ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!
நவம்பர் 20-ஆம் தேதி அன்று, பழைய சோவியத் தயாரிப்பு ஏவுகணை ஒன்று போலந்தின் மீது விழுந்து சேதம் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரஷ்யா, நேட்டோ நாடு ஒன்றின் மீது ஏவுகணையை வீசியதன் மூலம் மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவைத்துவிட்டது என்ற பீதியூட்டும் பிரச்சாரம் மேற்கத்திய ஊடகங்களால் பரப்பப்பட்டது.
இப்பிரச்சாரத்திற்கு ரஷ்யா உடனடியாக மறுப்பு தெரிவித்தது. சற்றுநேரத்தில், அந்த ஏவுகணை உக்ரைனின் வான்வழித் தாக்குதலை சமாளிக்கும் ஏவுகணைதான் (சோவியத் தயாரிப்பு ஏவுகணை உக்ரைனிடமும் உண்டு) என்றும், இலக்கு தவறி போலந்தின் மீது விழுந்துள்ளதும் தெரியவந்தது. அதன்பிறகு, போலந்தின் அதிபர், நேட்டோவின் பொதுச்செயலர், அமெரிக்க அதிபர் பைடன் என பலரும் இந்நிகழ்வை ‘எதிர்பாராத விபத்துதான்’ என்று பேட்டிகொடுக்கத் தொடங்கினர்.
இந்நிகழ்வைப் போன்றே, பிரிட்டிஷ் செய்தி ஊடகம் ஒன்று, புடின் ஆட்சியைத் தூக்கியெறியுமாறும் புடினைக் கொல்லுமாறும் ரஷ்யாவில் இருக்கும் பாசிச ஆதரவு தத்துவவியலாளர் அலெக்சாண்டர் டுகின் அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியிட்டது; சிறிது நேரத்தில், தான் அவ்வாறு சொல்லவில்லை என்று டுகின் மறுப்பு தெரிவித்ததால், அது போலிச்செய்தி என்று அம்பலமானது.
உலக அளவில் பரவிய இந்த இரண்டு செய்திகளும் சில மணி நேரங்களில் உலகையே நிலைகுலைய வைக்கும் அளவிற்கான பெரும் ‘செய்தி அணுகுண்டு’களாக திகழ்ந்தன என்றால் மிகையில்லை. எந்நேரத்திலும் மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடலாம் என்று அஞ்சுவதற்கான சூழல் உண்மையிலேயே நிலவுவதுதான் இத்தகைய போலிச் செய்திகள் பரப்புவதற்கான அடிப்படையாக உள்ளது.
படிக்க : பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
சரிந்துவரும் தனது ஒற்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தனக்கு போட்டியாக வளர்ந்துவரும் ரஷ்யாவை அடக்குவதற்காகவும் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் உலகப் போராக வளர்வதற்கான சூழலை உருவாக்குகின்றன. தற்போது ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவித்திருப்பதானது இந்த உலகப்போர் அபாயத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவும் அமெரிக்காவும் அணுஆயுத நாடுகளாக இருப்பதால், உலகப் போர் மூண்டால் அது அணு ஆயுதப் போராகவும் இருக்கும் என்று உலகமே பீதியில் உறைந்துள்ளது.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நாய்ச்சண்டையில், உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் மீது அநீதியான பயங்கரவாதப் போர்கள் திணிக்கப்படுகின்றன. ரஷ்யாவும் உக்ரைனும் இப்போரில் நேரடியாக பாதிக்கப்படுகின்றன என்றாலும், இப்போர் சர்வதேச வர்த்தகத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் மறைமுகமாக எல்லா நாடுகளுமே பாதிப்புக்கு உள்ளாகின்றன.
ரஷ்ய-உக்ரைன் போர் என்பது ஏகாதிபத்தியங்கள் நம் மீது திணித்திருக்கும் பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் மட்டுமே. இன்னும் எண்ணற்ற தளங்களில், வடிவங்களில் ஏகாதிபத்தியங்களால் உழைக்கும் மக்கள் மீது பயங்கரவாதங்கள் ஏவப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் இனம்காணும்போதுதான், ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பு வீழ்த்தப்பட வேண்டிய அவசியத்தையும், அதை வீழ்த்தும் வழிவகைகளையும், சோசலிசத்தின் கட்டாயத்தையும் நாம் உணர்ந்திட முடியும்!
