டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!

விழுமியங்கள் அற்ற சமுதாயத்தை மறுகாலனியாக்கப் பண்பாடு உருவாக்குகிறது. இதன் பொருள், மனித விழுமியங்கள் அற்றுப்போவது மட்டுமல்ல, விலங்கினங்களுக்கே இல்லாத ஒரு கொடூர மனவியல் நோயாளிகளாக புதிய இளந்தலைமுறையினர் மாற்றப்படுகின்றனர்.

டந்த நவம்பர் 14-ஆம் தேதி டெல்லியில் அப்தாப் என்பவன் தான் காதலித்த பெண்ணை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த செய்தி இணையத்தில் பரவியது. பலரும் இச்சம்பத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்த அதே நேரத்தில், கணிசமானவர்கள் இந்த சம்பவத்தை நகைச்சுவையாகக் கடந்து சென்றனர். இவ்வாறு கடந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் அப்தாப்பையும் இந்த சமூகத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கொடூர கொலைகாரன் அப்தாப்

சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தனது காதலனோடு ‘லிவிங் டூகெதர்’ (மண ஒப்பந்தமின்றி சேர்ந்து வாழுதல்) உறவில் இருந்த ஷ்ரத்தா என்ற 27 வயது பெண்ணின் வீட்டை தொடர்பு கொண்ட அவளது நண்பன், ஷ்ரத்தா-வை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவள் தன்னோடு பேசி பல மாதங்கள் ஆகிறது என்றும் கூறினார். இதனையடுத்து அவளது சமூக வலைத்தள பக்கங்களும் பயன்பாட்டில் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்த ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.

அவ்விசாரணையின்போது ஷ்ரத்தா ஆறு மாதங்களுக்கு முன்பே அவளது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவந்தது. இதற்கான விசாரணையில், ‘ஷ்ரத்தாவை எப்படி கொன்றேன்’ என்பது பற்றி போலீசிடம் அப்தாப் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் நமது ரத்தத்தை உறைய வைக்கின்றன.

படிக்க : ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!

அப்தாப் மற்றும் ஷ்ரத்தா ஆகிய இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு ‘பம்பிள் டேட்டிங் செயலி’ (டேட்டிங் செயலி என்பதே சாராம்சத்தில் ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் அளிக்கும் ஒரு பாலியல் புரோக்கர் செயலிதான்) மூலமாக சந்தித்துள்ளனர். இதனையடுத்து மும்பைக்கு வந்த ஷ்ரத்தா, அப்தாப்பின் கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்ந்துள்ளாள். சில மாதங்கள் கழித்து ‘லிவிங் டூகெதர்’ உறவில் இருக்க முடிவு செய்த இவர்கள் மும்பையில் வீடு எடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர்.

கடந்த மே 14-ஆம் தேதி அன்று அப்தாபும் ஷ்ரத்தாவும் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்து, வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர். ஷ்ரத்தா தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்னதாலும் அதனை அப்தாப் மறுத்து வந்ததனாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், மே 18-ஆம் தேதி அன்று இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை அடுத்து அப்தாப் ஷ்ரத்தாவின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து அவளது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான்.

ஒரு கொலையைச் செய்துவிட்டு கொஞ்சமும் சலனம் அடையாத அப்தாப், ஷ்ரத்தாவின் உடலை அப்படியே புதைத்தால் மாட்டிக்கொள்வோம் என்பதனால் உடலை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று இரவு முழுக்க கூகுளில் தேடியுள்ளான். அவளது உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்தவன், அன்று இரவு ஷ்ரத்தாவின் உடல் இருந்த அதே அறையில் படுத்து தூங்கியுள்ளான்.

மறுநாள் முன்னூறு லிட்டர் குளிர்சாதன பெட்டி, கறுப்பு நிற பிளாஸ்டிக்பைகள், கறி வெட்டும் கத்தி முதலியவற்றை வாங்கி வந்து, ஷ்ரத்தாவின் உடலை கழிவறைக்கு எடுத்து சென்று துண்டு துண்டாக வெட்டியுள்ளான். பாதிக்கு மேல் வெட்ட முடியாததால் இடையில் நிறுத்திவிட்டு சொமேட்டோ-வில் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு பின்னர் மீண்டும் வெட்டியுள்ளான். ஏற்கெனவே தான் ஒரு சமையற்காரன் என்பதால் ஷ்ரத்தாவின் உடலை வெட்டுவது தனக்கு கடினமாக இருக்கவில்லை என்று அப்தாப் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

