பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு போன்ற எரிப்பொருட்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதற்கான 45-வது கூட்டம் கடந்த 17-ந்தேதி தொடங்கி நடந்து முடிந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு காணொளி காட்சியின் மூலமே நடந்தப்பட்ட ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டமானது, தற்போது கொரோனா குறைந்த நிலையில் நேரடியான பங்கேற்புடன் நடத்தி முடிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எந்த முழுவிவரங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
அதேவேளையில், பெட்ரோல் – டீசல் – எரிவாயு போன்ற எரிப்பொருட்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதற்கான ஏற்ற தருணம் இல்லை; உகந்த நேரம் இது அல்ல; என்றும் ஒன்றிய அரசு வேண்டுமானால் தன்னுடைய கலால்வரியைக் குறைத்துக் கொள்ளட்டும் என்றும் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் அரசுகள் கடுமையாக விமர்சித்துள்ளன என்றும் திருவாய் மலர்ந்துள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்.
படிக்க :
பெட்ரோல் டீசல் கலால் வரி – ஒரு பகற்கொள்ளை || கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசு !
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !
ஜி.எஸ்.டி-க்குள் எரிப்பொருட்களைக் கொண்டுவந்தால் ஒன்றிய – மாநில அரசுகளுக்கு சுமார் 4 லட்சம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்படும். இதனால் – இலவச ரேசன் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியம் – சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது பாதிக்கப்படும். ஆகையால் எரிபொருட்களை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர முடியாது என்று பாஜக-வின் நடப்பு எம்.பி-யான சுஷில் மோடி கூறுகிறார்.
2021, செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.19 (டெல்லி நிலவரப்படி)
இதில்,
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
  • சுத்திகரிப்பு = ரூ.41.10 (நிறுவனங்களுக்கு);
  • கலால்வரி = ரூ.32.90 (ஒன்றிய அரசு);
  • டீலர் கமிசன் = ரூ.3.84 (பங்கு உரிமையாளன்);
  • மாநில அரசு = ரூ.23.35;
  • மொத்தம் = ரூ.101.19.
இதில் தான் ரூ. 3-ஐ குறைத்துள்ளது தமிழக அரசு. வாட் வரியானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஏனெனில், மாநிலங்கள் ஒரே வரிமுறையை மேற்கொள்ளவில்லை. இதில், தமிழகம் 34% வரியை வசூலிக்கிறது.
போதாக்குறைக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு விலையைத் தீர்மானித்து கொள்வதற்கான உரிமம் வழங்கப்பட்டதால் அதன் விருப்பத்திற்கேற்ப – கொள்ளைக்கேற்ப – தினசரி விலையைத் தீர்மானிக்கின்றன.
இன்றைக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், சுத்திகரிப்புக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.41.10. சுத்திகரிப்புக்கு ஆகும் உண்மையான செலவு என்னவென்று மக்களுக்கு தெரியாது. அது ஒன்றிய அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும்தான் வெளிச்சம். கச்சா எண்ணெயின் பேரல் விலையின் படி கணக்கிட்டுப் பார்த்தால் ரூ.13.60 வரை ஒரு லிட்டர் சுத்திகரிப்புக்கான செலவாக எண்ணெய் நிறுவனங்கள் காட்டுகின்றன என்பதை அறிய முடிகிறது.
இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது, ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரப்பட்டால் அதிகபட்ச வரியாக 28% மட்டுமே போட முடியும். இதன்மூலம் ஒரு லிட்டருக்கு வரியாக கிடைப்பது வெறும் ரூ.11.52 மட்டுமே. இதனால், 1 லிட்டருக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் அரசாங்கத்திற்கு ஏற்படப்போகும் இழப்பு ரூ.44.73.
45-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
அதாவது, தற்போதுள்ள 100% வரி வருவாயிலிருந்து 72% இழக்க நேரிடும். இந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டுமென்றால் சர் சார்ஜ்-ஜை விதிக்கலாம். வரி வருவாய் இழப்பு கூடாது என்பதற்காகதான் ஒன்றிய – மாநில அரசுகள் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்று கூப்பாடு போடுகின்றன.
கேரள அரசு, தனக்கு ரூ.8,000 கோடி வருடத்திற்கு இழப்பு ஏற்படும் என்பதால் எரிபொருளை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரக்கூடாது என்று உக்கிரமாகப் போராடுகிறது.
மேலும், ஏற்கனவே ஜி.எஸ்.டி-யிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் வரவேண்டிய ரூ.2.35 லட்சம் கோடி நிலுவையுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி வரி வருவாயை முறையாக சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு திருப்பித் தருவதிலும் பல பிரச்சினைகள் வருகிறது. இந்நிலையில் எரி பொருளையும், ஜி.எஸ்.டி-யில் சேர்ந்தால், “உள்ளதும் போச்சு” என்ற கதையாகதான் முடியும்.