சூழலியல் அவசரநிலை: உயிர்கோளத்தையே அச்சுறுத்தும் பயங்கரவாதம்!
அண்மையில், அண்டாலாண்டிக் கண்டத்தில் உருகிவருகின்ற 120 கி.மீ. அகலம் கொண்ட ‘த்வைட்ஸ் பனிப்பாறை’ எதிர்பார்த்த காலத்தைவிட இன்னும் வேகமாக உருகி கரைந்துவிடும் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புவி வெப்பமயமாதலின் விளைவாக ஏற்பட்டிருக்கும் ‘காலநிலை மாற்றம்’ அல்லது ‘சூழலியல் அவசரநிலை’-இன் ஒரு அங்கம்தான் வடதுருவத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல். இமயமலையில் இருக்கும் பனி உருகி ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தைவிட அதிகமாக வெள்ளம் கரைபுரண்டோடுவதை நாம் பார்க்கிறோம்.
1992-இல் உருவாக்கப்பட்ட ’காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா-வின் கட்டமைப்பு மாநாட்டில்’ 165 நாடுகள் பங்கேற்றன. புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்கும் வகையில், பசுமைக் குடில் வாயுக்கள் மற்றும் கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டது. இம்மாநாட்டில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக தொழில்துறையில் முன்னேறிய நாடுகள் (ஏகாதிபத்திய நாடுகள்) செய்ய வேண்டிய கடமைகள், மற்ற நாடுகள் செய்ய வேண்டிய கடமைகளை வரையறுத்து ‘கியோட்டோ நெறிமுறைகள்’ உருவாக்கப்பட்டது.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையானது, 2030-ஆம் ஆண்டுக்குள் மேற்கண்ட வாயுக்களின் உமிழ்வை 50 சதவிகிதம் குறைக்க வேண்டுமென முடிவு செய்தது. இவ்வொப்பந்தம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு சார்பாக, ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் – கட்டுப்பாடுகளைக் குறைத்து கியோட்டோ நெறிமுறைகளை முறியடித்துவிட்டது.
பாரிஸ் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த எந்த நாடும் தயாராக இல்லை. இதற்காக ஆண்டுதோறும் நடக்கும் மாநாடுகள் எல்லாம் தோல்வியில் முடிவடைந்து வருகின்றன. அண்மையில், எகிப்தில் நடைபெற்ற சி.ஒ.பி-27 மாநாடு இன்னொரு அரட்டை மடமாகவே அமைந்திருந்தது.
மொத்தத்தில், உலக மக்கள் மீது தொங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
காலநிலை மாற்றத்தை நாம் எங்கோ தொலைதூர ஐரோப்பிய நாடுகளுக்கும் பனிமலைகளுக்கும் பொருத்திப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சென்ற மாதம் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்தபோது, என்ன நடந்தது என்பதைக் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன; வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைப்போலவே, இந்த ஆண்டு அனல் காற்று வீசியபோது ஆந்திரா போன்ற மாநிலங்களில் பகலில் வெயிலில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அடிக்கடி புயல் வெள்ளம் அதிகரித்து வருகிறது.
இவையெல்லாம், அவசரநிலை அறிவிப்புகள் அல்லவா? இவற்றை மீறினால் நாம் உயிரிழப்புகளைச் சந்திப்போம் என்பதுதானே எதார்த்த நிலைமை. இந்த எதார்த்த நிலைமைதான் பயங்கரவாதமாகும்.
இந்த பயங்கரத்தை நம்மீது திணித்த குற்றவாளிகள் யார்? வரைமுறையின்றி இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள்; ஏரி குளம் ஆறுகளை ஆக்கிரமித்தல், அவற்றை அழித்தல்; காற்று மாசுபாட்டுக்குக் காரணமான தொழிற்சாலை, வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு; கடற்கரைகள், காடுகளை அழித்து சொகுசு விடுதிகளைக் கட்டுதல் போன்ற பல நடவடிக்கைகளின் சூத்திரதாரிகள் யார். இவர்கள்தான் ஏகாதிபத்தியவாதிகள், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள். இவர்களின் லாபவெறியின் விளைவாகவே நம் மீது சூழலியல் அவசரநிலை என்ற பயங்கரவாதம் திணிக்கப்பட்டுள்ளது.
மறுகாலனியாக்க கொள்கைகளே பயங்கரவாதம்தான்!
’தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ என்ற புதிய தாராளவாதக் கொள்கை கொண்டுவரப்பட்டபோது, அதை நாம் பின் தங்கிய நாடுகளை மேல்நிலை வல்லரசுகளுக்கு அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்க கொள்கை என்றோம். அப்போது உலகெங்கும் ஆட்சியில் இருந்த தாராளவாதிகளும் போலி சோசலிஸ்டுகளும் தாம் நடைமுறைப்படுத்துவது “மனித முகம் கொண்ட தாராளமயம்” என்று வருணித்தார்கள். ஆனால் மறுகாலனியாக்கத்திற்கு மனித முகம் கிடையாது. ஏனென்றால், அது மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது.
வேலையின்மை, விலைவாசி ஏற்றம் போன்றவற்றில் மட்டுமல்ல, வரைமுறையற்ற இயற்கைச் சுரண்டலால், சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்; வனவிலங்குகளின் தாக்குதல் காட்டோர மக்களை அச்சுறுத்துகிறது. பழங்குடியினர் காடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர்; வேலை எப்போது பறிபோகும் என்று அச்சத்தில் உழல்கிறான் தொழிலாளி; கலவரங்களும், படுகொலைகளும் கும்பல் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் நடந்துவரும் விபத்துகள், கிரிமினல் குற்றங்கள், பாலியல் அடக்குமுறைகள் இந்த சமூகம், வாழத் தகுதியற்றதாக மாறிவிட்டதை உணர்த்துகின்றன.
இந்த சூழல்தான் மறுகாலனியாக்க பயங்கரவாதமாகும். பயங்கரவாதம் என்பது மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருப்பதாகும். எப்போது எங்குக் குண்டுவெடிக்கும் என்று பதட்டத்திலேயே மக்களை இருக்க வைக்க ஆங்காங்கே குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவது, கலவரங்களை நடத்துவது, இனப்படுகொலைகளை அரங்கேற்றுவது பயங்கரவாதத்தின் வழிமுறைகளாகும்.
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தையும் அமெரிக்காவின் கொள்கைகளையும் ஏற்கமறுக்கும் நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்துவருவதுதான் பயங்கரவாதப் போர்களாகும். நாடுகள் மீது பொருளாதாரத் தடை என்பதைவிட கொடிய பயங்கரவாதம் இருக்கிறதா? ஆப்கான், ஈராக், ஈரான், சூடான் என பல நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த குழந்தைகள், அப்பாவிகள் எத்தனை இலட்சம் பேர். இவையெல்லாம், பயங்கரவாதம் இல்லையா?
000
1990-களில் ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பு, கல்வி என்பது அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கும் சேவையாக இருந்தது. குடிநீர் அனைவருக்கும் பொதுவானது. ஆறுகள், சாலைகள் என அனைத்தையும் பொதுவாகவே பார்த்துப் பழகினோம். இவற்றை அடிப்படை உரிமைகள் என்றும் மக்களுக்கு இவற்றை இலவசமாக வழங்குவது அரசின் கடமை என்றும் முதலாளித்துவ அறிஞர்களும்கூட பேசினர். இவற்றை ‘நேருவின் சோசலிசம்’ என்று இந்தியாவிலும் ‘இளஞ்சிவப்பு சோசலிசம்’ என்று தென்னமெரிக்க நாடுகளிலும் பேசினார்கள்.
படிக்க : கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!
1990-களின் தொடக்கத்தில் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்டபோது அதை நாம் எதிர்த்தோம். தண்ணீரும் காற்றும் கூட தனியாராகப் போகிறது என்றோம். மெட்ரிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டபோது, இதனைக் கல்வி தனியார்மயமாக்கத்தின் ஆரம்பம் என்றோம், அரசு கல்வி வழங்குவதில் இருந்து விலகுகிறது என்றோம். பலரும் அப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டார்கள். இப்போது “குடிப்பதற்கு கேன் தண்ணீர் இல்லையா” என்று கேட்பது இயல்பாகத் தோன்றுகிறது, அரசுப் பள்ளிகளைவிட மெட்ரிக் பள்ளிகளை கவுரவமாகப் பார்க்கின்றோம். ஆம், சகல துறைகளிலும் தனியார்மயத்திற்கு நாம் அடிமைப்பட்டு விட்டோம்.
