“பண்டோரா ஆவணங்கள்” : கருப்புப் பண மாஃபியாக்களின் பிறப்பிடம் உலக முதலாளித்துவம்!
வாஷிங்டன் போஸ்ட், பி.பி.சி., தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலான உலகின் பிரபலமான 150 ஊடகங்களைச் சேர்ந்த 600−க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியிருக்கும் “சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு” (International Consortium of Investigative Journalists (ICIJ − ஐ.சி.ஐ.ஜே) வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்து சொத்து குவித்துள்ள ‘பிரபலமானவர்களின்’ பட்டியலை அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னாள் − இந்நாள் அதிபர்கள், பிரதமர்கள், உயர் அதிகாரிகள், பெரும் கோடீஸ்வரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் எவ்வாறு தாங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடித்துச் சேர்த்த கருப்புப் பணத்தை சொந்தப் பெயரிலும் பினாமி பெயரிலும் வெளிநாடுகளில் சொத்துக்களாக வாங்கிக் குவித்துள்ளார்கள் என்பதை அப்புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள “பண்டோரோ பேப்பர்ஸ்” அம்பலப்படுத்தியிருக்கிறது.
2016-ஆம் ஆண்டில் பனாமா பேப்பர்ஸ், 2017-ஆம் ஆண்டில் பாரடைஸ் பேப்பர்ஸ் என இதற்கு முன்னரும் இதேபோல சட்டவிரோதமாக சொத்து சேர்த்த கருப்புப் பண முதலைகளைப் பற்றிய ஆவணங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பண்டோரா ஆவணங்கள் அவற்றைவிட பலமடங்கு விரிவான விவரங்களை − மோசடிகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சுமார் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.
“பண்டோரா” என்ற பெயரில் இந்த ஆவணங்கள் வெளியாகியிருக்கிறது. விவிலியத்தில் கூறப்படும் உலகின் முதல் பெண்ணான ஏவாளைப் போல கிரேக்க புராணங்களில் கூறப்படும் உலகின் முதல் பெண்ணின் பெயர்தான் பண்டோரா. சியூஸ் எனும் கடவுள் பண்டோராவுக்கு ஒரு ஜாடியை பரிசளித்து அதை எப்போதும் திறக்கக் கூடாதென்று சொல்கிறார். ஆனால் ஆர்வமிகுதியால் பண்டோரா அந்த ஜாடியைத் திறக்கிறாள். ஜாடிக்குள் அடைபட்டிருந்த தீமைகள் அனைத்தும் உலகில் பரவிவிடுகின்றன. இக்கதையை ஒட்டி, ஏதேனும் ஊழல் அல்லது இரகசியங்கள் வெளிப்படும் போது “பண்டோரா பெட்டி திறந்துவிட்டது” என்று சொல்லும் வழக்கம் தோன்றியது.
படிக்க :
பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?
பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
தற்போது “பண்டோரா” பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருப்பது உலகப் பிரபலங்களின் ஊழல் மட்டுமல்ல. முதலாளித்துவத்தின் யோக்கியதையையும்தான். ஊழல், மோசடி, திருட்டு, கருப்புப்பணம் என அனைத்திற்கும் ஊற்றுக்கண் முதலாளித்துவம்தான் என்பதை பனாமா, பாரடைஸ் ஆகிய ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. தற்போது பண்டோரா ஆவணங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் கருப்புப் பணப் பரிவர்த்தனைக்கான கட்டமைப்பே, முதலாளித்துவம் பெற்றெடுத்த கள்ளக் குழந்தைதான்.
ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
பண்டோரா ஆவணங்கள், இதுநாள் வரை ஊர்மெச்சும் உத்தமர்களாக பேசப்பட்ட ‘பிரபலங்களை’ ’அம்மணமாக்கி’யிருக்கிறது. முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களும் அரசு அதிகார வர்க்கமும் முதலாளிகளுக்குச் சேவை செய்து அவர்களிடம் கிம்பளம் பெறும் பேர்வழிகள்தான் என்ற உண்மையையும் வெளிக் கொணர்ந்திருக்கிறது.