சத்தம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக குழாயில் தண்ணீரை திறந்து விட்டு உடலை வெட்டியிருக்கிறான். இதனால் அந்த வாடகை வீட்டில் கட்டணமின்றி வழங்கப்படும் முதல் 20,000 லிட்டர் (ஏறக்குறைய ஒரு நாளுக்கு 35 வாளி) தண்ணீர் தீர்ந்ததுடன் மேலும் மாதம் 300 ரூபாய் தண்ணீர் கட்டணம் வந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஷ்ரத்தாவின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு ஏற்ற அளவில் 35 துண்டுகளாக வெட்டியுள்ளான். விரைவில் நாற்றம் அடிக்க தொடங்கிவிடும் என்பதால் அவளது ஈரல், குடல் போன்ற உறுப்புகளைத் துண்டு துண்டாக நறுக்கி அன்று இரவே காட்டில் வீசிவிட்டு, பிற பாகங்களை வெட்டி தனித்தனி பிளாஸ்டிக்பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளான். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை எரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை அவ்வப்போது ‘ரசித்து வந்திருக்கிறான்’.

அன்றிலிருந்து தொடர்ந்து 16 நாட்களுக்கு இரவு இரண்டு மணிக்கு நடைபயிற்சி செய்வது போல் சென்று ஷ்ரத்தாவின் உடல் பாகங்களைக் கொண்ட பிளாஸ்டிக் பையை அகற்றிவிட்டு சுற்றியுள்ள நகரப் பகுதியிலுள்ள நாய்களுக்கு வீசியுள்ளான். மேலும், காட்டில் வீசினால் விலங்குகள் தின்றுவிடும் என்பதற்காக பல பாகங்களைக் காட்டில் எறிந்துள்ளான்.

இந்த நாட்களில் அவனின் வீட்டிற்கு உணவு கொடுக்கும் தொழிலாளர்கள், நண்பர்கள், பெண்கள் என பலர் வந்து சென்றுள்ளனர். ஆனால், யாருக்கும் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீட்டில் இருந்தது தெரியாது. இத்தனைக்கும் கோடை காலம் என்பதால் அவளது உடல் விரைவாக அழுகி நாற்றம் எடுக்க தொடங்கியிருக்கிறது. அந்த வாடையை ஊதுபத்தி, அறை ஸ்ப்ரே போன்றவற்றால் மறைத்திருக்கிறான். நண்பர்கள் வரும்போது அவளது உடலை ஒளித்து வைத்திருக்கிறான். மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட காலம் வரையில் ஷ்ரத்தாவின் சமூக வலைதள கணக்குகளை அப்தாபே இயக்கி வந்துள்ளான்.

ஷ்ரத்தாவின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்த அதே குளிர்சாதனப் பெட்டியில்தான் அவனுக்கு தேவையான பால், காய்கறிகள், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் இருந்திருக்கிறது. ஆனால், அவற்றை தினமும் இயல்பாக பயன்படுத்தி இருக்கிறான். கைது செய்யப்படும் வரை அவன் அந்த வீட்டில்தான் தனியாக இருந்திருக்கிறான்.

ஷ்ரத்தாவை முதன்முதலில் பார்த்த அதே ‘பம்பிள் டேட்டிங் செயலி’ மூலம் மேலும் பல பெண்களைச் சந்தித்த அப்தாப், கூறுபோடப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் அந்த வீட்டில் இருக்கும் போதே இன்னொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து அவளுடன் உடலுறவு வைத்திருக்கிறான்.

ஆனால், இதில் எதை நினைத்தும் அவன் கொஞ்சம்கூட குற்ற உணர்வு அடையவில்லை. உண்மை அம்பலமாகி அவனை போலீசு விசாரிக்கும்போது முகத்தில் எந்தவித சலனமும் இன்றி பதில் கூறியிருக்கிறான் அப்தாப். விசாரணையின்போது லாக்கப்பில் இரவு முழுவதும் அப்தாப் நிம்மதியாக தூங்கினான் என்று அவனை விசாரித்த போலீசார் கூறுகின்றனர்.

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரத்தா தொந்தரவு செய்ததால்தான் அவளைக் கொன்றதாக அப்தாபே வாக்குமூலம் கொடுத்ததோடு, “அவளைக் கொல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, நான் ஷ்ரத்தாவைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்” என்றும் கூறியுள்ளான்.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

மேலும், இதற்கு முன்பே பலமுறை அப்தாப் அவளை அடித்து தாக்கியிருக்கிறான். இதனால் 2020-ஆம் ஆண்டு “அப்தாப் தன்னை கொலை செய்துவிடுவான்” என்று ஷ்ரத்தா போலீசில் புகார் அளித்துள்ளாள். அங்கு அவள் கைப்பட எழுதிய கடிதமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

நமக்குள் ஒளிந்திருக்கும் அப்தாப்கள்!