கல்வி, சாலை, மருத்துவம், தண்ணீர், காற்று அனைத்தும் தனி உடைமையாகி (முதலாளித்துவ உடைமை) மக்களிடமிருந்து அந்நியமாக்கப்படுகின்றன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் இவற்றை தொழில்களாக்கி வளைத்துப் போடுகின்றார்கள். இத்தகைய கார்ப்பரேட் கும்பல்களுக்கு சேவை செய்வதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அது மோடி.
மறுகாலனியாக்கம் ஏவியுள்ள நுகர்வுவெறிப் பண்பாடு!
1990-களுக்குப் பின்னர் வளர்ந்து வரும் மறுகாலனியாக்க பயங்கரவாத நிலைமைகளுக்கேற்ப, ஒவ்வொரு நாட்டிலும் பிற்போக்கு சக்திகள் வளர்ந்து வந்துள்ளன. இவையும் மறுகாலனியாக்கமும் இணைந்த ஆட்சி முறைதான் பலநாடுகளில் உள்ள பாசிசக் கட்சிகளின் செல்வாக்கும் அவற்றின் வளர்ச்சியுமாகும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசமும் அத்தகையதுதான். ஆகையால், மறுகாலனியாக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் எதிர்க்காமல் பாசிசத்தை எதிர்ப்பது என்ற ஒன்று இல்லை.
இந்த மறுகாலனியாக்க பயங்கரவாதத்தையும் பாசிசத்தையும் மக்கள் உணராமல் தடுப்பதற்கு கலை, இலக்கியம், பண்பாடு, மதம், கலாச்சாரம் என பல தளங்களில் வினைபுகிறது ஏகாதிபத்தியம். மது, கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் அதிகரித்திருப்பது ஒரு வடிவம் என்றால், நுகர்வுக் கலாச்சாரம் இன்னொரு வடிவமாகும்.
சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக அன்றாடம் புதுப்புது தொழில்நுட்பங்களைப் புகுத்தி சுரண்டுகிறது ஏகாதிபத்தியம். 2.0, 3.0 என்று இந்த வளர்ச்சிக்குப் பெயரிடுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் புதிய கருவியைப் புகுத்துகின்றனர். இம்மாற்றங்களைச் செய்யாமல் ஒரு நொடி கூட முதலாளித்துவத்தால் உயிர்வாழ முடியாது. நாளும் வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக தன்னியல்பாகவும் இந்த மாற்றங்கள் நடந்தேறுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடுதான், “பயன்படுத்து-வீசியெறி” (Use and Throw) என்ற கலாச்சாரமாகும். இந்தக் கலாச்சாரம்தான் இருசக்கர வாகனம் முதல் ஃபோன்வரை அனைத்திலும் கையாளப்படுகின்றன.
நுகர்வுக் கலாச்சாரத்தின் “பயன்படுத்து-வீசியெறி” என்ற இந்த பண்பு நுகர்வு வெறியை வளர்க்கிறது. பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையை புதிய நிலைமைக்கு உயர்த்தியுள்ளது. சுயநலம், ஆபாசம், ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை அனைத்தும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளைப் புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
கேரளத்தில் நபரலி கொடுத்த பின்னர், பெண் உறுப்புகளை தனியாக சமைத்து உண்டதையும், டெல்லியில் காதலியைக் கொலை செய்த காதலன் அவரது உடலை 37 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு வீசியுள்ளதையும் அவ்வப்போது அரங்கேறும் கும்பல் பாலியல் வன்முறைகளும் இந்தவகையிலானவை. பா.ஜ.க. என்ற பாசிச கும்பல் பெண்களுக்கு எதிராக செய்துவரும் கும்பல் வன்முறைகள் இதன் பாசிச வடிவம்.
உடலும் உணர்வும் மானமும்கூட சரக்காக…
நமது குழந்தைகள் ஆண்ட்ராய்டு ஃபோனை லாவகமாக கையாள்வதைப் பார்த்து பெற்றோர்களாகிய பலரும் பூரிப்படைகின்றனர். ஆண்ட்ராய்டு ஃபோனை பயன்படுத்தத் தடுமாறுகின்ற இளைஞர்கள் கூட தங்களை ‘திறமை’யற்றவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். இந்த ஆண்ட்ராய்டு ஃபோன் வழி செயல்பாடுகள் முன்னேற்றம், வளர்ச்சியின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன.
