ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான துறைக்கு 0.025 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை புறந்தள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது.

ன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து ஜூலை 26 அன்று நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான துறைக்கு 0.025 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை புறந்தள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பட்ஜெட் நகலை கிழித்து எறிந்தனர்.

சென்னை

தமிழ்நாடு தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டம் சார்பில் மாவட்டத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.நம்புராஜன் “உலகம் முழுவதும் 16  விழுக்காடு மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பை கூட ஒன்றிய பா.ஜ.க அரசு நடத்தாமல் உள்ளது. பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் என்று ஒரு வார்த்தை கூட இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு திட்டத்தை கூட  அறிவிக்கவில்லை. யானை பசிக்கு கடுகு போடுவதை போன்று நிதி ஒதுக்கி உள்ளனர்” என்று கூறினார்.

“ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீட்டில், 5 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒதுக்கக் கோரி வருகிறோம். அது குறித்து எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஒன்றிய அரசின் பட்ஜெட் மோசடியானது. மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றக் கூடியது” என்று அவர் மேலும் கூறினார்.

தென் சென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாவட்டச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.


படிக்க: உதவித்தொகை கோரி மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்


தஞ்சாவூர்

தஞ்சை தலைமைத் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் சி.ராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கஸ்தூரி, மாவட்டப் பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் கண்டன உரையாற்றினார்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

கும்பகோணம்

கும்பகோணம் தலைமை தபால் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பழ.அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம், திருவிடைமருதூர், வடக்கு-தெற்கு திருப்பனந்தாள் ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் மற்றும் அகில இந்திய மாற்றுத்திறனாளிகளின் தேசிய மேடை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் டி.கோவிந்தசாமி, சீர்காழி செயலாளர் ஆர்.நாகராஜன் உள்ளிட்ட பலர் விளக்கிப் பேசினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சண்முகம் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி நகரத் தலைவர் பாஸ்ஷாபாய், செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

இவ்வாறு தங்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மாற்றுத்திறனாளிகளுக்கு தோள் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க