“ஊழலை ஒழிப்பேன்”… “வெளிப்படையான ஆட்சியைக் கொண்டுவருவேன்” என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலின்ஸ்கி, கென்யா ஜனாதிபதி உகுறு கென்யாட்டா, செக் நாட்டு அதிபர் ஆண்ட்ரே பாபிஸ், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் முதலானோரை, வரியில்லா புகலிடங்களில் அவர்கள் சட்டவிரோதமாக குவித்துள்ள சொத்துக்களின் விவரங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தி இருக்கிறது பண்டோரா ஆவணங்கள். இவர்களுள் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், வரியில்லா புகலிடங்களை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வாய்கிழியப் பேசி வந்தவர் என்பதுதான் இதில் உள்ள நகைமுரண்.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா, அஜர்பெய்ஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், கட்டார் சர்வாதிகாரியின் மனைவி மொஸா பின்ட் நாசர், உக்ரைன் நாட்டின் பெரும் பணக்காரர் இகோர் கொலோமொவ்ஸ்கி, மாபியா கும்பல் தலைவன் ரபேல் ஆமட்டோ, ஜெர்மனியைச் சேர்ந்த மாடலான கிளாடியா ஷிபர், கொலம்பியாவின் பெண் பாடகர் சகீரா, இலங்கை முன்னாள் பிரதமர் ராஜ பக்ஷேவின் மைத்துனர் நடேசனின் மனைவி − என இப்பட்டியல் நீண்டு செல்கிறது.
இப்பட்டியலில், இந்திய முதலைகளும் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறார்கள். வங்கிகளில் வாங்கிய ரூ.2,672 கோடி கடனைக் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர் நிலேஷ் பரேக், பஞ்சாப் தேசிய வங்கியில் தான் வாங்கிய கடனைத் திருப்பி கட்டாமல் நாட்டைவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி, மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள சில் ஆஸ்வால், ரூ.88,000 கோடி கடனை திருப்ப செலுத்தாமல் ஏமாற்றிய கபில் வதவான் மற்றும் தீரஜ் வதவான், வங்கிகளுக்கு மஞ்சள் நோட்டிஸ் கொடுத்த ‘ரஃபேல்’ இழிபுகழ் அனில் அம்பானி, கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் − என பலரும் வரியில்லா புகலிட நிறுவனங்களின் அதிபர்திகளாக உள்ளனர்.
அண்மையில், உலக வங்கி செய்துள்ள ஒரு மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் வரி ஏய்ப்புச் செய்யப்படுகிற தொகை சுமார் 6௦௦ பில்லியன் டாலர். இது, அமெரிக்க அரசின் மொத்த வரி வருமானத்தில், அந்த நாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தும் வரியைப்போல மூன்று மடங்கு. இந்திய மதிப்பில் சொன்னால், இது சுமார் ரூ.45 லட்சம் கோடிக்கு சமம். இந்திய அரசின் 202௦-ஆம் ஆண்டுக்கான ஒட்டு மொத்த வரி வருமானமே 23.61 லட்சம் கோடியாக உள்ள நிலையில், இது இந்தியாவின் வரி வருமானத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
வரியில்லாச் சொர்க்கங்கள் எனும் உலகளாவிய கருந்துளைகள்
வரி ஏய்ப்பு உள்ளிட்ட சட்டவிரோதமான வழிகளில் சொத்து சேர்ப்பவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை பிற நாடுகளுக்கு பாதுகாப்பாக எப்படி கடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு வரியில்லா புகலிட நாடுகளே பதிலாக அமைகின்றன. உலகிலுள்ள இருநூறு நாடுகளைச் சேர்ந்த “முக்கியஸ்தர்கள்” சுமார் 29,000 நிறுவனங்கள் மூலம் தங்களது கருப்புப் பணத்தை வரியில்லா சொர்க்க நாடுகளில் பதுக்கியிருப்பதாக பண்டோரா ஆவணங்கள் கூறுகின்றன.