எதிர்கட்சியாக இருக்கும் வரை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எரிப்பொருட்கள் மீதான வரியை ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கர்ஜித்தார். ஆட்சிக்கு வந்த பிறகு ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டு வரக் கூடாது என்று கூறுகிறார். ஏனெனில், டாஸ்மாக்கில் ஊத்திக் கொடுத்து, மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதால் மட்டுமே மாநிலத்தை நடத்த முடியாது. எரிபொருள் வரி வருவாயை இழக்க நேரிட்டால் கடும் நிதி நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும்.
தமிழக நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மாரிதாஸ் போன்ற சங்கிகள் மட்டுமல்ல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்,  எரிப்பொருள் மூலம் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் வரிக் கொள்ளையைப் பற்றி பேசாமல் திசை திருப்பும் வகையில் தமிழக நிதியமைச்சர் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வளைகாப்பு-க்கு சென்றதாக பொய் சொல்லி பிரச்சினையை  திசை திருப்பினர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று எரிப்பொருளுக்கு மாற வேண்டுமென்றும், குறிப்பாக எலக்ட்ரிக்கல் வாகனங்களுக்கு மாற வேண்டுமென ஓலா போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு பல்லக்குத் தூக்குகிறார்கள்.
இதில் பாஜக-வின் களவானித்தனத்தை கவனிக்க வேண்டும். இதுவரையில் தமது வரி வருவாயில் ஆண்டுக்கு சுமார் 4 இலட்சம் கோடியை அள்ளிக் கொடுக்கும் எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என திமிராக சொல்லி வந்த நிர்மலா சீதாராமன், இப்போது பழியைத் தூக்கி மாநில அரசுகளின் மீது போடும் வகையில் தந்திரமாக காய் நகர்த்துகிறார்.
ஒருபக்கம், மாநில அரசுகளுக்கு உரிய நேரத்தில் ஜி.எஸ்.டி வரி வருவாயை கொடுக்காமல் இழுத்தடிப்பது. மற்றொரு பக்கத்தில் மாநில அரசுகளுக்கு வருமானம் வழங்கும் துறைகளை எல்லாம் தனியாருக்குத் தருவதற்கு அழுத்தம் தருவது என மாநில அரசுகளை நிதி நெருக்கடியில் சிக்க வைக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
நிதி நெருக்கடியில் இருப்பவனிடம் இருக்கும் வரியையும் பிடுங்குவதாகச் சொன்னால் எப்படியும் மறுக்கத்தானே போகிறார்கள் என்ற நம்பிக்கையில் ஜி.எஸ்.டி கூட்டம் நடத்தி தாம் சொல்ல விரும்பியதை மாநில அரசுகளின் வாயிலிருந்தே திறமையாக வரவழைத்துவிட்டார்.
படிக்க :
கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !
சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?
நாட்டின் பொதுத்துறை, அரசுத்துறை, பங்குகள் அதன் சொத்துக்களை விற்பதையும், மக்கள் மீது வரிவிதிப்பதையும் செம்மையாக செய்துவருகிறது ஒன்றிய அரசு. அரசாங்கத்துக்கு வருவாயை அளிக்கும் இந்த நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மக்கள் சட்டைப் பையில் கை விடுகிறது.
தமிழக அரசோ, தமது வருவாயைப் பெருக்குவதற்கு ஏற்கெனவே டாஸ்மாக்கின் மூலமும், பெட்ரோல் டீசல் வரியின் மூலமும் மக்களிடமிருந்து பணத்தை உறிஞ்சுகிறதே ஒழிய, தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டும் வகையிலான அரசுத் துறை நிறுவனம் எதையும் துவங்கவோ, நடத்தவோ எத்தனிக்கவில்லை. தொழில் துறை வளர்ச்சி என்னும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு சொத்தை தாரை வார்க்கத் தயாராக இருக்கிறதே தவிர நிறுவனங்களை உருவாக்கி  அரசு வருவாயை அதிகரிக்கும் திட்டம் அதற்கு அறவே கிடையாது.
ஏனெனில், தங்கள் எஜமானர்களாகிய முதலாளிகள் என்றும் பாதிக்கப்படவே கூடாது. தமக்கு ஓட்டுப் போட்ட ஏமாளிகள் தலையில் மட்டுமே மிளகாய் அரைக்க வேண்டும் என்பதுதான் ஓட்டுப் பொறுக்கி அரசியலின் அடிப்படைக் கொள்கை.
மக்கள் போராட்டத்தால் இது மாற்றப்படும் வரை, பெட்ரோல் டீசல் விலை – வரி குறைப்பு எல்லாம் வெறும் கானல்நீர் தான்.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க