அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள்: சீழ்ப்பிடித்து நாறும் முதலாளித்துவக் கட்டமைப்பு!

நம்மை காப்பாற்றுவதாக கூறப்படும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இதுவரை கொண்டுவந்தக் கடுமையான சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் தூங்குகின்றன.

ன்மைக் காலமாக பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் கொடூரமாக நடைப்பெற்று வருகின்றன. அச்சம்பவங்கள் நம்மிடம்  மூன்று விதமான மனநிலையை உருவாக்கச் செய்கின்றன. முதலாவது, இது எப்பவும் நடப்பது தான், இரண்டாவது,  எப்போதும் நடப்பதுதான் நம் வீட்டு குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கனும், மூன்றாவது, பல வடிவங்களில் நடப்பதை கண்டு அச்சத்துடன் இதற்கு என்ன செய்ய போகிறோம் என பதறுவது என்ற மனநிலை வெளிப்படுகின்றன. இச்சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்களை இவ்வாறே கடந்து செல்கிறோம்.

“மகள்களை மிரட்டி ஓராண்டாக பாலியல் தொல்லை செய்த அப்பா”

கோவை ரத்தினபுரியை சேர்ந்த 36 வயது தொழிலாளிக்கு 15 வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி பிரிந்து சென்றபின், இளம்பெண் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில்  9-ஆம் வகுப்பு மற்றும் 5-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

அப்பள்ளியில், மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இரு சிறுமிகளும் அழுதுக்கொண்டே தங்களது தந்தை ஓராண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், வெளியே சொன்னால் தாய் மற்றும் எங்கள் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மனைவி வீட்டு வேலைக்கு செல்பவர் என்பதால், அந்த நேரத்தில் சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

செய்தி ஆதாரம்: விகடன்

“இளம்பெண்ணை வீட்டில் அடைத்துக் கூட்டு பலாத்காரம்”

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அதேப்பகுதியில் உள்ள சிவனேஷ் பாபு (39) என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவன் இளம்பெண்ணிடம் “நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம், என்னுடன் வந்துவிடு” என்று தெரிவித்துள்ளான். பின்னர், தனியாக வீடு எடுத்து இளம்பெண்ணை தங்க வைத்துள்ளான். தொடர்ந்து வெளியே செல்வதாகக் கூறி வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு சென்றுள்ளான். மெக்கானிக்காக வேலை செய்யும் தனது நண்பன் ராகுல் (38) என்பவனுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி, அடித்துக் கட்டாயப்படுத்தி வீட்டிற்குள் அடைத்து வைத்துப் பலமுறைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். ராகுலின் நண்பனான பாலியல் புரோக்கர் செந்தில்குமார் (35) மூலம் இளம்பெண்ணை வெளியே அழைத்துச் சென்று “தாங்கள் கூறும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கொன்று விடுவோம்” என மிரட்டி, அடித்து துன்புறுத்தி பல்வேறு நபர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர். இளம்பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்து சென்றும் பல நபர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

செய்தி ஆதாரம் : தினகரன்

***

இரண்டு செய்திகளும் வெவ்வேறு தளங்களில் நடந்தவை. இச்செய்திகள் கூறுவது என்ன, அப்பாவையும் நம்பியிருக்க முடியாது, அன்பாக பேசும் நபர்களையும் நம்ப முடியாது என்பதைத் தான். இச்சமூகத்தில் பெண்கள் யாரைத் தான் நம்புவது? என்ற கேள்வியே எழுகிறது.

மறுகாலனியாக்க நுகர்வுவெறியூட்டப்பட்ட சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். மறுகாலனியாக்கம் பல வேலையற்றவர்களையும், பணத்திற்காக எதையும் செய்பவர்களையும் உற்பத்தி செய்து வருகிறது. பயணத்தின் போது, சொந்த வீட்டில், உறவினர் வீட்டில், ஆண் மற்றும் பெண் நண்பர்கள் மத்தியில், கல்வி நிலையங்கள், போலீசு நிலையங்கள், ஐ.டி நிறுவனங்கள்,  அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என பல வடிவங்களில் பரந்துவிரிந்த வகையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இதுபோன்ற குற்றங்கள் நடக்குபோது உடனே கடுமையான சட்டங்கள் கொண்டுவந்து தீர்த்து விடலாம் என தோன்றலாம். இதுவரை போடப்பட்ட சட்டங்களை பயன்படுத்தி குற்றங்களை ஒழித்தது இருக்கட்டும், குறைந்தபட்சம் குற்றங்கள் குறைந்திருக்கிறதா? இல்லை.  இன்னும், வீரியமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் பார்ப்பனிய – ஆணாதிக்க சிந்தனையையும், மறுகாலனியாக்க நுகர்வுவெறி பண்பாட்டையும் அரசு கட்டமைப்பே பாதுகாத்து வருகிறது. இதனால், பெண்கள் மீது கொடூரமான பாலியல் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. இதை எப்படி முற்றாக ஒழித்துக்கட்டப் போகிறோம் என்பதே மையமானக் கேள்வி.

***

நம்மை காப்பாற்றுவதாக கூறப்படும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இதுவரை கொண்டுவந்தக் கடுமையான சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் தூங்குகின்றன.

அன்மைக் காலமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி கைது செய்ததாக செய்தி வருகிறது. பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்த அரசு அனுமதித்தால் அங்கு வேறு என்ன நடக்கும். மசாஜ் சென்டர் விபச்சாரத்தின் முன்னேறிய வடிவம் என்பது அரசுக்கு தெரியாதா என்ன. இன்னொருபுறம், கஞ்சா, கூலிப் போன்ற விதவிதமான போதை பொருட்கள் மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் சகஜமாகப் புழங்குகிறது. இவையெல்லாம், அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசுத்துறை, அரசு அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன? தெரியும். ஊழல் பெருச்சாளிகள் எப்போதும் சாக்கடையை சுத்தம் செய்யாது. அதிலேயே சுற்றித்திரியவே செய்யும். இவ்வாறு சீரழிந்துக் கொண்டிருக்கும் அரசு கட்டமைப்பு நமது பிரச்சனையை ஒருபோதும் தீர்க்கப் போவதில்லை.

ஒன்று, இவற்றையெல்லாம், சகித்துக்கொண்டும், அனுபவித்துக்கொண்டும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், பார்ப்பனிய – ஆணாதிக்க வெறிக்கும், மறுகாலனியாக்க நுகர்வுவெறி பண்பாட்டிற்கும் சவக்குழி தோண்ட மாணவர்கள் – இளைஞர்கள் – உழைக்கும் மக்கள் கொண்ட ஓர் எழுச்சி நடத்துவதை நோக்கி முன்னேற வேண்டும்.


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க