ஒரு மாதத்திற்கும் மேலாக உச்சத்திலிருந்த தக்காளி விலை ரூ.300, 200, 150-லிருந்து குறைந்து தற்போது ரூ.50 ரூபாய் வரை சரிந்துள்ளது. இருப்பினும் இப்போதும் அடிப்படை உழைக்கும் மக்கள் வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு தக்காளியின் விலை குறையவில்லை. தக்காளி எப்போது முன்பிருந்த விலையான ரூ.15, 20க்கு விற்கப்படும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், தக்காளிவின் விலை பழைய நிலைக்கு சரிந்தாலும் நம்மால் நிம்மதிகொள்ள முடியாது. இந்த மறுகாலனியாக்க காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருட்களின் விலை உயர்வதை தவிர்க்க முடியாது.
தக்காளி விலையுயர்வுக்கு என்ன காரணம்?
தற்போது ஏற்பட்டுள்ள இந்த தக்காளி விலை உயர்வால் சாதாரண உழைக்கும் மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், தள்ளு வண்டியில் உணவை விற்பனை செய்வோர், சிறிய அளவில் ஓட்டல் கடை வைத்திருப்போர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பலர் தக்காளி பயன்படுத்தி சமைப்பதையே நிறுத்திவிட்டனர்.
இந்த திடீர் விலை உயர்வுக்கு மோசமான வானிலை ஒரு காரணமாக கூறப்பட்டது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மோசமான வானிலை நிலவியதன் காரணமாகவும் வட மாநிலங்களில் கனமழையால் தக்காளி உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகியதாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் 60 முதல் 80 லோடுகள் 30 ஆக குறைந்ததுதான் விலையேற்றத்திற்கு காரணம் என்று பேசப்பட்டது.
ஆனால், இவையெல்லாம் அடிப்படையான காரணங்கள் இல்லை. உலகமயமாக்கலுக்கு பிறகு, நாட்டின் சுயத்தேவையை நோக்கமாக கொண்ட பாரம்பரிய விவசாயமுறையை அழித்து வெறும் லாபத்திற்காக மட்டும் பயிரிடும் விவசாயமுறை விவசாயத்துறையில் கொண்டுவரப்பட்டதே முக்கியமான காரணம்.
1990களில் கொண்டு வரப்பட்ட உலகமயமாக்கல் கொள்கைக்கு பிறகு சந்தையின் முடிவே அரசின் கொள்கை முடிவானது. இந்த கொள்கையின் அடிப்படையில் ஆட்டோமொபைல் துறையில் மலிவு விலையில் கார், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்னணு துறையில் சகல வசதிகளும் கொண்ட செல்போன், கணினி ஆகியவற்றின் விலைகள் வெகுவாக குறைந்தன. ஆனால், விவசாயத்துறையில் எதிர்மறையாக நடந்தது. அடிப்படையான உணவு பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எட்டாக்கனியாகியது.
படிக்க: விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்
இதுபோன்ற விலை உயர்வு எப்போதாவது ஒருமுறை வரும் என்ற நிலை மாறி, உலகமயமாக்கலுக்கு பிறகு விலைவாசி உயர்வு என்பது நிரந்தரமான நிகழ்ச்சி போக்காக மாறியது.
சான்றாக, வானிலை இயக்கத்தை கண்காணித்து புயல் மழை வருவதற்கு முன் எச்சரிக்கை செய்யப்படுகிறது. அதேப்போல புதிய வகை நோய் பரவுகிறது என்றால் அதற்கும் எச்சரிக்கை விடப்படுகிறது. கணினியில் உலகையே கண்காணிக்கும் போது தக்காளி விளைச்சலை கண்காணித்து முறைப்படுத்த முடியாதா? முடியும், ஆனால் அது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. இதன் பொருள், மாநிலம் அல்லது நாட்டின் உழைக்கும் மக்கள் நலனில் இருந்து பொருளாதார கொள்கை திட்டமிடப்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படுவதே.
விவசாயதுறையை அரசு முதன்மைப்படுத்தி செயல்படக்கூடாது என கோரும் முதலாளித்துவ பொருளாதார கொள்கையின் விளைவுதான் விலைவாசி உயர்வு. அது வேலையில்லா திண்டாட்டத்தை ஒருங்கே கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காய் கனிகள், சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையுயர்வு என தேச அளவிலும் சர்வதேச அளவிலும் விலையேற்றம் என்ற பெயரில் மக்களின் சேமிப்பும் வாழ்க்கையும் சூறையாடப்படுகிறது.
பலரை சுரண்டி வெகு சிலர் சொகுசாக வாழ்வதை அடிப்படையாய் கொண்டிருப்பதை போல, விலையுயர்விலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் முதலாளித்துவம் உயிர் வாழ்கிறது!
கார்ப்பரேட் நலனே அரசின் கொள்கை முடிவு:
வருடத்தில் எல்லா காலங்களிலும் அல்லது எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியான காலநிலை இருப்பதில்லை. அப்படியானால் இதனைத் கணக்கில் கொண்டு, காய்கறி பழங்களை பாதுகாத்து முறைப்படுத்த அரசிடம் பெயரளவிற்கு கூட திட்டம் இல்லை.
மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அவர்களது உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தியான பொருட்களை எடுத்துச் செல்லவும் நான்கு, ஆறு மற்றும் எட்டு வழி சாலைகள், துறைமுகம் – விமான நிலையம் விரிவாக்கம் என பல லட்சம் கோடிகளை முதலாளிகளின் நலனுக்கு அரசு வாரி இறைக்கிறது. ஆனால், தக்காளி மற்றும் இதர காய் கனிகள் விளைச்சல் அதிகமாக இருக்கும் போது அதனை குளிர் பதன கிடங்குகள் அமைத்து பாதுகாக்கவும் பிற அடிப்படை வசதிகளை செய்து தரவும் திட்டமிட்டே மறுக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!