எப்படி ஒருவனால் மூன்று ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்தப் பெண்ணை இவ்வளவு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வுமின்றி இருக்க முடியும் என்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால், அதனைவிட அதிர்ச்சிகரமானது என்னவெனில் நம்மில் பலரால் இதை எளிமையாக கடந்து செல்ல முடிகிறது என்பதுதான்.

செய்தி நிறுவனங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்ட ஷ்ரத்தா கொலை வழக்கு பதிவின்கீழ் வக்கிரக் கருத்துகள் கொட்டிக்கிடந்தன. “முரட்டு பசங்க தானடீ கேட்டீங்க” என்பது போன்ற கருத்துகளை ஏறக்குறைய அனைத்து கணக்கிலும் காணமுடிந்தது. மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ஷ்ரத்தா உடல் இருந்தது பற்றிய ஏராளமான மீம்கள் வைரலாகின. இதனைக் கண்டு பல முதலாளிய லிபரல் பத்திரிகைகளே அதிர்ச்சி அடைந்து, மனிதர்கள் மத்தியில் மனநிலை மோசமானதாக மாறியிருக்கிறது என்று செய்திகளை வெளியிட்டன.

கல்லூரி மாணவர்களிடம் இதைப் பற்றி பேசும்போது சிலர், இந்த செய்தியை விரைவாக கடந்து சென்றனர். சிலர் ஷ்ரத்தாவுக்காக சிறு அனுதாபத்தை மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், சிலர், “ஷ்ரத்தாவின் சித்திரவதை தாங்காமல்தான் அந்த நொடி என்ன செய்வது என்று தெரியாமல் அப்தாப் கொலை செய்திருப்பான்” என்று அப்தாபுக்காகவும் வாதாடியது அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக, ஷ்ரத்தாவிற்கு எதிராகவும் அப்தாபை அரவணைத்தும் பேசியவர்கள் பெண்கள்தான்.

எப்படி இவர்களால் அப்தாபை அங்கீகரிக்க முடிகிறது? கொடூரமான கொலையைச் செய்த அப்தாப் எந்தவித சலனமும் இன்றி இயல்பாக கடந்து செல்கிறான். அந்த கொடூரத்தைக் கேள்விப்பட்ட இந்த சமூகமும் சலனமே இன்றி அப்தாபை கடந்து செல்கிறது. உண்மையில் அவ்வாறு அப்தாபை இந்த சமூகத்தால் கடந்து செல்ல முடிகிறதென்றால், அதன்பொருள், அனைவருக்குள்ளும் ஒரு அப்தாப் இருக்கிறான் என்பதுதான்.

அப்தாப் என்பவன் தனிமனிதன் கிடையாது. கலாச்சார ரீதியாக சீரழிந்து கொண்டு வருகின்ற ஒரு சமூகத்தின் பிரதிநிதி. அவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முழுமையாகவோ அரைகுறையாகவோ தங்களுக்குள்ளும் அப்தாப்-களை கொண்டிருக்கிற பல மனிதர்கள் இங்கு உள்ளனர்.

மனித சாரத்தை அழிக்கும் மறுகாலனியாக்கம்!

அப்தாப் அரங்கேற்றிய கொடூரத்திற்கு காரணம் தேடும் பலரும் அவனிடமே தேடலைத் தொடங்கி அவனோடே முடித்துவிடுகின்றனர். ஆனால், எப்படி ஒருவனால் தன்னை காதலித்த பெண்ணைக் கொன்று உடலை கூறு போட முடியும் என்ற கேள்வியை இந்த சமூகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

1990-களில் இந்தியா தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. பொதுவெளியில் பொருளாதாரக் கொள்கை என்று பார்க்கப்பட்ட மறுகாலனியாக்கம் அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றிலும் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியது. மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் பண்டமாகி சரக்காக மாற்றப்பட்டன. அதிலும் ஏற்கெனவே பார்ப்பனிய-ஆணாதிக்க மனநிலை கொண்ட இந்தியாவில் அது காட்டுமிராண்டித்தனமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளால் காட்டுமிராண்டியாக மாற்றப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிதான் அப்தாப். முழுக்க முழுக்க முதலாளிய சீரழிவுகளால் வளர்க்கப்பட்ட இவன், குற்றத் தொடர் நிகழ்ச்சிகளைப் (web series) பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றான அமெரிக்கக் குற்றத் தொடர் நிகழ்ச்சியான “டெக்ஸ்டர்”தான் ஷ்ரத்தாவை கொலை செய்ய தன்னை தூண்டியது என்று வாக்குமூலம் அளித்துள்ளான். இவையன்றி அப்தாபுக்கு பலவகை போதை பழக்கங்களும் இருந்துள்ளன.