ஆனால், ஆண்ட்ராய்டு ஃபோனையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், நாம் ‘மெய்நிகர் உலகத்தில்’ வாழப் பழகிக்கொண்டோம். உரிமைகள் பறிக்கப்படுவதை, ஒரு வீடியோவாக பின்னணி இசையுடன் பார்க்கும் தொழிலாளி அதிலிருந்து பெரும் உணர்வை, மெய்யான உலகத்தில் சகதொழிலாளர்கள் போராடுவதைப் பார்த்து பெறுவதில்லை. அதனால்தான் சமூக ஊடகங்களில் புரட்சி பேசுபவர்கள் நடைமுறையில் தொழிலாளர் பாதிக்கப்படும்போது நேரில் சென்று போராடுவதில்லை. மெய்யான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், மெய்நிகர் உலகத்தின் மூலமாக உணர்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இது தலைகீழ் வளர்ச்சியல்லவா?
000
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் தொடங்கியபோதே, அத்துடன் சேர்ந்து உருவான வறுமையும் பட்டினியும் தொழிலாளி வர்க்கத்தை உடல் உறுப்பு விற்பனையாளர்களாக மாற்றிவிட்டது; உடல் உறுப்புகளை திருடுவது இன்று பெரும் தொழிலாக மாறிவிட்டது. பிரபலமாக அழைக்கப்படும் சிவப்பு சந்தை (Red Market) என்பது அதுதான். உடல் உறுப்புகளைத் திருடுவதற்காகவே உலகெங்கும் வலைப்பின்னல் கொண்ட சர்வதேச மாஃபியா கும்பல்கள் பல இயங்குகின்றன.
இச்சமுதாய விரோத மாஃபியா தொழிலை எந்தவிதச் சட்டங்களைக் கொண்டும் தடுக்க முடியவில்லை. இன்னொருபக்கம், கருப்பை வாடகையும் கருமுட்டை ‘தானமும்’ இன்று சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கப்படுகிறது.
உடல் உறுப்பு மட்டுமல்ல, இளம் பெண்களையும், பெண் குழந்தைகளையும் திருடி அவர்களை பாலியல் பண்டங்களாக வியாபாரம் செய்யும் அவலமும் சர்வதேச கிரிமினல் கும்பல்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆப்ரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பின் தங்கிய நாட்டு மக்களே இவர்களது சந்தைகளாக உள்ளன. பெரும் பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் தவிக்கும் ஆப்கான் மக்கள் தமது சிறுநீரகங்களையும் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளையும் இந்த மாஃபியா கும்பல்களிடம் விற்றுதான் பட்டினிக்கு நிவாரணம் தேடுகிறார்கள்.
அனைத்தையும் சந்தையாக்கிய முதலாளித்துவம் மனிதனது உடலையும் உணர்வையும் மானத்தையும் கூட சந்தைக்கானதாக, சரக்குகளாக மாற்றியுள்ளது.
டிஜிட்டல் பாசிச அடக்குமுறை!
நுகர்வுவெறிப் பண்பாடு ஒருபுறம் நம்மைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதையும் மீறி தமது உரிமைகளுக்காகவும் பறிக்கப்படும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடக் கிளம்பும் மக்களை ஒடுக்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய சகாப்தத்தில் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் புதிய அடக்குமுறையாக அமைந்திருக்கிறது டிஜிட்டல் பெருந்திரள் கண்காணிப்பு (Digital Mass Surveillance).
படிக்க : நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!
டிஜிட்டல் பெருந்திரள் கண்காணிப்பை புரிந்துகொள்வதற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை. மோடி அரசு கொண்டுவந்த ஆதார் அட்டையே அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அடையாள அட்டையின் மூலம் குடிமக்களை டிஜிட்டல் கண்காணிப்பிற்கு கொண்டுவருவதற்காக பலநாட்டு அரசுகளும் முயன்றுவருகின்றன. ஆனால் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது. முதன்முதலாக ஆதாரின் மூலம் இதை நடைமுறைப்படுத்திய பெருமை பாசிச மோடி அரசையே சேரும்.
ஆதார் மூலம் கைவிரல் ரேகைகள், கருவிழி என அனைத்து உயிரி அடையாளங்களும் பதிவு செய்யப்படுகிறது. ஆதார் இல்லாமல் இருப்பது குற்றமாக்கப்படுகிறது. இப்போது நாம் டிஜிட்டல் கோடு (Digital Code) ஆகியிருக்கிறோம். இதன் மூலம் மறைமுகமாக நமது தனியுரிமைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.