உலகின் சில நாடுகள் மற்றும் பல நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகள், தங்களது நாட்டில் / பகுதிகளில், பதிவு செய்துள்ள நிறுவனங்களின் வருமானத்திற்கோ, அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதிக்கோ, அவற்றின் பரிவர்த்தனைக்கோ வரி விதிப்பதில்லை அல்லது மிகவும் குறைவான வரியையே விதிக்கின்றன. மேலும், தங்களது நாட்டில் / பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களையோ, அவர்களின் சொத்து மதிப்புகளையோ பிற நாடுகளுக்கு கொடுப்பதில்லை. இதுபோன்ற நாடுகள் / பகுதிகள் தான் “வரியில்லா புகலிடங்கள்” (Tax Havens) அல்லது “வரியில்லா சொர்க்கங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
“உலகின் பெரும் பணக்காரர்கள், அதிகாரமிக்கவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் வரி ஏய்ப்பின் மூலம் அடிக்கும் கருப்புப் பணத்தை எந்தவிதமான சட்டச் சிக்கல்களும் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ளும் உலகளாவிய கருந்துளைகளாக (Black holes) வரியில்லா புகலிடங்கள் இருக்கின்றன” என முதலாளித்துவ பத்திரிகைகளே வருணிக்கின்றன.
உதாரணத்திற்கு, பனாமா நாட்டில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரி, விற்பனைவரி போன்றவற்றை பனாமா அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. பனாமாவில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளராக உள்ள வெளிநாட்டவர் அல்லது தனிநபர்களின் விவரங்களை அரசுக்கு கொடுக்கத் தேவையில்லை; சர்வதேச வெளிப்படைத்தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாததால், அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்துள்ளவர்களைப் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுமில்லை.
சட்ட விரோத நிதியை சட்டப்பூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். அதாவது கருப்பை வெள்ளையாக மாற்றுவது. சிறந்த வரியில்லாப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா, நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். ஆகவேதான் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நாடாக பனாமா உள்ளது.
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாகவும், முதலாளித்துவம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிதி சம்பந்தப்பட்ட சட்ட ஓட்டைகள் தொடர்பாகவும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி கோடிகளைச் சுருட்டுவதற்கென்றே பல வல்லுனர்களை பணிக்கமர்த்தியிருக்கும் பல்வேறு நிறுவனங்கள் பனாமாவில் இயங்கிவருகின்றன.
பனாமா மட்டுமல்ல, பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேமன் தீவுகள், வெர்ஜின் தீவுகள், ஜெர்சி தீவுகள்; அமெரிக்காவின் டகோட்டா, டெக்சாஸ் முதலான மாகாணங்களின் சில பகுதிகள்; சுவிட்சர்லாந்து, துபாய் முதலான நாடுகளின் சில பகுதிகள் என உலகில் மொத்தம் 133 வரியில்லா புகலிடங்கள் செயல்படுவதாக 2020-ஆம் ஆண்டில் வரி நீதி வலையமைப்பு (Tax Justice Network − TJN) என்ற சர்வதேச அமைப்பு கணக்கிட்டுள்ளது.
வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை
சொந்த நாடுகளில் சட்டவிரோதமாக சேர்க்கப்படும் கருப்புப் பணம், வெளிநாடுகளில் சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்றப்படுகிறது. இப்படி மாற்றப்படும் கருப்புப் பணத்தின் மதிப்பு 5.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து 32 லட்சம் கோடி டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடுகிறது சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு. மேலும், இந்தக் கருப்புப் பணம், ஏதேனும் ஒரு வரியில்லா புகலிடங்களில் சொத்துக்களாக முடங்கிவிடுவதில்லை. சட்டப்பூர்வ மூலதனமாக உருமாற்றம் பெற்று வேறு நாடுகளுக்கோ அல்லது அவை கொள்ளையடிக்கப்பட்ட நாடுகளுக்கே கூட செல்லலாம். அந்த மூலதனம் அங்கு குட்டிபோட்டு தன்னை மீண்டும் கருப்புப் பணத்தை உருவாக்கி இந்த வரியில்லா புகலிடங்களை நோக்கி பாயும்.
உதாரணமாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வரியில்லா புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்வர். வரியில்லா புகலிட நாடுகளில் இதற்கு இறக்குமதி வரி இருக்காது அல்லது மிகவும் குறைவு. பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள்.  இதனால், அந்த பினாமி நிறுவனம் பெரும் நிதியை இலாபமாகத் திரட்டும். பின்னர், இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்ற முகமூடியுடன் இந்தியாவிற்குத் திரும்பும். அன்னிய முதலீடுகளுக்காக ஏங்கிக்கிடக்கும் நம் நாட்டு அரசோ அம்முதலீடுகளுக்கு வரிச்சலுகைகளை வாரிவழங்கும். வரியில்லா புகலிடங்களின் மூலமாக மோசடியும், வரி ஏய்ப்பும் செய்து கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று.
