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க வங்கிகள் கடன் கொடுப்பதும் பின்னர் வசூலிக்க முடியவில்லை எனக்கூறி வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்வதும் பல வருடங்களாக நடக்கும் கேலிக்கூத்துதான். அது, மோடி ஆட்சியின் தீவிர கார்ப்பரேட் சேவையின் விளைவுதான் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி. உலக அளவில் வாராக்கடன் விகிதத்தில் இந்தியா இரண்டாவது இடம்.

மறுகாலனியாக்க கொள்கை அமல்படுத்திய கடந்த 30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் அறிக்கையின்படி, 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் யாருமில்லை, 2000-ஆம் ஆண்டில் எண்ணிக்கை 9 பேர், 2015-ஆம் ஆண்டில் 90 பேர், 2022-ஆம் ஆண்டில் 166 பேர் என இந்திய பணக்காரர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக, கோவிட் நெருக்கடி காலங்களில் உயர்மட்டத்தினர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது (2020 மார்ச் முதல் 2021 நவம்பர் வரையுள்ள 20 மாதங்களில் இந்தியாவில் கோடிஸ்வரர்களின் சொத்து 23.14 லட்சம் கோடி) என ஆக்ஸ்பார்ம் அறிக்கை கூறுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி, “இந்தியாவில் அமைப்பு சார்ந்த துறையில் தொழிலாளர்களில் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது” என கூறுகிறது. சில நிறுவனங்களில் சி.இ.ஓ.க்கள் கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில், மாதம் ரூ.15,000 குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களும் உள்ளனர். சில தனியார் நிறுவனங்களில் ஊதிய இடைவெளி 1000 சதவிதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஊதிய இடைவெளியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இவை, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதன் விளைவே.

***

இன்று உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அதானியும், மோடி அரசும் கூட்டணி அமைத்து நாட்டை கொள்ளையிட்டு வருகின்றனர். கிராமத்தில் இருக்கும் சாமானியர் ஒருவர் கூட “அதானிக்கே எல்லாம் டெண்டரும் கொடுக்கிறாங்க” என்று கூறுவது மோடி அரசு அம்பலப்பட்டு நிற்பதற்கு மிக சிறந்த உதாரணம்.

2001-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த காலத்திலிருந்து மோடிக்கும் அதானிக்குமான உறவு தொடங்கிவிட்டது. 2009-ஆம் ஆண்டில் தனித்தனியான 11 நிறுவனத்தை மட்டுமே வைத்திருந்த அதானி, கடந்த 10 வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதிலும், கடந்த 5 வருடத்தில் மட்டும் 35 நிறுவனங்களை வாங்கப்பட்டுள்ளார்.

வங்கியில் உள்ள மக்கள் பணத்தை கார்ப்பரேட் முதலைகளுக்கு கடனாக மோடி அரசு வாரியிரைத்து வருகிறது. அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது போலவே கடனும் உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் அதிக கடன் சுமை கொண்டதாக அதானி குழுமமே உள்ளது. 2022 மே மாத கணக்கின்படி, அதானிக்கு இருக்கும் கடன் 2 லட்சத்து 22 ஆயிரம் கோடி.

ஒருபக்கம் அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க கடுமையாக உழைக்கும் மோடி அரசு, மறுபக்கம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு என்ற பெயரில் சிறு, குறு தொழிலை அழிப்பதும், சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீது வரி விதிப்பது மூலமாக சட்டப்பூர்வமாக பகற்கொள்ளையை அரங்கேற்றி வருகிறது.

படிக்க : கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

தமிழகத்திலும் திராவிட மாடல் அரசும் பள்ளி கல்வியில் தனியாரை நுழைக்க இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம் போன்ற கவர்ச்சித் திட்டங்களை கொண்டுவருவது, குடிநீர் வழங்குவதில் சூயஸ் என்ற தனியார் கொள்ளைக்கு ஆதரவு கொடுப்பது, மாநகராட்சி நிரந்தர ஊழியர்களின் பணியை ஒழித்து ஒப்பந்த ஊழியர் முறைக்கு மாற்றுவது, பள்ளி, கல்லூரி நிரந்தர ஆசிரியர்கள் பணியை ஒழித்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என ஒவ்வொரு துறையிலும் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசும், மாநில அரசும் அனைத்து துறைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் அதேவேலையில், நாட்டை அடிமையாக்கும் தனியார்மய – தாராளமய –உலகமய – மறுகாலனியாக்க கொள்கைக்கெதிரான போராட்டங்கள் அன்றாடம் நடப்பதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இவை கட்டாயம் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக்கு கொண்டுசெல்லும் என்பது யாவரும் அறிந்ததே.

இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று யாரும் கனவுக்கான முடியாது. சமீபத்தில் பொருளாதர நெருக்கடியால் இலங்கை மக்களின் எழுச்சி, மங்கோலியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம், ஈரானில் மத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என உலகெங்கும் அரசுக்கு எதிராக நடக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நமக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றன.

காவி – கார்ப்பரேட் கும்பல் மக்களிடம் அம்பலப்பட்டு வருகின்றனர். உழைக்கும் மக்களின் போராட்டங்களை கட்டியமைத்து வளர்த்தெடுப்பதே அடுத்தக்கட்ட நகர்வாக இருக்க முடியும்.

குழலி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க