மேலும், அப்தாப் ஷ்ரத்தாவை சந்தித்தது டேட்டிங் செயலியின் மூலம்தான். இந்த பாலியல் புரோக்கர் செயலிகளை அரசு எந்தவகையிலும் தடை செய்யவில்லை என்பது, இங்கு கவனிக்க வேண்டிய விசயமாகும். இந்த செயலிகள் மட்டுமல்ல, வீடியோ கேம்கள், ஆபாச பாலியல் வீடியோக்கள் என பலவகைகளில் இந்த சமூகம் நாள்தோறும் சீரழிக்கப்படுகிறது.

ஷ்ரத்தாவை காதலிக்கத் தொடங்கிய அப்தாப், ஷ்ரத்தாவிடம் எதிர்பார்த்தது திருமண உறவை அல்ல, எந்தவித பொறுப்புகளுக்கும் கடமைப்படாத ‘லிவிங் டூகெதர்’ உறவாகும். அதாவது, பாலியல் இச்சைக்காக மட்டுமே மேற்கொள்ளும் ஒரு உறவாகும். ஆனால், ஷ்ரத்தா இந்த உறவு முறையை மீறி தன்னை திருமணம் செய்துகொள்ளும் படியும் பிற பெண்களிடம் பேச வேண்டாம் என்றும் சொன்னதெல்லாம் ’லிவிங் டூகெதர் கோட்பாட்டிற்கே எதிரானது’.

தான் விரும்பும் ஒரு கலாச்சாரத்தின் ‘நெறிமுறைகளை’ ஷ்ரத்தா மீறியதை அப்தாப்பால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி அப்தாப் அவளைக் கொலை செய்துவிட்டான்.

இந்த சீரழிவு வக்கிரக் கலாச்சாரத்திற்கு பலியானது அப்தாப் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகமும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டுமிராண்டியாக மாறி வருகிறது. குற்றங்கள் யாவும் தீவிரமடைவதோடு வக்கிரமாக மாறி வருகின்றன. பாலியல் வல்லுறவுகள், கூட்டு பாலியல் பலாத்காரமாகவும் உடலை எரிப்பதாகவும் சிதைப்பதாகவும் பரிணமித்து வருகிறது. ஷ்ரத்தா கொலைக்கு பின்னரும் அதே போன்று கொன்று உடலைத் துண்டுதுண்டாக வெட்டிய இரண்டு சம்பவங்கள் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறின.

படிக்க : ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !

முற்போக்கு, பெண்ணியம், சுதந்திரம், நவீனம், அறிவியல், முன்னேற்றம் என்ற பெயர்களில் விழுமியங்கள் அற்ற சமுதாயத்தை மறுகாலனியாக்க பண்பாடு உருவாக்குகிறது. இதன் பொருள், மனித விழுமியங்கள் அற்றுப்போவது மட்டுமல்ல, விலங்கினங்களுக்கு இல்லாத ஒரு கொடூர மனவியல் நோயாளிகளாக புதிய இளந்தலைமுறையினர் மாற்றப்படுகின்றனர். ஆண்ட்ராய்டு ஃபோன்களும் அதில் வரும் மெய்நிகர் உலகமும் மனிதர்கள் ஒருவரை ஒருவரிடமிருந்து பிரிக்கின்றது. கூடிவாழும் மனிதப் பண்பையே அழிக்கிறது.

இதில் இருந்து சமூகத்தையும் நம்மையும் மீட்டுக் கொள்வதற்கு ஒரே வழி, சோசலிசம்தான். அந்த உன்னத சமுதாயத்தைப் படைக்கும் போராட்டத்தின் மூலமாக மனித விழுமியங்களை மீட்டெடுக்கவும், மறுகாலனியாக்கத்தை மாய்க்கவும் வேண்டும்.

இதன் தொடக்கக் கட்டமாக, இந்த பாலியல் வக்கிரங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்; இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பொதுவிவாதங்கள் நடத்தப்பட வேண்டும்; மது-போதை சீரழிவு, ஆண்ட்ராய்டு காட்சி போதை, ஆபாச சினிமா சீரழிவு, பார்ப்பன-ஆணாதிக்கக் கலாச்சாரங்களுக்கு எதிராக சரியான மனித விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இத்தகைய பண்பாட்டு சீரழிவுகளைப் பரப்பும் ஊடகங்கள், செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் இதனைக் கட்டிக்காக்கின்ற இந்த அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட போராட்டங்களின் வழியாக ஒரு சமூக மாற்றத்திற்கு நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே தீர்வு!

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க