பெட்ரோல் – டீசல் வரி குறைப்பு என்பது மோசடி, மோடி அரசின் பொய்யையும், சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து இருப்பதை ஒட்டி, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27 அன்று காணொலி மூலம் உரையாற்றினார்.
“சர்வதேச நெருக்கடி (உக்ரைன் – ரஷ்யா போர்) பல சாவல்களை கொண்டு வந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் கூட்டாட்சியில் ஒத்துழைப்பையும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதரம் தொடர்பான முடிவுகளில் மத்திய – மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து பேசிய மோடி, “மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு, மத்திய அரசு கடந்த நவம்பா் மாதத்திலேயே கலால் வரியைக் குறைத்துவிட்டது. வரிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்காக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அப்போதே ஒன்றிய அரசு வலியுறுத்தியது. ஆனால், சில மாநிலங்கள் மட்டுமே வரியைக் குறைத்தன. சில மாநிலங்கள் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. கர்நாடகா, குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளதால் அந்த மாநிலங்களுக்கு முறையே ரூ.5,000 கோடி, ரூ.3,500 கோடி – ரூ.4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்று எதிர்கட்சிகளின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
படிக்க :
பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்
ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
மோடியின் கருத்துக்கு எதிர்கட்சிகளின் மறுப்பு:
மோடியின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நிலக்கிரி தட்டுபாடு, ஆக்சிஜன் தட்டுபாடு” அனைத்துக்கும் மாநில அரசே காரணம் என்று கூறுகிறது மோடி அரசு. ஆனால் பெட்ரோல், டீசல் மீதான மொத்த வரி வருவாயில் 68 சதவீதம் பங்கை ஒன்றிய அரசே எடுத்துகொள்கிறது. மோடி அரசு “கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கவில்லை, மாறாக மாநிலங்களை கட்டுபடுத்துகிறது” என விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “பிரதமருடனான கலந்துரையாடல் ஒரு பக்கச் சார்புடனும் தவறான தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. மேலும், எங்கள் மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு மானியமாக ரூ.1 வழங்குகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1500 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மேற்குவங்கத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி ரூ.97,000 கோடி வரி நிலுவை உள்ளது. பாக்கி தொகையை முதலில் மோடி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில அரசால் விலை உயர்ந்துவிட்டது என்பது உண்மையல்ல. ஒன்றிய அரசு, மகாராஷ்டிரா அரசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26,500 கோடி வரி நிலுவை வைத்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களை சமமாக நடத்துவதில்லை என மோடி அரசின்மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
தெலங்கானா முதல்வர், கே. சந்திரசேகர ராவ் “மாநிலங்களிடம் வரியைக் குறைக்கச் சொல்லிக் கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசே ஏன் வரியைக் குறைக்கக் கூடாது? மத்திய அரசு வரிகளை மட்டுமல்லாமல், ‘செஸ்’ஐயும் உயர்த்தியது. உங்களுக்குத் தைரியமிருந்தால் வரிகளை உயர்த்தியது ஏன் என்பதை விளக்குங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்றாற் போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது” தற்போது மாநில அரசை குறை கூறுவது என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது ஒன்றிய அரசு என்று விமர்சித்துள்ளார்.
இதுவரை, தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த வரி வருவாய், 2019 – 2020-ல் ரூ.1163.13 கோடி. ஆனால் 2020 – 2021-ல் மாநில அரசு பெற்ற வரிவருவாய் ரூ.837.75 கோடி. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை குறைத்துவிட்டது. கலால் வரி குறைப்பால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் வரிகுறைப்பு உண்மையல்ல, நாடகம் :
2021-ம் ஆண்டு, நவம்பர் மாதம் கச்சாஎண்ணெய் விலை உயர்ந்த போதும், பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் கலால் வரியை குறைத்துவிட்டோம், என்று ஒன்றிய அரசு பெருமை பீற்றிகொள்கிறது.
பாஜக ஆளும் 17 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களிலும் வாட் வரியை குறைத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.80 – ரூ.10 வரையிலும், டீசல் லிட்டருக்கு ரூ. 2.7 என்ற அளவில் குறைத்து இருகின்றன. இந்த வரி குறைப்பின் மூலம் ஒன்றிய அரசிற்கு பெருமளவு இழப்பு இல்லை. ரிசர்வ் வங்கியின் 2021 – 2022-ம் நிதிஆண்டிற்கான மாநிலத்திற்கான அறிக்கைப்படி, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.08 சதவீதம் என மதிப்பிட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு என்பது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து 16 நாட்களில் ரூ.14 வரை விலையை உயர்த்தியது என்பதுதான் உண்மை. வாட்வரி குறைப்பு என்பது தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம்.
கடந்த மார்ச் மாதம் மட்டும் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ.50 ஆகவும், வணிக எரிவாயுவின் விலை ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டது. அப்பளம், வெல்லம் போன்ற 143 அத்தியாவசிய பொருள்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது மோடி அரசு. தீடிரென்று மோடி மக்கள் நலனை பற்றி பேசுவது, மக்கள் மீது கொண்ட அக்கறையினால் அல்ல.
