தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

னவரி 21 அன்று குறைபாட்டின் தன்மைக்கேற்ப மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் ”தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்” சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 26 மையங்களில் ஜனவரி 21 அன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அச்சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணித்தளத்தில் 8 மணி நேரம் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை ரத்து செய்து, 4 மணி நேரம் பணியில் இருந்தால் போதும் என்ற பழைய நிலையே தொடர வேண்டும்; உதவித் தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்திலேயே பெற்றுக் கொள்ளும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு, ”அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்” சார்பாக போராட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 87 பேரை போலீசு கைது செய்தது.

இப்போராட்டம் குறித்துப் பேசிய மாநிலத் தலைவர் வில்சன் ”சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு (74 சதவீதம் ஊனம்) ரூ.6,000; கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு (75 சதவீதத்துக்கு மேல்) ரூ.10,000; கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு (வீட்டில் முடங்கி இருப்பவர்கள்) ரூ.15,000 என ஆந்திர அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு, சாதாரண மற்றும் கடும் ஊனமுற்றோர் ஆகிய இரண்டு பிரிவுகளில் முறையே ரூ.1,500, ரூ.2,000 மட்டுமே உதவித்தொகை வழங்குகிறது.

எனவே, ஆந்திர மாநில அரசு வழங்குவதுபோல, உதவித்தொகையை உயர்த்த வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் ஆந்திரா 8-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகம் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. எனவே, உள்நாட்டு உற்பத்தியில் முன்னிலையில் உள்ள தமிழக அரசு உடனடியாக மாற்றுத் திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று தங்களது கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

தென்சென்னை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டம்

திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாநில பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 182 பேரை போலீசு கைது செய்தது. செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சிராணி, “உதவித் தொகை வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நியாயமற்ற காரணங்களைக் கூறி திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட மாதத்திற்கான தொகையையும் சேர்த்து மீண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித்தொகையை உயர்த்த நிதி இல்லை என்று அரசு கூறுவதை ஏற்க  முடியாது. தற்போது மாநில அரசு வழங்கும் உதவித்தொகையை கொண்டு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கை வாழ முடியுமா? சமூக நீதி, சமநீதி பேசும் அரசு, மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

தாம்பரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

பெரம்பூரில் மாநில செயற்குழு தலைவர் ராணி தலைமையிலும், தாம்பரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையிலும், சேத்துப்பட்டில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மனோன்மணி தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கடலூர்:

கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட 6 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயலா் ஆளவந்தாா் தலைமை வகித்தாா். அப்துல் ஹமீது, அரி நாராயணன், ரவி, ஜெயலட்சுமி, சிவகாமி உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா். இவா்களில் 68 பெண்கள் உள்பட 139 பேரை கடலூா் புதுநகா் போலீசு கைது செய்தது.

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா் ஜி.ராசையன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்கள் ஜீவா, ராமகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களில் 35 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை போலீசு கைது செய்தது.

குறிஞ்சிப்பாடியில் ஒன்றியத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 39 பெண்கள் உள்ளிட்ட 91 பேரையும், விருத்தாசலத்தில் 38 போ், வேப்பூரில் 50 போ், சிறுபாக்கத்தில் 25 போ் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 198 பெண்கள் உள்பட 438 பேரை போலீசு கைது செய்தது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மற்றும் மணமேல்குடி ஆகிய இரு இடங்களில் மாற்றுத் திறனாளிகள் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். தங்கவேலு தலைமை வகித்தாா்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. சண்முகம், மாவட்டச் செயலா் எம். கணேசன், நகரச் செயலா் வி. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 90 பேரைப் போலீசு கைது செய்தது.

மணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். நாராயணசாமி தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு சங்கத் தலைவா் கரு ராமநாதன் உள்ளிட்டோா் பேசினா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 53 போ் கைது செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம்:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், ஸ்ரீபெரும்புதார் வட்டம் சார்பில் ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதுார் வட்ட தலைவர் அர்ஜுன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

அதேபோல், உத்திரமேரூர் வட்டார கிளை சார்பில், மாவட்ட செயலர் முனுசாமி தலைமையில், உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு:

ஈரோட்டில் துணை தலைவர் நம்புராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசு கைது செய்தது.

சேலம்:

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரை:

மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சார்பாக நடைபெற்ற மறியல் போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் மறியலில் ஈடுபட்ட 124 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலப் பொருளாளா் வி.மாரியப்பன் இப்போராட்டத்திற்கு தலைமை வகித்தாா். இதில் 124 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் மறியல் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பு குவிந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேருந்து நிலையம் வாயிலில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தேவைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் 1080 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்:

கமுதி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கமுதி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கமுதி வட்டச் செயலா் முருகேசன் தலைமையில், மாவட்ட துணைத் தலைவா் முத்துராமலிங்கம், வட்டத் தலைவா் சந்திரன், பொருளாளா் ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 இடங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சாலை மறியல் மற்றும் மறியல் முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் பனகல் கட்டடத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநகரச் செயலா் ராஜன், ஒன்றியச் செயலா் சாமியப்பன் தலைமை தாங்கினா். மாவட்டச் செயலா் இளங்கோவன் கோரிக்கை விளக்கிப் பேசினாா். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த 35 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

கும்பகோணத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பழ அன்புமணி, மாவட்ட இணை செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் தாமோதரன், ஒன்றிய பொருளாளர் மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

கும்பகோணத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம்

இதேபோல, மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 286 பெண்கள் உள்பட 577 பேரை போலீசு கைது செய்தது.

திருநெல்வேலி:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முழக்கங்கள் எழுப்பினா். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்ற 78 மாற்றுத்திறனாளிகளை போலீசு கைது செய்தது.

நெல்லையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டக் கிளைகள் சாா்பில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் இசக்கிமுத்து தலைமையில் சேரன்மகாதேவியில் சாலை மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 90 பேரை போலீசு கைது செய்தது.

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட அமைப்பு அமைப்புச் செயலா் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்ட பொருளாளா் கணேசன் ஆகியோா் முன்னிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 86 பெண்கள் உள்ளிட்ட 196 மாற்றுத் திறனாளிகளை போலீசு கைது செய்தது.

கன்னியாகுமாரி:

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் அருள் தலைமை தாங்கினார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகே விளவங்கோடு வட்ட தலைவா் ஜெயானந்த் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 33 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திருவட்டாறு ஒன்றியத் தலைவா் பென்னட் ராஜ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 44 பேரை போலீசு கைது செய்தது.

தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவா் சுரேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 26 மாற்றுத்திறனாளிகளை போலீசு கைது செய்தது.

வேலூா்

வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சீனிவாசன், பொருளாளா் குருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலக்குழு உறுப்பினா் வீரபாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் கோபாலராசேந்திரன், கே.வி.குப்பம் கிளை செயலா் பிரபு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 75 பேரை போலீசு கைது செய்தது.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க