ஏப்ரல் 2010−ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2019−ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்குள் பாய்ந்த அன்னிய முதலீடுகளில் 87 சதவிகிதம் உலகின் முன்னணியான பத்து வரியில்லா புகலிடங்களில் இருந்து வந்தவையே.
இப்படி, கருப்புப் பணத்தை சட்டப்பூர்வ மூலதனமாக மாற்றிக் கொடுப்பதன் மூலம் மிகப்பெரும் இலாபத்தை ஈட்டுபவர்கள் ஏதோ முகம் தெரியாத மாஃபியாக்கள் அல்ல; ஏற்கெனவே நாம் அறிந்த, உலகின் பிரபலமான பல்வேறு முன்னணி நிதி நிறுவனங்கள் தான். சரியாகச் சொல்லவேண்டுமெனில், நிதியாதிக்க மாஃபியா கும்பல்கள்.
ஹெச்.எஸ்.பி.சி. (HSBC), யூ.பி.எஸ். (UBS), சிட்டி குரூப் (Citigroup), பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America), ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு (Standard Chartered), ஐ.என்.ஜி. (ING), பி.என்.பி. பரிபாஸ் (BNP Paribas), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley), கோல்டுமேன் சாக்ஸ் (Goldman Sachs) முதலான முன்னணி வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சொந்தமாகவே பல்வேறு வரியில்லா புகலிடங்களை உருவாக்கி வைத்துள்ளன.
அமெரிக்காவின் மார்கன் ஸ்டான்லி என்ற பிரபல நிதி நிறுவனம், வெர்ஜின் தீவுகளில் உள்ள ஆல்கொகல் எனும் நிதி தரகு நிறுவனத்தின் மூலம் மட்டும் 312 வாடிக்கையாளர்களுக்கு கருப்புப் பணத்தை ஒளித்து வைப்பதற்கான இரகசிய நிறுவனங்களை அமைத்துக் கொடுத்து கொழுத்த ஆதாயமடைந்துள்ளது.
கள்ளத்தனமாக ஆயுதங்களைக் கடத்துபவர்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள், விபச்சாரத் தொழில் மாஃபியாக்கள் தமது சட்ட விரோத செல்வத்தை வரியில்லா புகலிட நாடுகளில் வைத்திருக்கின்றனர்.
ஒரு நாட்டின் அரசை தங்களுக்கு சாதகமாக வளைப்பதற்காக இலஞ்சம் கொடுக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியில்லா புகலிடங்கள் வசதியானவையாக இருக்கின்றன.  நைஜீரியாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்கு, உலக எரிபொருள் கார்ப்பரேட்டுகள் அந்நாட்டின் எரிபொருள் துறை அமைச்சருக்கு வரியில்லா புகலிடங்களில் ஏராளமான சொத்துக்களை இலஞ்சமாக வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு இதற்கு ஒரு சான்று.
இத்தகைய வரியில்லாச் சொர்க்கங்கள், ஏழை நாடுகளின் வளங்களையும், உழைக்கும் மக்களையும் ஏகாதிபத்தியங்கள் ஒட்டச் சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் ஆட்சியாளர்களையும் அந்நாடுகளின் அதிகாரிகளையும் இலஞ்சம் மூலம் குளிப்பாட்டுவதற்கு வசதியான தளங்களாகச் செயல்படுகின்றன.
முதலாளித்துவத்தை ஒழிக்காமல் கருப்புப் பண மாஃபியாக்களை ஒழிக்க முடியாது
நியாயமாக சமூகத்திற்கு சேரவேண்டிய சொத்துக்களை கருப்புப் பணமாக பதுக்கி ஒருசிலர் பருத்து கொழுத்துக் கொண்டிருக்கையில், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களோ நாள்தோறும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 40,000 குழந்தைகள் உலகெங்கிலும் பட்டினியால் மடிகின்றன. 2015-ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின்படி, 15 கோடி மக்கள் எந்தவகையான குடியிருப்பும் அற்ற பிளாட்பாரவாசிகளாகவும் 160 கோடி மக்கள் போதிய தங்குமிட வசதியற்றவர்களாகவும் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 9.2 சதவிகிதம் பேர் கொடுமையான வறுமை நிலையில் வாழ்கிறார்கள்.
இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சமீபத்தில் உலக பட்டினிக் குறியீட்டில், 116 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 101-ஆவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் தான் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பணக்காரர்களின் (பில்லினியர்களின்) எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது?
பணம் எங்கிருந்தும் காய்ப்பது இல்லை, உழைப்பிலிருந்து உற்பத்தியாகி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது. அது எங்கிருந்து எடுக்கப்பட்டு, எங்கு குவிக்கப்பட வேண்டும் என்பதை இந்த சமூகக் கட்டமைப்புதான் தீர்மானிக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பு பணத்தை வரியாக, விலைவாசி உயர்வாக, அடிமாட்டுக் கூலிக்கான உழைப்பாக என பல்வேறு வழிகளில் ஏழைகளிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு சலுகைகளாக, வங்கியின் வாராக் கடன்களாக அள்ளிக் கொடுக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பீடுதான் அதற்கு நிகழ்கால உதாரணம்.
படிக்க :
பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா !
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை
இந்த ஏற்றத்தாழ்வை உற்பத்தி செய்வதுதான் முதலாளித்துவம். இந்த ஏற்றத்தாழ்வில்தான் முதலாளித்துவம் வாழ்கிறது. ஏழைநாடுகளின் அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் ஊழல்படுத்தவும், அதன் மூலம் அந்த நாட்டை மொட்டையடிக்கவும் ஏகாதிபத்தியங்களுக்கு இந்தக் வரியில்லா சொர்க்கங்கள் அவசியப்படுகின்றன. இவை இல்லையெனில் அவை ஏகாதிபத்தியங்களாக நீடிப்பது கடினம்.
ஆகவே பனாமா, பாரடைஸ், பண்டோரா என இன்னும் எத்தனை ஆவணங்கள் கசிந்து வெளிவந்தாலும், எந்த நாட்டின் அரசும் இந்த வரியில்லாச் சொர்க்கங்களை கட்டுப்படுத்தவோ, மிரட்டி ஒடுக்கவோ போர் தொடுக்கவோ போவதில்லை. அவற்றால் செய்யவும் முடியாது. ஏனெனில் முதலாளித்துவத்தின் டிசைனே அப்படித்தான்.
முதலாளித்துவத்தை முறியடித்து உழைக்கும் மக்களின் தலைமையில் சோசலிசம் நிலைநாட்டப்பட்ட அன்றைய ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளிகள் கிடையாது. ஆகவே ஊழலும் கிடையாது, கருப்புப் பணமும் கிடையாது. ஏனெனில் அங்கு முதலாளித்துவம் கிடையாது.
சுரண்டலற்ற அத்தகைய சோஷலிச சமூகத்தை நிர்மாணிக்கும் திசையில், உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் நாடுகளில், புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுக்கும்போதுதான் கருப்புப் பண வரியில்லாச் சொர்க்கங்களின் ஊற்றான முதலாளித்துவத்தை முறியடித்து மக்களுக்கான நல்லரசை உருவாக்க முடியும். பண்டோரா ஆவணங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான்.

டேவிட்

2 மறுமொழிகள்

  1. கள்ளக் குழந்தை என்ற வார்த்தையை முற்போக்காளர்கள் ஆகிய நாம் பயன்படுத்தலாமா???

    • கள்ளக் குழந்தை என்ற பதம் மறைமுக விளைபொருள் என்ற அர்த்தத்தில் மட்டுமே கையாளப்பட்டிருக்கிறது. நீங்கள் சுட்டிக் காட்டிய பிறகு அந்த வார்த்தையின் பொருள் ஆணாதிக்கத்தன்மை கொண்டதாக இருப்பதை உணர்ந்துள்ளோம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! இனி வரும் காலங்களில் திருத்திக் கொள்கிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க