மோடி அரசு ஒரு கொள்ளை நிறுவனம் :
2014-ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிபொறுப்பு ஏற்றுகொண்டதிலிருந்து, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.27 லட்சம் கோடிகள் வருவாயாக பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 01, 2014 அன்று பெட்ரோல் அடிப்படை விலை, லிட்டருக்கு ரூ.48.55 விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.47.27 விலையிலும் இருந்தது.
நவம்பர் 04, 2021 அன்று பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.48.36 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.49.69 ஆகவும் இருந்தது.
ஆகஸ்ட் 01, 2014 அன்று மத்திய அரசின் வரிகள் ரூ.9.48 விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.3.57 விலையிலும் இருந்தது. அதே சமயத்தில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ15.67 விலையிலும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.10.25 விலையிலும் இருந்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலால் வரியை குறைப்பதற்கு முன்பு, கலால் வரி மற்றும் கூடுதல் கட்டண வரி விதிப்பு உட்பட, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 32.90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.31.80 காசுகளாகவும் விலையை உயர்த்தி இருந்தது.
2014 மோடி பொறுப்பேற்று கொண்ட போது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. அப்பொழுது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.41 மற்றும் ரூ.55.49 ஆகவும் இருந்தது. இன்று கச்சா எண்ணெய் பேரலுக்கு 100.20 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.105.41 மற்றும் 96.67 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அடிப்படை எரிபொருள் விலை ஏறக்குறைய மாறாமல் இருக்கும்போது, மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.42 காசுகளாகவும், தோராயமாக 200 சதவீதம் வரியை அதிகரித்துள்ளது. அதுபோல டீசல் லிட்டருக்கு ரூ.18.23 கூடுதல் வரி விதிதுள்ளது. 2014 நடைமுறையில் இருந்து ஒப்பிட்டு பார்க்கும் போது டீசலுக்கான வரி 500 மடங்கு அதிகமாகும்.
2019 – 2020-ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.2.23 லட்சம் கோடிகள். 2020 – 2021-ம் ஆண்டு ரூ.3.72 லட்சம் கோடியாக  ஒன்றிய அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. (செய்தி ஆதாரம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியின் மூலம் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒரு கொள்ளை நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
மோடி அரசின் கூட்டாட்சி தத்துவம்:
மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தையையும், உரிமையையும் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்தியது. அதன்பின் மாநிலங்கள் ஒன்றிய அரசை சார்ந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதுவரை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு தொகை, மார்ச் 2022-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், ரூ.78,704 கோடி நிலுவை பாக்கி உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது என்பதுதான் கூட்டாட்சி தத்துவம் அடிப்படை. மாறாக மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களை பறித்து ஒற்றை சர்வதிகார அரசை நிறுவத்துடிக்கும் மோடி அரசு கூட்டாட்சி குறித்து பேசுவது வேடிக்கையானது.
மோடி, புதிய பொருளாதர கொள்கையின் தீவிர விசுவாசி:
மோடி அரசு, உலகமய – தனியார்மய – தாரளமய கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது கொதிக்கும் எண்ணெயை, அள்ளி தெளித்தது போல மக்கள்மீது பெரும் சுமையை திணித்துள்ளது மோடி அரசு.
மோடி ஆட்சி காலத்தில் 2014 – 2015 முதல் 2019 – 2020 காலக் கட்டங்களில் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட, மொத்த வராக்கடனின் அளவு ரூ.18.28 லட்சம் கோடிகள். காங்கிரஸ் ஆட்சிகாலம் முடிய 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை இருந்த வராக்கடன் அளவு ரூ.5.04 லட்சம் கோடிகள் கடனாக இருந்தன.
படிக்க :
இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !
மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !
மோடி ஆட்சியில், அதானி குழுமத்திற்கு மட்டும், 2020 வரை கொடுக்கப்பட்ட கடன் அளவு ரூ.2.25 லட்சம் கோடிகள் ஆகும். மோடி ஆட்சி முதலாளிகளுக்கு பொற்காலமாகும், மக்களுக்கு இருண்ட காலமாகும். இவ்வுண்மையை மறைத்து, மோடி அரசின்மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திசை திருப்பும் விதமாக, தன்னை நியாமானவனாக காட்டிக்கொள்ளவும், எதிர்கட்சிகளின் மீது நயவஞ்சகமாக பழியை சுமத்தியுள்ளது.
000
இன்று நிலவும் ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பும், நம்நாட்டு சமூக பொருளாதர கட்டமைப்பும் மீள முடியாத நெருக்கடிக்களுக்குள் சிக்கி கொண்டுள்ளன. முதலாளிகளுக்கு உள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு இப்பாசிச கும்பல் மேன்மேலும் மக்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்கும் என்பதுதான் நிதர்சனம். இதனை திசைதிருப்பும் பொருட்டு பாசிஸ்டுகள் எல்லாவித சூழ்ச்சிகளையும், பொய் புரட்டுகளையும் அவிழ்த்துவிடுவார்கள்.
எதிர்கட்சிகள் மோடியின் குற்றச்சாட்டை வழமையாக கடந்து செல்லாமல், மோடி அரசின் ஒரே நாடு – ஒரே வரி, இந்தி மொழி திணிப்பு, நீட், போன்ற மாநில அரசின் உரிமை பறிப்புகளை எதிர்த்து, அரசியல் அரங்கில் கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவதும், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மோடி – அமித்ஷா பாசிச கும்பலை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

தங்கபாலு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க