கம்ப்யூட்டர் கோடுகளுக்குள் (குறியீடுகள்) அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. நாம் எங்கு இருக்கிறோம், யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம், என்ன உண்கிறோம் என அனைத்தும் தரவுகளாக (டேட்டா – Data) சேகரிக்கப்படுகின்றன.
உலக அளவில் இந்த தரவு சேகரிப்பு மிகப்பெரும் வணிகமாக உள்ளது. ஆண்ட்ராய்ட் ஃபோன்களைப் பயன்படுத்தும் அனைவரது தரவுகளும் நம்மை அறியாமலேயே சேகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அடுத்தவன் படுக்கையறைக்குள்ளே செல்வது மட்டுமல்ல, அவனது வாயிலும் வயிற்றிலும் மலத்திலும் சென்று தகவல்களை உற்பத்தி செய்து, திருடும் இந்த அயோக்கியத்தனத்திலும் ஏகபோக ஆதிக்கமும் அதற்கான போட்டியும் வந்துவிட்டது.
தெருவில் நடந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன் என்ன மனோநிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் அடுத்த நொடி அவன் என்ன செய்யப் போகிறான் என்ற வரையிலும் ஊகித்து அறியும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் (Artificial Intelligence Surveillance Cameras) பெரும்பாலான நாடுகளில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. நமது நாட்டிலும் அதன் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் இக்கேமராக்கள் பயன்படுகிறது என்று கூறப்பட்டாலும், இது மக்கள்திரள் புரட்சியாளர்களை இனங்கண்டு ஒடுக்குவதற்காக அவதரித்த டிஜிட்டல் அடக்குமுறைக் கருவியே.
மொத்த சமூகத்தையும் டிஜிட்டல் வலைக்குள் சிக்கவைத்து, ஆளும் வர்க்கங்களும் அரசுகளும் எங்கும் நீக்கமற தங்களது கண்காணிப்பை விரிவுப்படுத்தியிருக்கும் இந்த நிலைதான் டிஜிட்டல் பாசிச பயங்கரவாதமாகும்.
சிவப்பு: ஏகாதிபத்தியவாதிகளின் குலைநடுக்கம்!
ஏகாதிபத்தியங்களின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்களை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. முதலாளித்துவ அறிவுஜீவிகளில் ஒருபகுதியினரும் சோசலிசத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமூக நலனை முன்னிறுத்தி சிந்திக்கக் கூடிய பிரிவினர்களும் அவற்றை எதிர்க்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மாற்றாக எதை முன்வைக்கிறார்கள்?
முதலாளித்துவத்தின் வழியே ஏகாதிபத்தியம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம். இவை இரண்டிலும் இரண்டாவது கூறுகளுக்கெதிராக, முதலாவது கூறுகளை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். தான் உருவாக்கிய சட்டங்களையும் நெறிமுறைகளையும் முதலாளித்துவமே தகர்த்தெறிய முயலும்போது, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோருபவர்கள் இவர்கள்தான்.
முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு வழிமுறையாக இருந்தது என்றால் அது படைத்தளித்திருப்பதுதான் மறுகாலனியாக்க பயங்கரவாதம். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே சோசலிசத்தை அடைவோம் என்றனர் போலி கம்யூனிஸ்டுகள், இன்றோ உலகெங்கும் பாசிச பயங்கரவாதம் புற்றீசலாய் கிளம்பியிருக்கிறது.
முதலாளித்துவத்தையும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கட்டிக்காத்துக் கொண்டே பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பதாக மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பது மோசடி அல்லவா? இவ்வாறு சொல்லும்போது, நமக்கு பாசிசத்தை எதிர்ப்பதைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்கின்றனர். வறட்டுவாதிகள் என்கின்றனர். நண்பர்களே, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம் வளர்கிறது என்ற உண்மை ஒரு அடிப்படை அறிவு இல்லையா?
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள் நம்மை இழுப்பவர்களின் கூற்றுகள் எல்லாம் சிவப்பு சாயம் பூசப்பட்ட ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தின் வார்த்தைகளே!