அடுத்தது இடைத்தரகர்கள் கொள்ளையால்தான் விலையுயர்வு என சொல்வோர்கள் நம் நாட்டின் வணிக கட்டமைப்பை புரிந்து கொள்ளாதவர்கள். சிறு கடை, சிறு வணிகம், தரைக்கடை, தள்ளு வண்டி வியாபாரங்களானது மாநகர் முதல் சிறு நகரம், கிராமப்புறம் வரை நடைபெறுகிறது. சிறு வணிகம் நீடிக்கும் வரை இடைதரகர்கள் வணிக சங்கிலியில் நீடிக்கத்தான் செய்வார்கள்.
கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம் – சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான். ஆனால், விலைவாசி உயர்வுக்கு இடைத்தரகர்கள்தான் காரணம் என்று பிரச்சாரத்திற்கு பின்னால் கார்ப்பரேட்களின் நலனுக்காக திட்டமிட்டே விவசாயம் அழிக்கப்படுவது மூடி மறைக்கப்படுகிறது.
மேலும், தக்காளி விலை உயர்வுக்கு மாநில அரசு மாற்றாக முன்வைத்த திட்டங்களும் பிரச்சினையை தீர்க்கவில்லை. அப்படியானால் அரசு என்ன செய்ய வேண்டும்? போர்க்கால அடிப்படையில் “வெளிமாநிலங்களிலிருந்து தனியார் வியாபாரிகள் – சங்கிலி தொடர் கார்ப்பரேட் நிறுவனங்கள் யாரும் தக்காளியை கொள்முதல் செய்யகூடாது” என உத்தரவிட்டு, அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் கொடுக்கலாம் அல்லவா? ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து மக்கள் போராடினால் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநிலத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்களை ஒடுக்குகிறது. இங்கே சில நூறு அல்லது ஆயிரம் வியாபாரிகளிடம், “நிலைமை சீரடையும் வரை ஒத்துழைப்பு தாருங்கள்” என ஏன் உத்தரவிட முடியாது? ஆனால், அரசு அதை செய்யாது. மக்கள் நலனில் அக்கறை கொள்ள கூடாது என்பதே அரசின் கொள்கை முடிவு.
இதனை மக்கள் ஆழமாக புரிந்துகொள்ளாததின் விளைவுதான் விலையுயர்வு குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மக்களிடம் கேள்வி எழுப்பினால், “அரசாங்கம் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும்” என்கின்றனர். அரசியல் ரீதியில் சொல்வதென்றால், “அரசு என்பது ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கருவி என்பதை மக்கள் உணராத வரை அரசியலில் மக்கள் முட்டாளாக்கப்படுவதை தடுக்க முடியாது” என்ற ஆசான் லெனின் கூற்றையே நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.
திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வை கட்டுபடுத்தும்:
முதலாளித்துவத்தில் மற்ற பண்டங்களை போலவே உழைப்பு சக்தியும் பண்டமான பிறகு அதற்குரிய விலை கொடுக்கப்படுவதில்லை. ஆலைகளில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். கார்மென்ட்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 அல்லது ரூ.9,000 மட்டுமே ஊதியமாக தரப்படுகிறது. ஆக பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உழைப்பு சக்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
உழைப்பு சக்தி மிக மிக மலிவான விலையில் கிடைக்கும் படியான சமூக நிலையை தொடர்ந்து பராமரிப்பதும் விலைவாசி உயர்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் மார்க்ஸ் கூறுகையில், “தேவையும் (Demand) அளிப்பும் (Supply) ஒன்றின் ஏற்ற இறக்கத்தை இன்னொன்றின் ஏற்ற இறக்கத்தின் மூலமும், ஒரு விலையுயர்வு ஒரு வீழ்ச்சியின் மூலமும், ஒரு வீழ்ச்சி ஒரு விலையுயர்வின் மூலமும் ஈடுசெய்து கொள்கிறது. தேவையையும் அளிப்பையும் தொடர்ந்து சமன் செய்ய அன்றாடம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.
இம்மாதிரியான முதலாளித்துவ பொருளுதார கொள்கையின் விளைவு இன்றைய உலகமயமாக்கலுக்கு பொருந்துவதை பார்க்கிறோம். இதன் விளைவாய், இன்னும் சில மாதங்களில் தக்காளி விலை குறையும், ஆனால் வேறொரு பொருளின் விலை உயரும்.
முடிவே இல்லாமல் சுழலும் இந்த விஷ சுழற்சி மக்களை இதுபோன்ற அநீதிக்கு பழக்கப்படுத்தி சிந்திக்க முடியாத அளவிற்கு சலிப்படைய செய்யும். இதை நோக்கமாகக் கொண்டதே, அரசின் திட்டமிடல் மற்றும் கொள்கை முடிவு. விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு கும்பலுக்கான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்படும் ஆட்சியின் இத்தகைய பொருளாதார கொள்கை இப்படிப்பட்ட விலை உயர்வை தினந்தினம் கொண்டுவரும்.
ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அவர்களின் அடியாள் படையான அரசையும் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமைக்கப்படும் சோசலிச சமூகம் – அதன் திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் கட்டுப்படுத்தும். ஏனெனில் தனியார் லாபம் என ஏதுமன்றி நாட்டு மக்களின் நலனே பாட்டாளி வர்க்க அரசின் கொள்கை முடிவு!
ஆ.கா.சிவா