உலக அளவில் 91 நாடுகளின் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள், கார்ப்பரேட் முதலாளிகள், திரைப் பிரபலங்கள் போன்ற பலர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் தங்கள் சட்டவிரோத சொத்துக்களை முதலீடு செய்திருப்பதும், நிறுவனங்களை உருவாக்கி வைத்திருப்பதும் தற்போது கசிந்துள்ள “பாண்டோரா பேப்பர்ஸ்” எனப்படும் ஆவணங்களால் அம்பலமாகியுள்ளது.
பண்டோரா பேப்பர்ஸ் என்பது உலகளாவிய 14 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 1.19 கோடி ஆவணங்களின் தொகுப்பாகும். இதற்காக 117 நாடுகளை சேர்ந்த 150 பத்திரிகை ஊடகங்களின் 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு அதனை புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு- ICIJ (International Consortium of Investigative Journalists) ஆவணமாக “பாண்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆணவங்களை உறுதிபடுத்தும் பணியில் இந்தியாவின், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் பங்கெடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரமுகர்களின் யோக்கியதையை ஆணவங்களாக வெளியிட்டு வருகிறது. “தொழிலதிபர்கள் தங்கள் சொத்துக்களின் கணிசமான பகுதியை வரிப் பாதுகாப்புத் தீவுகளில் உள்ள நிறுவனங்களிலும், வரி விதிக்கப்படாத நாடுகளிலும் குவித்திருக்கிறார்கள்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
படிக்க :
♦ பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
♦ இந்திய இராணுவத்தின் தேசப்பக்தி பனாமாவிலா ? சியாச்சினிலா ?
இந்த வரி ஏய்ப்பு கருப்புப் பண கிரிமினல்கள், தீவுகளில் அறக்கட்டளைகளை (நிறுவனங்களை) துவங்குவதற்கு பல நோக்கங்கள் இருக்கின்றன. தங்களின் அடையாளங்களை மறைத்து, தொலைத்தூரத்தில் சொத்துக்களை முதலீடு செய்வதன் மூலம் தங்கள் நாட்டு அரசுகளிடமிருத்து தப்பித்துக் கொள்ள முடியும். தாம் இருக்கும் சொந்த நாட்டில் தொழில் நிறுவனங்களாலும், பங்குச் சந்தைகளாலும் உருவாகும் சொத்துக்களை அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றி, தங்கள் பினாமி பெயர்களில் பதுக்கி வைப்பதற்கு இந்த அறக்கட்டளைகளை (நிறுவனங்களை) பயன்படுத்துகிறார்கள்.
இவை சமோவா, பெலிஸ், பனாமா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஹாங்காங், சிங்கப்பூர், நியூசிலாந்து, அமெரிக்காவின் தெற்கு டகோட்டா ஆகிய வரிகுறைவு மற்றும் வரி இல்லாத நாடுகளிலும் தீவுகளிலும்தான் பெரும்பாலும் இந்த அறக்கட்டளைகள் (நிறுவனங்கள்) அமைக்கப்படுகின்றன.
000
இந்திய சட்டங்கள், அறக்கட்டளைகளை நடத்துவதற்கு அங்கீகாரம் வழங்குதோடு, வரி அதிகார வரம்புக்குள் நிறுவிக் கொள்ளலாம் என்கிறது. மேலும், இந்திய அறக்கட்டளை சட்டம் 1882 (indian trust act 1882) அறக்கட்டளையில் நிதியை முதலீடு செய்வதற்கான சில கட்டுப்பாடுகளை கடந்த 2013-ம் ஆண்டும் நீக்கியுள்ளது இந்திய அரசு. எனவே, இந்தியர்கள் உலகின் எங்கு வேண்டுமானாலும் அறக்கட்டளைகளை அமைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும், இதுபோன்ற வெளிநாடுகளில் அல்லது தீவுகளில் இருக்கும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், சொத்துக்களை பதுக்கி வைப்பதற்காவும், சில குற்றங்களை செய்வதற்காவும் தான் பயன்படுத்தப் படுகின்றன. இந்த நிறுவனங்கள் யாருடையது என்று தெரியாத அளவிற்கு ரகசியத் தன்மையோடு இருக்கின்றன. மேலும், அறக்கட்டளையின் வருமானத்திற்கு வரிகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை என்பதால், தங்கள் முறைகேடான சொத்துக்களை இதுபோன்ற அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களாக மாற்றிக் கொள்கின்றனர் பணமுதலைகள்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ், ஒரு தனி நபர் வருடத்திற்கு 250,000 டாலர்கள் (ரூ.1,86,35,000) மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியும். இதையும் தாண்டி பல தில்லுமுல்லுகளின் மூலம் தங்களின் பணத்தை கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பதுக்கிறார்கள் இந்தக் கிரிமினல்கள்.
000
இந்தியாவில் மட்டும் 380 நபர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது “பண்டோரா பேப்பர்ஸ்” மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ரிலையன்ஸ் ADAG முதலாளி அனில் அம்பானி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் சகோதரி மற்றும் பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தர் ஷாவின் கணவர், ஸ்பெக்ட்ரம் ‘புகழ்’ நிரா ராடியா உட்பட 60 முக்கிய நபர்களின் ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.