இங்கிலாந்தில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியும்சரி லேபர் கட்சியும் சரி; அமெரிக்காவில் இருக்கும் குடியரசுக் கட்சியும் சரி ஜனநாயகக் கட்சியும் சரி – இவர்கள் நேரடியாக ஏகாதிபத்தியவாதிகள் என்று பறைசாற்றிக்கொண்டனர். இவர்கள் அனைவரது ஒருமித்த கருத்து கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பதுதான். ஆனால், இன்றளவும் சிவப்பு என்றாலே அஞ்சுகின்றனர்.
உலகத்தின் பெரிய முதலாளிகளின் பட்டியலில் சீன முதலாளிகள் இடம்பெறுகின்றபோது, இந்த ஏகாதிபத்திய கொள்கையை அப்படியே பின்பற்றும் சீனா, தன்னை ‘கம்யூனிச நாடு’ என்று நாகூசாமல் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், தனது நாட்டில் மாவோவின் கலாச்சாரப் புரட்சி பற்றிய புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளது. சிவப்பின் போர்வையிலே தன்னை பாதுகாத்துக்கொள்ளும் போலிகளுக்குகூட சிவப்பென்றால் அச்சம் வரத்தான் செய்கிறது.
தம்மால் வீழ்த்தப்பட்டதாகவும், இல்லாது ஒழிந்துவிட்டதாகவும் சொல்கின்ற கம்யூனிசத்தை – சிவப்பை – பார்த்து இவர்கள் இன்றளவும் பயப்படுவதை எப்படி புரிந்துகொள்வது? ஏனெனில் சிவப்பு சாகவில்லை என்பது இந்த ஏகாதிபத்திய பிணங்களுக்குத் தெரியும். உலகெங்கும் கார்ப்பரேட் சுரண்டலையும் வல்லரசுகளின் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடும் கோடானகோடி உழைக்கும் மக்களின் போராட்டங்களில் சிவப்பு உயிர்வாழ்வதை நம்மைவிட நமது வர்க்க எதிரிகள் தெளிவாகப் பார்க்கிறார்கள்.
படிக்க : டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!
2018 முதல் 2022 வரை சிறிய நாடான ஹெய்தியில் நடைபெறும் மக்கள் போராட்டமாக இருக்கட்டும்; இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டமாக இருக்கட்டும்; டெல்லிச் சலோ போராட்டமாக இருக்கட்டும் – எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டக்காரர்கள் சிவப்பின் பக்கம் திரும்பினால் என்ன ஆகும் என்பதுதான், ஏகாதிபத்தியவாதிகளை அச்சுறுத்துகிறது.
இவ்வாறெல்லாம் நாம் விளக்கும்போது, “நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள். பத்துபேர் சேர்ந்துவிட்டால் புரட்சி செய்துவிட முடியுமா” என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர். “உங்களால் எதையும் செய்ய முடியாது” என்றும் கூறுகின்றனர். இது இவர்கள் நமக்கெதிராக உதிர்க்கும் வார்த்தைகள் அல்ல, சோசலிசமும் புரட்சியும் சாத்தியமில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
முதலாளித்துவம் செத்துவிட்டது, அதன் பிணம் அழுகி நாறுவதுதான் ஏகாதிபத்தியமும் பாசிசமும், இந்தப் பிணத்தை அப்புறப்படுத்து என்று சொல்கிறது கம்யூனிசம்; இல்லை, இந்த சமுதாயத்திற்குள்ளேயே (பிணத்திற்குள்ளேயே) குடியிருக்கலாம் என்கின்றனர் ஏகாதிபத்தியவாதிகள். பிணம் புழுபுழுத்துப் போவதைக் காட்டி, இவை வளர்ச்சியின் அடையாளங்கள் என்கின்றனர், ஏகாதிபத்தியவாதிகள்; இதனுடன் சமாதான சகவாழ்வு வாழலாம் என்கிறது போலி கம்யூனிசம்.
புரட்சியெல்லாம் இனி வராது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பை இனியும் தூக்கியெறிய முடியாது என்று சொல்லிக்கொண்டே, நாடு முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்; தெருவெங்கும் கண்காணிப்புக் கேமராக்களை வைக்கின்றனர்; பேசுவதற்கும் எழுதுவதற்குமான உரிமைகளை மறுக்கின்றனர். ஜனநாயகத்தை அதன் வாசனைகூட தெரியாமல் அழிக்கின்றனர்.
சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!
தங்கம்