சமையல் எண்ணெய், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விவகாரத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, கடந்தை ஆண்டை ஒப்பிடும்போது உருளைக்கிழங்கின் விலை 50 சதவிகிதமும், வெங்காயத்தின் விலை 44 சதவிகிதமும், சமையல் எண்ணெய்யின் விலை 115 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. தானியப் பொருட்களின் விலையும் 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
அதேசமயம் பாசிச மோடி அரசின் மக்கள் விரோத கார்ப்பரேட் கொள்கைகளால் உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியில் எந்த உயர்வும் ஏற்படாத நிலையில், இந்த விலை உயர்வினால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் எத்தகைய பாதிப்புக்கு ஆளாவர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏழை மக்களின் அன்றாட உணவே சிக்கலுக்குரியதாக மாறும். இந்தியாவில் தொடர்ச்சியான விலைவாசி உயர்வு, நாட்டு மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது.
இந்த கடுமையான விலைவாசி உயர்வால் ஏற்படும் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவிகிதத்திற்கு அருகே சென்றுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் ஆறு உறுப்பினர்களில் இருவர் இது குறித்து தங்களது ’கவலையை’ வெளிப்படுத்தியுள்ளனர். (நவம்பர் 11 அன்று வெளியான தரவுகளின்படி, நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 6.21 சதவிகிதத்தை எட்டிவிட்டது)
ஆனால், உண்மைகளை மறைத்துவிட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது விலைகள் குறையும் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் “சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் மாற்றங்கள், பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள், எதிர்பாராத வானிலை மாற்றங்கள் ஆகியவை இந்த எதிர்பார்ப்பை மாற்றக்கூடும்” என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகிறார்.
படிக்க: இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!
உண்மைகளை வேறு இடத்தில் இருந்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. விலைவாசி உயர்வுக்கு மேற்கூறிய விசயங்கள் என்பது பிரதான காரணமல்ல. உணவுப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் பிரதான காரணம். இதனால் பொருட்களை பதுக்கி வைத்து, செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி, விலைகளை உயர்த்தி கொழுத்த லாபத்தை பார்க்கின்றனர்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் உணவு கொள்முதல், விநியோகம் சார்ந்த கட்டுப்பாட்டை அரசு தளர்த்திக் கொண்டு கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதற்காக ஏழைமக்களின் முக்கிய உணவு ஆதாரமாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி சமநிலையில் வைப்பதற்கான அம்சமாகவும் உள்ள பொதுவிநியோக முறையை ஊற்றி மூடுவதற்கு ஏற்ப (மானியங்களை வெட்டுவது, கொள்முதலை நிறுத்துவது) பாசிச மோடி அரசு உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைக்கிணங்க காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. டெல்லி சலோ 2.0 போராட்டத்தில் ”உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறு” என்ற கோரிக்கை முழக்கத்தை விவசாயிகள் முன்வைத்ததை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி உயர்வானது விலைவாசி உயர்வுக்கு இன்னொரு முக்கிய காரணமாக உள்ளது.
படிக்க: விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்
கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் கூட, ஒன்றிய அரசின் வரிகளின் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதுவும் சங்கிலித் தொடர் நிகழ்வின் அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்குக் காரணமாக அமைகின்றது.
ஆனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாமல் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரங்களில் இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டிவிட்டு, குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது பாசிச மோடி கும்பல்.
உணவுப் பொருட்கள் மீதான கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்; பொது விநியோக முறையை ஒழுங்குபடுத்த வேண்டும்; உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேற வேண்டும்; உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும்; சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மீதான கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்; பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் – போன்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை முன்வைத்து உழைக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இதற்கு மூலகாரணமாக உள்ள தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளுக்குப் பதிலாக மக்கள் நலன் சார்ந்து மாற்றுக் கொள்கைகளை நிறுவுவதை நோக்கி அப்போராட்டங்கள் வளர்த்தெடுக்கப் படவேண்டும்.
கருப்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram